Skip to content
ஏதன் கார், விமான நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஒலிவியா பின்னிருக்கையில் அமர்ந்திருந்தாள். பார்வை, யன்னலால் இலண்டனை இரசித்துக்கொண்டிருந்தது. முன்புறம் ஏதனும் வேர்த்தும் இலண்டன் மற்றும் அவுஸ்திரேலிய பொருளாதார ஆய்வில் இருந்தார்கள்.
பின்புற யன்னலால் திரும்பிப் பார்த்தாள், ஒலிவியா. இவர்களுக்குப் பின்னால் ஐவனும் ஏவாவும் வந்து கொண்டிருந்தார்கள். ஏவா கையாட்டினாள். இவள் கையும் அசைந்தது. முறுவலோடு மீண்டும் வெளியில் பார்வை பதித்தவளுக்குச் சற்றுமுன் நடந்தவைதான் நினைவிலோடியது.
சொத்தில் எனக்கென்று எதுவுமே தேவையில்லை, உங்கள் அன்பு மட்டுமே போதும் என்று சொன்னவள், சோஃபியாவும் ஐலாவும் மலர்ந்து போனதைக் கவனிக்கவே செய்தாள். சுறுசுறுவென்று கோபம் வந்தது. அதைக் காவிக்கொண்டு பயணிக்க அவளால் இயலாது.
அதுவே, “ஐலா உன்னிடம் ஒன்றைத் தெளிவுபடுத்தோணும்.” எனறு ஆரம்பிக்க வைத்திருந்தது.
ஒலிவியா இன்னார் என்று தெரிந்த பிறகு அவளோடு கதை வைத்துக்கொள்ள ஐலா விரும்பியதில்லை. தன் தகப்பனை அபகரிக்க வந்தவளாக, சமூகத்தில் தன் குடும்பத்துக்கு அவதூறு உருவாக்கிய காரணியாகவே ஒலிவியாவை அவளால் பார்க்க முடிந்தது. ஐலாவின் மனம் அறியாத ஒலிவியா, ஏற்கனவே அவளோடு அறிமுகமும் இருந்ததில் மலர்வோடு நெருங்கியிருந்தாள். எதிரொலி எதிர்மறையாக இருக்கவும் நன்றாகவே தள்ளி நின்றுகொண்டாள். அது ஐலாவுக்கும் நன்கு தெரியும்.
“அப்பிடியிருக்க இண்டைக்கு என்ன கதைக்க இருக்கு?’ ஐலாவினுள் யோசனையோடியது. சொத்து வேண்டாம் என்றதில் ஒலிவியாவில் சிறிதாக நல்லெண்ணமும் உருவாகியிருந்தது. அதுவே, “சொல்லு, என்ன விசயம்?” என்று மிடுக்கோடு கேட்க வைத்திருந்தது.
அவள் மிடுக்குக்கும் மேலாக இருந்தது ஒலிவியாவின் தோரணையும் பேச்சும் .
“விசயம் பெரிசா ஒண்ணும் இல்ல.” என்றுவிட்டு நக்கல் சிரிப்பை உதிர்த்தவள், “இப்ப நான் கோல்ட் டிஃங்ர் இல்ல எண்டு உனக்குத் தெளிவாகி இருக்குமே!” சீண்டலாகக் கேட்டாள்.
இதை ஐலா சற்றுமே எதிர்பார்க்கவில்லை. பதற்றம் மோதிய முகத்தோடு தகப்பனைப் பார்த்தாள்.
ஆரோன் முகத்தில் அதிர்வு. தன் ஒரு மகள் மற்ற மகளிடம் கேட்கும் கேள்வியா இது?
“ஐலா உன்னைப்போல்தான் இவளும் என்ர மகள். அப்பிடியிருக்க என்ன அதிகாரத்தில …” என்று கோபமாக ஆரம்பித்த ஆரோனைக் கதைக்கவிடவில்லை, ஒலிவியா.
“ப்ளீஸ் டாட்!” என்றவள்”, மீண்டும் ஐலாவைச் சீண்டலாகப் பார்த்தாள். ஒலிவியா ‘டாட்’ என்று உச்சரித்தது ஐலாவுக்குப் பெரும் கோபத்தை உருவாக்கிற்று. “நானே கதைக்கிறன். இவள் என்னையும் என்ர நண்பியையும் பார்த்து அந்த வார்த்தை சொன்னத்திற்கு நானே பதில் சொல்லிக் கொள்ளுறன்.” என்றவள் மீண்டும் ஐலாவிடம் திரும்பினாள்.
“நண்பி எண்டா துர்காவையா அப்பிடிச் சொன்னனீ ஐலா? இதெல்லாம் என்ன பழக்கம், நீ என்ன சின்ன குழந்தையா?” அதட்டினார்,ஈவ்லின்.
ஐலாவுக்குச் சுர்ரென்று கோபமும் எரிச்சலும் உச்சிக்கு ஏறியது.
error: Alert: Content selection is disabled!!