கடன் அன்பை முறிக்கும் 7 – 2

புதிய மருந்து மாத்திரைகள் என்பதால் அது பற்றிய விவரங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அதனாலேயே அது பற்றிய நினைவூட்டல் கூட அவள் செய்யும் அவசியம் இல்லாது போனது.

 

இப்போதெல்லாம் யாழிசை மாதவி வீட்டில் தங்குவதில்லை. அந்த வீடு பூட்டியே கிடந்தது. காலையிலும் மாலையிலும் வீடு கூட்டி, முற்றம் கூட்டி, விளக்கு வைத்துவிட்டுத் திரும்பவும் வீட்டைப் பூட்டிக்கொண்டு இங்கு வந்துவிடுவாள்.

 

அது என்னவோ அந்த வீடு பாழடைந்துவிட்டது போலொரு தோற்றம். அதுவும் சேர்ந்து அவளை அழுத்தியது.

 

பெரும்பாலும் வார இறுதியைத் தவிர்த்து ஒவ்வொரு நாளுமே மாலையில் பாடம் சொல்லிக்கொடுக்க இவளை வரச்சொல்லிப் பிள்ளைகளை இவளிடம் விட்டுவிட்டு எங்காவது போய்விடுவாள் சுவர்ணா. அவள் கணவனுக்குத் தினமும் பகலில் போய் இரவில் திரும்பி வரும் வேலை என்பதும் அவளுக்கு நல்லதாகிப்போனது.

 

நளினிக்கு இதில் விருப்பமே இல்லை. நன்றாக அவள் ஏய்க்கிறாள் என்று கோபப்படுவாள். யாழிசைக்கும் சுவர்ணாவின் குணம் தெரியும் என்றாலும் மாதவிக்காகவும் இதெல்லாம் அவளுக்குப் பல்கலை கிடைக்கும் வரையில்தானே என்று எண்ணிக்கொண்டும் விட்டுவிடுவாள்.

 

இப்போது, மாதவியும் அங்கு இருப்பதால் பிள்ளைகளை இவளிடம் விட்டுவிட்டு தேவகி வீட்டுக்குப் போய்விடுவாள் சுவர்ணா.

 

திரும்பி வருகிறவளிடம் மாதவியைப் பற்றி விசாரித்துக்கொள்வாள். அவ்வளவுதான் அவரைப் பற்றி அவளுக்குத் தெரிய வருகிறவை.

 

ஜீவனும் அழைக்கிற பொழுதுகளில் அன்னையைப் பற்றிச் சொல்லிவிட்டு, “அம்மா அங்க இருக்கிறது எனக்குப் பிடிக்கவே இல்ல இசை. அங்க வச்சு இத எப்பிடிச் சொல்லுறது எண்டு தெரியாம நிக்கிறன்.” என்று அலுத்துக்கொண்டதையும் கேட்டுக்கொண்டாள்.

 

வேறு என்னதான் செய்வது? என்னவோ இத்தனை காலமும் மிக மிக நெருக்கமாக இருந்த ஒருவர், திடீர் என்று விலகி நிற்பது மனத்தை என்னவோ செய்தது. அதனாலேயே எப்போதடா பல்கலைக்குச் செல்வோம் என்று எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தாள்.

 

அவளுக்கு அனுராதபுர மாவட்டத்தில் அமைந்திருக்கும் ரஜரட்டை பல்கலைக்கழகத்தில்தான் கிடைத்திருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் அது.

 

வேறு இடம், புது மனிதர்கள், தனியாகத் தங்குதல் என்று எல்லாமே இந்த வெற்றிடத்தை நிரப்பி, அழுத்தத்தைக் குறைக்கும் என்று எண்ணிக்கொண்டு, ஸ்கூட்டியை ஒரு சந்தியில் வளைத்துத் திருப்பவும் எதிரில் வந்த டிரக்ட்டர் அவளோடு மோதியது.

 

தான் சரியாக வந்ததில் இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஸ்கூட்டியில் முன் பக்கம் அப்படியே சிதைந்து போனதுமல்லாமல் அவளும் வேலியோடு போய் விழுந்தாள்.

 

படார் என்று கேட்ட சத்தத்திலும் ஓடி வந்த மனிதர்கள்தான் அவளைத் தூக்கி அமர்த்திவிட்டுப் காவல்துறைக்கு அழைத்தனர்.

