அத்தியாயம் 60
அழகான இரவுப் பொழுது. தடக் தடக் எனும் சத்தத்துடன் இருளைக் கிழித்துக்கொண்டு அந்தப் புகையிரதம் அனுராதபுரத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அதன் ஒரு பெட்டியினுள் தூயவனும் யாழிசையும் அமர்ந்திருந்தார்கள்.
அவன் வேனிலோ இருசக்கர வாகனத்திலோ வந்திருக்கலாம். அவனுக்கு அவளோடான இப்படியொரு அமைதியான பயணம் விருப்பமாக இருந்ததில் புகையிரதத்தில் ஏறிவிட்டான்.
விலகி இருந்தால் மட்டுமே மிச்சம் சொச்சமாய் இருக்கும் பற்றையும் பாசத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றுதான் தனியாக வந்தான். ஆனால், அவனை அவன் பாட்டுக்கு விடாமல் தேவகி, மாதவி, துளசி, கோகிலா, நளினி, நேசன் என்று தோட்ட வீட்டுக்குப் படையெடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
துளசி தாய்மை அடைந்திருப்பதும் உறுதியாகிவிட அதையும் பிடித்துக்கொண்டார்கள். அவளுக்காகவாவது வீட்டுக்குப் போகும்படி தேவகியைத் தவிர்த்து மற்ற அத்தனை பேரும் வற்புறுத்தவும் அவனுக்கு எங்காவது ஓடி விடலாமா எனுமளவுக்கு ஆகிப் போயிற்று.
அதன் பிறகு நிறைய யோசிக்கவில்லை. அவனின் தோட்ட வீட்டுக்கு என்னென்ன மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று குருவிடம் சொல்லிவிட்டு இதோ இரவோடு இரவாகப் புறப்பட்டு வந்துவிட்டான்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். இரயில் பெட்டியின் இருக்கை முழுக்க ஆட்கள். அவள் இவன் தோளில் இலேசாகத் தலையைச் சாய்த்திருக்க, அவள் தோள்களைச் சுற்றி ஒரு கை போட்டுத் தன் அணைப்பில் அவளை வைத்திருந்தான் அவன். இருவர் பார்வையும் நகரும் வீதியோரத்தில். பிரத்தியேகமாக எதையும் பேசிக்கொள்ளவில்லை. ஆனாலும் கூட ஒருவர் மற்றவரின் அண்மையில் சுகம் கண்டபடி பயணித்த அந்தப் பயணம் சொர்க்க சுகமாய் இருந்தது.
வவுனியாவில் இருந்தே ஒரு வாரத்துக்கு ஒரு ஹோட்டல் அறையை எடுத்திருந்தான் தூயவன். நேராக அங்கேயே வந்து சேர்ந்தார்கள்.
குளித்து, உடை மாற்றி, கீழேயே உணவகம் என்பதில் அங்கேயே உணவை முடித்துக்கொண்டு வந்ததும் யாழிசையிடத்தில் ஒரு தடுமாற்றம்.
பேசாமல் சென்று பால்கனியில் நின்றுகொண்டாள். “என்ன இஞ்ச வந்தாச்சு?” பின்னாலேயே வந்தது அவளைப் பின்னிருந்து அணைத்தபடி வினவினான் அவன்.
“சும்மாதான்.” அவளுக்குச் சத்தம் எழும்பவேயில்லை.
“நித்திரை வரேல்லையா? பன்னிரெண்டு ஆகுதே.” அவள் தோளில் தன் தாடையைப் பதித்து, அணைப்பையும் இறுக்கியபடி வினவினான்.
நள்ளிரவு, வீசும் ஈரக்காற்று, வாய்த்திருக்கும் தனிமை, கணவனையே சுற்றும் அவள் எண்ணங்கள் எல்லாமாய்ச் சேர்ந்து அவளிடமிருந்து உறக்கத்தை பறித்திருந்தன. அதை அவனிடம் சொல்ல முடியாமல் மௌனம் காத்தாள்.
