நட்சத்திரா 26 – 2

 

மகளிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு இறுகக்  கட்டிபிடித்துக் கொஞ்சினார்,சுமதி.

“எப்பவும் நீ இப்பிடி மகிழ்ச்சியா இருக்கோணும் குஞ்சு!”தழுதழுத்தவர், அடக்கிக்கொள்ள முயன்றாலும் முடியாது விம்மிவிட்டார். கல்யாணியின் பிடி இறுகியது.

 “இது, மனம் நிறைஞ்ச மகிழ்ச்சியில வாற கண்ணீர் குஞ்சு. இதைவிட வேறென்ன எனக்கு வேணும் சொல்லம்மா.  கவலை எண்டா ஒண்டே ஒண்டுதான். நானும் நீயும் மிலான் வந்த நாளில இருந்து சொந்தக்காரர் போல கிறிஸ்டி எவ்வளவு மலர்வாக் கதைச்சிப் பிளங்குறவா. அவா பழையமாரி ஆகிரோணும். எங்களால , அவேட தாய் மகன் உறவுக்க விரிசல் வந்திரக்கூடாது.” என்றவர், மீண்டும் கொஞ்சிவிட்டு விடுவித்தார். 

தாய் சொல்ல சொல்ல கல்யாணிக்கு  அழுகை முட்டிக்கொண்டு வந்தது. உண்மையில் கிறிஸ்டியின் பாராமுகத்தைவிடவும் அவளைப்  பாதித்தான், டேமியன். அவனுணர்த்தும் தோழமை தரும் பாதுகாப்புக் கதகதப்பை உணர்ந்திருக்கிறாளே! குறுகியகாலப் பழக்கம்தான், இருந்தாலும் குறையாத அன்பும் அக்கறையும் கண்டு அனுபவித்திருக்கிறாள். நான் உனக்கு நீ எனக்கு என்ற உரிமையையும் உணர்த்தியிருக்கிறான். இவளையும் உணர வைத்துமிருக்கிறான் . அதுவும் உணர்வுகள் மரத்துப்போய் இரும்பென இருந்தவளை, இன்று, இந்தளவுக்குத் தளரச் செய்து, அவளுள் இருந்த காதலியை வெளியே இழுத்து வந்திருக்கிறான், தனக்கே தனக்கானவளாக! 

அவனுக்கும் தனக்குமான கல்யாணம் எந்தளவுக்கு மகிழ்வைத் தருகிறது என்று இப்போதுதான் அவளால் உணர முடிந்தது.

“ ஏன் குஞ்சு கண் கலங்கிற? டேமியன் தம்பிய பிடிச்சிருக்குத்தானே?” ஏனென்று தெரியாது, அவரையும் அறியாதே கேட்டிருந்தார், சுமதி.

“அம்மா என்ன நீங்க?” என்றுகொண்டே கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தவள் முகத்தில் வெட்கமா? விழிவிரித்துப் பார்த்தார், சுமதி.

 “பிடிக்காமல் எப்பிடிம்மா கலியாணம் செய்ய ஓமெண்டுவன். என்ர வாழ்க்கையில இப்பிடி ஓராள் வருவார் எண்டு எதிர்பார்க்கவே இல்லதான். ஆனாலும் ஆள் வந்திட்டார். உங்களுக்கு மகிழ்ச்சி தானே ?”  என்று சிரித்தவள் அவ்வளவு வடிவாக இருந்தாள்.

“மனம் நிறைஞ்சு போய்ட்டம்மா. வேற என்ன எனக்கு வேணும்!” என்றவர்,  “தீபாவோடு  கதைக்கோணும்.” என்றார்.

“காலம எடுத்தனான். அவா எடுக்கேல்ல. வாழ்த்துச் சொல்லி மெசேஜ் போட்டோருந்தா. ஏதோ கொன்ஃபரன்ஸ் எண்டு மலேசியாவில வந்து நிக்கிறாவாம். வீட்ட போயிட்டு கதைக்கிறாவாம்.” என்று சொல்லிக்கொண்டே, தாய்க்கு என்று கொண்டுவந்து வைத்திருந்த உணவைச் சூடுபண்ணிக் கொடுத்தாள்.

“ நீங்க சாப்பிட்டுட்டுத் தூங்குங்க அம்மா.  டேமியன் வாற வரைக்கும் பிள்ளைகளோட இருந்திட்டு வாறன்.” என்று செல்பவளையே பார்த்திருந்தவருக்கு , இந்தக் கணத்தை அனுபவிக்கவென்றுதானோ, நைந்து நார் நாராகிப்போன  உயிர் சுமந்தாரோ என்று தோன்றியது. 