 

அவளால் கோபப்பட்டுக் கத்தக்கூட முடியவில்லை. அணிந்திருந்த பாவாடை சட்டை விழுந்ததில் விலகியது ஒரு அவமானம் என்றால் எங்கென்று இல்லாமல் கம்பி கிழித்து உயிர் போனது. இதில் நளினியின் ஸ்கூட்டி அது. அவளுக்கு எல்லாம் பிடிக்கும். ஆனால், ஸ்கூட்டியில் சின்ன கீறல் விழுந்தால் கூட மனத்தை நோகடிப்பது போல் எதையாவது சொல்லிவிடுவாள்.

 

இதற்கு என்ன சொல்வாளோ என்று அது வேறு அவளை நடுங்க வைத்தது.

 

அதற்குள் காவல்துறை வந்து சேர்ந்தனர். யாழிசை நேசனுக்கு அழைத்துச் சொன்னதில் அவனும் ஓடி வந்திருந்தான்.

 

டிரக்ட்டர் ஒட்டி வந்தவனில்தான் தவறு என்று சொல்லி, இரு தரப்பினதும் விவரங்களை எடுத்துக்கொண்டு, அடுத்தநாள் காவல் நிலையத்துக்கு வரச் சொன்னார்கள்.

 

ஸ்கூட்டியை பார்த்த தவநேசனே அதிர்ந்துபோனான். அந்தளவில் முன் பக்கம் மோசமாகக் காயப்பட்டிருந்தது.

 

ஒரு வழியாக அதையும் தெரிந்தவர்கள் மூலம் ஏற்றி, கராஜ் ஒன்றில் இறக்கிவிட்டு, அவளையும் காட்டி மருந்து எடுத்துக்கொண்டு வீடு வர இரவு பத்தைத் தாண்டியிருந்தது.

 

கோகிலாவுக்கு மகளைக் கண்ணால் கண்ட பிறகே உயிர் வந்தது. உயிராபத்து ஒன்றும் இல்லை என்றாலும் அன்னை மனம் அமைதியடையவில்லை. அவளின் ஒவ்வொரு காயத்தையும் கண்ணீருடன் வருடிக்கொடுத்தார்.

 

யாழிசையால் கொஞ்சமும் முடியவில்லை. உடல் முழுக்க வலி. எதிர்பாராமல் நடந்த விபத்தில் ஒருவித அதிர்ச்சி. தப்பித்தவறி இன்னும் கொஞ்சம் வேகமாக அவன் வந்து இவள் டிரக்ட்டருக்குள் மாட்டியிருந்தால்? நினைக்கவே நடுங்கியது. தாங்க முடியாமல் அன்னையின் மடியில் சரிந்துகொண்டாள்.

 

“கவனமா இருக்கிறேல்லையா பிள்ளை. இப்ப பார், ஆர் கிடந்து உத்தரிக்கிறது எண்டு.” அவள் தலையை வருடிவிட்டபடி சொன்னார் கோகிலா.

 

“என்னில பிழை இல்லை அம்மா. அந்த எளியவன்தான் பாக்காம வந்து இடிச்சவன். அதுக்கு நான் என்ன செய்ய?”

 

“ஸ்கூட்டிக்கு என்னவாம் தம்பி?” உடல் கழுவிக்கொண்டு வந்து, மனைவி தந்த உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேசனிடம் வினவினார் கோகிலா.

 

“தெரியாம்மா. கராஜ் காரன் அம்பதில இருந்து 75க்குக் கிட்ட முடியும் எண்டு சொல்லுறான். டிரக்டர் காரன்ல பிழை எண்டுற படியா அவன்தான் அந்தச் செலவைத் தரோணும். நாளைக்குப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனா தெரியும்.”

 

நளினி வாயே திறக்கவில்லை. ஆனாலும் கோபத்தில் இருக்கிறாள் என்று தெரிய, “சொறி அண்ணி.” என்றாள் கண்ணீருடன்.

 

“அவன்லதான் பிழை எண்டாலும் நீயும் கொஞ்சம் கவனமா இருந்திருக்க இந்தளவுக்கு ஸ்கூட்டி உடைஞ்சிருக்காது. விடு, இனி நடந்ததக் கதைச்சு என்ன பிரயோசனம்? பழைய மாதிரி ஸ்கூட்டி வந்தா சரி.” பணமும் அவர்கள் கையால் போகாது என்பதில் சமாதானமாகவே பேசினாள் நளினி.

