3
நிதியிடம் விடைபெற்று, வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வசியின் உள்ளத்திலும் கலவையாகப் பல நினைவுகள் தான். அவற்றில், அவன் பார்வையில் மிகவும் பிடிவாதக்காரியான நிதியும் அடங்கியிருந்தாள் என்பதை நிச்சயமாய் மறுக்க முடியாது.
ஏறக்குறைய ஒன்பது வருடங்களுக்கு முன் அவள் நெதர்லாந்து வந்த போது, அவள் இங்கு வருவதில் புவனிக்கு அவ்வளவாக விருப்பமில்லை என்பதும், இந்திரனின் கடும் முயற்சியால் தான் வரவிருக்கிறாள் என்பதும் தெரிந்து, இங்கு வாழும் அவர்கள் உறவு வட்டாரத்தில் அவள் மீது பரிதாபமே எழுந்தது.
அதே எண்ணத்தில் முதன்முதல் அவளைச் சந்தித்தவன், உருவத்திலும் வயதிலும் சிறியவளாக இருந்தாலும், அவள் செய்கையில் ஒரு முதிர்ச்சித்தன்மை இருப்பதைப் பார்த்து வியந்துதான் போனான்.
அவளை விட இரு வயது பெரியவளான அவன் தங்கை, தன் பதின்மூன்று வயதிலும் தாய் ஊட்டி விட்டாலே உண்பாள் என்றிருக்க, இங்கு நிதியோ, தன்னையும் கவனித்து, புவனியின் வாயில் புகுந்து வராமல் இருப்பதற்காகத் தன்னால் முடிந்த அளவுக்கு வீட்டு வேலைகள் செய்வதையும் சமையலுக்கு உதவிகள் செய்வதையும் பார்த்தவன், மற்றவர்கள் போலவே தானும் வியந்துதான் போனான்.
அவளோ, தேவையில்லாமல் யாருடனும் எவ்விதக் கதை பேச்சுக்களுமின்றி ஒதுங்கி ஒதுங்கிப் போவதைப் பார்த்தவன், ஆரம்பத்தில் ’சின்னப் பிள்ளை, புது இடம், புது மனிதர்கள் என்று கூச்சப்பட்டு அப்படி இருக்கிறாள்.’ என்று நினைத்து, வலியச் சென்று கதைத்து வந்தான்.
நாள் செல்லச் செல்ல, அவளை இந்த ஒதுக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர வேண்டும் என்ற உந்துதலில், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளைச் சீண்டிப் பார்க்க, குறும்பு செய்ய என எழும் தன் உள்ளத்து ஆவலை என்றுமே அடக்க முனைந்ததில்லை அவன்.
தான் எவ்வளவு தான் வம்பிழுத்தாலும், சிறு முறுவலுடனும் ஓரிரு வார்த்தைகளுடனும் நகர்பவளைப் பார்க்கும் போது அப்படியே இழுத்து வைத்து, ‘’ஏன்டி இப்படி இருக்கிற?’’ என்று கேட்க வேண்டும் போல் அப்பப்போ தோன்றுவதுண்டு, இவனுக்கு!
எல்லோரிடமும் ஒரு எல்லை வைத்துப் பழகும் நிதி, தன் தாய் தந்தையுடன் மட்டும் மிகவும் நெருக்கமாகப் பழகுவதையும் ஆச்சரியத்துடன் பார்த்து வியப்பான் வசி.
வசியின் தாய் சுமியோ, தன் தங்கை புவனி, அச்சிறுபெண்ணை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் வறுத்தெடுப்பதையும், அவள் தாய் தகப்பனைப் பற்றித் தூற்றிப் பேசுவதையும், அவள் குடும்பத்தின் இயலாமையை இல்லாமையைக் கேலி செய்வதையும் பார்த்து, ‘’அப்பிடிச் செய்யாத புவனி; சின்னபிள்ளையின்ட மனம் என்ன பாடுபடும்? கொஞ்சம் யோசிச்சுப் பாரன்!’’ என்று கண்டிக்கத் தவறியதேயில்லை.
அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்காத புவனியோ, நிதியைக் குத்திக் காட்டுவதையும், தானும் வேலைக்குப் போவதால் இயல்பிலேயே வீட்டு வேலைகளை நன்றாகச் செய்யக் கூடியவளாக இருந்தவளை வேலைகள் வாங்குவதையும் நிறுத்த முனையவில்லை. அதைப் பார்த்த சுமி, சனி ஞாயிறுகளில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளைத் தம்முடன் அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.
இங்கு வந்தவுடனேயே பாடசாலையில் சேர்ந்துவிட்டாள் நிதி. வழமையான பாடங்களுடன் சேர்த்துத் தனியாக நெதர்லாந்து மொழியும் படிக்கத் தொடங்கி, இரண்டு வருடத்தில் இந்நாட்டு மொழியில் மிகநல்ல தேர்ச்சியும் பெற்றுவிட்டாள்.
எனினும் மற்றப் பிள்ளைகளைவிட முழுதாய் இரண்டு வருடங்கள் பின்தங்கியே கல்வியைத் தொடர முடிந்தது.
