வேகமாக வந்த அம்மாது பட்டென்று ஏதன் முதுகில் ஒரு போடு போட்டார்.
“நோஓஓ … கிராணி!” ஏதன் உரிமையோடு கத்தினான். துர்காவைப் பிடித்த பிடியை மட்டும் விட்டுவிடவில்லை.
முதியவர் பார்வை ஏதனை முறைத்தது. அதே வேகத்தில் துர்காவில் படிந்தது, நிச்சயம் அளவிடுவதாகத்தான்.
அது என்னவோ அந்தப் பார்வையில் உறைந்து கிடந்த கண்டிப்பா எதுவோ ஒன்று அவளைச் சற்றே பதற்றப்படுத்தியது. அதுவே அவன் பிடியில் தன் கரம் உள்ளதையும் மறந்து நின்றாள்.
“மை டியர் போய், கோவமா இருக்கிற காதலிய இன்னும் இன்னும் கோவப்படுத்துற மாதிரி பிடிச்சு இப்பிடியா முரட்டுத்தனமா இழுக்கிறது? என்ன காதலன் நீ?” மீண்டும் அவன் முதுகில் அடி போட்டவர், துர்காவை உள்ளே வரும்படி அன்போடு அழைத்தார்.
அவளோ, “ஆர் காதலி?” தன்னையே பார்த்து நின்றவனிடம் கோப விழிகளோடு கேட்க, விழிகளைச் சிமிட்டிவிட்டு ஒற்றை நெற்றியை ஏற்றி இறக்கினான், அவன்.
தன்னோடு தனகுகிறான், அந்தளவுக்கா இடம் கொடுத்துவிட்டேன் என்று மனத்துள் மறுகிக்கொண்டு இருந்தவளாச்சே! இது பார்த்தால் இந்தப் பெண்மணி வரை அவள், அவன் காதலியாக அறிமுகமாகி இருக்கிறாளா என்ன? இதெல்லாம் எப்போது நடந்தது? அதுவும் அவளுக்கே தெரியாது அவளுக்கு ஒரு காதல், காதலன்.
துர்கா மனநிலையை அறிந்துகொள்ளும் நோக்கம் அவனுக்கு இல்லை போலும். சற்றே இன்னும் நெருங்கி நின்றான். “காதலிப்போமா துர்கா?” தலை சரித்துக் கண் சிமிட்டியபடி கேட்டு வைத்தான்.
“மண்ணாங்கட்டி!” தமிழில் சீறினாள், அவள். ஏதனது மட்டுமில்லாது அந்த முதிய பெண்மணியின் புருவங்களும் மேலேறி நின்றன.
ஏதனைக் கேள்வியாகப் பார்த்தார், பெரியவர். விழிகளில் விசமம் தெறித்தது. “உன்னை ஏசுறாளா என்ன?” நக்கலாகக் கேட்டார்.
அவன் எங்கே அவரைப் பார்த்தான்? காலாகாலமாகத் துர்காவை நேசிப்பவன் கணக்கில் அவளையே இரசனையாகப் பார்த்து நின்றான்.
“இஞ்ச பாருங்க, உங்களுக்கு டைம் பாஸுக்கு நான் ஆள் இல்ல சரியோ. காதலிக்க வாவாமே. அதுக்கு வேற ஆள் பாருங்க சரியா? முதல் இது எத்தனையாவது காதல்?” சத்தம் உயரவில்லை. வலு மரியாதையாக அவள் கதைத்தவிதமே அவனுக்குப் பாளாரென்று அடித்தது போலிருந்தது. அதுவும் அவன் கிராணி விழி விரிய இருவரையும் மாறி மாறிப் பார்த்து நின்றாரா. ஏதன் பார்வையில் மெல்ல மெல்லச் சினம் துளிர்த்தது.
