Skip to content
அதிர்ந்து நின்ற மூத்த மகள் ஐலா, இளையவள் ஏவா, மூத்த மகன் ஐவன், அவன் மனைவி என்று நிதானமாகப் பார்த்துவிட்டு, கடகடவென்று விளக்கம் கொடுத்தார். ஆரோன்.
“என் தொழில் பிடிக்காது, நன்றாக வருவேன் உங்களை நல்ல நிலையில் வாழ வைப்பேன் என்ற நம்பிக்கை இல்லாமல், நான் வேணாம் எண்டு பிரிஞ்சது நீ சோஃபி! பிள்ளைகள் ரெண்டு பேரையும் உன்னோட வச்சுக் கொண்டாய். என்ர குடும்பமே உனக்குத் துணையாக நிண்டிச்சு. செல்லாக்காசா நீ உதறினதில உன்ர வெறுப்பிலதான் நான் அவுஸ்திரேலியா போனதும். மறந்திருக்க மாட்டியே? அந்த நேரம் எனக்கு அறிமுகமானவள்தான் லிசி. மிகவுமே நல்ல நண்பி. ஒரு கட்டத்தில எங்கட உறவு அதையும் தாண்டிச்சு. ஆனால், கலியாணம் எண்டு அவள் கேட்ட போது…” என்று மனைவியை ஆழ்ந்து பார்த்தவர் விழிகள் நிறைந்திட்டு.
“நான்… நாம கலியாணம் செய்து கொள்ளுவமா ஆரோன்?” இறுதியாக லிசி கேட்டதும் அந்த நேரம், அவள் முகத்திலிருந்த மாறாத காதலும் இத்தனை வருடம் கடந்தும் ஆரோன் மனத்துள் பசுமையாக நினைவில் இருக்கிறது.
அன்று, கணம் கூடச் சிந்திக்காது பதிலிறுத்து இருந்தார், ஆரோன்.
“என்ர மனைவியைத் தவிர வேறொரு பொம்பளைய என்னால் காதலிக்க ஏலாது!” என்று அவர் தீர்மானமாகச் சொன்னபோது, பலமாகத் தாக்குப்பட்ட விதத்தில் வெளிறிப் போனது, லிசி முகம். அந்த நேரம் அவளை மிகவும் ஏமாற்றிவிட்டோம், வலிக்கச் செய்துவிட்டோம் என்று விளங்கினாலும் ஆரோனால் எதுவுமே செய்ய முடியவில்லை.
“உன்ர மனைவி, குழந்தைகளை விட்டு விலகிட்டாய், சட்டப்படி பிரிஞ்சிட்டாய் எண்டு நீ சொன்ன பிறகுதான் நான் உன்ன விரும்பினனான் ஆரோன்.” தழுதழுத்த குரலில் கோபம் சேர, கரடுமுரடாகச் சீறலாகச் சாடினாள் லிசி .
“அது பொய் இல்ல லிசி. ஆனால், இந்தப் பிறப்பில் அவள்தான் என்ர மனைவி!” என்றவரைத் தொடர விடவில்லை, அவள்.
“இதுவரை நீ கதைச்சதே போதும், நிப்பாட்டு!” என்றவள், அப்போது ஆரோன் அறையில் அவரோடு தங்கி இருந்தாள்.
பரபரவென்று தன் பொருட்களைச் சேகரித்துக்கொண்டு கதவை அடித்துச் சாத்திவிட்டுப் புயல் போலவே வெளியேறியவளைச் செய்வதறியாது பார்த்திருந்தார், ஆரோன். மறுநாள், வேலையையும் விட்டுவிட்டாள் என்று தெரிந்த போதுதான் ஒரேயடியாக விலகிப் போய்விட்டாள் என்று உறைத்தது.
அவர், தன் உலகம், பலம் என்று மிகவுமே நம்பியவர்கள் கைவிட்ட நிலையில், அநாதரவாக, தன் நீண்ட நாள் கனவைத் தேடி அலைந்த நேரம், உயிர்ச்சுவாசம் தந்து நம்பிக்கையும் ஆறுதலும் தந்து, இன்று, இவர் இப்படி நிற்க உறுதியான அடித்தளம் போடுவதற்குத் தோளோடு தோள் நின்று உதவியவள் அவள்! அவர் உற்ற நண்பி லிசி!
வெங்காயம் உரித்து வெட்டும் போது மட்டும் இரு பக்கத் தோள்களையும் தூக்கி விழிகளைத் துடைக்கும் ஆரோன், இப்போதோ, புண்பட்ட மனம் தள்ளிய விழிநீரை அழுந்தத் துடைத்துக்கொண்டார்.