தன் பதின்மூன்றாவது வயதிலிருந்து பள்ளித்தோழி சனாவுடன் சேர்ந்து அதிகாலையிலும் மாலையிலும் வீடுகளுக்கு பத்திரிகைகள், விளம்பரப் பத்திரிகைகளைப் போட்டுப் பணம் சம்பாதிக்கத் தொடங்கினாள் நிதி.
பணமும் அதைச் சம்பாதித்தல் என்பதும் அவளுக்கு முதன்மையானதாய் இருந்தது.
அதற்காகச் சிறுவயதிலேயே தன்னை மிகவும் வருத்திக் கொள்ளத் தொடங்கினாள் அவள்.
‘‘உன்னை நம்பி நாங்க எல்லாரும் இருக்கிறம்!’’ என்று தாய் சொன்னதைத் தினமும் நினைவில் வைத்துச் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தவள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் இந்திரனின் உதவியோடு வீட்டுக்குப் பணம் அனுப்பவும் தொடங்கினாள்.
பின், தன் பதினைந்தாவது வயதில் வீடுகளைத் துப்பரவு செய்யும் வேலைகளைச் செய்வதற்காக சனாவுடன் சேர்ந்து போகப் போவதாகச் சொல்லவும், அதற்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்த ரஞ்சன், தான் சொல்வதை அவள் காது கொடுத்துக் கேட்காததைப் பார்த்து, தனக்குத் துணையாகத் தன் அண்ணா வசியையும் அழைத்துக் கொண்டான்.
‘‘இப்பிடி வேலை செய்யிறது எல்லாம் இங்க சாதாரணம் தானே தம்பி? நீங்க ஏன் வேணாம் என்று தடுக்கிறீங்க? எல்லாம் சும்மா இருந்தால் வருமா சொல்லுங்க? இப்பவும் அவள் வேலை செய்து உழைக்கிறதை எல்லாம் தன்ர வீட்டுக்குத் தானே செலவழிக்கிறாள்? இங்க நாங்க தானே அவள்ட செலவெல்லாம் பார்க்கிறம்.’’ என்று, கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளைக் குத்திக் காட்டிய புவனியை ஓர் முடிவுடன் பார்த்தான் வசி.
‘‘இல்ல சித்தி; இப்பிடி வீடுகளில போய் வேலை செய்யிறது எல்லாம் கொஞ்சமும் சரிவராது.’’ என்றவன், ‘‘முதல் படிக்கிறதை ஒழுங்காகச் செய்யும்!’’ அவளிடமும் கடுகடுத்தான்.
பின், அன்று அவர்கள் மறுப்புச் சொன்னதும் அவள் கண்கள் கலங்க நின்றதைப் பார்த்து மனமிரங்கி, விடுமுறைக்காலங்களில் வேலை செய்வதற்கென ‘மக்டொனால்ட்’ இல் வேலை வாங்கிக் கொடுத்தான். அங்கு, அவளது சுறுசுறுப்பான வேலையைப் பார்த்த அவள் மேற்பார்வையாளர், சமயம் கிடைக்கும் போதெல்லாம் முன்னுரிமையாய் வேலை கொடுக்க, அவளும் அலுப்புச் சலிப்பில்லாது நேரகாலம் பார்க்காது படிப்புப் போக மீதி நேரத்தில் வேலை செய்து வருகிறாள்.
‘ம்ம்…சின்னப்பிள்ளை என்றாலும் இரும்பி! தன்னை ஒருவரும் பாவம் பார்க்கத் தேவையில்லை என்று சொல்லாமல் சொல்லித் தன்ர தேவைகளைத் தானே செய்யிறாள்.’ முறுவலுடன் நினைத்துக்கொண்டவன், வீட்டை வந்தடைந்து காரை நிறுத்தி விட்டு வீட்டினுள் சென்ற வேகத்தில் குளித்துவிட்டு, ‘’ஹப்பாடா!’’ எனத் தன் படுக்கையில் சரிந்தான்.
*****
கல்யாண வரவேற்பிலிருந்து வீடு திரும்பினர், இந்திரன் குடும்பத்தினர்.
தாயும் தந்தையும் கீழே சமையலறையில் அமர்ந்து கல்யாண வரவேற்பில் நடந்தவற்றைக் கதைத்துக் கொண்டிருக்க, வேகமாக மேலே சென்ற ரஞ்சன், இருளில் மூழ்கியிருந்த நிதியின் அறையைத் திறந்து ‘‘நிதி…நிதி…’’ என, மெதுவாக அழைத்துப் பார்த்தான்.
அவள் பதில் தராததால், ‘‘தூங்கீட்டாள் போல!’’ முணுமுணுத்தவாறே அறையின் மின் விளக்கைப் போட்டுப் பார்த்தான்.
கழுத்துவரை போர்த்திக்கொண்டு சுவர்ப்பக்கமாகத் திரும்பிப் படுத்திருந்தவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன், ஒரு பெருமூச்சுடன் மின்விளக்கை அணைத்து அறையை மெதுவாகச் சாத்திவிட்டு மேலேயுள்ள தன்னறை நோக்கி நகர, வெளியில், குளியலறை வாயிலில் நின்று தன் தமையனையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த அவன் தம்பி ரதீஷ், ‘‘என்ன அண்ணா…நிதி தூக்கம் போல!’’ அடங்கிய சிரிப்புடன் பகிடிக்(கிண்டல்) குரலில் கேட்க, முறைத்தான் தமையன்.

