என்றும் உன் நிழலாக 26 – 2 ( இறுதி அத்தியாயம் )

இப்படி, நிதி, வசி திருமணத்துக்குத் தானே தடையாகக் கை காட்டப்படுவான் என்று கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை, அவன்.

‘இப்பவெல்லாம் வர வர நிதியிட அடாவடி தாங்க முடியாமல் போகுது. தான் நினைக்கிறது தான் நடக்க வேணுமென்று நினைக்கிறாள்.’ என்று அலுத்துக்கொண்டாலும், நடப்பதை வேடிக்கை பார்த்துவிட்டுக் கடந்து செல்லவும் முடியவில்லை , அவனால்.

அவளிடமே சென்று நின்றான். “உமக்கு என்னதான் வேணும் நிதி? ஏன் கலியாணத்துக்கு மாட்டன் என்று சொல்லி என்ர தலையைப் போட்டு உருட்டுறீர்?’’ என்று அலுப்புடனும் ஆதங்கத்துடனும் கேட்டான்.

அப்போது நிதி அவனை கேட்ட கேள்விகளில், பதில் சொல்லமுடியாமல் தடுமாறித் திகைத்துத்தான் விட்டான்.

தன்னைக் கேள்வி கேட்டுச் சிடுசிடுத்தவாறே, தன் முன்னே நின்ற ரஞ்சனைக் கூர்மையாகப் பார்த்தாள் நிதி.

“நீங்களாக என்னை விரும்பீட்டு இப்ப இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கிறீங்க…’’என்று தொடங்க,

“ஐயோ! அது முடிஞ்ச கதை நிதி. நான் ஒன்றும் உன்ன நினைச்சுக் கொண்டு திரியேல்ல சரியா?’’ என்று கோபமாகத் தொடங்கிய ரஞ்சனை இடைமறித்தவள், “என்ன இல்லை…எது முடிஞ்ச கதை! அப்ப ஏன் இப்பிடி எல்லாரையும் கஷ்டப்படுத்துறீங்க சொல்லுங்க?’’ அவனுடன் மல்லுக்கு நின்றாள்.

“காயாவும் உங்களை விரும்புறாள் என்று உங்களுக்குத் தெரிஞ்சு எவ்வளவு நாளாச்சு? நீங்க என்னவோ நாங்க எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுற மாதிரித் திரியிறீங்க . கொஞ்சம் சரி அவள் நிலையில இருந்து யோசிச்சுப் பார்த்தீங்களா? அவள் மட்டும் பாவம் இல்லையா சொல்லுங்க? அவள் அவ்வளவு வேதனையோட இருக்கேக்க அதுவும் உங்களால…எனக்கு மட்டும் கலியாணம் தேவையா சொல்லுங்க?’’ என்றவள் தொடர்ந்து,

“இங்க பாருங்க, உங்களுக்கு இதெல்லாம் பற்றிக் கவலையேயில்லை என்ன? நீங்க உங்கட பாட்டில வேலையும் வீடுமாகத் திரியுங்க.’’ முறைத்துக் கொண்டே சொன்னவள், இறுதியில் கண்ணீருடன் அவனைப் பார்த்தவள்,

“சரி, எல்லாத்தையும் விடுங்க…மாமிக்கு உங்களுக்குக் கெதியா கலியாணம் செய்து வைக்க ஆசையா இருக்கு. அவவிட ஆசைக்கு நீங்க ஏன் குறுக்க நிக்கிறீங்க? அப்ப உங்கட முடிவு தான் என்ன?’’ என்று இயலாமையும் கோபமுமாகக் கேட்டாள்.

அவள் சொல்லச் சொல்ல பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தவன், நீண்ட நாட்களின் பின்னர் நிதியின் கண்ணீரைக் கண்டதும், அதற்குத் தான் காரணமாகிப் போனேன் என்பது மனத்தை தாங்கமுடியாது வலிக்கச் செய்ய விருட்டென்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டான்.

நிதி இவ்வாறு கதைத்த பின்னர் சில நாட்கள் எதுவுமே சொல்லாமல் சிந்தனையுடனேயே இருந்தான் ரஞ்சன். அவளின் வேதனை அவன் சிந்தனையைத் துண்டிவிட்டிருந்தது.

அவனுக்கு இன்றும் எல்லோர் முன்னிலையிலும் இலேசாக ஒரு மனக் குன்றல் தான், ‘தான் முதல் முதல் நேசித்தவளுடன் தன் நேசம் வெற்றி அடையவில்லையே!’ என்று!

ஆனால், ‘நான் அனுபவிச்ச வேதனையைப் போலவே, அதே மறுப்பின் வலியை, என்னால என்னை நினைத்து இன்னொருத்தி அனுபவிக்க, இத்தனை நாளும் பார்த்துக் கொண்டிருந்து எவ்வளவு துன்பப்படுத்திட்டன்!’ என்று மெல்ல மெல்ல உணர்ந்து கொண்ட போது மிகவும் மனம் நொந்து போனான் அவன்.

