கடன் அன்பை முறிக்கும் 63 – 2 ( இறுதி அத்தியாயம் )

தேவகியும் துளசியும் அழவே ஆரம்பித்திருந்தனர். “போய்யா. அதுதான் அப்பா சொல்லுறார் எல்லா.” என்றார் தேவகியும்.

 

என்னதான் அவன் திருமணமாகி மனைவியோடு வாழ்கிறான் என்பது ஊரறிந்த விச,யம் என்றாலும் அதே ஊரின் முன்னால் பெற்றவரும் அவன் திருமணத்தை அங்கீகரிக்கிறார் என்பது கூடுதல் கௌரவம் இல்லையா. அதை மகனுக்கு வாங்கிக்கொடுக்க தேவகியும் ஆசைப்பட்டார்.

 

ஆனாலும் தூயவன் அசையவில்லை. “அவனுக்கு அப்பா அம்மாவா நிக்கிற வயசு எங்களுக்கு இல்ல. நீங்க வாங்கம்மா.” என்றவன் கொஞ்சம் தயங்கினாலும், “வாங்கப்பா.” என்று கருணாகரனையும் அழைத்து அவனும் சபையின் முன்னே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

 

அவன் வாயிலிருந்து கேட்ட அப்பா என்கிற அழைப்பில் கருணாகரனின் உயிரே துடித்தது. கண்கள் சட்டென்று கலங்கிப் போயின. நிற்க முடியாமல் தடுமாறியவர் சட்டென்று அவன் காரத்தைப் பற்றித் தன்னை நிலைநிறுத்தினார்.

 

இதை எதிர்பாராத தூயவனின் நிலையும் மோசமாகிற்று.

 

அவரின் தொடுகை, அதன் மூலம் அவனுக்குள் கடத்தப்பட்ட அவரின் கதகதப்பு, அவர் கரத்தில் தெரிந்த நடுக்கம் எல்லாம் அவனை உடைக்க, திரும்பி யாழிசையைப் பார்த்தான்.

 

கண்ணீரும் புன்னகையுமாக நின்றிருந்தவள் விழிகளை மூடித் திறந்து அவனை ஆற்றுப்படுத்தினாள்.

 

அவளுக்கும் அவர் செய்கை பெரும் அதிர்ச்சிதான். இந்த மனிதர் வேறு எதற்கும் நடிக்கிறாரா என்று கூட யோசித்தாள். ஆனாலும் கூட அவனை அவன் தகப்பனோடு பார்த்தபோதுதான் அவள் உள்ளத்திலும் ஏதோ ஒரு நிறைவு உண்டாயிற்று.

 

இப்போதும் அவளால் கருணாகரனையும் அகிலனையும் மன்னிக்க முடியாது. ஆனால் தான் ஒதுங்கி இருந்துகொள்ள முடிவு எடுத்திருந்தாள். விலகி இருந்துகொண்டால் சரிதானே.

 

இத்தனை காலமும் அத்தனை பேரும் சொல்லியும் அசையாமல் இருந்த கணவன், இந்த ஒரு கணத்துக்காகத்தான் காத்திருந்தானோ என்று தோன்றிவிட, தன் சம்மதத்தைக் கண்களாலேயே வழங்கியிருந்தாள்.

 

அவளை நேசிக்க ஆரம்பித்ததிலிருந்து அவளுக்காக நிற்கும் அவனுக்காக அவள் என்ன செய்திருக்கிறாள் இதுவரை? எதுவுமே இல்லை. அப்படி இருக்க இதைச் செய்வதில் அவள் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லையே.

 

திருமணம் எந்தக் குறையும் இல்லாமல் மனத்துக்கு நிறைவாக நடந்து முடிந்தது. ரிசப்ஷன் என்று எதுவுமில்லாததில் கோயிலிலேயே பகல் சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவை முடித்து, புகைப்படத்துக்கு நின்றுவிட்டு திருமணத்திற்கு வந்தவர்கள் புறப்பட்டனர்.

 

அன்றிரவுக்கு மணமக்கள் தங்கும் வீடாகத் தேவகி வீடுதான் ஏற்பாடாகியிருந்தது. அதன்படி எல்லோரும் தயாராக, கருணாகரன் மகனை மகனைப் பார்த்தார்.

