கடன் அன்பை முறிக்கும் 34 – 1

அத்தியாயம் 34

 

 

தூயவனும் கோயிலுக்கு வந்ததற்கு யாழிசை காரணமா இல்லையா என்று நளினி, கோகிலா இருவருக்கும் தெரியாது. ஆனாலும், அவள் மீது ஒரு கோபம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இல்லாமல் திடீரென்று மாதவி வந்தது, அவர் கோயிலுக்கு அழைத்தது, சரியாக இவர்கள் கோயிலில் நிற்கும் நேரத்தில் தூயவன் வந்தது, அது மட்டுமல்லாமல் அவன் வந்து மாதவியோடு கதைத்தது என்று எல்லாமே சினத்தையும் பதைப்பையும் சேர்த்தே கொடுத்தன.

 

மாதவி இருந்ததில் அவளை ஒன்றும் சொல்ல முடியாமல் வாயை இறுக்கி மூடிக்கொண்டிருந்தனர்.

 

அவர்கள் முகங்களைப் பார்த்த யாழிசைக்குப் படபடக்க ஆரம்பித்தது. படிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்துகொண்டாள். அதுகூடப் பெரியவர்களுக்குத் தவறாகவே பட்டது.

 

அவர்கள் முகங்களைப் பார்த்த மாதவிக்கும் அங்கே என்னவோ சரியில்லை என்று பிடிபட, “ஏதும் பிரச்சினையா கோகிலாக்கா?” என்று விசாரித்தார்.

 

“அப்பிடி என்ன பிரச்சினை வரக்கிடக்கு மாதவி? இசைக்கு எக்ஸாம் எண்டபடியா எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருக்கிறோம்.” என்று சமாளித்துவிட்டு, ஜீவனின் திருமணக் கதையை எடுத்த கோகிலா, தானும் வந்து அவரருகில் அமர்ந்துகொண்டார்.

 

மாதவியைத் திசை திருப்ப அதுவே போதுமாயிற்று. கேட்கிற ஒவ்வொரு முறையும் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு இன்னும் இலங்கை வராமல் இருக்கிறவனைப் பற்றிப் புலம்ப ஆரம்பித்திருந்தார்.

 

இங்கே உள்ளே வந்தவளுக்குத் தூயவனைப் பார்த்த படபடப்பு அடங்குவதாக இல்லை. அவன் எப்படிச் சரியாக வந்தான், அத்தைக்கு ஏதும் தெரியுமா என்று அதுவேறு பயமாக இருந்தது.

 

உடையை மாற்றிக்கொண்டு அவள் படிக்க அமர, “தூயவன் மாமா உங்களை ஒண்டையும் யோசிக்காம எக்ஸாம் எழுதட்டுமாம் எண்டு சொல்லிவிடச் சொன்னவர் அத்த. அவர் ஆரோடயும் ஒண்டும் கதைக்கேல்லையாம்.” என்று இவள் காதுக்குள் வந்து கிசுகிசுத்தாள் சுரபி.

 

அவளை அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் யாழிசை.

 

“இது எப்ப சொன்னவர்?” அவளும் இரகசியக் குரலிலேயே வினவினாள்.

 

சுரபி நடந்ததைச் சொன்னாள். யாழிசைக்கு உண்மையில் கோபம் வந்தது. “நேற்றெல்லாம்மா உங்கட அம்மா அடிச்சவா? பிறகும் இப்பிடி நடக்கிறதோ?”

 

“அத்த, உங்கட டிஸ்டப் பண்ண வேண்டாம் எண்டு சொல்லத்தான் போனனான். அவராலதானே எங்கட வீட்டில இவ்வளவு பிரச்சினை. அப்பம்மா உங்களை அடிச்சதும் அவராலதானே.”

 

“அது என்னவா இருந்தாலும் அதைப் பெரியாக்கள் பாப்பினம். நீங்க சின்ன பிள்ளை. கிழட்டு வேலைகள் பாக்கக் கூடாது. இது தெரிய வந்தா என்ன நடக்கும் சொல்லுங்கோ. பிள்ளையை எல்லாரும் சரியில்லாத பிள்ளை எண்டு சொல்லுவினம். அது தேவையா உங்களுக்கு?” கண்டிப்பும் கரிசனையையும் கலந்து எடுத்துச் சொன்னாள் பெரியவள்.

