“தூயவா விளையாடாமச் சொல்லு!” என்றவனின் குரலில் அழுத்தம் தானாக வந்து அமர்ந்திருந்தது.
திரும்பிக் குருவைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கேசம் கோதினான் தூயவன். ஒரு நெடிய மூச்சையும் இழுத்துவிட்டான். அவனுக்குத் தன் மனத்தை அத்தனை இலகுவாகத் திறக்க முடியவில்லை.
ஆனால், இதற்குள் குரு ஓடிப் பிடித்திருந்தான். “அந்த 1000 ரூபா, அது வேனுக்க கிடந்தது. அந்த ரெண்டு பணிஸ், டீ எல்லாமே யாழிசையோட சம்மந்தப்பட்டது. அந்தப் பிள்ளையோட உனக்கு என்ன விளையாட்டு? முதல் நீ அப்பிடி விளையாடுற ஆள் இல்லையே!” என்றான் அதட்டும் தொனியில்.
“வேற என்ன செய்யச் சொல்லுறாய். அவள் என்ன ப்லொக் பண்ணி வச்சிருக்கிறாள்.” என்றான் தூயவன் சலிப்புடன்.
இந்தளவுக்கு எப்போது போனான் என்று மெலிதாக அதிர்ந்தான் குரு. அவனோடுதானே இவனும் சுற்றுவான்.
“அவா ப்லொக் பண்ணுற அளவுக்கு நீ என்ன செய்தனி?”
“அப்பிடி நான் என்னடா செய்யக் கிடக்கு? அவளுக்கு விசர்.” என்று சீறினான் தூயவன். அவளும் என்னவோ இவன் செய்யக் கூடாத எதையோ செய்ததுபோல் தடை செய்து வைத்திருக்க, நண்பனும் அப்படியே கேட்கப் பற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு.
“உன்ன நம்பேலாது. அவாக்கு கோல் பண்ணி அரியண்டம்(தொந்தரவு) குடுத்தியா?” என்றவனை நடந்துகொண்டிருந்த தூயவன் நின்று திரும்பிப் பார்த்து முறைத்தான்.
“முதல் அவள் என்னக் கதைக்க விடோணும்டா நான் அரியண்டம் குடுக்க. நான் ஹலோவில ‘ஹ’வ சொல்லி முடிக்க முதலே கட் பண்ணிடுவாள்.”
“அவா கட் பண்ணினதும் நீயும் பேசாம இருந்திடுவாய்!” என்றவனின் பேச்சில் தூயவனுக்கே சிரிப்பு வந்திருந்தது.
“நம்பு மச்சான். வேற என்னதான் செய்றது?”
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கொஞ்சத் தூரம் நடந்தான் குரு.
பிறகு, “சரி, என்ன பிளான்ல இருக்கிறாய்?” என்று விசாரித்தான்.
தூயவனின் முகத்தில் இருந்த இலகு பாவம் மறைந்துபோனது. பார்வையைப் பாதையில் நேராக வைத்துப் பேசாமல் நடந்தான்.
“கண்ணுக்கு முன்னால உன்ர சித்தி இருக்கிறா. உங்கட குடும்பத்தால அந்தப் பிள்ளை போதும் போதும் எண்டுற அளவுக்கு வேதனைப் பட்டுட்டா. அவாவே உன்ர விருப்பத்துக்கு ஓம் எண்டுவாவா எண்டுறது கேள்விக்குறிதான். உன்ர அப்பா கடைசி வந்தாலும் இதுக்கெல்லாம் ஓம் எண்டு செல்ல மாட்டார். மாதவி அன்ட்ரி தன்ர குடும்பத்தையே தூக்கிப் போட்டுட்டுப் போன மாதிரி, யாழிசைக்காக உன்ர குடும்பத்தை விடுற ஒரு நிலை வந்தா உன்னால விடேலுமா எண்டு யோசி. உனக்கு உன்ர அப்பா எண்டா உயிர். அவருக்கும் கௌரவம், மரியாதை எண்டுறதைத் தாண்டி நீ செய்றது பெரிய வலியக் குடுக்கும். மலை மாதிரி அவரும் உன்னை நம்பி இருக்கிறார். உன்ர அம்மா, தங்கச்சி… துளசியத்தான் விடு. அவளை நான் சமாளிப்பன். ஆனாலும் உன்ர குடும்பமும் உங்கட நிலங்களில் உழைக்கிற குடும்பங்களும் ஏதோ ஒரு வகைல மாமாக்கு அடுத்ததா உன்ன நம்பி இருக்கினம். நீ, நீ மட்டுமே இல்ல. உன்ர சந்தோசத்தை மட்டுமே பாக்க. இது எல்லாத்தையும் நல்லா யோசி.”
