7
தாயுடன் முகம் கன்றப் பேசிய ரஞ்சன், அதிவேகத்தில் காரை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.
எரிச்சல் அடங்கா மனநிலையுடன் அப்படியே ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு தன் நண்பன் வீட்டிற்குச் சென்று சிறிது நேரம் கதைத்துக் கொண்டிருந்தவன், மனம் சிறிது இலேசாகியதும் நிதி வேலை செய்யும் ‘மக்’ நோக்கிச் சென்றான்.
‘மக்’கை வந்தடைந்தவன், ட்ரைவ் துருவில் அவளது இனிமையான குரலைக் கேட்டு இரசித்தபடியே தனக்கு ஒரு கறுப்புக் கோப்பிக்கு ஆர்டர் கொடுத்தவன், ‘‘வேற ஏதாவது வேணுமா ?’’ என்ற அவளின் குரலுக்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்க, அவளோ, அந்த இடைவெளியில் இருமுறைகள் அழைத்துவிட்டாள்.
‘‘எனக்கு நிதி தான் வேணும்…கிடைப்பாவா?’’ நெதர்லாந்து மொழியில் அவள் கேட்டதற்குத் தமிழில் நகைக்கும் குரலில் சொல்லிக் கொண்டே காரை கிளப்பிக் கொண்டு போய்க் காசு கொடுக்கும் யன்னல் அருகில் நிறுத்தினான்.
அவன் வந்து நின்றதும், திரையில் தெரிந்த காரை வைத்து அவனை இனம் கண்டிருந்தவள், வேண்டுமென்றேதான் தெரியாத மாதிரிக் கதைத்திருந்தாள். அதேபோல், அவன் சொன்ன பதிலில் சட்டென்று திடுக்கிட்டாலும் கணத்தில் சமாளித்துவிட்டாள். இருந்தும், அவன் இப்படி வெளிப்டையாகக் கதைத்ததில் எழுந்த பதற்றமும் எரிச்சலும் அடங்கேன் என்றது. அதனால்தான் முறைப்பாகவே ஜன்னலைத் திறந்து, ‘‘ஹலோ! என்ன சேட்டையா?’’ என்று, கோபமாகவே கேட்டாள்.
அவள் கோபத்தை, குறும்புடன் பார்த்து நகைத்தான் ரஞ்சன்.
‘‘ம்ம்ம்…சேட்டையா? யாரு உம்மோட…அப்படியே நீர் விட்டுட்டாலும்.’’ சலிப்போடு சொன்னவன், அடுத்து வந்து நிற்கும் காரில் அவள் கவனம் பதியவே, ‘இதில நின்று அவளிட வேலையைக் கெடுக்கிறது முறையில்ல.’ என நினைத்து, கோப்பிக்கான காசைக் கொடுத்துவிட்டு, ‘‘சரி நிதி…போயிட்டு வாறன்; இப்பிடியே சுறுசுறுப்பா வேலை செய்யும் சரியா? ஆறு மணிக்கு அண்ணா வருவார். சொன்னவர் தானே? கவனமாக வாரும்.’’ என்றபடி, அவள் தலையாட்டலைப் பெற்றுக்கொண்டு காரைக் கிளப்பியவன், அடுத்த யன்னலில் தரப்பட்ட கோப்பியை வாங்கிக் கொண்டு வீடு நோக்கிச் சென்றான்.
வீட்டில் ஏதாவது சிறுபிரச்சனை நடந்து அவள் மனம் குழம்பி வேலைக்கு வந்திருந்தால், இவன் இப்படி வந்து கோப்பியையும் வாங்கிக் கொண்டு, இரண்டு வார்த்தைகள் கதைத்து விட்டுச் செல்வது அப்பப்ப நடப்பதென்றாலும், இப்பவெல்லாம் அவன் பேச்சே தன்னைக் கலங்கடிப்பதை நினைத்துக்கொண்டே வேலைகளைத் தொடர்ந்தாள் நிதி.
