அத்தியாயம் 62
இரவு ஒன்பதைத் தாண்டியிருந்தது நேரம். சுற்றவர நின்ற தென்னைகள் காற்றுக்குச் சலசலத்தாட, வண்டுகளின் ரீங்காரம் இசையமைக்க, மெல்லிய குளிருடன் வீசிய காற்றினை அனுபவித்தபடி, கணவனின் கையணைப்புக்குள் அடங்கி, அவர்களின் தோட்ட வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தாள் யாழிசை.
இருவர் உள்ளங்களும் வெகுவாக நெகிழ்ந்திருந்தன. காரணம் குருவும் துளசியும்.
இதுவரையில் எதையும் அவர்களாக வாய்விட்டுச் சொன்னதில்லை. ஆனால், குருவை மிதிலன் அப்பா என்று அழைத்த கணத்தில் அவர்கள் உடைந்த விதமும், அதன் பிறகும் கூடக் கசிந்துகொண்டே இருந்த அவர்கள் விழிகளும் அவர்களின் ஆழ்மன ஆசையை அப்பட்டமாகச் சொல்லின.
அதுவும் குரு, ‘அப்பாட்ட வாங்கோ மிது, அப்பான்ர பிள்ளை சாப்பிட்டவனா, அப்பான்ர பைக்ல வீட்ட போவமா’ என்று வரிக்கு வரி அப்பா போட்டு, மிதிலனிடம் தன்னை மீண்டும் மீண்டும் அப்பாவாக நிலைநிறுத்திக்கொள்ள முயன்ற விதம், இவர்கள் இருவர் உள்ளத்தையும் மிகவுமே நெகிழ்த்தியிருந்தது.
அவர்கள் புறப்பட்ட பிறகும் கூட அந்த நெகிழ்ச்சி இவர்களை விட்டு நீங்குவதாக இல்லை.
யாழிசை அவர்கள் இருவரையும் போர்த்தியிருந்த போர்வையை இன்னும் கொஞ்சம் இழுத்து மூடிக்கொண்டாள்.
“குளிருதா?”
“கொஞ்சமா.”
அதற்குப் பதில்போல் அவளை இன்னும் கொஞ்சம் இறுக்கமாக அணைத்துக்கொண்டான் தூயவன். யாழிசையும் வாகாக அவனுக்குள் அடங்கி, அவன் கழுத்து வளைவினுள் முகம் புதைத்துக்கொண்டாள்.
அவளின் அந்தச் செய்கை குட்டியாகச் சிரிப்பை மூட்டியது. குனிந்து அவள் முகம் பார்த்து, “என்ன?” என்றான் தூயவன்.
“எப்பிடி மித்துக் குட்டிக்குச் சொல்லிக் குடுத்தனீங்க?”
“அவர் துளசி மாதிரி இசை. சொல்லுறதக் கேக்கிற பிள்ளை. அதவிட குருவை மட்டும் மாத்திக் கூப்பிடச் சொல்லி நான் சொல்லேல்ல. உன்ன அத்தை எண்டும் அவனை அப்பா எண்டும் சொல்லோணும் எண்டு சொன்னனான். குருவை மட்டுமே அப்பா எண்டு சொல்லச் சொல்லி இருந்தா சில நேரம் வித்தியாசமா இருந்திருக்கும் போல.” என்றதும் அவளுக்கும் புரிந்தது.
“எனக்கு அவர் என்னை இசை எண்டு கூப்பிடுறதுதான் பிடிச்சிருந்தது.”
“ஆனா இந்த மாமான்ர மனுசி அத்த தானே?”
அவனுக்கு அதுதான் பிடித்திருக்கிறது என்று விளங்க அவனையே பார்த்தாள். “என்ன பார்வை?” என்றான் அவள் நெற்றியில் முட்டி.
இப்போதும் பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள் யாழிசை. முன்னரெல்லாம் இவனுக்கு எவ்வளவு கோபம் வரும்? முன்னர் என்று சொல்வது கூடச் சரியாக வராது. இப்போதும் நன்றாக வரும். என்ன அவளிடம் வராது. அவள் என்றால் மட்டும் அவன் காட்டும் முகமே வேறு.
“ஏன் உங்களுக்கு என்னை இவ்வளவு பிடிக்குது?”