அவன் நிலையும் அதேதான். திருமணத்திற்கு முதல் கொழும்பிலிருந்து வவுனியா வரையிலான அந்தப் பயணம் ஒன்றுதான் அவர்கள் சேர்ந்திருந்தது. திருமணத்திற்குப் பிறகு இரண்டு இரவுகள் தவிர்த்து அவர்களுக்கான நேரம் என்று கொஞ்சம் கூட அமையவேயில்லை. இனியும் அமையும் என்கிற நம்பிக்கை இல்லை.
இருவரும் காதலித்து மணந்தவர்கள். ஆனாலும் இருவருக்கும் மற்றவரைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது. பேசிக்கொண்டதில்லை. பொழுதுகளை ஒன்றாகக் கழித்ததில்லை.
அத்தனை பிரச்சனைகளிலிருந்தும் விலகி இருக்கவும், அவர்களுக்கே அவர்களுக்கான நேரத்தை உருவாக்கிக்கொள்ளவும்தான் இங்கே வந்தான்.
அப்படித் தனியாக வந்திருக்கிறோம் என்கிற நினைப்பே ஒரு நெருக்கத்தைக் கொடுத்தது. இன்னும் தன் அணைப்பை இறுக்கியபடி, “நேற்றிரவு என்ர இசையரசிக்கு என்ன நடந்தது?” என்று கிசுகிசுத்தான்.
‘அச்சோ!’ வெட்கம் திண்றது அவளை.
“கோவமா இருப்பாய் எண்டு நினைச்சன்.”
“கோவமாத்தான் இருந்தனான்.” மெல்ல முணுமுணுத்தாள்.
“ஓ!”
நகைக்கும் குரலில் அவன் இழுத்த விதமே, ‘அதா நீ கோவமா இருந்த விதம்?’ என்று கேட்பது போலவே இருக்க, “தூயவா!” என்றாள் செல்லச் சிணுங்களாக.
உதட்டோரம் முறுவல் மலர, அவள் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து இழைந்தபடி, “பிறகு எப்பிடிக் கோவம் போனது?” என்று கேட்டான்.
தற்போது வரையில் அவனுக்கு அது ஆச்சரியமான ஒன்றாகவே இருந்தது. அவள் காட்டிய கோபத்துக்கு சமாதானம் செய்வது பெரிய வேலையாக இருக்கும் என்று நினைத்திருந்தான்.
அவ்வளவு நேரமாகக் கணவன், அவனோடான இணக்கமான பொழுதுகளில் மட்டும் சிக்குப்பட்டு நின்ற அவள் மனம், அந்த நிகழ்வுக்குச் சென்றதில் அவளுக்கு இலேசாகத் தொண்டை அடைத்தது.
“அவர் கதைச்சது ஆக மோசமான வார்த்த தானே தூயவா?” கமறிய குரலில் வினவினாள்.
அதை எப்படி இல்லை என்று சொல்லுவான். அதன் பிறகுதானே அவனுக்கு மொத்தமாகச் சீ என்று போனதே. அதனால்தானே அதன் பிறகு அவர் முகம் பார்த்து அவன் கதைக்கவே இல்லை.
“சொறி!” என்றான் வேறு பேசாமல்.
“நீங்க ஏன் சொறி சொல்லுறீங்க?”
அவன் அதற்கு உடனடியாகப் பதில் சொல்லப்போகவில்லை. தன் அணைப்பை இறுக்கி அவள் கன்னத்தில் உதடுகளைப் பதித்து எடுத்தான். அவளுக்கு உணர்வுகள் பொங்கிக்கொண்டு வந்ததில் தொண்டை அடைத்து விழிகள் கலங்கத் தயாராகின.
“சத்தியமா உன்ன விட்டுக்குடுக்க நினைக்கேல்ல இசை. அவருக்காக உன்னை அடக்கவும் இல்ல. உனக்காகத்தான் உன்ன மேல போகச் சொன்னனான். ஆனா, அதுவே உன்ர கோபத்தை, உன்ர ஆதங்கத்தக் கொட்ட விடாமச் செய்திருக்கு எண்டு அப்ப நான் யோசிக்கேல்ல. அதுக்குத்தான் சொறி சொன்னனான்.”