 

யாழிசை தாய்மை உற்ற செய்தி அறிந்ததிலிருந்து, இனி அவன் வந்துவிடுவான் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். அவர் மகன் அவரை ஏமாற்றியிருந்தான். இப்போதும் ஏமாற்றிவிடுவானோ என்று தோன்றியதும் ஒரு பயம் பிடித்துக்கொண்டது. இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் இனி இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது.

 

அதன் பிறகு அவர் யோசிக்கவில்லை. நேராக அவன் முன்னே சென்று நின்றார்.

 

“அப்பா கதைச்சது நடந்தது எல்லாம் பிழைதான். நீங்க என்னை விட்டு மொத்தமா ஒதுங்கிப் போற வரைக்கும் வேற என்னவோ எல்லாம் பெருசா தெரிஞ்சது. நீங்க விட்டுட்டுப் போன பிறகுதான் உங்கட அருமை தெரிஞ்சது. வீட்டுக்கு வாப்பு. வேணுமெண்டா உங்கட மனுசிட்ட மன்னிப்புக் கேக்கிறன்.” என்றவர்,

 

“உங்களுக்கு நான் செய்த எல்லாத்துக்கும் மன்னிச்சுக்கொள்ளுங்கோம்மா. தயவு செய்து தம்பியோட வீட்டுக்கு வாங்கோ.” என்று யாழிசையிடமும் நேரடியாக அவர் சொன்னபோது, இதைக் கொஞ்சமும் எதிர்பாராத யாழிசை ஆடித்தான் போனாள்.

 

“ஐயோ மாமா. அதெல்லாம் ஒண்டும் இல்லை.” என்று தன்னை மீறியே அவரை மாமா என்று அழைத்திருந்தாள்.

 

என்ன இருந்தாலும் அவள் கணவனின் தகப்பன். அதைவிட அந்தக் கணத்தில் அவன் உள்ளம் என்ன பாடுபடும்? தவிப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.

 

கல்லுப்போல் இறுகி, யாரையும் பாராமல் முகத்தை எங்கோ திருப்பிக்கொண்டு நின்றிருந்தான் அவன். அவன் நினைத்திருந்தால் அவரை மன்னிப்புக் கேட்க விடாமல் தடுத்திருப்பான். ஆனால், இது கேட்கப்பட வேண்டிய மன்னிப்பு. அவன் மனைவியின் காயத்துக்கு அவனால் வாங்கிக்கொடுக்க முடிந்த மருந்து என்றுதான் பேசாமல் இருந்தான்.

 

ஆனாலும் அவர் மன்னிப்பைக் கேட்டபோது அவன் நெஞ்சில் பெரும் வலி. அன்று எப்படிக் கணவனாகக் காயப்பட்டானோ இன்று மகனாகக் காயப்பட்டு நின்றான்.

 

கருணாகரனும் தவறை என்றோ உணர்ந்துவிட்டாரா. ஆனாலும் கூட அவர் வயதும், வாழ்ந்த விதமும் மண்ணரிப்பை இலகுவாக்க கேட்க விடவில்லை. கேட்கிற வரை கூட தொண்டையை எதுவோ இறுக்கிக் கவ்விக் பிடித்திருந்தது. கேட்டபிறகு என்னவோ பெரிய தளை ஒன்றிலிருந்து விடுபட்ட உணர்வு.

 

யாருமே கருணாகரனிடமிருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. “இன்னும் என்னப்பு நிக்கிறீங்க. வாங்கய்யா. நீங்க வாங்கம்மா.” என்று யாழிசையைக் கரம் பற்றி தேவகி அழைத்துப்போக, “பெரியம்மா, கலியாணம் நடந்தது எனக்கு!” என்று சத்தமாகக் குரல் கொடுத்தான் ஜீவன்.

 

“கலியாணம்தானே இப்ப நடந்தது. மற்ற எல்லாம் முதலே நடந்திட்டுதுதானே.” என்று தூயவனின் காதுக்கு மட்டும் கேட்குமாறு குரு சொல்ல, திரும்பிப் பார்த்து அவனை முறைக்கப் போன தூயவனால் சிரிப்பை அடக்க முடியாமல் போயிற்று.

