Skip to content
துர்கா எழுந்து நின்றாள். உன் அருகில் வருகிறானே இந்த உணவகத்தின் உரிமையாளன் அவனுக்காகக் காத்திருக்கிறேன் என்று எப்படிச் சொல்வாள்? சற்றே தடுமாறிவிட்டாள்தான். பார்வை கூட ஏதன் விழிகளில் பட்டுவிட்டு விலகிப் பீட்டரைப் பார்த்தது.
‘இவர் என்ர ஃப்ரெண்ட்ட ஃப்ரெண்ட் , கதைக்கோணும் எண்டு நிண்டனான்.’ என்று சொல்லும் பொருட்டு வாய் திறந்தாள்.
அவளை முந்திக்கொண்டு வந்தது ஏதன் குரல். அதில் கடுமை மறைக்கப்படாது வெளிப்பட்டது.
“நான்தான் நிற்கச் சொன்னனான் பீட்டர் , பிரச்சின ஒண்ணும் இல்லையே?” என்றவன், அவன் வினையாற்ற முதல், “இவள் என்னுடைய நல்ல நண்பி!”துர்க்காவின் விழிகளை ஊடுருவிப் பார்த்தபடி சொல்லியிருந்தான்.
‘ஃப்ரெண்டா? இது எப்ப இருந்தாம்?’ அவள் பார்வை கேட்டததை விளங்கிக்கொண்டவனுக்குச் சிரிப்பு வந்தது. உதடுகளுள் அடக்கிக்கொண்டான். இருந்தும் அவன் விழிகள் நகைப்பைக் கசிய விட்டன.
“ஓ அப்பிடியா? எனக்குத் தெரியாது ஏதன்.” என்று பீட்டர் பதறியது போலியோ என்றது, அவன், அவளைப் பார்த்த பார்வை. ஏற்கனவே திறமையை வைத்து உள்ளே வந்தவள் அல்லள் நீ என்பவனிடம் போய் இவன் என்ன சொல்கிறான்? துர்க்காவின் விழிகள் ஏதன் மீது முறைப்பாகப் படிந்தன. அவன் எங்கே அதைப் பார்த்தான்?
“கேட்கோணும் எண்டு நினைச்சுக்கொண்டே வந்தன், பார் மறந்து போக இருந்தன். எங்கட துர்கா சுறுசுறுப்பாக வேலை செய்யிறாளா? டெஸர்ட் நல்லாச் செய்வாள். அதுமட்டுமில்ல, பிளேட்டிங்ல வலு கெட்டிக்காரி, கிரியேட்டிவ்வா செய்யிற திறமையும் இருக்கு . பயன்படுத்திக்கொள்!” என்றானா?
பீட்டர் முகம் போன போக்கில் இவளுக்கு நகைப்பு வந்தது. அவளைச் சில கணங்கள் ஊன்றிப் பார்த்துவிட்டு ஏதனுக்குப் பதில் சொன்னான், பீட்டர்.
எங்கட செஃப் ஆரோன் இவளைப் பரித்துரைத்திருந்தார். சமையலில் விருப்பம் உண்டு என்றும் ஹோம் குக்கிங் பங்கேற்பாளர் தெரிவுக்கான சில சுற்றுகளில் பங்கெடுத்ததும் சொல்லி இருந்தார் என்றவன், “ உண்மையில் ஏதன், உங்களுக்கு நான் சொல்லித் தெரியத்தேவேல்ல, எங்கட உணவகங்களில முறையான அனுபவமோ தகுதியோ இல்லாதவேக்கு வேலை குடுக்கிறேல்ல. அது பகுதி நேரமா இருந்தாலும். எங்களுக்குத் தரம்தான் முக்கியம், அதாலதான் இந்த முடிவு. அப்படியிருக்க, இவவுக்கு என்ன வேலை குடுக்கலாம் எண்டு நான் சரியாக் குழம்பிட்டன் தெரியுமா? மூண்டு நாள் பயிற்சி குடுத்து, இப்ப வேலை செய்கிறா. பரவாயில்ல, வேலையில நேர்த்தி இருக்கு.” பெருமனதாகப் பாராட்டவும் செய்தான்.
“எந்தப் பிரிவில?” என்று வந்தது ஏதன் குரல் .
“சர்வீஸ்” என்றவன், “ வேற எதிலயும் விட எனக்கு உண்மையில விருப்பம் இல்ல ஏதன். பொழுதுபோக்குக்குச் சமைக்கிறவே, உள்ளே வேலை செய்யிறவேக்கு இடைஞ்சலாகிரக் கூடாதுதானே? அவேயும் விரும்பமாட்டீனம். சர்விஸ் விடவுமே நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. ” என்றான் அவன்.