ஒரு நெடிய மூச்சு ஒன்று அவளிடமிருந்து வெளியேறியது. “இப்ப விளங்குது. ஆனா அப்ப என்னைக் கதைக்க விடாம நீங்க துரத்தவும் என்னவோ என்ர குரல் வளையப் பிடிச்சு நசுக்கின மாதிரியே இருந்தது. எல்லாத்தையும் விட ஒவ்வொரு முறையும் எந்தப் பிழையுமே செய்யாமக் கேவலப்பட்டு, அவமானப்பட்டு நிக்கிறன். அது வலிக்குது தூயவா.” என்றவள் அவன் கைகளுக்குள்ளேயே அவன் புறம் திரும்பி, “இனியும் அப்பிடி ஒண்டு எனக்கு நடக்கக் கூடாது. நடக்க விடாதீங்க ப்ளீஸ்! நானும் எனக்கான நியாயத்தையும் எதிர்பார்ப்பையும் உங்களிட்ட இல்லாம வேற ஆரிட்ட எதிர்பாக்க?” என்று கண்ணில் நீருடன் அவள் கேட்டபோது அவனால் பேச முடியாமல் போயிற்று. நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி. இமைக்கக் கூட முடியாமல் அவளையே பார்த்தான்.
வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவள் கண்களைத் துடைத்துவிட்டான். அப்படியே அவள் தலையை இழுத்துத் தன் மார்போடு அழுத்திக்கொண்டான். அவன் இதயம் அவள் வலியைச் சுமந்து வேகமாகத் துடித்தது.
அவள் முகத்தைத் தாங்கி, “நீ இத நம்போணும் இசை. அவரை எனக்கு மொத்தமா வெறுத்துப்போனதாலதான் அவரை வீட்டை விட்டே அனுப்பினனான். ஆனா…” என்று அவன் சொல்லும்போதே வேகமாக இடையிட்டு, “என்ன சொல்லுறீங்க?” என்று அதிர்ந்தாள்
“ஏன் உனக்குத் தெரியாதா?” என்றான் அவன் இப்போது வியப்போடு. “நீ நிக்கேக்க தானே அவரப் போகச் சொன்னனான். அல்லது இல்லையா?” அவனுக்கும் குழப்பமாய் இருந்தது. அவனும் அந்த நேரத்தில் நிதானத்தில் இல்லையே. அவர் மீதான கோபமும் சினமும் உச்சிக்கே அடித்திருந்தது.
“நான் நிக்கேக்கத்தான் சொன்னனீங்க. அதுக்காக உண்மையாவே அனுப்புவீங்க எண்டு நினைக்கேல்ல. கோவத்தில சொல்லுறீங்க எண்டு நினைச்சன்.” என்றவள், “உண்மையாவே அனுப்பினனீங்களா?” என்று குரலடைக்க வினவினாள்.
“அது பிழை எல்லா தூயவா?”
“அதாலதான் திருப்பிக் கூப்பிட்டுட்டு உன்னோட நான் வெளில வந்திட்டன்.” என்று அவன் நடந்ததைச் சொன்னபோது, கணவனின்பால் அவள் உள்ளம் கரைந்தே போயிற்று.
பெற்ற தாய் தகப்பனை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு அந்த நிமிடங்களைக் கடக்க என்ன பாடு பட்டிருப்பான்? அது தெரியாமல்… “சொறி தூயவா. எனக்கு இது தெரியாதே.” என்று அவன் கன்னங்களைத் தாங்கி மன்னிப்புக் கேட்டவள்பால் அவள் கணவனின் உள்ளமும் கரைந்துதான் போயிற்று.
“அது பரவாயில்ல விடு. ஆனா, இது தெரியாம நேற்று இரவு எப்பிடி?” என்று அவன் அதிலேயே நின்றான்.
சட்டென்று மனநிலை மாற, “தூயவா!” என்று அதட்டியவளுக்கு சிரிப்புத்தான் வந்தது. “அத விடவே மாட்டீங்களா?”
