கலிங்கனின் காவியம் 10.1

அத்தியாயம் 10

ராயனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும்
நுரையீரல் பலவீனமடைந்திருந்ததால், ஆரம்ப நாட்களில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, தொடர்ந்து செயற்கைச் சுவாசம் அளிக்கப்பட்டது.

அதனால் அவனால் பேச முடியவில்லை. வருணாவும் அவனைப் பேச அனுமதிக்கவில்லை. ஆனால், விழித்திருக்கும் நேரம் அதிகரித்தது. தலையை அசைப்பது, பார்வையால் பதிலளிப்பது போன்றவற்றைச் சிறப்பாகவே செய்தான்.

அதைத் தானடி சதா சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தான். மயக்கத்தில் இருந்தவரை தெரியவில்லை. விழித்த பின்னர் தனக்கு நடந்த துரோகமே அவன் கண்களுக்குள் நின்றது. நிலாவினி வரதனின் கைகளுக்குள் நின்றதும், முதுகில் குத்திய சூர்யாவையும் அவனால் மறக்கவே முடியவில்லை.

அதை நினைக்கிறபோதெல்லாம் அந்த நிலையிலும் அவன் இரத்தம் கொதித்தது. ஆத்திரத்தில் விரல்கள் இறுகின. முகம் இறுக்கமடைந்தது. இதயத்தின் துடிப்பு அதிகரித்தது.

அடுத்த கணம் இதயத் துடிப்பைக் கண்காணித்துக்கொண்டிருந்த கருவியில் எண்கள் மாறுவதையும், அவனுடைய சுவாசம் சீரற்றுப் போவதையும் கவனித்த தாதி, ஓடிப்போய் வருணாவிடம் தெரிவித்தாள்.

விரைந்து வந்த வருணா அவன் நிலையைக் கண்டு பதறிப்போனாள்.

“கலிங்கராயன், ரிலாக்ஸ்! என்னைப் பாருங்க. உங்களுக்கு ஒண்டும் இல்ல. நீங்க நல்லா இருக்கிறீங்க.” என்று அவனைத் தேற்ற முயன்றாள்.

“ரிலாக்ஸ். ரிலாக்ஸ். மனதை அமைதிப்படுத்துங்க. எதையும் யோசிக்காதீங்க. நிதானமா மெதுவா மூச்சை இழுத்து விடுங்க.” அவள் அவனுடைய சுவாசத்தைக் கவனித்தபடியே அமைதியான குரலில் அவனை ஆற்றுப்படுத்தினாள். அவனுடைய இதயத் துடிப்பையும் சுவாசத்தையும் பரிசோதித்து, மருத்துவ உதவி தேவைப்படுகிறதா என்பதையும் கவனித்தாள்.

அவளுடைய அமைதியான குரல் அவனுக்குள் மெல்லமெல்ல இறங்கியது. அவளையே பார்த்துக்கொண்டிருந்த ராயனின் கண்களில் இருந்த சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது. முகத்தசைகளின் இறுக்கம் தளர்ந்து, முகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. மூச்சும் சீராக வரத் தொடங்கியது.

அப்போதுதான் வருணாவுக்குப் பெருமூச்சு வந்தது.
இங்கே வரதன், சூர்யா இருவருமே திருகோணமலை முழுவதும் கலிங்கராயனைத் தேடிக் களைத்துப்போனார்கள்.

ஆதியைக் கண்காணிக்க ஆட்களை நியமித்தும் பிரயோசனம் இல்லாது போயிற்று. தேவை என்றால் மட்டும் எங்கிருந்தோ வெளியே வந்தான். மற்றும்படி அவனைப் பின் தொடர்ந்தவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மாயமானான்.

ஒரு நாள் முழுக்க விசாரணை என்கிற பெயரில் ஆதியைக் காவல்நிலையத்தில் இருத்திப் பார்த்தார்கள். அவன் கைப்பேசியைக் கூட அவர்கள் மூலம் பெற்று ஆராய்ந்தார்கள். ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

சூர்யாவின் முழுத் துரோகத்தையும் கண் முன்னால் பார்த்தவன் ஆதி. அவர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க முதலே இவர்கள் எங்கு வந்து நிற்பார்கள் என்று யோசித்து நடந்தான்.

நாட்கள் செல்ல செல்ல, ராயன் உயிர் தப்பிவிட்டானோ என்கிற பயம் சூர்யாவுக்குள் வலுப்பெற்றுக்கொண்டே போனது.

அவன் எங்கே இருக்கிறான், எப்போது திரும்பி வருவான், திரும்பி வந்தால் முதலில் யாரைக் குறிவைப்பான் என்ற கேள்விகள் அவனை நிம்மதியிழக்கச் செய்தன.

அதே நேரம் இத்தனை தூரம் வந்துவிட்ட பிறகு பிவாங்குவதிலோ பதுங்குவதிலோ அர்த்தமில்லை என்று உணர்ந்தான்.

முதல் வேலையாக ஒரு வீடு பார்த்துக்கொண்டு நிலாவினியோடு தனியாகப் போனான். வரதனோடு அவன் சேர்ந்திருப்பதை வெளியே காட்டிக்கொள்ள வரதன், சூர்யா இருவருமே விரும்பவில்லை.

