ஏதனின் இலஞ்சியவள் 18 – 1

‘அந்த வெள்ளைப் பன்றி வந்தா ..சே சே வர மாட்டான். சரி வந்தாலும் எனக்கென்ன, இளிச்சுக்கொண்டு கிட்ட வந்தா காலில இருக்கிறதால குடுக்க வேண்டியதுதான்’’  என்று எண்ணியபடி, மனக்கொதிப்பு அடங்காதுதான் விமான நிலையத்திற்குள் நுழைந்தாள், துர்கா.  

விமானம் தரையிறங்க  இன்னும் பத்து நிமிடங்கள் உள்ளதைப் பார்த்துவிட்டுத் திரும்ப, “என்ன மேம், ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டீங்களா?” உல்லாசக் குரலில் கேட்டுக்கொண்டு வந்து அவள் தோளோடு இடித்துக்கொண்டு நின்றான், ஏதன்,

“ப்ச்!” விசுக்கென்று தள்ளி நின்றாள். அந்நியத்தன்மையும் கோபமுமாக முறைத்தாள். அதை அவன் கவனித்தது போலில்லை. 

“ஃபிளைட் லேண்ட் ஆக இன்னும் பத்து நிமிசங்கள்  இருக்கு துர்கா. பிறகு, இம்மிக்ரேஷன் முடிச்சு, பேக்ஸ் கலெக்ட் பண்ணிட்டு  வர நேரம் எடுக்கும். அவசரமா வெளிக்கிட்டு வந்தனா சாப்பிடவும் இல்ல. பசிக்குது, லைட்டா சாப்பிட்டுட்டு, கோப்பி குடிப்பமா?” வலு இயல்பாக அவன் கேட்ட விதம், அவளுள் குமைந்துகொண்டிருந்த கோபத்தை அதிகரிக்கச்செய்திட்டு. 

 அவன், அவளுக்காகக் காயப்பட்டபோது  மட்டுமல்ல,  அதன் பின்னரும் ஏதோ ஒரு விதத்தில் அவளுள் சலனம் உண்டு பண்ணினான்தான். நிச்சயம் மறுக்கமாட்டாள். இருப்பினும் அந்தச் சலனம் அவள் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்தது. வளர்க்கும் எண்ணமில்லை. அவளுள்ளம் இது சாத்தியப்படாது என்றதே காரணம். சரி, நட்போடு பழகலாம் என்றளவில் தன்னைத் தயார் செய்தும் வைத்திருந்தாள். 

இப்போதோ, அவன் மீது  கோபம் கடந்து வெறுப்பை அல்லவா உருவாக்கப் பார்க்கிறான். முதல் நாள் இரவெல்லாம் அவள் துளியும் உறங்கவில்லை. இவனையும் காதலிக்கிறேன் என்ற இவன் அணுகுமுறையையும்தான் நினைத்துக்கொண்டிருந்தாள். 

முடிவில் அவன், அவளை, அவள் உணர்வுகளை, விருப்பை எல்லாம் ஒரு பொருட்டாகப் பார்க்கவில்லை என்றே அவளால் விளங்கிக்கொள்ள முடிந்தது. அவனுக்கு இப்போது ஏதோவொரு  வகையில் அவளைப் பிடித்திருக்கு. அதுவே போதுமாம்.  தன் விருப்பை நிறைவேற்றிட நினைக்கிறான். 

‘இதற்கு நிச்சயம் நான் ஆளில்லை ஏதன்’ என்ற உறுதியான  முடிவோடுதான் விடிய எழுந்து புறப்பட்டதே. ‘கோப்பி குடிக்க வரட்டாமே’ அவனையே பார்த்தபடிதான் இத்தனையையும் நினைத்தாள்.

அவள் முகத்தில் மாறி மாறி வந்து போன உணர்வுகளைக் கவனித்தபடிதான் நின்றான், ஏதன். அதில் நட்போ நேசமோ தலைகாட்டவில்லை என்பதும் விளங்கியது. ஆனால் என்ன அதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன்னை அவள் மறுப்பாள், மறுக்கிறாள் என்பதை அவன் நம்ப முடியாது நின்றான். அது உண்மை இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்கிறதே அவன் மனம். 

நடிக்கிறாள். வீட்டில்தான் எதிர்ப்பு என்றால் தாத்தாவும் வெறுப்பாகத்தானே கதைத்தார். அவள் கண் முன்னாலேயே அவளை, அவர்கள் குடும்பத்திற்குள் சேர்த்துக்கொள்ளத் தயார் இல்லை என்றுவிட்டார்கள். பிறகு எப்படித் தன் மனத்தை வெளியில் காட்டுவாள் என்று எண்ணியவனுக்கு அவள்பால் பிடித்தம் அதிகரித்திட்டு.

 

உன் கவலை அனாவசியமானது பெண்ணே! நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்று உனக்கு எப்படி விளங்க வைப்பேன்? “அதுக்கு  நீயும் கொஞ்சம் சரி இடம் தரோணும்.” வாய்க்குள் முணுமுணுத்தான்.