“மறக்கிற இரவா அது?”
அவளால் அவன் முகம் பார்க்க முடியவில்லை. எம்பி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “எனக்கும் ஆறுதல் நீங்கதானே. அதைவிட நீங்க தனியா வந்ததும் எனக்காகத்தான் எண்டு விளங்கினது.” என்றாள் கிசுகிசுப்பாக.
அது போதுமே அவனுக்கு. அவளை அப்படியே அள்ளிக்கொண்டு உள்ளே வந்து, ஆரத்தழுவி ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். தன் ஆசைகளையும் தேவைகளையும் அவளிடம் பகிர்ந்தான்.
கூச்சமும் வெட்கமும் வந்து குடை பிடித்தாலும் அவளும் எதையும் மறுக்கவில்லை. அவன் தேவைகளைத் தீர்த்தாள். ஆசைகளுக்கு இணங்கினாள். கணவனின் கேசம் கோதி, காதல் முத்தங்கள் பதித்தாள்.
நடந்த எதுவும் முழுமையாகத் தெரியாதபோதே, அவனிடத்திலிருந்து யோசித்து அவன் விருப்புக்கு ஏற்ப இணங்கியவள் அவள். இன்று மறுப்பாளா?
அவளின் இணக்கத்தில் அவன் உள்ளம் துள்ளியது. இன்னும் போதை ஏறியது. ஆசைகள் பெருகியது. தேட தேட எதுவும் தீரவேயில்லை. நேற்றைய இரவைப் போலவே இன்றைய இரவும் அவர்களின் மறக்க முடியா இரவுகளில் ஒன்றாகச் சேர்ந்துகொண்டது.
*****
அடுத்த நாள் காலை, தூயவன் அவளை அழைத்து வந்தது அனுராதபுரப் பேருந்து நிலையத்துக்கு. அத்தனையையும் கடந்து வந்துவிட்டாள்தான். என்றாலும் அந்த இடத்துக்கு வந்ததும் ஒரு நடுக்கம் ஓடியது. அவனுக்கும் அதேதான். அன்று தான் பட்ட பாடுகளை என்றைக்குமே அவனால் மறக்க முடியாது.
தன் கைப்பேசியில் இருக்கும் அவளின் அந்த வீடியோவை போட்டுக் காட்டினான். “இதில உன்னப் பாத்ததும் எனக்குக் கத்தி அழோணும் மாதிரியே இருந்தது இசை. கொஞ்ச நேரத்துக்கு முதல் என்ர இசை இஞ்சதானே நிண்டவள். எங்க போயிட்டாள் எண்டு மனம் அழுதது.” என்று கனமான குரலில் அவன் சொன்னபோது, சட்டென்று அவள் விழிகளில் கண்ணீர் திரண்டு போயிற்று.
அவன் கை ஒன்றை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவள், அந்தக் கையின் மீதே தலையைச் சாய்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்றாள்.
அதன் பிறகு அவன் அழைத்துப்போனது, அந்தக் கடைகளின் முன்னே ஒரு குட்டி மேசையைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்த மணிக்கூடு திருத்தும் ஐயாவிடம்.
அவருக்கு இவனை நினைவில் இல்லை. ஆனாலும், தான் பதறித் தேடியதையும், அவர் எதிரில் இருக்கும் கடையைக் காட்டியதையும், அதில் இருந்த சிசிடிவி புட்டேஜை வைத்து அவளைத் தான் கண்டு பிடித்ததையும் சொல்லி, தமக்கு இப்போது திருமணமாகிவிட்டதையும் அவன் சொன்னபோது அவர் முகத்திலும் அளப்பரிய மகிழ்ச்சி.
இருவரையும் மனமார வாழ்த்தினார். தூயவன் பணம் கொடுத்தபோது அவர் வாங்கவேயில்லை.