அவன் சொல்லி முடிக்கவும் துர்க்காவைப் பார்த்தான், ஏதன். அவளோ, தன்னை, தன் திறமையை, கெட்டித்தனத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத, கருத்தில் எடாது முன்முடிவு எடுத்துச் செயற்படும் மேனேஜரில் கோபம் எழுந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
“சர்வீஸ் எனக்கு பிடிச்சிருக்கு. விரும்பித்தான் செய்யிறன்.” என்றிருந்தாள்.
இருவரையும் கூர்மையாகப் பார்த்த வேகத்தில், “போகலாம்.” பீட்டரிடம் விடைபெற்ற ஏதன் விறுவிறுவென்று வெளியேறினான்.
துர்க்காவை, அதுவும் அவன் நெருக்கமான நண்பியாம், தகப்பன் பரிந்துரை வேறு இருக்க, சர்வீஸ் பகுதியில் போட்டது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றது வெளிப்டையாகவே பீட்டருக்கு விளங்கியது. சும்மாவே ஆரோனின் இளைய மகன் ஒரு கொம்பேறி மூக்கன் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. அதில் இவனும் ஒருவனாயிற்றே!
விடைபெற்ற துர்க்காவை முறைத்துக்கொண்டு நின்றான், அவன். அதைப் பொருட்படுத்தாது நிதானமாகவே வெளியேறினாள், அவள்.
ஏழெட்டுப் படிகளால் இறங்கிய பின்னரே பார்க்கிங் செல்லும் பாதை இருக்கிறது . விறுவிறுவென்று கீழே இறங்கிவிட்டே திரும்பிப் பார்த்தான், ஏதன் . அவனையே பார்த்து முறைத்துக்கொண்டு நிதானமாக இறங்கி வந்துகொண்டிருந்தாள், துர்க்கா.
பீட்டர் சொன்னதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால், இது அவன் தந்தைக்குத் தெரியாதா? தெரியாமல்தான் எண்பதற்கும் மேற்பட்ட உணவங்களை உலகெங்கும் உருவாக்கி வெற்றிகரமாக நடத்துகிறாரா? துர்க்காவில் நம்பிக்கை இருந்ததில்தானே இங்கு அனுப்பினார்?
அப்படியிருக்க, உன் தந்தை பரிந்துரையில் வந்தவளை சர்வீஸில் விட்டேன், அதுவும் வேறு வழியில்லாது, பெரும் யோசனையோடு என்றளவுக்குப் பீட்டர் கதைத்தது ஏதன் சினத்தைக் கிளப்பிவிட்டிருந்தது. துர்க்காவுக்கு முன் வைத்தே அவனை ஒரு வழி பண்ணியிருப்பான். அதற்குள் எனக்கு வேலை பிடித்திருக்கு என்று, அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளியிட்டு விட்டாளே! அதுவே அவளில் கோபத்தை ஏற்படுத்தியது. அதில் நின்றால் ஏதாவது சொல்லிவிடுவான். அதுவே வேகமாக வெளியேறி இருந்தான்.
அவளை, நில் என்னோடு வரலாம் என்றதும் அவன்தானே. நண்பி என்றதும் அவன்தான். வாயிலைப் பார்த்தான். அங்கு நின்று காவலாளியோடு கதைத்துக்கொண்டிருந்த பீட்டர் கவனம் இவர்களிலும்தான் .
அதுவே அவள் வரும் வரை நிதானிக்க வைத்தது. கார் நிறுத்தியிருந்த இடத்துக்குச் சேர்ந்தே நடந்தார்கள். கதை பேச்சு இருக்கவில்லை.
அது என்னவோ இருவரிடையேயும் பலகாலம் பழகியவர்கள் போன்றொதொரு பிணக்கு நிலவியது. துர்கா அதைக் கொஞ்சமும் ஆழ்ந்துணரவில்லை. ஆனால், ஏதன் துல்லியமாக உணர்ந்துகொண்டான். அவன் மனத்தை உணர அவனுக்கு அவ்வளவாகக் காலம் தேவைப்படவில்லை.
ஒலிவியா திருமணத்தில் வைத்தே அவனுள் பிரத்தியேகமாகக் கவனம் பெற்றிருந்தவளை இடையில் சந்தித்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்குமாம்?
அவனுள் இந்தச் சில நாட்களாக எழும் கேள்வியிது. கடந்திருப்பானாக இருக்கும் என்று பதில் சொல்லிக்கொண்டவனுக்கு, உண்மையில் அந்தப் பதிலில் அவ்வளவாக விருப்பமும் இல்லை. ஆனாலும் மீண்டும் அவளை நாடித் தேடிச் சென்றிருப்பானா என்றால் ‘இல்லை’ என்ற விடைதான் கிடைத்தது.
error: Alert: Content selection is disabled!!