மாதொரு பாகம் கொண்டான் 2.2

“ஏன், நான் சொல்லாட்டி உன்ர பெடியனுக்கு ஒண்டும் தெரியாதோ? இந்த வயசுல எங்களுக்குத் தெரியாததெல்லாம் அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். நீ தான் உன்ர பிள்ளையை உத்தமன் எண்டு நம்புறாய். ஒண்டு சொல்லுறன், கேட்டா பிழைப்பாய், இல்லாட்டி என்னண்டாலும் செய், உங்களோட தொடர்ந்து கத்த என்னால ஏலாது. எவ்வளவு வேளைக்கு இவனைக் கொண்டு போய் போர்டிங்ல போடுறியோ, அவ்வளவுக்கு உன்ர பிழைப்பு வெளிக்கும். எங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.”

“உங்களுக்கு நிம்மதி இல்லாட்டி, பிரணவன்ர ஆச்சி மாதிரி நீங்க போய் கைதடில சேருங்கோ. என்னை ஏன் போர்டிங் போகச் சொல்லுறீங்கள்? இது என்ர அம்மான்ர வீடு. நான் இங்க தான் இருப்பன்!” என்றவனின் பேச்சில் தாய் மகள் இருவரும் ஸ்தம்பித்துப் போயினர்.

சாதனா திரும்பித் தாயைப் பார்த்தாள். அவர் முகத்தில் அழுகையும் ஆத்திரமும் போட்டி போட்டு நின்றது.

“பார்! பார்!! எப்பிடிக் கதைக்குது உன்ர பிள்ளை? அம்மம்மா எண்டு கொஞ்சமெண்டாலும் மரியாதை இருக்கே? என்னை முதியோர் இல்லத்துல சேர்க்கட்டாம். என்ர கடவுளே! இதையெல்லாம் நான் கேக்கவோ அப்பா, என்னை விட்டுட்டு நீ முன்னுக்கு போனனீ? என்னையும் கூட்டிக் கொண்டு போய் இருக்கலாமே!” என்று சாதனாவிடம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முன்பு சிறுநீரகக் கோளாறால் இறந்து போன கணவனிடம் முடித்தார் சுதா.

தாயின் இந்த அழுகை, நடந்ததை தமையன் மற்றும் தம்பியிடம் சொல்லும் வரை ஓயாது என்று சாதனாவுக்குத் தெரியும். அதனால் அவரை சமாதானம் செய்ய வீணாக எந்த முயற்சியும் எடுக்காத சாதனா, மகனைத் திருத்தும் முயற்சியில் அவன் முதுகை இலக்காக்கினாள்.

“உனக்கு எவ்வளவு அடிச்சாலும் திருந்த மாட்ட என்ன? ஆரோட என்ன கதை கதைக்கிறாய்? உன்ர அம்மம்மா அவா. இனி உன்னைத் திருத்த என்னாலயும் ஏலாது, நான் சாகப் போறேன். உன்னை விட்டுட்டு செத்தா, இஞ்ச நீ எல்லாரின்ர கையிலையும் இடி படுவ! அதைப் பார்த்தா செத்தும் எனக்கு நிம்மதி இருக்காது. நான் போனா உன்னையும் சேர்த்துக் கொண்டுதான் போவன்.” என்று சரமாரியாக அடிக்க, வலியில் வாயை வெம்பியபடி அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டிருந்தவன், முடியாது என்ற நிலையில், “ம்மாஆ!” என்று தீனமாய் முனக, சாதனாவின் கையோடு உயிரும் சேர்ந்து ஓய்ந்து போனது.

தாய் அறியாத சூலா? அவ்வளவு விரைவில் வலியை வெளிக்காட்டி விடுபவன் அல்லவே மகன்? தன் அழுத்தங்கள், அவன் மேலான அடுத்தடுத்த முறைப்பாடுகள் ஒன்று சேர, இன்று அளவுக்கு அதிகமாக அவனை நையப்புடைத்து விட்டோம் என்று புரிந்து மனம் கனத்துப் போனாள்.

அவனை அணைத்து, ‘அப்பு செல்லம் அம்மாவை மன்னிச்சுக் கொள் தங்கம்’ என்று கதற மனம் உந்தியும் அதைச் செய்யாது கைகளை உடலோடு இறுகக் கட்டிக் கொண்டு அமைதியாக அவனை வெறித்தாள்.

அடித்தே திருந்தாத மகனுக்கு தண்டனை கொடுத்த அடுத்த நிமிடமே தயவைக் காட்டினால் அவனுக்கு இன்னுமே சுதியாகிப் போகும் என்று மனதைக் கல்லாக்கி அமர்ந்திருந்தாள்.