அடுத்தடுத்த நாட்கள் விடிவதும் பொழுதுபடுவதும் கண்ணிமைப்பொழுதுகளாகக் கடந்து போயின.

திருமண ஒழுங்குகள்  எல்லாம் பார்த்துக்கொண்டது டேமியனும் அவன் நண்பர்களும்தான். ஆனாலும் ஒவ்வொன்று பற்றியும் கல்யாணிக்கும்  சுமதிக்கும்  தெரியப்படுத்தினான், டேமியன்.

காலையில் பதிவுத்திருமணம், மாலை வீட்டில் சிறு விருந்து. டேமியனின் நெருக்கமான நட்புகளும் சிலோன் டேஸ்டில் வேலை செய்பவர்களும் வரவேற்கப்பட்டிருந்தார்கள் என்பதைச் சொல்லி, “நீங்க ஆருக்காவது சொல்லோணும் எண்டால் சொல்லுங்கோ சுமதிம்மா.”  என்றான், டேமியன்.

“எங்களுக்கு எண்டு இருக்கிறது சிலோன் டேஸ்ட்டில வேலை செய்யிறவேயும் நீங்களும் தான் தம்பி.” உள்ளே பிசைந்துகொண்டெழுந்த வேதனையை மறைத்து முறுவலித்தார், அவர்.

அதோடு அவருக்கு ஒன்றைக் கேட்க வேண்டும். இந்தக் கலியாணப்பேச்சு ஆரம்பித்த நாளிலிருந்து முனைகிறார், முடியவில்லை. அவனாகச் சொல்வான் என்ற எதிர்பார்ப்பும் அற்றுப் போயிருந்தது. இனியும் தாமதப்படுத்துவதா, கேட்டுவிடுவோம் என்ற முடிவில், “தம்பி அது வந்து …” என்று தொடங்கினார்.

“தாலி…தாலி கட்டுறேல்லையா தம்பி?” என்று, சுமதி கேட்ட விதத்தில் அவ்வளவு தயக்கமும் சரிவிகிதத்தில் ஏக்கமும். ஒரே மகள் கலியாணம். சரி, அப்படி ஒரு நிகழ்வே நிகழுமா என்று இதுவரை ஏங்கியவர்தான். என்றாலும் இப்போது தாலி, கூரை என்று மணக்கோலத்தில் மகளைப்  பார்க்க மிகவும் ஏங்கினார். 

கல்யாணிக்குப் பிடித்தவகையில் கூரைச் சீலை எடுத்திருந்தான், டேமியன். இதில் அவளே மறுக்க மறுக்க. இருவருக்கும் மோதிரங்களும் வாங்கினான். அதில் அவனுக்குரியதை,  தானே பணம் செலுத்தி வாங்கியிருந்தாள், கல்யாணி.

“ஓ! உண்மையாவே அதைப்பற்றி யோசிக்கேல்ல சுமதிம்மா!”என்ற டேமியன், பியங்காவைத் திருமணம் செய்தபோதும் தாலி என்ற கதை வரவில்லையே!அதுவே இப்போதும் யோசிக்கவில்லை. 

“மோதிரம் வாங்கேக்க எனக்கு நினைவே வரேல்ல பாருங்க. சரி, இண்டைக்குப் போய் வாங்குவம்.”என்றதும், “எந்த முறைத் தாலி தம்பி?”  என்றிருந்தார், சுமதி.

சட்டென்று அவனுக்கு விளங்கவில்லை. நெற்றி சுருக்கினான்.

 “இல்லத்தம்பி,  கோயிலிலையா சேர்ச்சிலா தாலி கட்டுறது. ரெண்டு முறைகளிலும் வேற வேற தாலிதானே? அதான் கேட்டனான்.”என்றார் அவர்.

அவனோ,  சிரித்துவிட்டான். தாமிருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே அப்போதுதான் அவன் நினைவில் வந்தது.