ஆனாலும் விடாமல் அவர் கையில் பெரிய தொகை ஒன்றைப் பொத்தி, “உங்களுக்கு வேணுமெண்டா நீங்க செய்தது பெரிய விசயமா இல்லாம இருக்கலாம். ஆனா எனக்கு என்ர உயிரையே திருப்பித் தந்து இருக்கிறீங்க. அதுக்கு இந்தக் காசு எல்லாம் தூசு. இது என்ர சந்தோசத்துக்காகத் தாறன். உங்கட பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக் குடுங்கோ ஐயா.” என்று சொல்லிவிட்டு எதிரில் இருந்த அந்தக் கடைக்கு அழைத்துப்போனான்.
அந்தக் கடைக்காரனின் நம்பர் இவனிடம் இருந்ததில் இன்றைக்கு வருவோம் என்று முதலே அழைத்துச் சொல்லியிருந்தான். அதில் அவனுமே இவர்களை வரவேற்கத் தயாராக இருந்தான். கூடவே இன்னொரு குட்டி ஆச்சரியமாக அன்று தூயவன் தவித்த தவிப்பு எல்லாம் கடைக்குள் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்ததில் அதைத் தனியாக எடுத்து யாழிசைக்குக் காட்டினான்.
அதைப் பார்த்த யாழிசையின் விழிகளில் கண்ணீர். எல்லோரும் நின்றதில் தூயவனிடம் தன் மன உணர்வுகளைக் காட்ட முடியவில்லை. ஆனால், இப்படி துடியாகத் துடித்தவனையா நம்ப மாட்டேன் என்று சொன்னோம் என்று அவள் உள்ளமே அவளைக் குத்தியது.
கலங்கிச் சிவந்திருந்த விழிகளோடு அவள் அவனை நோக்க, ஒற்றைக் கையால் இலேசாக அவளை அணைத்து விடுவித்தான் தூயவன்.
அதன் பிறகான பொழுதுகள் மிக இனிமையாகக் கழிந்தன. பகல் உணவையும் அங்கு வேலை செய்த எல்லோருடனும் சேர்ந்து முடித்துக்கண்டு புறப்பட்டார்கள்.
“நன்றி அண்ணா. இவர் வருவார் எண்டுற நம்பிக்கை மலைபோல இருந்தது. அதே நேரம் எப்பிடி என்னைக் கண்டு பிடிப்பார் எண்டுற பயமும் இருந்தது. இண்டைக்கு நாங்க சந்தோசமா வாழுறதுக்கு நீங்க பெரிய காரணம் அண்ணா.” கரகரத்த குரலில் கண்ணீரும் புன்னகையுமாகச் சொன்னாள் யாழிசை.
“என்னம்மா இது? எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கிறா. அப்பிடி எல்லாம் சும்மா விடேலுமா? இவர் எடுத்து நீங்க கிடச்சிட்டீங்க எண்டு சொல்லுற வரைக்கும் இன்னும் கவனமா பஸ் ஸ்டாண்ட்ட நானும் கவனிச்சுக்கொண்டேதான் இருந்தனான்.” என்று சொன்னபோது தூயவன் யாழிசை இருவருமே நெகிழ்ந்து போயினர்.
ஒரு வாரம் அங்கேதான் சுற்றினார்கள். அவள் காணாமல் போனதிலிருந்து திருமணம், கருணாகரனின் பேச்சுகள், அதன் பிறகு நடந்தவை என்று ஒருவித அழுத்தத்திலேயே இருந்தவர்கள் அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளி, தமக்கான உலகத்தில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் திளைத்தனர்.
உயிர் நேசம் எத்தனை உன்னதமான உணர்வு என்று இருவரும் உணர்ந்த நாள்கள் அவை. பிடித்தவர்களோடான பிடித்தமான வாழ்க்கை எத்தனை சுவையானது என்றும் கண்டுகொண்டார்கள்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து வவுனியாவுக்கு வந்து சேர்ந்தபோது, அங்கே ஒரு குடும்பம் வாழுவதற்கு ஏற்ற வீடாகத் தோட்ட வீட்டினை முழுமையாக மாற்றி வைத்திருந்தான் குரு.