நிதியைக் கண்டதில் காலையிலிருந்து மனத்தில் சூழ்ந்திருந்த இறுக்கம் குறைந்திருக்கச் சந்தோசமாகவே வீட்டை வந்தடைந்த ரஞ்சன், அங்கு, அவன் பெரியம்மா, பெரியப்பா, வசியின் தங்கை நிர்மலா, அவள் கணவன் எல்லோரும் வந்திருக்கவே, ‘‘பெரியம்மா…எப்படி இருக்கிறீங்க?’’ அவர்களை வரவேற்றுக் கதைத்தவன், ‘‘என்ன பெரியம்மா திடீர் என்று வந்திருக்கிறீங்க?’’ எனக் கேட்டதும். வசியின் தங்கையோ, ‘‘ஏன்டா…உங்கட வீட்டுக்கு வர அப்பாயின்மென்ட் வைக்க வேணுமோ! வீட்டுக்கு வந்தவேட்ட இப்பிடிக் கேட்கிறாய்.’’ என்று சண்டைக்கே வந்து விட்டாள்.
‘‘அய்யோக்கா! நான் அப்பிடியெல்லாம் நினைக்க இல்லை; நீங்க வரப் போறீங்க என்று எனக்குத் தெரியாது; அதனால தான் அப்பிடிக் கேட்டன்; கோபிக்காதீங்க.’’ ஒரு மாதிரிச் சமாளித்தவன், நிர்மலாவின் கணவர் பக்கத்தில் சென்றமர்ந்து அளவளாவத் தொடங்கினான் .
அப்போது அங்கிருந்த அவன் பெரியம்மாவோ, ‘‘புவனி தான்பா வரச் சொன்னாள். நாங்க வெளிக்கிடேக்க இவளும் வீட்டுக்கு வந்தாளா, எல்லாருமாகச் சேர்ந்து வந்தம். அதுவும் நம்மட நிதிட பிட்ஸா சாப்பிட.’’ சிரித்துக்கொண்டே சொன்னார்.
‘‘பின்ன? நாங்க நிதியிட பிட்சாவை மிஸ் பண்ணுவமா ரஞ்சன்? அதுதான் வழமை போலவே படை எடுத்திருக்கிறம்.’’ என்று வசியின் தங்கையும் சொல்ல, மெல்லச் சிரித்த ரஞ்சனுக்குத் தன் தாயின் மீது திரும்பவும் சுறுசுறுவென்று கோபம் வந்தது.
‘அவள் பாவம், கால்கடுக்க நின்று வேலை செய்துவிட்டு வந்து இங்கயும் வேலையா?’ மனதில் முணுமுணுத்தான்.
‘இதென்ன புதுசா? வழமையா நடப்பது தானே!’ என, அவன் மனமே அவனைத் தட்டிக் கேட்டது.
மனத்தில் நினைப்பது எதையுமே வெளியில் சொல்ல முடியாத அவதியோடே கொஞ்ச நேரம் அவர்களுடன் இருந்து பொதுவாகக் கதைத்து விட்டு, ஐந்தரை மணி போல் மெல்ல எழுந்து வீட்டின் கீழேயுள்ள சமையலறைக்கு வந்தவன், மள மளவென்று பிட்ஸா செய்வதற்கான ஆயத்தங்களைச் செய்து வைக்கத் தொடங்கினான்.
நிதி வந்ததும் இலகுவாகச் செய்யக் கூடியதாக எல்லாவற்றையும் செய்து வைத்துவிட்டு மேலே செல்வதற்காகத் திரும்பியவன், வந்திருப்பவர்கள் மறுபடியும் தேநீர் கேட்டதால் அதனைத் தயாரிப்பதற்காக வந்த புவனியின் நெருப்புப் பார்வையில் சிக்கிக்கொண்டான்.
மகனையும், சமையலறை மேடையில் தயாராக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் மாறிமாறிப் பார்த்த புவனிக்குத் தன் ஐயம் சரியோ என்ற எண்ணம் வலுப்பெற்றதுடன் கூடவே கோபமும் வந்தது.
‘‘ஏன் தம்பி உனக்கு இந்த வேலை? முதல்…இது என்ன பெரிய வேலையா? நிதி வந்து செய்யமாட்டாளா? அப்பிடி என்ன அங்க வெட்டி முறிச்சிட்டா வரப் போறாள்?’’ சிடுசிடுத்தார்.
‘‘வீட்டில அவளுக்கு நான் கொடுக்கிற வேலையில கால்வாசி கூட அவள் செய்யிறதில்லையே; நீதான் முழுதும் செய்யிறாய்! இங்க பார் ரஞ்சன், இதெல்லாம் எனக்குக் கொஞ்சமும் சரியாகப் படேல்ல. அவ்வளவும் தான் சொல்லுவன். நான் என்ன சொல்ல நினைக்கிறன் என்பதைப் புரிஞ்சு கொள்ள முடியாத முட்டாள் இல்லை நீ என்று எனக்குத் தெரியும்.’’