 

“இந்தச் சிரிப்போடயே உன்ர தம்பியையும் கூட்டிக்கொண்டு வா மச்சான்!” என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு போனான் தூயவன்.

 

தயங்கிய நேசன் குடும்பத்தையும் விடவில்லை.

 

அங்கு இரண்டு தம்பதிகளும் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டார்கள்.

 

அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த கணத்தில் தூயவன் யாழிசைக்கு நடந்தவை எல்லாம் கண் முன்னால் வந்து போகாமல் இல்லை. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தார்கள். கருணாகரனும் மகன் வந்ததே போதும் என்பதுபோல் விதுசா வீட்டினரோடே இருந்துகொண்டார்.

 

இரவு வரை ஆள்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். விதுசா வீட்டினரும் அங்கேயே இருந்தனர். மணமக்களுக்கான வீட்டுச் சடங்குகள் எல்லாம் முடிந்து, அவர்களுக்கான அறைக்கு அவர்களை அனுப்பி வைத்தபோது, தூயவனைப் பார்த்து இலேசாகச் சிரித்தான் குரு.

 

அவனைப் போட்டு மொத்து மொத்து என்று மொத்தலாமா என்று வந்தது தூயவனுக்கு. கூடவே சிரிப்பும்.

 

நேசம் குடும்பம், விதுசா குடும்பம் எல்லாம் விடைபெற்றுக்கொண்டதும் அதற்காகவே காத்திருந்த தேவகி, மகனை அணைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார்.

 

அதுவே அவர் அவ்வளவு நேரமாக அடக்கிக்கொண்டு இருந்திருக்கிறார் என்று சொல்ல, தூயவனுக்கும் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. “அதுதான் வந்திட்டன் தானே. இன்னும் என்ன அழுகை?” எனும்போது அவன் குரலும் கரகரத்திருந்தது.

 

அங்கே எட்டு மாத வயிற்றைச் சுமந்தபடி துளசியும் அழ, அவளைத் தேற்றும் வேலையை குரு பார்த்தான்.

 

“இப்பத்தானய்யா இந்த வீடு நிறைஞ்சு கிடக்கு. இப்பிடியே வாழ்க்கை போயிடுமோ எண்டு பயந்து போனன்.” அப்போதும் தேவகிக்கு கண்ணீர் நிற்பதாக இல்லை.

 

“அப்பிடி எப்பிடி அம்மா விடுவன். கொஞ்சக் காலம் விலகி இருக்க நினைச்சனன். அவ்வளவுதான். அழாதீங்க.” என்று அவருக்கு அருந்தக் கொடுத்து, ஒரு மாத்திரையையும் விழுங்க வைத்தான்.

 

இது எல்லாவற்றையும் மனத்தில் பாரத்துடன் பார்த்திருந்த கருணாகரன் நடுவில் வரவில்லை. வர முடியவில்லை. வந்து என்ன சொல்வார்? அத்தனைக்கும் அவரே காரணமாக இருந்துவிட்டு.

 

இரண்டு தம்பதிக்கும் கண்ணூறுக்குச் சுத்திப் போட்டபிறகே தேவகியும் மாதவியும் அவர்களை மேலே செல்ல விட்டனர்.

 

இத்தனை மாதங்களுக்குப் பிறகு அன்றுதான் அவர்களின் அறைக்கு வந்தார் தேவகி. கட்டிலில் படுத்திருந்த கருணாகரனின் பார்வை மனைவியிலேயே இருந்தது.

 

தேவகி அப்போதும் கணவரின் முகம் பார்க்கவில்லை. உடை மாற்றி, குளியலறை சென்று வந்தவர் தன் பக்கத்தில் படுத்துக்கொண்டார்.

 

அந்த அறை முழுக்க கனத்த அமைதி பரவிக்கிடந்தது. கருணாகரனால் இத்தனை மாதங்களைப் போல் இன்றும் அந்தத் தனிமையையும் அது தரும் அழுத்தத்தையும் தாங்க இயலவில்லை போலும்.

 

“கோவம் போயிற்றுத்தா தேவகி?” என்றார் மனைவி பக்கம் முகத்தை மட்டும் திருப்பி.

 

“நடந்ததை எல்லாம் முடிஞ்சதா நினைச்சு கடந்துவர முயற்சி செய்றன்.” என்றார் அவர்.

