கலிங்கனின் காவியம் 1.2

அடுத்த நாள் காலை, அவனுடைய ஆட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான் ராயன்.

யாரும் எதுவும் கேட்கவில்லை. அவனைக் கண்டு சிறு அச்சத்துடன் ஒதுங்கிக்கொண்டார்கள்.

ஒவ்வொரு கட்டிலாகச் சென்று, தன் ஆட்களைப் பார்வையிட்டான். காயங்களுடன் கட்டில்களில் முனகிக் கொண்டிருந்த ஒருவனின் அருகில் சென்று, அவன் தோள் மீது தட்டிக்கொடுத்தான்.

இதற்குள் அவர்களுக்குப் பொறுப்பான வைத்தியர் அரக்கப்பரக்க ஓடி வந்தார். “பெருசா பயப்பிடத் தேவை இல்ல. ஒரு சிலருக்குத்தான் வெட்டுக்காயம் ஆழமா இருக்கு.” என்றார் பணிவாக.

“கவனிப்பில எந்தக் குறையும் இருக்கக் கூடாது.”

“இருக்காது.” அவன் சொல்லி முடிக்க முதலே பதில் சொன்னார்.

அந்த மருத்துவமனையின் பிரதான வரவேற்பறைப் பகுதிக்கு வந்தான். அங்கே காயப்பட்டவர்களின் குடும்பத்தினர் கவலையோடு நின்றிருந்தனர்.

“அவேக்குத் தேவையான மருத்துவம், அதுக்கான செலவு எல்லாமே என்ர பொறுப்பு. அவே சுகமாகி எழும்பிற வரைக்கும் உங்கட வீட்டுச் செலவையும் நான் பாப்பன். நீங்க எதுக்கும் ஆரும் யோசிக்க வேண்டாம். நான் இருக்கிறன்!” என்று வாக்குறுதி அளித்தான்.

அவனது வார்த்தைகள் அவர்களின் சோகத்தை ஆற்றுப்படுத்தியது. அப்போது அங்கே வந்தான் சூர்யா. திரும்பி அவனைப் பார்த்தான் ராயன். விழிகளை ஒருமுறை மூடித் திறந்து, வலது கையின் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான் அவன்.

துறைமுகத்தின் சரக்குக் கிடங்கில் எஞ்சியிருந்த அத்தனை பொருட்களும் எந்தவொரு சேதமும் இல்லாமல், மிகப் பாதுகாப்பாகச் சேர வேண்டிய இடத்திற்கு வெற்றிகரமாக அனுப்பிவைக்கப்பட்டுவிட்டன என்பது அதன் பொருளாக இருந்தது.

அப்போதுதான் ராயனின் உதட்டோரம் திருப்தியான புன்னகை மின்னியது. காயப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தான்.

அவனுக்காக மருத்துவமனை வாயிலில் அவனது கார் நின்றுகொண்டிருந்தது. காரின் அருகே பவ்யமாகக் காத்து நின்றிருந்தான் ஆதி.

ராயன் வருவதைக் கண்டதும், அவனது முகத்தில் விவரிக்க முடியாத மலர்ச்சி ஒன்று தோன்றியது. மின்னல் வேகத்தில் ஓடிப்போய்க் காரின் கதவைத் திறந்து பிடித்தபடி, ராயன் உள்ளே ஏறுவதற்காகக் காத்து நின்றான்.

ஆதியின் அந்தச் செயலைக் கண்ட ராயனின் உதட்டோரம் சிறு புன்னகை துளிர்விட்டது. காரில் ஏறுவதற்கு முன், அவன் முதுகில் இலேசாகத் தட்டிக் கொடுத்துவிட்டு ஏறி அமர்ந்தான்.

அந்த ஒற்றைத் தட்டல் போதும். ஆதியின் உலகமே ஆனந்தத்தில் திளைத்தது. என்னவோ ராணுவப் பதக்கம் கிடைத்தது போன்ற பெருமிதத்தை அளித்தது. மற்றப் பக்கம் சூர்யா ஏறி அமர்ந்துகொள்ள, ஓடிப்போய் ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர்ந்தான்.

ராயன் என்றால் ஆதிக்கு வெறும் தலைவன் கிடையாது. அவன் அவனது வாழ்வின் நாயகன். போற்றுதலுக்கு உரிய ஒருவன். ராயனின் ஒவ்வொரு அசைவிலும், பேச்சிலும், எதிரிகளை எதிர்கொள்ளும் அந்தத் திமிரிலும் ஆதிக்குப் பெரும் பிரமிப்பு உண்டு.

ராயனிடம் சாதாரண அடியாளாக இருப்பதையே தன் வாழ்நாளின் மிகப்பெரிய பெருமையாக நினைப்பவன். மிக லாவகமாக வாகனத்தின் ஸ்டீயரிங்கைத் திருப்பிக் காரை இயக்கத் தொடங்கினான்.