நண்பன் என்பதனாலேயே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்காமல் அவன் சூழ்நிலையைப் பிட்டு பிட்டு வைத்தான் குரு. முகம் இறுக அப்போதும் பேசாமலேயே நடந்தான் தூயவன்.
அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, “டேய் என்ன, ஏதாவது சொல்லு!” என்றான் குரு.
“எனக்கு அவள் வேணுமடா!”
தான் வசனம் வசனமாகச் சொன்னதற்கு ஒற்றை வரியில் பதில் சொன்னவனைச் சட்டென்று நடை நிற்கத் திகைப்புடன் திரும்பிப் பார்த்தான் குரு.
“சீரியஸாவா?”
“இதெல்லாம் விளையாடுற விசயமாடா?”
“உன்ர சித்திக்காவது சித்தப்பாவும் விரும்பினார். இஞ்ச யாழிசை உன்னைக் கண்டாலே எந்தப் பக்கத்தால் பிச்சுக்கொண்டு ஓடலாம் எண்டு நிக்கிற பிள்ளை.” என்றதும் அவ்வளவு நேரமாக இறுகியிருந்தவன் இப்போது மெலிதாகச் சிரித்தான்.
அவளின் அந்த ஒட்டம்தானே அவனுக்குப் பிடித்துத் தொலைத்திருக்கிறது. அப்படி ஓடுகிறவளைத் தன் கைகளுக்குள் சிறை வைத்து, செல்லச் சேட்டைகள் செய்தால் என்ன செய்வாள் என்று கண்ட கண்ட யோசனைகள் எல்லாம் வந்து போகிறதே. முகம் சிவந்துவிட்டதோ என்று அவனுக்கே தோன்ற, குருவுக்கு எதிர்ப்பக்கம் முகத்தைத் திருப்பி அதை மறைக்க முயன்றான்.
“நேசன் அண்ணாவும் ஓம் எண்டு சொல்லவே மாட்டார். நீயும் வேலில போற ஓனான வேட்டிக்க போட்டவன்தானே.”
“ப்ச்! எல்லாம் எனக்கும் தெரியும். பேசாம வா!” அவன் என்ன இப்படிப் பின் நாள்களில் தலைகுப்புற விழுவோம் என்று தெரிந்தா எல்லாவற்றையும் செய்தான்? குரு வேறு அதை வெளிப்படையாகச் சொல்ல எரிச்சல் வந்தது.
“அப்ப உன்ன மாப்பிள்ளை பாக்க ஒரு பிள்ளை வரப்போறாவே அவாவை என்ன செய் போறாய்?” என்றதும், “அடிங்!” என்று கையை ஓங்கினான் தூயவன்.
குருவால் அமைதியாக இருக்கவே முடியவில்லை. ஓராயிரம் விடயங்கள் மண்டைக்குள் வந்து நின்று குடைந்ததில், “பெரும் சிக்கலுக்க மாட்டப்போறாய் தூயவா. அதைவிட அந்தப் பிள்ளை…” என்றவனை இடையிட்டு, “மச்சான், விடு இந்தக் கதைய!” என்றான் தூயவன் சலிப்புடன்.
இதையெல்லாம் யோசித்து யோசித்துத்தான் அவள் பக்கமாகச் சரிவதும் பின் நிமிர்வதுமாக இருந்தான். ஆனால், நாளாக நாளாக பீசாவின் சாய்ந்த கோபுரம்போல் அவன் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அவள் புறமாகவே சாய ஆரம்பித்துவிட்டதே. என்ன செய்ய?
தான் ஆசைப்பட்ட துளசியைக் கரம் பற்றப்போகிறோம் என்கிற மகிழ்ச்சி கூட மட்டுப்பட்டுவிட, கவலையோடு நண்பனைப் பார்த்தான் குரு.
“எரும! அப்பிடிப் பாக்காத. எனக்கே என்னைப் பாக்க பாவமா வந்திடும் போல இருக்கு.” என்று அவன் முதுகிலேயே ஒன்று போட்டான் தூயவன்.
*****
குரு துளசி திருமணம் மிக எளிமையாக, நெருங்கிய உறவுகளின் மத்தியில் கோயிலில் வைத்து நிறைவாக நடந்துமுடிந்தது. பழைய வாழ்க்கையின் காயங்களும், புதிய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்கிற பயமுமாகத்தான் குருவின் தாலியை ஏற்றாள் துளசி.
கிடைத்த முதல் தனிமையில், “இனி நீ சந்தோசமா மட்டும்தான் இருப்பாய். அதுக்கு நான் பொறுப்பு. பயப்பிடாத.” என்று மென்மையாக அவள் கரம் பற்றிச் சொன்னான் குரு.
