செம்பருத்தி – 38-2

“போதும் மந்தாகினி. உன்னோட பேராசைக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. அந்தப் பொண்ணு பாவம். அவளோட பாவம் நம்மை சும்மா விடாது”

“அப்ப நான் பாவம் இல்லையா சுகுமாரண்ணா… என் வாழ்க்கை மட்டும் அடுத்தவங்க போடுற பிச்சைலயே நடக்கணுமா? எங்கப்பாவால எத்தனை இடத்துக்கு மாறி இருக்கோம்? உங்க அம்மா கூட எப்படி முகத்தை சுளிச்சுட்டு எனக்கு சாப்பாடு போடுவாங்க தெரியுமா? 

இந்த பணத்தாலதானே, இந்தப் பதவியாலதானே நான் கஷ்டப்பட்டேன். இப்ப அதை நான் அனுபவிச்சுட்டுப் போறேனே. பரம்பரை பரம்பரையா ராஜகுடும்பம்னு உக்காந்து சாப்பிடுறவங்க கொஞ்சநாள் நம்மை மாதிரி உழைச்சுத்தான் கஞ்சி குடிக்கட்டுமே. 

அவங்களுக்காக இரக்கப்படாதே. ஒருத்தன் ராஜாவா மாற எத்தனையோ பேரைக் காயப்படுத்திட்டுத்தான் அந்தப் பதவியில் ஏறி இருப்பான். இப்ப கடவுள் என் மூலமா தண்டனை தர்றார்னு நினைச்சுக்கோ

ஒரு வாழ்க்கை பாடத்தை நீ புரிஞ்சுக்கோ சுகுமாரண்ணா. நீ நல்லா வாழணும்னு ஆசைப்படு, மாறா நல்லவனா வாழணும்னு நினைச்சே நாய் படாத பாடு படணும்” என்று அவருக்கே புத்தி சொன்னாள்..

“நீ என்ன சொன்னாலும் எனக்கு சரியாப்படல. சப்பைக்கட்டு மாதிரிதான் தோணுது”

நீ இனிமே எனக்கு உதவ மாட்ட போலிருக்கே என்பது போல பார்த்தவள் சுதாரித்துக் கொண்டு

“சரி, நீ சொல்றதை யோசிக்கிறேன். அந்த மங்கை இப்ப எங்க இருக்கா? நம்ம வேணும்னா  போய் மன்னிப்பு கேட்கலாம்”

“அவ இன்னும் பம்பாய்லதான்  இருக்கா” 

மெதுவாக வக்கீலிடம் பேசியபோது அவர் அறிந்த விஷயங்களைப்  பற்றிய தகவல்களை வாங்கினாள். 

“ இப்ப நீ வீட்டுக்குப் போயி தூங்கு. அடுத்த வாரம் ஒரு நாள் போயிட்டு வரலாம்”

அவர் வீட்டிற்கு சென்றதும். பயங்கரமாக நடந்து கொண்டே யோசித்தாள். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தூங்கினாள். 

மறுதினம்  ஒருவனைக் கூப்பிட்டு அனுப்பினாள். அவன் அவளுக்குப் பழக்கமான நம்பூதிரியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். 

“இந்த போட்டோவைப் பிடி. இவள் பம்பாய்ல இந்த கல்லூரியில் படிக்கிறா. இவளைப் பின் தொடர்ந்து போயி ஆள் ஆரவாரம் இல்லாத இடத்தில் கத்தியால வயித்தில் குத்திடு”

“கத்தியால நெஞ்சில் குத்தலாமே?”

“முட்டாள் வயித்தில்தான் குத்தணும். ஒரு வேளை அவ பிழைச்சுகிட்டா கூட அவளால் குழந்தை பெத்துக்க முடியக்கூடாது. அது மாதிரி உன் வேலை இருக்கணும்”

அந்த நபர் சென்றவுடன் தனக்குள் சொல்லிக் கொண்டாள். “சுகுமாரண்ணா… உனக்கு இன்னொரு உண்மை சொல்லட்டுமா… ராணித்தேனீ ஒரே சமயத்தில் ஒண்ணே ஒன்னு மட்டும் உருவாகாது. பல தேனீக்களை  ஒரே சமயத்தில் ராணித்தேனீயாக்க முயற்சி நடக்கும். 