சாலை மீது அவனது கண்கள் விழிப்புடன் இருந்தாலும், அவனது கவனம் முழுவதும் பின்னால் அமர்ந்திருக்கும் ராயன் மீதுதான். ராயனின் ஒவ்வொரு அசைவை, அவன் சிந்தனை செய்யும் முறையை, பேசும் பாங்கை என்று எல்லாவற்றையும் கவனிப்பான்.

ஜன்னல் வழியே வெளியே பறந்து செல்லும் நகரத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு வந்த ராயன், “இத மொத்தமா முடிச்சுவிட்டா என்னடா?” என்ற சூர்யாவின் கேள்வியில் திரும்பிப் பார்த்தான்.

வரதனை இனிமேலும் விட்டுவைக்காமல் முற்றிலுமாகத் தரைமட்டமாக்கிவிடலாமா என்று கேட்கிறான்.
கலிங்கராயன் கொஞ்ச நேரம் எதையோ ஆழமாக யோசித்தான். அந்த முடிவு தரும் விளைவுகளை மனதிற்குள் கணக்கிட்டுப் பார்த்துவிட்டுத் தலையை மறுப்பாக அசைத்தான்.

“அது சரியா வராது.” என்றான் சுருக்கமாக.

அவர்களின் நிழல் உலகத்திற்கு என்று சில எழுதப்படாத விதிகளும், எல்லைகளும் உண்டு. இதுவரை அவர்களுக்கிடையே பலமுறை பல மோதல்கள் நடந்திருந்தாலும் அவை அவர்களின் நிழல் உலகத்தின் ரகசிய எல்லைக்குள்தான் தீர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வரதனோ ராயனோ சட்டத்தின் கதவுகளைத் தட்டியதில்லை. காவல்துறையிடம் சென்று புகார் அளித்ததில்லை. ஏன், அவர்களாக வந்து விசாரித்தாலுமே பாதிக்கப்பட்டவர் அப்படி ஒன்று நடந்ததில்லை என்றுவிடுவார்கள்.

தப்பித்தவறி காவல்துறையிடம் மாட்டிவிட்டால் இரு தரப்புக்கும் ஆபத்து என்பதை இரு தரப்பும் அறிந்தேயிருந்தது.

அதைப் போன்று வரதனை மொத்தமாக அழித்து ஒழிப்பது என்பது சாதாரணமான விசயம் அல்ல. அவனை ஒரே இரவில் கொன்றுவிட்டால், அது நிழல் உலகத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்துவதோடு, தேவையில்லாத வெளிச்சத்தையும் கவனத்தையும் இவர்கள் மீது திருப்பக் கூடும்.

அவன் இருக்கிறவரைதான் துறைமுகத்தில் நடப்பவை யாரால் நடக்கிறது என்கிற குழப்பம் காவல்துறைக்கு இருக்கும். இல்லையா, நேரடியாக இவர்கள் மீது அவர்களின் மொத்த சந்தேகமும் திரும்பும்.

ஆக, வரதனை மொத்தமாக அழிப்பதைக் காட்டிலும் அவனுடைய பலத்தையும், ஒட்டுமொத்த வியாபார வலையமைப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து எறிந்து, அதிகாரமற்ற ஒருவனாக மாற்ற வேண்டும்.

இதற்குள் இவர்களின் மாளிகை வந்திருந்தது. இறங்கி உள்ளே வந்த நண்பர்களை இடுப்பில் கைகளை ஊன்றி நின்று படுபயங்கரமாக முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் நிலாவினி.

சூர்யா நண்பனைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே போக, “பசிக்குது, சாப்பாட்டைப் போடு!” என்றுவிட்டு மாடியேறிப்போனான் கலிங்கராயன்.

அவளுக்கு வந்த கோபத்துக்கு சோபாவில் இருந்த குட்டித் தலையணையைத் தூக்கி சூர்யா மீது எறிந்துவிட்டு, விடுவிடு என்று மாடியேறிச் சென்று கலிங்கராயனின் அறைக்குள் புகுந்தாள்.

ஒன்றும் பேசாது அவனை நெருங்கி விறுவிறுவென்று அவன் சட்டையைக் கழற்றி, உடம்பை ஆராய்ந்தாள்.

“காயம் ஒண்டும் இல்ல நிலா.” சிறு முறுவலோடு சொன்னான் அவன்.

“அப்ப என்ன இது?” அவன் நெஞ்சில் இருந்த காயத்தைக் காட்டிக் கோபமாகக் கேட்டாள் அவள்.

அவள் தலையில் இலேசாகத் தட்டினாலும், “சாப்பாடு கேட்டனான்!” என்றான் அவன்.

அதற்குமேல் நின்றால் அவனுக்குப் பிடிக்காது. அதில் தன் கோபம் நீங்காமலேயே இறங்கிச் சென்றாள் நிலாவினி.

error: Alert: Content selection is disabled!!