நித்திலனும் அவளிடமிருந்து அப்படி ஒன்றை எதிர்பாராதவனாக, வெற்றுத் தரையிலேயே உடலை சுருட்டிப் படுத்துக் கொண்டவன் அடிவாங்கிய அசதியில் உறங்கியும் போயிருந்தான்.

அவன் நன்றாக உறங்கியது தெரிந்ததும் அவனை நெருங்கிய சாதனா, தானும் அவனருகிலேயே சரிந்து கொண்டவள், மகனைக் கட்டிக் கொண்டு சத்தம் வராமல் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

நாடியைத் தாண்டிக் கழுத்துக்குள் வழிந்த கண்ணீரோடே எழுந்து சென்று மருந்தை எடுத்து வந்தாள். அவன் உறக்கம் கலையாதவாறு மெல்ல அவனை எடுத்து மடிக்குள் போட்டுக் கொண்டவள், அழுகையோடே அவன் தழும்புகளுக்குக் களிம்பு பூசிவிட்டாள்.

‘ஏன் தம்பு, இப்பிடி என்னையும் உன்னையும் சேர்த்து வதைக்கிறாய்? அம்மாக்கு உன்னை விட்டா ஆர் தங்கம் இருக்கினம்? நானே உன்னை எப்பிடி அடிச்சிருக்கன் எண்டு பார். உன்ர ஆக்கினை தாங்காம உன்னை அடிச்சுப் போட்டு, நான் கலங்குற கலக்கமெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது? ஆனா உனக்கு அம்மா எண்டா கொடுமைக்காரியா மட்டும்தான் பதிஞ்சிருக்கும் என்ன?

உன்ர அப்பன் அந்தக் கேவலங்கெட்டவனிட்ட இருந்து விவாகரத்து வாங்க நான் எவ்வளவு கரைச்சல் பட்டனான் தெரியுமோ உனக்கு? எல்லாம் என்னத்துக்கு, அவன்ர நிழல்ல உன்னை வச்சு அவனை மாதிரி நீ வளரக்கூடாது எண்டு தானே? ஆனா நீ எங்க இருந்தாலும் அவன்ர பிள்ளை தான் நான் எண்டு காட்டுற மாதிரி தான் ஒவ்வொண்டும் செய்யிறாய்! எனக்குப் பயமாக் கிடக்கு தம்பு. வளர வளர நீ எப்பிடி வரப் போறாய் எண்டு! டைவர்ஸ் எண்டு கேட்டு நிண்ட அண்டைக்குத் தான் உன்ர அப்பன்ர முழு சுயரூபத்தையும் கண்டன் நான். அப்பிடி நீயும் வளர்ந்து நிண்டா என்ன செய்வன் நான்?’ கரம் பாட்டுக்கு மகனின் காயங்களுக்கு மருந்து போட, மனம் அதுபாட்டுக்கு தனக்குள் ஆற்றவே முடியாது சீழ்ப் பிடித்துக் கிடக்கும் காயங்களை, மருந்தோடு மருந்தாக மகனுக்குள் புகுத்தி விடும் தவிப்போடு புலம்பிக் கொண்டிருந்தது.

என்ன பிரயோஜனம்? விழித்திருக்கும் போது சொன்னாலே செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இதில் உறக்கத்தில் இருக்கும் போது… ம்ஹூம்…

மருந்து பூசி முடித்தாயிற்று. அடுத்த கவலை அவன் இன்னும் சாப்பிடவில்லை என்றதில் வந்து நின்றது. இப்போது எழுப்பிக் கொடுத்தாலும் உண்ண மாட்டான். பசி இருந்தாலும் பிடிவாதமாக மறுப்பான். பிறகு அதற்கும் தனக்குக்

கோபம் வரும். இரண்டு சாத்த சொல்லிதான் மனம் வரும் என்று அவனை எழுப்பும் யோசனையைக் கைவிட்டு விட்டு, விறாந்தையிலேயே மெத்தையை எடுத்து வந்து போட்டு, அவனைத் தூக்கிப் படுக்க வைத்தவள், வழக்கம் போல் பிரிக்காத சொக்லேட் கிரீம் பிஸ்கட் பைக்கட் ஒன்றை அவன் தலைமாட்டில் வைத்தாள்.

பின் என்ன, தன் வயிற்றுக்கும் உணவு வேண்டும் என்பதை மறந்தவளாக, மகனருகில் படுத்தவள், அதீத மன அழுத்தம் காரணமாக விரைவில் உறங்கியும் போனாள்.

error: Alert: Content selection is disabled!!