“தாலி கட்டுறம். எங்கட வீட்டில பின்னேரம் விருந்து நடக்கேக்கையே கட்டலாம் சுமதிம்மா. கல்யாணிக்கு எந்தத் தாலி விருப்பமோ அப்பிடியே வாங்கீரலாம்.” சுலபமாக விடை சொல்லிவிட்டு, “ராசம் அன்ரி …என்ர ஃப்ரெண்ட் சஜீவ்ட அம்மா, அவாவோட கதைச்சு எது எப்பிடியெண்டு முடிவெடுங்கோ சுமதிம்மா. நான் கல்யாணிட்டக்  காசு குடுக்கிறன். உங்கட ஃபோன ஒருக்காத் தாங்க, ராசம்  அன்ரிட  நவம்பர் சேவ் பண்ணிவிடுறன். நானும் சொல்லுறன்.” என்று, அவரிடமே பொறுப்பையும் கொடுத்துவிட்டான்.

*****

கனடாவில் பாடசாலைகளில் கோடை விடுமுறை விட்டிருந்தார்கள். அதுவே ஜாக்குலின் குடும்பத்தோடு புறப்பட வசதியாகிற்று. 

“அடுத்த மூன்று மாதங்கள் அங்கதான் அம்மா. இவர் மட்டும் நாலு நாட்கள் நிண்டுவிட்டுத் திரும்பி வரட்டும்.  அங்க என்ன நடக்குது எண்டு நானும் பாக்கிறன்.” என்றவள், “அது உங்களுக்கு உரிமையான இடம், சொத்து. இப்பிடி விட்டுப் போட்டு வருவீங்களோ!  விலகிப் போறது எண்டா அது அங்க ஒட்டிக்கொள்ள வந்தவையா இருக்கோணும்.   பெற்ற தாய் நீங்க இல்ல!”என்று, அதையிதைக் கதைத்து, கிறிஸ்டினாவையும் கூட்டிக்கொண்டே வந்திருந்தாள்.

அவளுக்கென்றால்  சகோதரன் திருமணம் செய்வதில் மகிழ்வுதான். என்னதான் தாமே தம் வேலைகளைப்  பார்த்துக்கொண்டாலும் மூன்று சிறு பிள்ளைகளைப்  பொறுப்பாகப் பார்ப்பது அவ்வளவு இலகுவல்ல. அதுவும் கிறிஸ்டினாவால் அவ்வளவு இலகுவல்ல. அவர்களைக் கவனித்துக்கொள்பவர் வெளியாளாக இருப்பதைவிட்டு, டேமியன் திருமணம் செய்து வரும் பெண் என்றால் நல்லதே என்று நினைத்தாள். தாயின் சுமை குறையும் தம்பியும் மகிழ்வாக இருந்தால் அவளுக்கு மகிழ்வு இல்லையா?

ஆனால், வருபவள் அவர்களைத் தள்ளி நிறுத்துபவளாக, தாயின் மன நிம்மதிக்கே குடைச்சல் கொடுப்பவளாக இருப்பின் அனுமதிக்க முடியுமா? 

டேமியனோடு திரும்பவும் ஒரு தடவை கதைத்திருந்தாள். கல்யாணிதான் என்றதிலிருந்து அவனை வெளியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று முயன்று பார்த்தாள். டேமியன், இப்படிப் பிடியாக நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. 

“பியங்காதான் வாழ்க்கை முழுமைக்கும் என்றவன் இப்ப பாருங்க,  கல்யாணி கல்யாணி எண்டு கொண்டு வழியிறான். இந்த ஆம்பிளைகளே இப்பிடித்தான். காதலும் மண்ணாங்கட்டியும்!” புறுபுறுத்தபடி  இருந்து,கணவனுக்கும் அவளுக்கும் முட்டிக்கொண்டதுதான் மிச்சம்.

“உங்களுக்கு இப்ப என்னதான் பிரச்சினை ஜாக்குலின்? அவருக்குப் பிடிச்சவவச்  செய்து, மகிழ்ச்சியா நிம்மதியா  இருக்கட்டும் விடுங்கவன்.” என்றிருந்தான், ஜாக்குலின் கணவன், டேவிட். கிறிஸ்டினாவை நினைக்கவும் அவனுக்குக்  கோபமும் எரிச்சலும் தான் வந்தது.

“ இதென்ன சின்னப்பிள்ளை போல இருக்கிறா உங்கட அம்மா. கல்யாணி நல்ல பிள்ளை எண்டு கொண்டு இருந்தவா எல்லா? வெளியாள் எண்டா நல்லவள் வல்லவள், தன் மருமகளாக வரப்போறா எண்டோன்ன…குற்றமும் குறையும் கண்டுபிடிக்கிறது.” நக்கலாகக் கேட்டுமிருந்தான். 

 

 

error: Alert: Content selection is disabled!!