அதன் பின்னர், தன் மனத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் வலிந்து முனைந்தவன், முதல் படியாக தன்னைப் பற்றி முழுவதும் தெரிந்த காயாவுடன் நட்பாக மனம் விட்டுப் பழகத்தொடங்கினான். அப்பழக்கத்தில், புண்பட்டுக்கிடந்த அவனுள்ளம் காயாவின் நேசமான அணுகுமுறையில் இதம் கண்டது என்பதே உண்மை. அதுவே, முழுமனதோடு அவளைத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளவும் வைத்தது.

ஆறு மாதங்களுக்கு முன் தான், காயா ரஞ்சன் திருமணம் மிகவும் சிறப்பாக நெதர்லாந்தில் நடந்து முடிந்தது.

இப்போது, தன் அன்பு மனையாளின் நேசத்தில் தன்னைத் தொலைத்திருப்பவன், கடந்த கால வலி தந்த வடுக்கள் சுவடின்றி மறைய, தம் குடும்ப வாழ்வில் இனிமையையும் நிறைவையும் உணர்கிறான்.

தான் நேசித்தவளின் மறுப்பில் தன்னைத் தொலைத்திருந்தவன், கூடவே நேசித்தவளுக்காக அந்த வேதனையைப் பூசிமெழுகி மறைத்து, நிதி வசி நெருக்கங்களில் அருகிலிருந்து பார்க்கும் போதெல்லாம் தன் மனத்தில் எழும் ஒருவகை ஏமாற்றத்தை எவ்வளவோ முயன்று அடக்கி, ’நிதி எப்பவும் நல்லா இருக்கவேணும்.’ என்பதை மட்டுமே நினைத்திருந்தவன், தன் பழைய நிறைவேறாத ஆசையில் இருந்து தன்னை முற்று முழுவதுமாய் மீட்டுக் கொள்ள அவன் கூடவே இருந்தவர்களும், அவனை உயிராய் நேசித்துக் கரம் பற்றியவளும் உதவினாலும், காயாவின் அன்பில் ஒன்றிப் போய், இன்று தன் முன்னே மணவறையில் அமர்ந்திருக்கும் தன் தமையனையும் அவன் மனையாளாகப் போகும் தன் அன்பு மைத்துனி நிதியையும் முழுமையாக வாழ்த்த உதவியது, அவன் நிதி மீது வைத்த மாறாத நேசமே !

ஆமாம்! அவள் துரும்பளவுக்கும் தன்னை நினைத்து வருந்திவிடக் கூடாது என்ற ரஞ்சனின் நோக்கமே, அவனை, அவள் நினைவுகளில் இருந்து முற்றாக மீட்டுத் தன் மனையாளோடு ஒன்ற உதவியது .

இன்று அவர்கள் இருவரும் தம்பதியினராய் வந்து மலர்வுடன் முழுமனமாக நிதியின் திருமணத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

எடுத்ததற்கெல்லாம், “சரி உனக்கும் எனக்கும் இனி ஒன்றும் இல்லை’’ என்று நிதி ஒதுங்கும் போதும், ரஞ்சன் வாழ்வு சீராக வேண்டும் என்ற ஆதங்கத்தில் தன்னில் கோபப்படும் போதும், அவளின் மீது அடங்காக் கோபம் வந்தாலும், அவனுக்குமே ரஞ்சன் வாழ்வு சீரான பின்னர் தாங்கள் மணந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றியதால், அதுவே தன் மனதில் ஓரத்தில் ஒட்டியிருக்கும் உறுத்தலை முற்றாகப் போக்கும் என்பதை அவன் உணர்ந்திருந்ததால், அவள் மனநிலையையும் புரிந்து எல்லாவற்றுக்கும் பொறுத்துப் போனான் வசி.

திருமணத்தை இந்தியாவில் வைத்தால் தான் தன் பெற்றோர் சகோதரங்களும் வரமுடியும் என்று நிதி ஆசைப்படவே, “சரி, இங்க திரும்பி வந்து வரவேற்பை நடத்துவோம்.’’ என்று அவன் பெற்றவர்களும் இந்திரனுமே அதற்குச் சம்மதித்தனர்.

இந்தியாவில் திருமணத்தை மிகவும் விமரிசையாகச் செய்யலாம் என்று தனா சொல்ல, அதற்கு ஒரேயடியாக மறுப்புச் சொல்லிய நிதியின் மனத்தை யாராலும் மாற்ற முடியாது போய் விட்டது.