திடீரென்று வந்த கேள்வியில் அவன் சிரித்தான். “இதுக்குத்தானா அந்தப் பார்வை?” என்று கேட்டுவிட்டு, “என்ர இசையை எனக்கு எப்பிடிப் பிடிக்காம இருக்கும்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“அதுதான் ஏன்?”
கொஞ்சம் யோசித்துவிட்டு, “தெரியா இசை.” என்றான். பின் அவனே, “உன்ர நேர்மை பிடிச்சிருக்கலாம். அமைதியான குணம், விளங்கி நடக்கிறது… எனக்குச் சொல்லத் தெரியேல்ல. உன்னைப் பிடிக்கும். உனக்கு என்னைப் பிடிக்காட்டியும் பரவாயில்ல, நீ எனக்கு வேணுமே வேணும் எண்டுற அளவுக்குப் பிடிக்கும். அதுக்குக் காரணமும் நீதான்.” என்று முடித்தான்.
“கடைசி வரைக்கும் எனக்கு உங்களப் பிடிக்காமையே போயிருந்தா?”
“காலம் முழுக்க பிடிக்க வைக்கிறதுக்கு முயற்சி செய்துகொண்டே இருந்திருப்பன்.” என்றவனை மலைப்புடன் பார்த்தாள் அவள்.
“தேங்க்ஸ் என்ர வாழ்க்கைல வந்ததுக்கு.” அவன் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுவிட்டுச் சொன்னாள் அவள்.
“அப்ப நான் என்ன சொல்லுறது?” என்று திருப்பிக் கேட்டான் அவன். “உனக்கு என்னைப் பிடிக்காமையே இருந்திருந்தாலும் எப்பிடியும் உன்னை விட்டுக்குடுத்தே இருக்க மாட்டன். ஆனா அந்த வாழ்க்கை உனக்கு நரகமா, எனக்குப் போராட்டமா இருந்திருக்கும். அப்பிடி இல்லாம இப்பிடி உயிரா, சந்தோசமா, நிறைவா வாழுற வாழ்க்கையத் தந்தத்துக்கு என்ர இசையரசிக்கு நான் என்ன சொல்லுறது?” என்று திரும்பவும் கேட்டான்.
கொஞ்ச நேரம் இமைக்கவும் மறந்து அவனைப் பார்த்தாள் யாழிசை. அவனுக்குத் தன்னை இந்தளவில் பிடிக்கக் காரணம் என்ன என்று இன்னுமே அவளுக்குத் தெரியவில்லை. அந்தளவில் அவள் ஒன்றும் அவனோடு அந்த நாள்களில் அன்பாகவோ பண்பாகவோ பழகியதே இல்லை.
ஆனால், அவன் நேசத்தை உணர்கிற ஒவ்வொரு பொழுதுகளிலும் திரும்ப திரும்ப அவன்பால் காதலில் வீழ்ந்துகொண்டே இருக்கிறாள். அதை அனுபவிக்கிறவளாகக் கணவனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
மீண்டும் இருவருக்குள்ளும் மௌனம். அவன் அணைப்பில் அவளும், அவளைத் தன் கை வளைவுக்குள் வைத்துக்கொண்டு அவனும் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.
“தூயவா, எனக்கு ஸ்கூட்டி வேணும்.”
திடீரென்று அவள் கேட்கவும் கொஞ்சம் வியப்புடன் அந்த நிலவொளியில் அவள் முகத்தை இன்னும் ஊன்றிப் பார்க்க முயன்றான் தூயவன். அப்படி அவள் உரிமையாகக் கேட்டது இனித்தது.
“தூயவா.”
“ம்”
“ஸ்கூட்டி வாங்கித் தர மாட்டீங்களா?”
“ஏன்?”
“மித்துக்குட்டியோட ஊர் சுத்த.”
“அந்த ஊர் சுத்துற வேலைய என்னோட பாக்க மாட்டியா நீ?”
“நீங்க ஸ்கூட்டி வாங்கித் தாங்க. உங்களையும் மித்துக்குட்டி மாதிரி முன்னால இருத்தி ஊர் சுத்துறன்.” என்று சொல்லி முடிக்கையிலேயே அந்தக் காட்சி கற்பனையில் வரவும் கலீர் என்று நகைத்தாள் அவள்.
அவன் உதட்டிலும் முறுவல். “நக்கல் உனக்கு. இதுக்காகவே உனக்கு ஸ்கூட்டி இல்ல போ.”