விழிகள் இடுங்கி முகத் தசைகள் இறுகி அவன் நின்ற நிலை அவனுக்குச் சரியான கோபம் என்று தெள்ளத் தெளிவாகத் துர்காவிற்கு விளங்க வைத்திட்டு. அதற்காக அவன் காதலிக்க வா என்றால் கைபிடித்துச் செல்ல வேண்டுமா என்ன? காதலிக்கக் கேட்கும் உரிமை உனக்கு உண்டு என்றால் மறுக்கும் உரிமை எனக்கும் இருக்கு. நிமிர்வாகவே அவனைப் பார்த்து நின்றாள்.
“இஞ்ச பார் துர்கா, எல்லா நேரமும் விளையாட்டு இல்ல. என்ன எங்க எப்பிடிக் கதைக்கிறது எண்டதில வலு அவதானமா இரு! இட்ஸ் எ வோர்னிங், கொட் இட்!” அடிக்குரலில் உறுமினான்.
“வட் எ ஜோக்! நீங்க ஆர் என்ன வோர்ன் பண்ண? நான் இப்பிடித்தான் கதைப்பன்.” சிலிர்த்துக்கொண்டு மல்லுக்கு நின்றவளைச் சட்டென்று கன்னம் வருடி அணைத்துக்கொண்டார், அந்தப் பெண்மணி.
திமிறி விடுபடப்பார்த்தாள். அவர் விட்டால் அல்லவா? ஏதன் மீதான கோபத்தைச் சற்றேனும் வழிமாற்றியது அப்பெண்மணியின் பார்வையும் பேச்சும்.
“இவள்தான் நீ சொன்ன துர்காவா? சரியான கோபம் வருமோ துர்காக்கு?” மீண்டும் அவள் கன்னம் பற்றி வருடியவர் விழிகளில் இப்போது பாசம் தெரிந்தது. அப்போதுதான் அவரை நன்றாகப் பார்த்தாள். நிதானமாகப் பார்க்கையில் ஆரோன் சாயல் தெரிந்தது.
“நீங்க நீங்க… செஃப்ட அம்மாவா?” கேட்டவள் குரல், உடல்மொழியில் மரியாதை. அதுவே அவள் அந்த மனிதரை எந்தளவிற்கு மதிக்கிறாள் என்று காட்டிட்டு.
பேரன் விழிகளைக் கூர்ந்துகொண்டே, “இவன் எங்க போறோம் எண்டு சொல்லாமலா கூட்டிக்கொண்டு வந்தவன்?” என்றவர், துர்காவையே பார்த்து நின்றவன் கன்னம் பற்றி அப்படியும் இப்படியும் ஆட்டினார்.
“சோ… கிட்டதட்ட கடத்திக்கொண்டு வந்திருக்கிறாய் எண்டு சொல்லு. அதுவும் உன்ர நேசத்தையும் சொல்லாமல். டூ பாட் மை டியர் போய்! நீ கட்டாயம் உன்ர டாட், கிரண்ட்பா ரெண்டு பேரிட்டையும் காதலிக்கிறது எப்பிடி எண்டு கற்றுக்கொள்ளோணும்.” என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்து, அவள் மீதான அவன் சினத்தைத் தானும் பகிர்ந்துகொண்டார். அதோடு, திமிறிக்கொண்டு நிற்கும் துர்காவைச் சிந்தித்துச் செயலாற்ற விடவில்லை, அவர்.
“சரி சரி வாங்க உள்ள போய்க் கதைக்காலாம்.” என்று துர்காவைப் பிடித்து நடத்திச் சென்றவர். “ இல்ல இல்ல… நான் போகோணும்.” என்றவள் குரலைச் செவிகளில் வாங்காத பாவனையில் நடந்தார்.
“உங்களுக்க என்ன எண்டாலும்…” என்று, அவளைப் பார்த்துக் கண்ணடித்தவர், “எல்லாத்தையும் திரும்பிப் போகேக்க காருக்குள்ள வச்சுக்கொள்ளுங்க சரியா? இப்ப வேணாமே.” மீண்டும் அவள் கன்னம் வருடிக் கெஞ்சும் பாவனையில் சொன்னார்.