ஏதனின் இலஞ்சியவள் 8 – 2

வேலை விசயமாகப் பார்த்தாலும் ஆரோனுக்கும் அவருக்கும்  ஒத்து வருவதில்லை. அது என்னவோ ஆரோன் போலவே, அதைவிடவும் திறமை இருந்தும் உழைப்பைப் போட்டும் தான் எப்போதும் பின்தள்ளப்படுவதாக எண்ணினார்,அவர். அதில் உண்டான கோபத்தில்  அந்நேரம் ஆரோனும் இவரும் அடிக்கடி வார்த்தைகளால் உரசிக்கொள்வார்கள். நட்பு என்றது மருந்துக்கும் இருந்ததில்லை. 

அப்படியிருக்க, ஹோம் குக்கிங் வின்னர் ஒலிவியா, மக்கள் மனம் கொள்ளை கொண்ட இளம் செஃப் வேர்த் திருமணம்  அதுவும் லெஜெண்ட் செஃப் ஆரோன் டேல் தலைமையில்  என்றிருந்த வீடியோ தற்செயலாக அவர் கண்ணில் பட்டது. இருவரும் ஆரோன்  மனத்துக்கு நெருக்கமானவர்கள் என்று வேறு போட்டிருந்தார்களா, ஆவலோடு பார்த்தார். 

அதில் ஆரோன் மனைவி, மகன்கள், மகள்களோடு  கலந்துகொண்டது இவர் புருவங்களை உயர்த்தியிருந்தது என்றால், ஒலிவியா இன்னார் மகள் என்றது மட்டுமா, தற்செயலாகத்தான் அதில் குறிப்பிட்ட ஒலிவியாவின்  

வயதும் அவர் கருத்தில் பதிந்தது. 

ஜோன் நெற்றி சுருங்கியது. தன்னால் சுவாரசியம் எழுந்தது. ஒலிவியாவையே ஊன்றிப் பார்த்திருந்தவர், அவள் தொடர்பான  தகவல்களைத் தேட ஆரம்பித்தார்.  அதிர்வு கலந்த ஆச்சரியம் தாக்கியது. திரையில் தெரிந்த லிசியையே பார்த்திருந்தவர் உதடுகளில் ஏளன முறுவல் நெளிந்தது.

 மீண்டும் மீண்டும் இணையத்தில் ஒலிவியா பற்றி அக்குவேறு ஆணிவேராகத் தகவல் சேகரித்தவர், “ஓ! அப்ப இந்த விசயம் வெளில ஒருவருக்கும் தெரியாதோ? அதெப்பிடித் தெரியாமல் இருக்கலாம் ? கூடாதே!” என்று சொல்லிக்கொண்டே,  கல்யாண வீட்டு வீடியோவின் கீழ், ‘அழகிய மணப்பெண் ஒலிவியாவில் எங்கள் மதிப்புக்கும் பெருமைக்கும் உரிய ஆரோன் தெரிகிறாரோ!’ என்று, கண்ணடிக்கும் ஸ்மைலியோடு போட்டவருக்கு மனதுக்குள் இதம், அத்தனை இதம்! 

இந்தச் செய்தி என்ன விளைவை ஏற்படுத்தும் என்று பார்த்துவிடும் ஆவல்.

அன்று, இவர் திறமைகளும் பார்வையில் தட்டுப்படச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் இன்று இருந்து மெக்கானிக் சொப் நடந்துவாரா? இப்போது, உலகெங்கும் உணவகங்களைத் திறந்து நடத்தும் சாதனை மனிதன் முகத்தை எங்கு கொண்டுபோய் வைக்கப் போகிறார்? 

சில மணித்தியாலங்கள் பொறுத்திருந்தால் தெரியப்போகுது என்று அவர் நினைத்தால், அடுத்த அரை மணித்தியாலத்தில், சமூக வலைத்தளங்கள் அல்லோலகல்லோலப்பட்டன. ஆங்கிலத்தோடு பிறமொழிகள் அடுத்தடுத்து அவசரம் அவசரமாக இணைந்துக்கொண்டன.

அன்று துர்காவுக்கு வேலை. பேருந்தில் வந்து கொண்டிருக்கையில் மிகவும் தற்செயலாகத்தான்  யூ  டியூப் பார்த்தாள். அதில் உலவிய செய்தியைச் சற்றுமே நம்ப இயலவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டாள். அடுத்தடுத்து என்று அநேக வீடியோக்களைத் தட்டியிருந்தாள்.

அவள் உற்ற நண்பி ஒலிவியா செஃப் ஆரோன் மகளா?  இது ஒலிவியாவுக்குத் தெரியுமா? இல்லை என்றது அவளுள்ளம்.  ஒலிவியா செஃப் ஆரோன் மகளா என்ற கேள்விக்கும் சேர்த்து அந்த இல்லையைச் சொல்லிக்கொண்டாள். என்றாலும் மனம் பரபரவென்று இருந்தது. நேரத்தைப் பார்த்தவள் ஒலிவியாவுக்கு அழைத்தாள். அவள் லைன் பிசியாக இருந்தது. 