தான் நேரடியாகக் களத்தில் இறங்காமல் வரதனை முன்னிறுத்தினான். வரதனின் அரசியல் செல்வாக்கையும் தொடர்புகளையும் பயன்படுத்தி, ராயனின் ஆள் பலம், செல்வம், செல்வாக்கு அத்தனையையும் நிர்மூலமாக்கிவிடும் வெறியில் அனைத்து சரக்குகளையும் கொள்ளை அடித்தான்.

லொறிகளை முடக்கினான். அனைத்தையும் முடிந்தவரையில் தன் கைவசப்படுத்தினான். முடியாதவற்றை அழித்துச் சேதப்படுத்தினான். ராயனின் லொறிகள் சரக்குகள் அத்தனையும் அடுக்கடுக்காக பிடிபட்டன.

ராயனின் ஆட்கள் திகைத்து நின்றார்கள். இத்தனையையும் நடக்க விட்டுவிட்டுச் சூர்யா எங்கே போனான் என்று யோசித்தார்கள். காரணம் கேட்டுக்கொண்டு போனால் முறையான பதில் கிடைக்கவில்லை.

ஆதியிடம் சொன்னால் இன்னும் கொஞ்ச நாட்கள் பொறுங்கள் என்றான்.

ராயனைக் காணவில்லை என்கிற புகாரின் மீதான காவல்துறை விசாரணையையும் வரதனின் செல்வாக்கைப் பயன்படுத்தி சூர்யா மந்தப்படுத்தினான். விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள். ராயன் பக்கமிருந்து விசாரணை என்னாயிற்று என்கிற கேள்வி வராததால் காவல்துறையும் வரதனுக்கு அடங்கிப்போயிற்று.

ஆதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னதான் அவன் விசுவாசி என்றாலும் கீழ் மட்டத்தில் பணிபுரிந்தவன்.

சூர்யா ராயனுக்கு நிகராக இருந்தவன். அவனுக்கு அங்கே அத்தனையும் தெரியும். ஆதி அவர்கள் ஏவியதை மட்டும் செய்யும் இடத்தில் இருந்தவன். முடிந்தவரையில் ராயனின் மாளிகை, அலுவலகம், முதன்மையான கோடவுன் மூன்றையும் மட்டும் பாதுகாத்துக்கொண்டான்.

வேறு வழியில்லை. இது எல்லாவற்றையும் விட ராயனைக் காப்பாற்றுவதே முக்கியம். அவன் எழுந்துவிட்டால் போதும். அத்தனையையும் மீட்டுவிடுவான் என்கிற நம்பிக்கையில் அமைதி காத்தான்.

இத்தனையும் செய்தபோதும் சூர்யா நிம்மதியாக இல்லை. வெளியே அவனுடைய திட்டங்கள் அத்தனையும் சிறப்பாக நடந்தபோதும் உள்ளுக்குள் ஒரே ஒரு கேள்வி அவனைத் துரத்திக்கொண்டேயிருந்தது.

ராயன் என்னவானான்?

இரண்டு வாரங்கள் மின்னல் விரைவில் சென்று மறைந்திருந்தன. உடல் வலி, சோர்வு, பலவீனம் நீடித்தாலும் செயற்கைக் சுவாசம் கலிங்கராயனுக்கு அகற்றப்பட்டிருந்தது.

வெளிப்புறக் காயங்கள் ஆறியுள்ளனவா, வயிற்றில் வீக்கம் அல்லது வலி இருக்கிறதா, உணவு செரிமானம் சீராக உள்ளதா, உடல் எடை மற்றும் பலம் எப்படி இருக்கிறது என்பவற்றைப் பரிசோதித்துத் திருப்தி கொண்டாள் வருணா.

உடற்பயிற்சி மருத்துவ நிபுணரின் (Physiotherapist) பரிந்துரையின் பெயரில் படுக்கையிலிருந்து எழுந்து அமரவும், மருத்துவப் பணியாளரின் உதவியுடன் சில அடிகள் நடக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ராயன் எழுந்து அமர ஆரம்பித்துவிட்டான் என்கிற செய்தியைக் கேள்விப்பட்டதும், வைத்தியசாலை நிர்வாகி அவனைப் பார்க்க வந்தார். வேறு யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த அறைக்குள் ராயன், ஆதி, நிர்வாகி ஆகிய மூவருக்கும் இடையில் மட்டுமே பேச்சுவார்த்தை நடந்தது.

தான் ஆதியிடம் சிக்கிக்கொண்டிருப்பதைப் பற்றிச் சொல்லி, எதுவும் வெளியே தெரியக்கூடாது என்று ராயனிடம் கேட்டுக்கொண்டார்.

கலிங்கராயனின் பார்வை ஒருமுறை ஆதியைத் தொட்டு வர, “நீங்க எங்களுக்கு எதிராத் திரும்பாத வரைக்கும் எதுவுமே வெளில வராது.” என்றான் இன்னுமே தெளிவாகாத, அடைப்புற்ற கனத்த குரலில்.

அதிலேயே தான் நிரந்தரமாகவே அவர்களுடைய பிடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்டதை அவர் தெளிவாக உணர்ந்தார். அவர்கள் சொல்வதற்குத் தலையசைத்துப் போவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை.

குறைந்தபட்சம் தான் மறைத்த விடயங்கள் வெளியே கசியாது என்கிற நிம்மதியுடன், ராயனின் உடல்நிலை விரைவில் முழுவதுமாகச் சீராக வேண்டும் என்று வாழ்த்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

error: Alert: Content selection is disabled!!