 

ஒரு நெடிய மூச்சு ஒன்று வெளியேற விழிகளை மூடிக்கொண்டார் கருணாகரன்.

 

 

*****

 

தூயவனின் அறை. அதைப் பார்க்கையில் தூயவனுமே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தான்.

 

தோட்ட வீடும் அங்கு அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் தேன்நிலவு வாழ்க்கை. அது தந்த தித்திப்பு வேறு. இது அவன் உணர்வுகளோடு கலந்த அறை. இது தரும் ஆத்மார்த்தமான அந்த உணர்வு வேறு. என்னவோ புதிதாகப் பார்ப்பதுபோல் எல்லாவற்றையும் பார்த்தான்.

 

குளித்து, இலகு உடை ஒன்றை மாற்றிக்கொண்டு வந்த யாழிசை, கட்டிலில் அமர்ந்து சின்ன புன்னகையோடு கணவனையே பார்த்திருந்தாள். அவனும் குளித்து, சாதாரண பேண்ட் ஒன்று அணிந்திருந்தான்.

 

அவள் பார்ப்பதை அறிந்து, “என்ன பார்வை?” என்று கேட்டபடி வந்து, அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான்.

 

யாழிசைக்கு மெல்லிய வியப்பு. இத்தனை காலமும் அவன்தான் அவளை மடி தாங்கியிருக்கிறான். இப்படி அவள் மடியில் அவன் படுப்பது இதுதான் முதல் முறை. கைகள் தானாகக் கணவனின் கேசத்தைக் கோத, “சந்தோசமா?” என்றாள் அவன் முகம் பார்த்து.

 

கண்களை மூடி அவள் விரல்கள் தரும் சுகத்தைக் கொஞ்ச நேரம் அனுபவித்துவிட்டு, “உனக்கு?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

 

“நிம்மதியா இருக்கு தூயவா. என்னவோ இவ்வளவு காலமும் நெஞ்சில இருந்த பாரம் இறங்கி இருக்கு.”

 

அவனுக்கும் அப்படித்தான். இப்போதும் அவனால் தந்தையை இயல்பாக எதிர்கொள்ள முடியுமா என்றால் இல்லைதான். பழையபடி அப்பா என்று பாசத்தில் குழைய முடியுமா என்றால் அதுவும் இல்லைதான். ஆனாலும் இங்கே வந்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது. என்னவோ அலைந்து திரிந்து வீடு சேர்ந்த உணர்வு.

 

அவளைத் தன் கைகளுக்குள் அரவணைத்தபடி படுத்திருந்த தூயவனின் ஒற்றைக் கரம் அவள் வயிற்றை வருடி விட்டுக்கொண்டிருந்தது. “இனி எங்கட செல்லக்குட்டியும் இஞ்சதான் பிறப்பா. இந்த வீட்டில தவண்டு, நடை பழகி, ஓடியாடி விளையாடுவா இசை.” அவன் அவன் பாட்டுக்குச் சொல்ல, முகத்தை மட்டும் உயர்த்தி கணவன் முகம் பார்த்தாள் யாழிசை.

 

அத்தனை ஏக்கங்களையும் அவளுக்காக அடக்கிக்கொண்டு இருந்திருக்கிறான். கணவன் மீது இன்னுமின்னும் காதல் பிறக்க, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முகம் முழுக்க ஈர முத்தங்கள் பதித்தாள்.

 

“என்ன?” மனைவி தந்த முத்தங்களில் உள்ளம் மயங்க வினவினான்.

 

“இன்னுமின்னும் உங்களைப் பிடிக்குதே. என்ன செய்யலாம்?”

 

அவன் உதட்டில் சிரிப்பு மலர்ந்தது. அவளை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வந்து, “இன்னுமின்னும் என்னை இந்த இசையரசி கொஞ்சலாம்.” என்று பதில் சொன்னான்.

 

அவள் கொஞ்ச ஆரம்பிக்க அவன் மிஞ்ச ஆரம்பித்தான். காதல் அங்கே கரையுடைத்துப் பாய ஆரம்பித்தது.

 

முற்றும்.

 

 

 

 

error: Alert: Content selection is disabled!!