நீ வந்து தங்கிய நெஞ்சில் 40.1

அத்தியாயம் 40

யாமினி விழிகளை ஒருமுறை மூடித் திறந்தாள். கண் முன்னே நிற்பவனை நம்பவே முடியவில்லை. இவன் எப்படி இங்கே? அல்லது, அல்லும் பகலும் அவள் சிந்தையை அவனே ஆட்சி செய்வதால் அவன் நிற்பதுபோல் இருக்கிறதா என்ன?

இமைகளைச் சிமிட்டிப் பார்த்தாள். அவன் மறையவில்லை. அவளின் ஆள் நெஞ்சத்தில் ஆழமாய்க் கலந்துபோனவனின் அந்தக் கம்பீர உருவம், துளி கூட மாறாமல் அப்படியே நின்றது.

அவன்தான், அவனேதான் என்று உள்ளம் ஆர்ப்பரித்துத் துள்ளிற்று. கண்கள் கலங்கி, மூக்கு நுனி சிவந்து, இதழ்கள் நடுங்கின.

அவ்வளவு நேரமாக அவளையே இமைக்காது பார்த்திருந்த நிரோஜனுக்கு, இத்தனை தவிப்புகளையும் தனக்குள் வைத்துக்கொண்டு, அவனைத் தள்ளி வைத்திருக்கிறாளே என்றெண்ணி, ஆத்திரமா ஆதங்கமா என்று தெரியாத உணர்வொன்று பொங்கிற்று.

அவளிடமிருந்து பார்வையை அகற்றி, வாயைக் குவித்துக் காற்றை ஊதி, தனக்குள் பொங்கிய வெப்பத்தைக் கொஞ்சமாய் வெளியேற்றிவிட்டு, அவளுக்கு அருகில் அந்த மரப்பலகை பெஞ்சில் தானும் அமர்ந்துகொண்டான்.

நிறையப் பேச வேண்டும் என்று விமானப் பயணம் முழுக்க ஒத்திகை பார்த்துக்கொண்டு வந்தான். ஆனால் இங்கே, அவள் முன்னே ஒன்றுமே வரவில்லை. வார்த்தைகளை முந்திக்கொண்டு உணர்வுகள் அவனைப் பந்தாடிக்கொண்டிருந்தன.

கொஞ்சம் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு திரும்பி அவளைப் பார்த்தான். இன்னுமே அவனைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து முற்றிலுமாக மீளாமல் அவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

“சந்தோசமா இருக்கிற போல?” நன்றாக மெலிந்து, எலும்பும் தோலுமாக இருந்தவளை பார்வையால் அளந்தபடி கேட்டான்.

யாமினிக்குத் தொண்டை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது. கன்னத்தில் வழிந்துவிட்ட கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனையே பார்த்தாள்.

“கிட்டத்தட்ட ரெண்டு வருசம்! அதுக்கும் முதலே பிரிஞ்சிட்டம்தான். ஆனா இந்த ரெண்டு வருசத் தண்டனையில கூட உனக்கு மனம் ஆறேல்ல என்ன? நீ அழ அழ பிரிவச் சொன்னவன் மட்டுமே நிரோஜன் இல்லையே யாமினி! அதுக்கு முதல் உன்னோட பழகினவன், உன்னோட கதைச்சவன், உன்னோட சிரிச்சவன், உன்னோட அன்பா இருந்தவன், உன்ர சொல்லுக்குக் கட்டுப்பட்டு நிண்டவன் எண்டு எல்லாம்தானே இந்த நிரோஜன்? அவனை மொத்தமா உன்னால தூக்கி எறிய முடியுது என்ன? காலம் முழுக்க இப்படியே இருக்கவும் நினைச்சிருக்கிறாய் என்ன?”

ஆத்திரம் என்பதை விட ஆதங்கமாகக் கேட்டவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் யாமினியின் அடிமனத்தை உலுக்கி எடுத்தன. பதில் சொல்லும் வகையற்று ஊமையாக அமர்ந்திருந்தாள்.

“ஆனா பாரன், நீ அவ்வளவு தெளிவா நான் உனக்கு வேண்டாம் எண்டு சொல்லியும், என்னால அதைக் கேட்டுக்கொண்டு போக ஏலாம இருக்கு. திரும்ப திரும்ப உன்னட்டயே வந்து நிக்கிறன்! இன்னும் எத்தினை வருசம் எனக்குத் தண்டனை தர ஆசைப்படுறாய்?”

தண்டனையா? அதுவும் அவனுக்கா? கண்ணில் நீருடன் அவனையே பார்த்தாள் யாமினி. அவள் இதழ்கள் நடுங்கின. மடியில் கிடந்த விரல்கள் மீது பார்வை இருக்க, “ப்…பயமா இருக்கு.” என்றாள் உடைந்த குரலில்.

“என்ன பயம்?” என்றான் அவன் புருவங்கள் சுருங்க.

“திரும்ப என்னை நீங்க விட்டுட்டா?”

சுர்ர் என்று ஒரு கோபம் உச்சிக்கு ஏறியது அவனுக்கு. “விளங்கேல்ல!” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

“இன்னொருக்கா இப்பிடி ஒரு பிரிவத் தாங்கிற தைரியம் எனக்கு இல்ல.”

“ஓ!” என்று இழுத்தான் அவன். இருந்த நிலை மாறாமல், பச்சைப் பசேல் என்று இருந்த அந்த புற்தரையை கொஞ்ச நேரம் வெறித்தவன் சட்டென்று எழுந்துகொண்டான்.

கரணம் புரியாத யாமினி, தவிப்பும் கேள்வியுமாக அவனை நிமிர்ந்து பார்க்க, “இத்தனை வருசமாகியும் உனக்கு நம்பிக்கை வரேல்லை எண்டா நான் இஞ்ச வந்தது, இதைப் பற்றிக் கதைக்கிறது எல்லாமே வேஸ்ட் யாமினி. சொறி உன்னை டிஸ்டப் பண்ணினதுக்கு!” என்றுவிட்டு அவன் விறுவிறு என்று நடக்க, அதிர்ந்துபோனாள் யாமினி.

ஒரு கணம் அப்படியே அமர்ந்திருந்தவள் ஓடிப்போய் அவன் முன்னே நின்றாள். “நான் அந்த அர்த்தத்தில சொல்லேல்ல.” என்றாள் கண்ணீருடன்.

“வேற என்ன அர்த்தம் யமி? உனக்கு இன்னும் என்னில கோவம் இருக்கு எண்டு சொன்னா கூட அது வேற. ஆனா நம்பிக்கை இல்லாட்டி… கதைக்கிறதில அர்த்தமே இல்ல. நான்தான்… லூசு மாதிரி!” என்றுவிட்டு அவன் விலகி நடக்க, திரும்பவும் ஓடிப்போய் அவன் முன்னே நின்றாள்.

error: Alert: Content selection is disabled!!