கண்ணீருடன் அவள் நிமிர்ந்து பார்க்க, நேசமாகப் பார்த்து இதமாகப் புன்னகைத்தான் குரு.
அவ்வளவு நேரமாக இருந்த கலக்கம் அகன்று ஒரு தெம்பு இலேசாகப் பிறந்தது துளசிக்கு.
திருமணத்திற்கு வந்த எல்லோரையும் மிக நன்றாகவே கருணாகரன் கவனித்துக்கொண்டாலும் ஒரு குடும்பத்தை மட்டும் இன்னும் அதிகமாகக் கவனித்தார். தூயவனையும் அழைத்துச் சென்று பேசினார். அம்மா அப்பா, அண்ணா குடும்பம், ஒரு பெண் என்று நின்றிருந்தவர்களில் அந்தப் பெண்தான் அவனுக்குப் பேசப்பட்ட பெண் என்று தெரிந்ததும் அந்த இடத்தில் நிற்க முடியாமல் அல்லாடினான் தூயவன்.
“தனியா போய்க் கதைக்கிறது எண்டாலும் கதைங்கோ தம்பி.” என்று மெதுவாக ஊக்கினார் கருணாகரன்.
அந்தப் பெண்ணின் விழிகளிலும் ஆர்வம் தெரிய, “இல்லை அப்பா. அங்க சாப்பிடுற ஆக்களைக் கவனிக்கோணும். அதையெல்லாம் பிறகு பாப்பமே.” என்று தந்தையிடம் தயாவாகச் சொன்னவன், “குறை நினைக்காதீங்கோ. கலியாணத்துக்கு வந்த மனுசர் ஒரு குறை சொல்லாத மாதிரி கவனிக்கோனும்தானே.” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே போனான்.
கோயில் மண்டபத்திலேயே சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தது அவனுக்கு வசதியாகிற்று.
அவர்கள் முகத்தில் சின்னதாக ஏமாற்றம் படர்ந்தாலும், “பொறுப்பான தமையன் இப்பிடித்தான் இருப்பார்.” என்றார் அந்தப் பெண்ணின் தகப்பன்.
“அதான். எங்கட குடும்பத்துக்கு எனக்குப் பிறகு அவர்தானே. ஆனா, ஒரு நாள் சொல்லி அனுப்புறன். கட்டாயம் வீட்டுக்கு வாங்கோ.” என்று நம்பிக்கையாகவே பேசிச் சமாளித்தார் கருணாகரன்.
உள்ளே எரிமலையாகக் கொதித்துக்கொண்டிருந்தார்.
அவனிடம் கோபப்படவும் பயந்தார். அவன் வாயிலிருந்து இந்தத் திருமணம் வேண்டாம் என்கிற வார்த்தைகளைக் கேட்டுவிடவே கூடாது என்று நினைத்தார்.
மாப்பிள்ளையாக இருந்தாலும் நடப்பதை எல்லாம் குருவும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். நண்பனைத் தனியாகத் தள்ளிக்கொண்டுபோய், “என்னடா?” என்று விசாரித்தான்.
“இல்ல மச்சான். என்ன நடந்தாலும் பரவாயில்ல. எனக்கு அவள்தான் வேணும். அவள் வேணுமே வேணும்!” என்றான் அழுத்தி.
அன்று அவன் கேட்ட கேள்விக்கு இன்று மறுபடியும் பதில் சொல்கிறான் என்று புரிந்தது. அதைவிட அவன் ஏதோ ஒரு வகையில் தனக்குள் போராடுகிறான் என்று விளங்க, “சரியடா. அதுக்கு ஏன் நீ இவ்வளவு டென்சன் ஆகிறாய்?” என்று விசாரித்தான்.
“தெரியா. ஆனா இன்னொரு பிள்ளையை அப்பிடி யோசிக்கவே கூசுது. என்னவோ இசைக்குத் துரோகம் செய்ற மாதிரி இருக்கு.” என்று தலையைக் கோதினான் அவன்.
இந்தளவு ஆழமாக நண்பன் காதலில் விழுந்துவிட்டான் என்று குருவால் மகிழ முடியவில்லை. அவன், அவன் குடும்பம், யாழிசை, அவள் குடும்பம் எல்லாம் இதனால் என்னாவார்களோ என்று பயமும் கவலையும்தான் பிறந்தன. ஆனாலும், “விடு மச்சான். எல்லாம் சமாளிக்கலாம்.” என்றான் தேறுதலாக.
“சமாளிக்கோணும். சமாளிச்சே ஆகோணும்!” என்று தானும் சொன்னான் தூயவன்.

