நீ வந்து தங்கிய நெஞ்சில் 19.2

‘பப்பரப்பா’ என்று நின்ற தலைமுடியையும் சரி செய்துவிட்டு அவனை ஒருமுறை முழுமையாகப் பார்த்துத் திருப்தி கொண்டாள்.

எப்போதும் அவன் செய்வதுபோல் ஆள்காட்டி விரலையும் சுட்டு விரலையும் சேர்த்துப் பிடித்து அழகாய் இருக்கிறான் என்று அபிநயம் பிடித்துக் காட்டினாள்.

“நீயும்தான்!” என்றான் அவளைச் சுற்றி வந்தபடி. ஆரி வேலைப்பாடு செய்த கடல் பச்சை பிளவுஸ் அணிந்து, தங்க ஜரிகை ஓடியிருந்த அடர் நாவல் உடல் கொண்ட சேலை, அவள் பொன் தேகத்தில் நளினமானக் கிடந்து, அவளின் அங்க வளைவுகளை மிக அழகாக எடுத்துக் காட்டியது. அவன் பார்வை அங்கெல்லாம் எந்தக் கூச்சமும் இல்லாது சென்று வர, “நிரோ!” என்றாள் யாமினி அதட்டலாக.

“இந்த சாரி உனக்கு எப்பிடி இருக்குத் தெரியுமா?” என்றுவிட்டு அவள் காதருகே வந்து, “அண்டைக்கு மாதிரி இண்டைக்கும் கிஸ் பண்ணலாமா எண்டு யோசிக்க வைக்கிற அளவுக்கு இருக்கு.” என்று சொன்னான்.

முகம் இரத்த நிறம் கொண்டுவிட அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் யாமினி.

“யம்மு உண்மையாத்தாண்டி. அப்பிடி இருக்கிறாய். இந்த சோக்கர் பொருந்தாது எண்டு சொன்னாய். எப்பிடிப் பொருந்தி இருக்குப் பார்.” என்று சொல்லி சொல்லி ரசித்தான்.

அது கழுத்தை ஒட்டி அணியும் அகலமான சோக்கர் வகை நெக்லஸ். நாவல், தங்க நிற மணிகளும் கற்களும் மூன்று பட்டில் சுற்றிவர, நடுவில் சதுர வடிவில் தங்க நிற பெரிய கல்லு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அதனைச் சுற்றித் தங்கத்தில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கம்பி வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் கீழே முத்துகள் தொங்கின. அதே டிசைனில் அவளுக்கு எப்போதும் பிடித்தமான நீண்ட பெரிய ஜும்க்கா.

அவளுக்கு இவை சற்று அதிகப்படியோ என்று சந்தேகம். அவன்தான் வேறு எந்த நகையும் போடாதே, இதை மட்டுமே அணி என்று சொல்லி, இதய வடிவில் அதே டிசைனில் ஒரு கைப்பையும் வாங்கிக் கொடுத்திருந்தான்.

அவன் சொன்னதுபோலவே அணிந்து, அலங்காரமும் செய்து வந்தவளிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.

“நிரோ, நான் போகவா?” அவன் பார்வை தந்த குறுகுறுப்பு ஒருபுறம் என்றால், யாராவது பார்த்துவிடுவார்களோ என்று அவளுக்குப் பயம்.

தைரியமாக சேர்ந்து சுற்றவோ, நேரம் செலவழிக்கவோ இது கொழும்பு அல்லவே.

“அதுக்கு முதல் ஒரு செல்ஃபி!” அவள் தோள் மீது கை போட்டபடி சொன்னான். அவள் பயத்தில் நெளிய, “ஒழுங்கா நிண்டா ஒரு செக்கனில முடிஞ்சிடும். இல்லை எண்டு வை..” என்றவனைப் பொய்யாக முறைத்துவிட்டு அவனோடு அணைந்து நின்றாள்.

அவன் சுயமியைக் கிளிக்கியதும் வேகமாகத் தள்ளி நின்றுகொண்டாள். ஒற்றை புருவம் உயர்த்தி அவளைக் கேலி செய்தான் அவன். அவள் முறைத்தாள். அக்கா அத்தான் இருவரும் ஒரு வார்த்தை சொல்லுமிடத்தில் தான் இருந்துவிட கூடாது என்பது அவளுக்கு. அவனுக்குக் கிண்டல்.

“நிரோ!”

அவளுக்கும் அந்தப் புகைப்படத்தை அனுப்புவதில் கவனமாக இருந்தவன், “ம்!” என்றான் நிமிராமல்.

“ஒண்டு சொல்லுவன். கோபப்பட மாட்டன் எண்டு சொல்லுங்க.”

“நீ சொல்லு முதல்.”

“ஈவ்னிங் பார்ட்டில டிரிங்க்ஸ் ஏதும் எடுத்திடாதீங்க. என்ர மொத்தக் குடும்பமும் நிக்குது. டான்சும் வேண்டாம்…” பயந்து பயந்துதான் சொன்னாள்.

ஆனால், அவள் பயந்தது சரிதான் என்பதை நிரூபிப்பதுபோல் அவன் முகம் மாறிற்று.

“இதுதான் யாமினி, உன்னட்ட எனக்குப் பிடிக்காத விசயம். அந்தளவுக்கு நான் என்ன எங்க எப்பிடி நடக்கோணும் எண்டு தெரியாதவனா? இல்லை, பார்ட்டி எண்டாலே குடி கூத்து எண்டு ஒதுங்குறவனா? என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறாய் என்னைப் பற்றி?” அடக்கப்பட்ட குரலில் ஆத்திரப்பட்டான்.

“என்னவோ உனக்குத்தான் எல்லாம் தெரியும் மாதிரியும், எனக்கு ஒண்டுமே தெரியாத மாதிரியும் கதைக்கிறாய். அந்தளவுக்கு நான் என்ன…” என்றவன் மிகுதியைச் சொல்லாமல் விழுங்கினான்.

அவனுக்கு ஆத்திரம் அடங்குவதாக இல்லை. இத்தனை வருட காலத்தில் அவள் அறிய, அவள் பார்க்க அவன் அருந்தியது அன்று ஒரு நாள்தான். அதற்குப் போய் என்னவோ அவனை மொடாக் குடியன் போல் பாவித்துப் பேசினால் எப்படி இருக்கும்?

“இதுக்குத்தான் விலகியே இருந்தனான். கொழும்பில இருந்து வெளிக்கிடேக்க கதைச்சுப் பேசிப் பிரச்சினையைத் தீர்க்கோணும் எண்டு சொன்னாய். உன்னோட எதுவுமே கதைக்கேலாது. உனக்கு என்னை விளங்கவே விளங்காது. உனக்கு நீ சொல்லுறதை நான் செய்யோணும். நீ என்ன சொன்னாலும் கேக்கோணும். இல்லாட்டி இப்பிடித்தான் பெரிய இவள் மாதிரி எதையாவது லூசுத்தனமா சொல்லிக்கொண்டு வருவாய்.” எரிச்சலோடு சொல்லிவிட்டு, அங்கிருந்து விலகிச் சென்றான்.

error: Alert: Content selection is disabled!!