 

முகம் இலேசாகச் சுருங்கினாலும் சின்னவள் சரியென்று கேட்டுக்கொண்டாள்.

 

“சரி, போய் நீங்களும் வீட்டுப்பாடம் ஏதும் இருந்தா செய்ங்கோ.” என்றவளுக்கு அவன் சுரபியிடம் சொல்லிவிட்ட கூற்றில் நம்பிக்கை இல்லை.

 

இதில் சம்மந்தப்பட்டவர்கள் அவள், அவன், துளசி, குரு நால்வர்தான். அப்படி இருக்க இந்த நால்வரில் ஒருவர்தான் அவள் தமையனோடு கதைத்திருக்க வேண்டும்.

 

துளசி செய்திருக்கப் போவதில்லை. அவளும் இல்லை. குருவாக இருந்தாலும் இவன் சொல்லாமல் அவன் வந்து நேசனோடு கதைத்திருக்கப் போவதில்லையே. பிறகு என்ன?

 

பொய்ச் சத்தியம் பண்ணியிருக்கிறான். அதைவேறு அவள் நம்பிக்கொண்டு இருந்திருக்கிறாள். மனத்தில் மெல்லிய கசப்பு எழ, அதை ஒரு புறமாக ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்தினாள்.

 

*****

 

அவனுடைய தென்னந்தோப்பில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் தூயவன்.

 

மாதவி அவன் வீட்டிலிருந்து புறப்பட்ட கணத்திலிருந்தே அவனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. எப்படியாவது அவளைப் பார்த்துவிடத் துடித்தான்.

 

ஒரு கட்டத்துக்குமேல் அங்கே இருக்க முடியாமல் என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு, கோயில் ஐயாவுக்கு அழைத்து அன்னதானத்துக்கு இவர்கள் கொடுத்துவிடும் அரிசியைப் பற்றி விசாரித்தான்.

 

எப்போதுமே இங்கே ஏற்றி அனுப்பிவிட்டால் அங்கே போய் இறக்கிவிட்டு வருவார்கள். இன்று அதைச் சாட்டாக வைத்துக்கொண்டு இவனும் பின்னால் போனான்.

 

கோயில் வெளி வாசலில் நிறுத்தியிருந்த நளினியின் ஸ்கூட்டியைக் கண்டதுமே அவன் உள்ளம் பரபரத்துப்போனது. அந்த நிமிடமே அவளைப் பார்த்துவிட ஆசைப்பட்டான். தன் பரப்பரப்பைக் காட்டிக்கொள்ளாமல் நிதானமாகக் கோயிலுக்குள் நுழைகையிலேயே அவளைத்தான் கண்டான்.

 

கண்ட கணம் அதிர்ச்சிதான். அந்தளவில் அவள் கண் மடல்கள், முகம் எல்லாம் அழுததில் தடித்து வீங்கியிருந்தன. இதில் அவளின் குற்றம் சாட்டும் பார்வை வேறு. என்னவோ என்று இவன் யோசித்துக்கொண்டு இருக்கையில்தான் சுரபி தானாக வந்து அவனைத் திட்டினாள்.

 

கூடவே அவள் சொன்னது?

 

தன்னால் அவள் அடி வாங்கியிருக்கிறாள் என்பது அவன் உள்ளத்தை வதைத்தது என்றால் இந்த நிலை எப்படி உருவானது என்று யோசித்தான்.

 

அவன் ஒன்றும் அன்று குருவின் வீட்டுக்கு ஒளித்து மறைத்துப் போகவில்லை. அப்படிப் போனதை யாராவது பார்த்திருந்தாலும் குற்றமாக நினைக்க ஒன்றுமில்லை. அவன் குருவின் நண்பன், துளசியின் தமையன். அப்படியிருக்க யாரோ ஒருவர் அதைப்போய் மெனக்கெட்டு நேசனிடம் சொல்லவேண்டிய அவசியம் என்ன?