“சில விசயங்கள நியாயப்படுத்திறதே பெரிய பிழை சோஃபி. ஆனால் அண்டைக்கு, நீ என்னை ஒதுக்கிய பிறகும் நானேதான் உன்னையும் பிள்ளைகளையும் தேடி வந்தனான்? அதையும் மறந்திருக்க மாட்ட எண்டு நினைக்கிறன். அப்போதையே லிசியோட எனக்கு இருந்த பழக்கம் பற்றி உன்னட்ட நான் மறைக்கே ல்லையே! வடிவா யோசிச்சுப்பார்! விடு ஆரோன் அதில் என்ர பிழையும் இருக்கே எண்டனி நீ!” என்றவர், “எனக்கு மனைவி எண்டால் ஒருத்திதான், அவள்தான் என்ர முழுக் காதலுக்கும் உரிமையானவளும் எண்டுறதில உயிர் இருக்கும் வரைக்கும் என்ர நிலைப்பாடு மாறப்போறதில்ல சோஃபி. அதோட, ஒலிவியா என்ர மகள் எண்டு குக்கிங் ஷோ ஃபைனல் அண்டுதான் எனக்குத் தெரிய வந்தது. அந்தப் போட்டிக்கு அவள் வந்திருக்கேல்லையோ அந்த உண்மை தெரியாமலேயே போயிருக்கும். அவள் என்ர மகள் எண்டு ஆரிட்டையும் சொல்லவோ உரிமை பாராட்டவோ மாட்டன் எண்டு லிசிக்குச் சத்தியமே செய்து கொடுத்தனான் அண்டைக்கு.” என்றவர் தொண்டை அடைத்திட்டு. மீண்டும் விழிகளைத் துடைத்துக்கொண்டாள்.
“லிசி அன்பான குடும்பம் ஒண்டில நிறைவா வாழுறாள். என்னோட ஒரு வார்த்தை நட்பாக் கூட கதைக்க அவள் தயாரா இல்ல. நான் வெளிய சொல்லுறது என்ன, இந்த விசயம் எல்லாம் தெரிஞ்ச ஒலிவியாவே என்னைத் தகப்பன் எண்டு ஏற்றுகொள்ளேல்ல சோஃபி. நீங்க நம்பினாலும் இல்லையெண்டாலும் அதுதான் உண்மை. தான் டெனிஸ் என்பவரின் செல்ல மகள் எண்டு என் கண்களைப் பாத்தபடியே சொன்னவள் தெரியுமா?” என்றவர் குரலில் இருந்த தழுதழுப்பை அங்கிருந்தவர்கள் துல்லியமாகவே உணர்ந்துகொண்டார்கள்.
இவ்வளவுக்கும் பிறகு சோஃபி விடுவதாயில்லை. ஆரோன் கலங்கி கண்ணீரோடு லிசி, ஒலிவியா பற்றிக் கதைக்க கதைக்க அவருக்கு கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது என்றால், மூத்தவன் ஐவன், மூத்தவள் ஐலா இருவருக்கும் அப்படித்தான் இருந்தது. தமக்கே தமக்கான மனிதரை, எங்கோ இருந்து வந்த இருவர் இந்தளவுக்குப் பாதிப்பதா? அதுவும் ஒருத்தி மகளாமே!
“இதெல்லாம் இன்னும் நம்ப நான் என்ன விசரியா ஆரோன்? நடு வீட்டில அவள் இருக்கிற ஃபோட்டோ தொங்குது. அவள நீ மறக்கேல்ல எண்டுறதுக்கு இதவிட வேற என்ன சாட்சி வேணும் சொல்லு? ஊர் உலகத்துக்கு முன்னால, ஒழுக்கத்துக்கு, குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துற அன்பான, பொறுப்பான கணவனுக்கு உதாரணம் எண்டு சொல்ல, ஆதர்சன தகப்பன் எண்டுற முத்திரைக்கு நீ நடிக்கிற. மனசுக்க அந்த ரெண்டு பொம்பளைகளையும் வச்சுக்கொண்டு எங்களோட இருக்கிற நீ! உன்ர மூத்த மகன் ஐவன்ட கலியாண வீட்டில நிண்டத விடவும் அந்த ஒலிவியா கலியாண வீட்டில் நிண்டு வேலைக்காரன் போல எல்லா வேலைகளையும் நீ செய்யேக்கையே எனக்கு விளங்கி இருக்கோணும்.”
error: Alert: Content selection is disabled!!