 பேருந்திலிருந்து இறங்கி உணவகம் வரும் வரை எத்தனையோ தடவைகள் அழைத்தும் ஒலிவியா லைன் பிசி… பிசி.  ஏற்கவில்லை. 

‘உனக்கு நேரம் இருக்கையில் ஒரு தடவை எடு ஒலிவியா’ குறுந்தகவலை அனுப்பிவிட்டு உணவகத்தினுள் நுழைந்தவள், பரபரவென்று வேலையில் கவனமானாள். மனம் மட்டும் உணவகத்தில் இல்லவே இல்லை. 

இந்தக் கதை செஃப் ஆரோன் டேல் வீட்டினருக்குத் தெரியுமா? ஏதனுக்கு? 

இந்த எண்ணத்தோடு, சமூகவலைத்தளத்தில் காசு உழைக்கும் தந்திரங்களில் இதுவும் ஒன்று என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வந்தது. கத்திக்குத்துச் சம்பந்தமாக வெளியாகிய  அனைத்து வீடியோக்களையும் நீக்கும்  வரை ஏதன் ஓயவில்லை! அந்தக் கோபத்தில் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தி என்று முடிவு செய்துகொண்டாள்.

அப்போது விறுவிறுவென்று உள்ளிட்ட ஏதன், மாடியேறுவது அவள் பார்வையில் பட்டது.

அவன் முகம் கல்லுப்போன்று இருந்ததுதான் இவள் கருத்தில் முதலில் பதிந்தது.

கை வேலையை நிறுத்திவிட்டு அவனையே பார்த்து நின்றவள் தோளில்  தட்டினான், ஸ்மித்.  அவன் பார்வையும் அவள் பார்வையோடு தொடர்ந்துவிட்டு, அவனை நோக்கித் திரும்பியவள் முகத்தில் பதிந்தது. 

“இது விளையாட்டு வேலை இல்ல, துர்கா. கவனம் இஞ்ச இருக்கட்டும்.” கண்டிப்போடு சொல்லிவிட்டு நகர இவளுக்கு ஒரு மாதிரியாகிற்று. அருகண்மையில் நின்றவர்களுக்கும் அது கேட்டுவிட நமுட்டுச் சிரிப்போடு நக்கலாகப் பார்த்தது போல் இருந்தது, அவளுக்கு.

உணவகத்தின் உரிமையாளனை சைட் அடிக்கிறாள், இவளுக்குத் துணிவுதான் என்று நினைப்பார்களோ! அவள் பாட்டில் எண்ணியவள், ‘அடிக்… ஆர் ஆர சைட் அடிக்கிறது? கொல்லுவன் துர்கா உன்ன!’ தன் நினைப்புக்கே கொட்டு வைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தாள். 

அது ஒரு நீண்ட வார இறுதி.  அதுவே குடும்பங்களாக உணவகம் களைகட்டியது. ஏற்கனவே அனுபவம் அற்றவள் என்ற முத்திரையோடு வேலை செய்பவள் சிறு தவறும் இன்றி நேர்த்தியாக வேலையை முடிக்க வேண்டுமே! எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவளால் இன்று முடியவில்லை. மனமோ, தேநீர் இடைவேளையை வெகுவாக எதிர்பார்த்திருந்தது. அடிக்கொரு தடவை சுவரில் தொங்கும் கடிகாரத்தில் பார்வை பட்டு நகர்ந்தது.

கால் மணிநேரத் தேநீர் இடைவேளையில் ஆட்கள் மாறி நிற்க, இவளோ விறுவிறுவென்று மாடியேறினாள். 

  1. Aron Del (GM) என்றிருந்த அறை முன்னால் வந்து நின்றவள் ஆழ் மூச்செடுத்துவிட்டு மெலிதாக இரு தடவைகள் கதவில் தட்டினாள். அவள் முதுகின் பின்னால், கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் பாரில் நின்றவர்கள் பார்வையில் பட்டு நகர்வதை உணர்ந்தாலும் ஏதனோடு கதைத்துவிட்டால் நிம்மதியாக வேலை செய்யலாம் என்கிறதே மனம்.

ஏதன் என்ன, வீட்டில் எவருக்குமே ஆரோனுக்கு ஒரு மகள் அதுவும் அந்த ஒலிவியா என்றதைச் சீரணிக்க இயலாது போயிற்று. அதெல்லாம் கட்டுக்கதை என்று கடக்க எண்ணியவர்கள், தகப்பன் வாயில் இருந்து அவள் என் மகள்தான் என்று வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 

வீட்டில் ஒருநாளும் இல்லாது பிரச்சினை வெடிக்க இவன் வெளியில் வந்துவிட்டான். எவரையும் சந்திக்க விருப்பம் வரவில்லை. இதில் என்ன உள்ளது என்று கடக்க இயலாது, உலகமே வியந்து பார்க்கும் கட்டுக்கோப்பான குடும்பம் அவனது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதில் மிகுந்த பெருமை உண்டு. இவன் காதல்கள் கை நழுவுகையில் எல்லாம் அதை இவன் தாய் மெல்ல உணர்த்துவார் . 

error: Alert: Content selection is disabled!!