இதில் ஒரே ஒரு ராணித்தேனீ மட்டும் முந்திகிட்டு வெளிவரும். வெளிவந்த ராணித்தேனீயோட முதல் வேலை என்ன தெரியுமா? மத்த ராணித் தேனீகளை வெளியவே வரவிடாம  கொல்லுறதுதான். அதுக்கு பேர் கொலை இல்லை. இயற்கையோட கணக்குப்படி சர்வைவல். அதைத்தான் நானும் செய்றேன்”

மந்தாகினியின் திட்டம் பலித்துவிட, மங்கையற்கரசியை கூலிப்படையை சேர்ந்த இருவர் வயிற்றில் பலமாகக் குத்தினார்கள். ஆனால் சுதர்சன் தக்க சமயத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்துக் கொண்டார் மங்கையற்கரசி. ஆனால் அவரது ஓவரியில் ஒன்று முழுமையாக சேதமாகி விட்டது. வயிற்றிலும் பல இடங்களில் சேதங்கள். ஆறு மாதங்கள் அரும்பாடுபட்டு அவளை ஆளாக்கி கொண்டுவந்தார்கள். 

கொச்சிக்கு சென்று மந்தாகினியிடம் கடுமையான குரலில்  விசாரித்தார் நாகேந்திரன். ஆனால் அவளோ அசராமல் சாட்சியம் கேட்டாள் அவள்.

“உயிர் பிழைச்சுட்டா இல்லையா. அதுக்கப்பறம் என்ன வேணும்? அவளை கத்தில குத்தினதில் குழந்தை பிறக்காதுன்னா அதுக்காக நான் என்ன செய்றது? எதுக்காக என் மேல பழி போடுறிங்க?”

 மங்கையற்கரசியைத் திருமணம் செய்து வைப்பதற்காக அவர்கள் அனைவரும் திட்டம் போட்டு அவள் மீது பழி போடுவதாகக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள்.

ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்திருந்த அபிராமைக் கட்டிக் கொண்டு ஓ வென்று தலைவிரி கோலமாய் அழுகையைத் தொடங்க, அழுதுகொண்டே அம்மாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அப்பாவைப் பார்த்த அபிராமின் கண்களில் கோபம். 

“நீங்க அம்மாவை அடிச்சிங்களா?” என்று மழலை மொழியில் கேட்கும் மகனிடம் எப்படி தன் நிலையை விளக்குவது?  

கைகளைக் கட்டிக்கொண்டு மந்தாகினியை உறுத்துப் பார்த்த நாகேந்திரன் சொன்னார் “நான் அவளுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு சொல்லவே இல்லை. உனக்கெப்படி தெரியும்? சோ, நீதான்… நீதான்… மங்கையோட இந்த நிலைக்குக் காரணம் இல்லையா?”

“அவளுக்காக நீங்க ஏன் வக்காலத்து வாங்குறிங்க?”

“அவள் என் மாமா பெண். என் மாமா எனக்குத் தகப்பனை விட மேலானவர். என் கதை முழுக்க உனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைக்க உனக்கு எப்படி மனசு வந்தது மந்தாகினி? உனக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா?”

“எனக்கென்னமோ அவ மாமாவின் பெண் என்பதைவிட மனைவி என்கிற உரிமையும், கடமையும்தான் உங்களுக்கு அதிகமா இருக்கிறதா படுது”

“அதுதான் நீ செஞ்ச கொடூரமான செயலுக்குக்கான விளக்கமா? இதை என்னிடமே கேட்டிருக்கலாமே… மங்கைக்கு விடுதலை தந்து வேற இடத்தில் திருமணம் நம்ம ரெண்டு பேருமே செஞ்சு வச்சிருக்கலாமே. அவளோட எதிர்கால வாழ்க்கையை அழிக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ”

சற்று குரலைத் தணித்தாள். “அபி, நீ போயி விளையாடு. நான் அப்பாகிட்ட முக்கியமான விஷயம் பேசணும்”

நாகேந்திரனிடம் திரும்பினாள். 

“இப்போது அவளுக்கு நீங்க மணவிலக்கு கொடுக்க வேண்டிய அவசியமில்லை”

“மங்கைக்கு எதோ வாழ்க்கையை அமைச்சுட்டுப் போறா. அதையும் நாம ஏன் தடுக்கணும்”

“அவளுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஆனால் அவள் உங்களுக்கு மனைவியா இருந்தால்தான் நீங்க பாகமங்கலத்து ராஜா. அபிராம் அடுத்த ராஜா… விவாகரத்து செஞ்சுட்டா இந்த வாரிசு போட்டியில் உங்க தம்பி மகேந்திரனின் மகனும் வந்துடுவான்”

 

error: Alert: Content selection is disabled!!