கோபமும் கண்டிப்புமாகச் சொன்னவர் புறுபுறுத்துக் கொண்டே தேநீர் தயாரிக்கத் தொடங்கினார்.
ரஞ்சனும் வழமை போல அவர் சொன்னவற்றை ஒரு காதால் உள்வாங்கி மறு காதால் வெளியேற்றியபடி, மேலே சென்று அங்கிருந்தோருடன் பேச்சில் இணைந்து கொண்டான்.
அப்பொழுது தொலைபேசி அழைத்தது. அருகில் இருந்த தொலைபேசியை எடுத்துக் கதைக்கத் தொடங்கினார் புவனி.
மறுபக்கத்தில் யார் கதைப்பதென்று தெரிந்ததும், தானாக அவர் முகத்தில் ஏளனச் சிரிப்பொன்று வந்து போனதுடன், மறுபகுதியில் கதைத்தவருடன் அசட்டையாகவே கதைத்துவிட்டுத் தொலைபேசியை வைத்தவர், தேநீரை ஊற்றி எடுத்துக்கொண்டு மேலே சென்றார்.
‘‘யாரப்பா ஃபோனில?’’ இந்திரன் தான் கேட்டார்.
‘‘வேற யார்? உங்கட அருமைத் தங்கச்சி புருசன்தான். தன்ர பணம் காச்சி மரம் வேலையால வந்திருப்பா என்று எடுத்தார். இன்னும் வரேல்ல என்றதும் வச்சிட்டார் மனிசன்.” என்று ஏளனமாகச் சொன்னபடி தேநீரைப் பரிமாறினார்.
“இதுகள எல்லாம் எந்த வகையில் சேர்க்கிறது சொல்லக்கா?” தமைக்கை சுமியிடம் கேட்டவர்,
“இதெல்லாம் நான் சொன்னால் உங்களுக்குப் பிடிக்காது. பிள்ளையைத் தான் யாரோ தலையில் கட்டிட்டம், ஏதோ அவள் சரி நல்லா வந்தாப் போதுமென்ற நினைப்பில்லாமல், எந்த நேரமும் எடுத்துக் காசு காசு… காசு தான். இந்த மடச்சியும் குடுத்துக் குடுத்துப் பழக்கிறாள். பிறகு, அந்தரம் ஆபத்துக்கு ஒன்றும் இல்லாமல் நிற்கப் போறாள். இதைச் சொன்னால் நான் கெட்டவள்.’’ நீட்டி முழங்க, எரிச்சலோடு இடையிட்டார் இந்திரன்,
‘‘போதும் புவனி, இந்தக் கதையை இனி விடுங்க. தன்ர குடும்பத்துக்குத்தானே அவள் செய்கிறாள். அதுவும் தானே உழைச்சுக் குடுக்கிறாள்.’’
மனைவி, நிதி வீட்டினரின் கதையை எங்கு யார் இருந்தாலும், தொடங்கினார் என்றால் நிறுத்தாமல் ஏலம் போடுவார் என்று மிகவும் நன்றாகத் தெரிந்த இந்திரன் குரலில் கண்டிப்பு விரவி நின்றது.
சுற்றி அத்தனை ஆட்கள் இருந்ததால் மட்டுமே கணவனின் பேச்சு ஏற்படுத்திய ஆத்திரத்தை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டார் புவனி.
என்றாலும் முழுவதுமாக அடக்க முடியவில்லை.
‘‘யாரு இல்லை என்றது? ஆனால், அவள் இங்க இத்தனை வருசங்களாக ஓசியில் தானே இருக்கிறாள். அதற்கு நான் ஏதும் சொல்லுறனா?
அதுமட்டும் இல்லை, போன மாதம் அங்க போய் வந்த சரளாட தங்கச்சியிட்ட…அந்தாக்கள்…அதுதான் உங்கட அருமைத் தங்கச்சி…ஏதோ நான் அவவின்ட மகள வச்சு வேலை வேண்டுறது மட்டுமில்லாமல், அவள் கோடி கோடியாக உழைச்சுக் கொட்டக்கொட்ட அள்ளி வச்சிருக்கிற மாதிரி கதைச்சவாவாம். கொஞ்சமும் நன்றி இல்லாததுகள், இதெல்லாம் எனக்குத் தேவையா சொல்லுங்க?’’ கோபாவேசத்தில் உறுமினார்.