“வாங்கித் தரேல்ல எண்டு வைங்க. உங்கட பைக்கை அடிச்சு உடச்சுத் தென்னைக்கு உரமா போட்டுடுவன் பாருங்க.” என்று அவளும் மிரட்டினாள்.
அவனுக்குச் சிரிப்பு. “அந்தளவுக்குப் பொல்லாதவளா என்ர இசையரசி?”
“பின்ன இல்லையா? உங்களுக்கு இன்னும் என்னைப் பற்றி முழுசா தெரியேல்ல.”
“இன்னுமா?” என்றவனின் கேள்வியில் ஆம் என்று சொல்ல வந்தவள் அந்த இருளிலும் அவன் கண்களின் பளபளப்பில், “உங்களை… நான் என்ன சொன்னா நீங்க என்ன சொல்லுறீங்க?” என்று அவன் வாயிலேயே ஒன்று போட்டாள்.
அவனும் அவளுக்கு ஸ்கூட்டி ஒன்றை வாங்கிக் கொடுக்கத்தான் நினைத்துக்கொண்டிருந்தான். எல்லாவற்றுக்கும் அவள் தன்னையே எதிர்பார்த்துக்கொண்டு, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதில் அவனுக்கும் உடன்பாடில்லை. அதே நேரம், அவளும் தானுமாய் எல்லாவற்றிலும் பின்னிப் பிணைந்து பயணிப்பதும் அவனுக்குப் பிடித்திருந்ததால் அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தான்.
இப்போது அவள் வாய்விட்டுக் கேட்டவிதம் அந்த நிமிடமே வாங்கிக் கொடுத்துவிடும் வேகத்தைக் கிளப்பிற்று. அதைக் காட்டிக்கொள்ளாமல், “நானே உன்னட்ட வாங்கின காசத் திருப்பித் தர வழியில்லாம நிக்கிறன். இதில உனக்கு ஸ்கூட்டி வேணுமா?” என்றதும் படக்கென்று நிமிர்ந்து அவனை முறைத்தவள், போர்வைக்குள் இருந்து கையை மட்டும் வெளியில் எடுத்து அவன் மண்டையில் குட்டினாள்.
“500 ரூபா காசு தர உங்களுக்கு வழியில்ல?” முறைப்புடன் வினவினாள்.
“பின்ன, அத நினச்சு நினச்சு தினம் தினம் நான் அழுறது எனக்கு மட்டும்தான் தெரியும்.” பெரும் சோகம்போல் அவன் சொல்ல, அவளுக்கே சிரிப்பு வந்திருந்தது.
“ஒண்டு செய்வம். காசா தந்து கழிக்க எனக்கு வசதி இல்ல. அதால கிஸ்ஸா தந்து முடிக்கப் பாக்கிறன்.” நகைக்கும் குரலில் அவள் முகத்தோடு முகம் உரசிச் சொன்னான் அவன்.
அவள் அரண்டு போனாள். “காசும் வேணாம். கிஸ்ஸும் வேணாம். ஆளை விடுங்க.” என்று அவனை விட்டு விலகியோட முயன்றாள். அவன் விடவில்லை.
“கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் எண்டு கேள்விப்படேல்லையா நீ. கடன் பட்ட மனுசரின்ர நெஞ்சம் அந்தளவுக்குக் கலங்கி இருக்குமாம். நானும் அப்பிடித்தான் இருக்கிறன். அதால நான் ஒவ்வொண்டா தருவனாம். நீ எண்ணுவியாம்.” என்றவன் அவளை அதற்குப் பதில் சொல்லக்கூட விடவில்லை.
கைக்குள் இருந்தவளைத் தனக்குப் பதமாக மாற்றிக்கொண்டு முத்தங்களால் யுத்தம் நிகழ்த்த ஆரம்பித்தான்.
“தூயவா!” கிடைக்கிற இடைவெளியில் கிறங்கிய அவள் குரல் இன்னுமே அவனை வேட்கை கொள்ள வைத்தது.
“எத்தின தந்திட்டன்?” மயங்கிய குரலில் காதோரம் வினவினான்.
அவள் எங்கே அந்தளவில் சுயநினைவோடு இருந்தாள்? அவன் இருக்க விட்டானா என்ன?
“தூயவா எனக்கு நினைவில்ல.”
“அப்ப விடு, முதல்ல இருந்து ஆரம்பிப்பம்.” என்றதும் அவனை ஒரே தள்ளாகத் தள்ளிவிட்டு எழுந்து வீட்டுக்குள் ஓடினாள் அவள்.