“தேவையில்லாமல் செலவழிக்க எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை அண்ணா. அந்தக் காசு இருந்தால் நான் தம்பி தங்கச்சிகள் படிப்புக்குப் பாவிப்பன்.’’ என்றவளை முறைத்த தனாவும் வசியும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், தன் மனத்தைக் கவர்ந்த இக்கோவிலிலேயே மிகவும் எளிமையாகத் திருமணம் நடத்த ஏற்பாடாகி, இதோ நடந்து கொண்டிருகிறது .

இதில் ஜனனி விமலாவுக்குமே மனவருத்தம் தான்! ஆனாலும், திருமணம் முடிய ஒரு விருந்தை தங்கள் வீட்டில் ஏற்பாடு செய்திருக்கிறார் விமலா.

“என்ர கலியாணம் இப்பிடித்தான் நடக்க வேணும்.’’ என்ற நிதியின் பிடிவாதம் பார்த்துத் தனா மலைத்து நிற்கையில், “அப்ப என்பாட்டை யோசிச்சுப் பாருங்க! இந்த விசயத்தில நான் ஆயுள் கைதி!’’ என்று வசி சோகமாகச் சொல்ல, எல்லோரும் கலகலத்துச் சிரித்தாலும், நிதி சொல்வதும் உண்மை தானே என்பதையும் உணர்ந்தே இருந்தனர் .

“வாழ்வில் எல்லாம் இழந்து விட்டோம்.’’ என்று இருந்த ரஞ்சிதம், இப்போது எல்லாம் கிடைக்கப் பெற்றவராய், “அம்மா இனி நீங்க எதையுமே யாரிட்டையும் எதிர்பார்க்கக் கூடாது, தனா அண்ணாட்டையும் தான்மா; உங்களுக்கு எல்லாம் செய்ய நான் இருக்கிறன்; எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்ளுவன்.’’ என்று சொன்ன தன் மகளை, அவள் தங்கள் மேல் வைத்துள்ள பாசத்தைப் பார்த்தவர்,

‘கூடவே இருக்காவிட்டாலும் இவளுக்குத்தான் எங்களில் எவ்வளவு அன்பு! நான் தான் என்ர பிள்ளையைக் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அண்ணாட்டக் கொடுத்திட்டன்!’ என்று கலங்கித் தவித்தவர், ’நடந்ததைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயனில்லை.’என்று தன்னைத்தான் தேற்றிக்கொண்டே, இன்று இதோ மனம் கொள்ளா மகிழ்வுடன் கணவருடன் நிற்கிறார்.

தன் மகனின் மகிழ்வான குடும்ப வாழ்வை அருகிலிருந்து பார்த்து மிகவும் திருப்தியுடன் இருக்கும் புவனி, இதற்கு நிதிதான் காரணம் என்பதை வெளிப்படையாக ஏற்காவிடினும் உள்ளே உணர்ந்து கொண்டவர், அவளும் தன் அக்கா மகனைக் கைப்பிடிப்பதால், அதுவும் தன் அக்கா குடும்பம் தனக்கு மிகவும் முக்கியம் என்பதால், ’வசியும் நிதியும் பல்லாண்டுகள் நலமாய் நிறைவாய் வாழவேண்டும்!’ என்று மனதின் அடியில் இருந்து வாழ்த்தியவாறே நிற்க, தங்கை மகளாக இருந்தாலும் தன் மகளாக வளர்த்தவள், குறைவில்லாமல் நிறைவாய் வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன் மனைவி அருகில் மகிழ்வாய் பெருமிதமாய் நிற்கிறார் இந்திரன்.

திருமணத்திற்காக கனடாவில் இருந்து வந்திருந்த வசியின் அம்மம்மா, அவன் மாமா குடும்பம், ஜனனியின் பெற்றவர்கள், தாத்தா, பாட்டி, விமலா மனோகர், வசியின் சகோதரிகளின் குடும்பங்கள் மட்டும் இன்றி, தமிழ்ப்பெண்ணாய் சேலையில் தலை கொள்ளா மல்லிகையுடன் நிதியின் தோழி சனாவும் நிற்க,

தனது சகோதரிகளும் வசியின் சகோதரிகளும் அழைத்து வர, தேவதையாக நடந்து வந்து தன்னருகில் அமர்ந்தவளை, தன்னையறியாமலேயே தன்னிதயத்தில் குடிவந்தவளை, முழுச்சம்மதத்துடன் தன் இதயத்தைப் பறித்துக் கொண்டவளை காதலுடன் நோக்கியவாறே, கூடி நின்றோர் அனைவரும் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் மலர்களுடன் சேர்த்துத் தூவ, ‘என்றும் உன் நிழலாக நானிருப்பேன்!’ என்கின்ற உறுதியோடு, பொன்தாலியை அவள் கழுத்தில் பூட்டி, தன்னவளாக்கிக் கொண்டான் வசி.

 

 

*சுபம்*

 

error: Alert: Content selection is disabled!!