 

அடுத்த நாள் நல்ல காய்ச்சல் யாழிசைக்கு. ஆனால், அவள் கட்டாயம் காவல் நிலையம் செல்ல வேண்டும் என்பதில் வைத்தியர் கொடுத்த மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு நளினியோடு புறப்பட்டாள்.

 

அங்கே காவல் நிலையத்தில் அந்த டிரக்ட்டரை ஓட்டியவனோடு தூயவன் நின்றது முதல் அதிர்ச்சி என்றால், இவள்தான் பிழையாக ஓட்டி வந்து மோதினாளாம், அவனில் தவறில்லையாம் என்று காவல் நிலையத்தில் சொன்ன விடயத்தில் நெஞ்சைப் பிடிக்காத குறையாக அதிர்ந்து நின்றுவிட்டாள் யாழிசை.

 

அவளுக்குத் தலையைச் சுற்றுவது போலிருந்தது. உடல் வேறு முடியாமல் பலகீனப்பட்டிருந்ததாலோ என்னவோ அழுகை வந்தது.

 

“இல்ல சேர். நேற்று வந்த டிராபிக் போலீஸ கேட்டுப் பாருங்க. என்னில பிழை இல்ல…” என்றவளை அவர் பேச விடவில்லை.

 

“என்னம்மா, ஓடத் தெரியாம ஓடி ஆக்ஸெடென்ட நடத்தினதும் இல்லாம நாங்க பொய் சொல்லுறம் எண்டு வேற சொல்லுவீங்களா?” என்று அதட்டினார் அவர்.

 

அவள் பயந்துபோனாள். “இல்ல சேர். அப்பிடி இல்ல சேர்…” என்று அந்த விபத்து எப்படி நடந்தது என்று அவள் விபரித்தும் கூட அவர் காதில் விழுத்துவதாக இல்லை.

 

“ஆக்சிடென்ட்ட நேரடியா வந்து பாத்த போலீஸ் தந்த ரெக்கோர்ட் இது. அவர் என்ன பொய்யா எழுதி இருக்கிறார்?” என்று ஒரு கோப்பை நீட்டினார் அவர்.

 

அதில் அவள்தான் பக்கம் பாராமல் வேகமாக வந்து, வளைவில் திரும்பியதில் மோதியிருக்கிறாள் என்று எழுதப்பட்டிருந்தது.

 

அதுவரை அவர்கள் ஏதும் பொய் நாடகம் போடுகிறார்களா என்று எண்ணியிருந்த நளினிக்கு அதைப் படித்ததும் கோபம் வந்தது. “உண்மையச் சொல்லு இசை. நான் பேசுவன் எண்டுற பயத்தில பொய் சொன்னியா?” என்று பல்லைக் கடித்தாள்.

 

யாழிசைக்கு அழுகைதான் வந்தது. காவல் நிலையத்தில் நான்கு பேர் பார்க்க அழக்கூடாது என்பதில் அடக்கி, “ஐயோ அண்ணி சத்தியமா இல்ல. அந்த ரோட்டில நிண்ட ஆக்களைக் கேட்டாலே தெரியும். இது என்ன நடக்குது எண்டு உண்மையா எனக்கு விளங்கவே இல்ல.” என்றவளுக்கு இப்படிப் பொய்க் கதை புனைவார்கள் என்று தெரிந்திருக்க அங்கிருந்தவர்கள் நம்பரையாவது வாங்கிக்கொண்டு வந்திருக்கலாமே என்றிருந்தது.

 

சாட்சி சொல்லியிருப்பார்களே.

 

அதற்குள் அந்தக் காவல்துறை அதிகாரிக்குப் பொறுமை முடிந்திருந்தது போலும். “இஞ்ச பாருங்கம்மா, இத நான் கேஸ், கோர்ட் எண்டு கொண்டுபோனா ஸ்கூட்டி உடைஞ்சது மட்டுமில்லாம ஃபைனும் நீங்க நிறையக் கட்டவேண்டி வரும். அவேக்கும் நீங்க காசு குடுக்கவேண்டி வரும். அதால இத நான் சுமூகமாவே முடிக்க நினைக்கிறன். இத இதோட விடுறதுதான் உங்களுக்கு நல்லம்.” என்று அவர் தன் பதவிக்குண்டான அழுத்தத்தோடும் அதட்டலோடும் சொன்னார்.