 

அதுவும் சாதாரணமாகச் சொல்லப்படவில்லை. அவனுக்கும் யாழிசைக்குமிடையில் ஏதோ இருக்கிறது, அல்லது காதல் இருக்கிறது என்பதுபோல் சொல்லப்பட்டதால்தான் நேசன் இந்தளவில் கோபம் கொண்டிருக்கிறான். கோகிலாவும் அடித்திருக்கிறார்.

 

அப்படி அவர்கள் விசயம் தெரிந்தவர்கள் யார்? துளசிக்கே அன்றுதானே தெரியும். அப்போதுதான் அங்கே வந்தான் குரு. விடயம் அறிந்த அவனாலும் இதன் பின்னால் இருக்கும் நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

 

“மாமான்ர வேலையோடா? ஆனா, அவருக்கு எப்பிடித் தெரிஞ்சிருக்கும்?” என்று கேள்வி எழுப்பினான்.

 

தூயவனுக்கும் தன் தந்தை மீதுதான் முதல் சந்தேகமே வந்தது. ஆனால், அவருக்குமே அவனுக்கும் அவளுக்குமிடையில் இருப்பது எப்படித் தெரிய வந்தது?

 

உடனே துளசிக்கு அழைத்து விசாரித்தான்.

 

“ஐயோ அண்ணா. நான் அம்மா, சித்திட்டயே வாய் திறக்கேல்ல. அப்பாவும் என்னட்ட எதைப் பற்றியும் விசாரிக்கேல்ல.” என்றாள் அவள்.

 

அவள் பொய் சொல்லப்போவதில்லை. பின்னே யார்?

 

குருவும் துளசியும் அன்று யாழிசையை விருந்துக்கு அழைத்ததை வீட்டில் மறைக்கவில்லை. தேவகி சாப்பிடக் கேட்டதற்கு இவனுமே துளசியிடம் சாப்பிட்டதாகச் சொல்லியிருந்தான். மாதவியும் யாழிசை வந்தாளா, என்ன கதைத்தாள் என்றெல்லாம் விசாரித்திருந்தார். அப்போது அவன் தந்தையும் அங்கேதானே இருந்தார்.

 

இவர்கள் மறைத்த ஒரேயொரு விடயம் யாழிசையோடு இவன் தனியாகக் கதைத்ததை. அது, வேறு யாருக்கும் தெரிய வரச் சாத்தியமே இல்லை. அப்படி இருக்க அப்பாவையும் அவனால் உறுதியாகச் சந்தேகப்பட முடியவில்லை.

 

அதையெல்லாம் இவன் குருவிடம் பகிர்ந்துகொண்டபோது, “எனக்கும் விளங்குது மச்சான். ஆனா, மாமாவைத் தவிர உனக்கு இந்த விசயத்தில எதிரி வேற ஆரும் இல்ல.” என்றான் குரு.

 

அது உண்மைதான். அப்படியானால் அப்பாதானா? அவன் உள்ளம் தடுமாறியது. அப்படி அவராக இருந்துவிடக் கூடாது என்று ஆசைப்பட்டான்.

 

என்ன இருந்தாலும் மார்க்கண்டேயரின் இடத்தில் அவரை நிறுத்துவதில் அவனுக்கு விருப்பமில்லை. எப்படியாவது அவரிடம் பேசி, தன்னைப் புரிய வைத்து, அவரின் சம்மதத்துடன் அவளைக் கைப்பிடிக்கவே அவனுக்கும் ஆசை.

 

அதற்கு அவன் முதலில் நேசனோடு கதைக்க வேண்டும். அதற்கு அவள் அவன் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறாள். எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க அவனுக்குப் பைத்தியமே பிடிக்கும் போலிருந்தது.

 

ஆனால், அன்றிலிருந்து அவனுடைய ஒரு கண் கருணாகரனின் மீது விழுந்திருந்தது.

error: Alert: Content selection is disabled!!