அது துர்கா செவிகளில்   தெளிவாகவே விழுந்தது. விசுக்கென்று பார்த்தவள் பார்வைக்குத்  துண்டாக்கிடும் தன்மை இருந்திருந்தால் அவன் துண்டு துண்டாகிவிட்டிருப்பான்.

“வாட், இப்ப என்ன கேட்டனான்? இஞ்ச பார் துர்கா,  நேற்றே சொல்லிட்டன்  இனி உன்ர  சம்மதம் இல்லாமல் இந்த கை.” என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவுவது போல் கையைக் கொண்டு வந்தான். பட்டென்று தள்ளி நின்றாள் அவள். ஏதன் முகம் மாறினான். ஆனாலும் உதட்டுக்குள் நகைத்தான். கண்களைச் சிமிட்டியவன், “நேற்று…” என்று மீண்டும் தொடங்கினான்.

துர்காவின் பொறுமை முற்றாகப் பறந்துவிட்டிருந்தது. “வில் யூ ஷட் அப் ஏதன் . எனக்கு உன்னோட கதைக்க ஒண்டுமே இல்ல. நேற்றும் சொன்னனான் எல்லா? பிறகு என்ன இஞ்ச வந்து நிண்டு அலட்டுற? கெட் லொஸ்ட்.” கடித்துத் துப்பிய வார்த்தைகளை அவன் கிரகிக்க முதல் விறுவிறுவென்று தள்ளிச் சென்றுவிட்டாள். சற்றுத் தள்ளிக் கூட்டமாக நின்றவர்களோடு கலந்து நின்றவளிடம் செல்ல மனம் ஊந்தினாலும் அவன் கால்கள் ஒத்துழைக்கவில்லை. அவளையே பார்த்து நின்றான், ஏதன்.

அவள் தவிர்ப்பை, கோபத்தை, எரிச்சலை எல்லாம்  இதுவரை போல் ஒன்றும் இல்லை என்றளவில் அவனால் தட்டிக் கழிக்க முடியவில்லை. இதயத்துள் எதுவோ செய்தது. புத்தம் புதியதான அந்த வலியைச் சகிக்க இயலாதிருந்தது. 

அந்நேரம் அவனைச் சற்றேனும் அந்த வலியிலிருந்து காப்பாத்துவது போல் அவன் கடைசித் தங்கை அழைத்தாள். எங்கு இருக்கிறான் என்று வினவியவளுக்குப் பதிலளித்தவன் தனியாகச் சென்று ஒரு கறுப்புக் கோப்பியை வாங்கி உறிஞ்சினான்.

அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் மெல்லத்  திரும்பிப் பார்த்தான். என்னதான் விசுக்கிவிட்டுச் சென்றிருந்தாலும் துர்காவின்  பார்வை தன்  புறம் வரும் என்று எதிர்பார்க்கும் மனத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லையே! 

அந்தோ பரிதாபம். அவன் மனம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கைப்பேசியில் பார்வை பதித்திருந்தாள், துர்கா.

கோப்பியோடு ஏமாற்றத்தையும் சேர்ந்தே விழுங்கினான், ஏதன். நீ இப்படியெல்லாம் நடந்து கொண்டால் சரியா பெண்ணே! என் தோல்வி, எப்போது என்னைப் பாதிக்கும் தெரியுமா? அதை நான் தோல்வியாகக் கருதும் பட்சத்தில், உணரும் பட்சத்தில் மட்டுமே!

“யூ ஆர் ஓல்வேஸ்  மைன் ஹனி, அண்ட் ஐ லவ் யூ டில் த  எண்ட்” மெல்ல முணுமுணுத்துக்கொண்டான் .

*****

“ஹேய்ய்ய் ஒலிவியா !” மகிழ்வோடு கையாட்டிக்கொண்டு முதல் ஆளாக ஓடிச்சென்று நண்பியைக் கட்டிப்பிடித்திருந்தாள், துர்கா.

அவள் இடக்கை அணைவுக்குள் அழகிய பெரிய பூங்கொத்தொன்று. ‘அந்த இடத்தில் நான் இருந்தால்’. ஏதன் மனம்  துர்கா விடயத்தில் வெட்கம் துக்கம் பார்க்கவே போவதில்லையாம். 

தலைகோதிக்கொண்டான். மெல்லிய முறுவல் கூட உதடுகளை உரசிச் சென்றது. அவனிடம் அவள் எவ்வளவு பாராமுகம் காட்டுகிறாள். தள்ளி நிறுத்துகிறாள். இப்போதைக்கு அவன் அவள் மீது வைத்துள்ள அளவிற்கு நேசமோ, ஈர்ப்போ  அவன்பால் அவளுக்கு இல்லைதான். 

இந்த ரீதியில் எல்லாம் நினைக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. என்றாலும் முகத்தில் வந்து மோதும் உண்மை அப்படி எண்ணிப்பாரடா என்று அவனைக் கட்டாயப்டுத்துகிறதே!

 

error: Alert: Content selection is disabled!!