 

நளினி பயந்துபோனாள். “சேர், ஸ்கூட்டி முன் பக்கம் முழுக்க உடைஞ்சிட்டுது. அதுக்கு 75க்குக் கிட்ட முடியுமாம் எண்டு சொன்னவே. அந்தளவுக்கெல்லாம் காசு எங்களிட்ட இல்ல. கஷ்டப்பட்ட குடும்பம் சேர் நாங்க.” என்று நளினி கெஞ்சியதைக் கேட்ட தூயவன் முன்னால் வந்து, “அந்தச் சிலவ நானே குடுக்கிறன்.” என்றான்.

 

வேகமாகத் திரும்பி அவனைப் பார்த்தாள் யாழிசை.

 

அவன் அங்கே அழுத்தமாகக் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான். பணம் விளையாடியிருக்கிறது என்று புரிந்தது.

 

ஒவ்வொரு முறையும் அவன் இப்படித் தன்னிடம் இருக்கும் ஏதோ ஒரு அநியாயமான ஆயுதத்தாலேயே அவளை அடித்து வீழ்த்துகிறான். அவளும் நியாயமே இல்லாமல் அந்த ஒவ்வொரு முறையும் காயப்பட்டுக் கலங்கி நிற்கிறாள்.

 

கடவுள் என்கிற ஒருவன் இல்லையே இல்லையா என்ன? பிறகென்ன நீதி, நியாயம், நேர்மை, அறம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். மனம் இயலாமையில் கொந்தளிக்க நேராக அவன் முன்னால் வந்து நின்றாள்.

 

எப்போதும் அவன் நிற்குமிடத்தில் தானும் நிற்கிறோம் என்றாலே அவளுக்குப் பதறும். இன்று அப்படியெல்லாம் இல்லை.

 

“என்னிலதானே பிழை?” நியாயமே இல்லாமல் தனக்குத் துரோகம் இழக்கப்படுகிறது என்று தெரிந்தும் தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற நெஞ்சின் குமுறலால் சிவந்துவிட்ட முகத்தோடும் நிறைந்துகிடந்த விழிகளோடும் அவனை நேராகப் பார்த்து வினவினாள்.

 

அவன் அசையவேயில்லை. பதிலும் சொல்லவில்லை. அதே கையைக் கட்டிய நிலையில் நின்றிருந்தான்.

 

“சொல்லுங்க, உங்கட ஆளில பிழை இல்லைத்தானே. பிறகு என்னத்துக்குச் சிலவை நீங்க ஏற்கோணும்? பிழை செய்த நானே அந்தச் சிலவையும் பாக்கிறன். நீங்க சிரமப்பட வேண்டாம்.” என்றவள், “கேஸ இதோட முடிப்பம் சேர்.” என்றாள் காவல்துறை அதிகாரியிடம்.

 

“உனக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு. இல்ல, அவே சொல்லுற மாதிரி உன்னிலதான் பிழையா?” என்ற நளினிக்கு அவள் ஒன்றுமே சொல்லவில்லை.

 

காவல் அதிகாரி தூயவனைக் கேள்வியாகப் பார்த்தார்.

 

“செலவை நான் குடுக்கிறன்.” என்றான் அவன் சுருக்கமாக.

 

“அப்ப அவரின்ர ஆள்ளதான் பிழை எண்டு எழுதித் தரச் சொல்லுங்க சேர்.” என்றாள் அவளும் விடாமல்.

 

“என்னம்மா கதைக்கிறீங்க. கஷ்டப்பட்ட குடும்பம் எண்டு சொல்லுறீங்க. உதவ வாறவரை வேண்டாம் எண்டு சொல்லுவீங்களா?”

 

“பரவாயில்லை சேர். காசுதான் எங்களிட்ட இல்ல. மானம், மரியாதை, நேர்மை எல்லாம் நிறைய இருக்கு.” என்றவள் முடிக்க வேண்டிய வேலைகளைப் பிடிவாதமாக நின்று முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

 

முகம் இறுகப் போகிறவளையே பார்த்திருந்தான் தூயவன்.

 

error: Alert: Content selection is disabled!!