இத்தனை நாள்களாக இல்லாத நிம்மதியுடன் அவர் கலிங்கராயனின் அறையிலிருந்து வெளியே வருவதை வருணாவும் கவனித்தாள்.
இதுதான் அவளை மிகவுமே தொந்தரவு செய்தது.
அவள் பணிபுரிய ஆசைப்பட்டு, விரும்பித் தேர்ந்தெடுத்துச் சேர்ந்த வைத்தியசாலை அது. மிகச் சிறப்பான முறையிலும், நவீன வசதிகளுடனும் அங்கே மருத்துவச் சேவைகள் வழங்கப்படுவதை அவளே அறிவாள்.
மற்ற வைத்தியசாலைகளுடன் ஒப்பிடும்போது செலவுகள் சற்று அதிகம்தான். ஆனால், அதற்கேற்ற தரமும் நேர்த்தியும் இருக்கும்.
அப்படி இருக்கையில் இப்போது என்ன நடக்கிறது?
எதைச் சொல்லி நிர்வாகியை அடக்கி வைத்திருக்கிறார்கள்? எதனால் அவர் இப்படி அவர்களுக்குப் பணிந்து நடக்கிறார்?
இப்படிப் பல கேள்விகள் அவளுடைய மனத்தைக் குடைந்துகொண்டிருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் நேரடியாகப் போய் நிர்வாகியிடம் கேட்டுவிட முடியாது. அவர் இந்த வைத்தியசாலையின் நிர்வாகி. அவருக்குக் கட்டுப்பட்டு, பணிவுடன் நடந்துகொள்ள வேண்டியவள் அவள்.
இத்தனை காலமும் ஆசையாசையாக வந்து சென்ற இடம், இப்போது திடீரென்று அந்நியப்பட்டுவிட்டதைப் போன்றதொரு உணர்வு அவளுக்குள் எழுந்தது. தான் நேசித்த வைத்தியசாலைக்குள் தனக்குத் தெரியாத ஏதோவொரு இரகசியம் புதைந்திருக்கிறதோ என்கிற சந்தேகம் உண்டாயிற்று.
இது எல்லாவற்றையும் விட கலிங்கராயனையும் அவனுடைய ஆட்களையும் அவளுக்குப் பிடிக்கவில்லை.
அதிலும், ராயன் அங்கே அமர்ந்துகொண்டு, அந்த வைத்தியசாலைக்கே உரிமையாளன் போன்று அதிகாரம் செலுத்திக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவளுடைய கோபம் இன்னும் அதிகரித்தது. அவனுக்கு அளிக்கப்படும் விசேட கவனிப்புகள் ஒவ்வொன்றும் எரிச்சலை மூட்டின.
அதற்கென்று ஒரு மருத்துவராகத் தன்னுடைய கடமையைச் செய்வதில் அவள் சிறு பிசகும் விடவில்லை. இன்னும் சொல்லப்போனால் இத்தனை மோசமான நிலையில் வந்தவனை மீட்டுவிட்டோம் என்பதில் அவளுக்கும் நிறைவும் பெருமிதமுமே.
நிர்வாகி வெளியே சென்ற பிறகு ஆதியைத் திரும்பிப் பார்த்தான் காலிங்கராயன்.
“என்ன அண்ணா?” என்றுகொண்டு அடுத்த நொடியே அவனருகில் வந்து நின்றான் ஆதி.
அவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு, “எங்கயடா இருந்தனி இவ்வளவு காலமும்?” என்றான் தன் கனத்த குரலில்.
ஆதியின் முகம் வெளிச்சம் போட்டுக்கொண்டது. “உங்களுக்கு பக்கத்திலேயேதான் அண்ணா.” என்றான் உடனேயே.
“ஒரு துரோகம் எந்தளவுக்கு ஒருத்தனை அடிச்சு விழுத்தும் எண்டு வாழ்க்கைல முதல் முதலா படிச்சிருக்கிறன்.” என்றான் விரக்தியோடு.
“இல்லை அண்ணா. அந்தத் துரோகம்தான் உங்களுக்காக உண்மையா எத்தினை பேர் இருக்கினம் எண்டு காட்டித் தந்திருக்கு. சுகமாகி வெளில வந்து பாருங்க. ஒரு படையே இருக்கு.” என்றான் ஆதி அவசரமாக.
அதை ஏற்றுக்கொள்கிறவன் போன்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டான் ராயன்.
“அண்ணா…”
தான் சுயநினைவற்றுக் கிடந்த நாள்களில் நடந்தவை வரப்போகிறது என்று புரிந்துகொண்ட ராயன், “சொல்லு!” என்றான் இறுக்கமாக.
“கிட்டத்தட்ட எல்லாமே போயிற்று அண்ணா!”
ஆதியின் குரலில் வேதனை நிறைந்திருந்தது. மெல்ல நடந்த அனைத்தையும் சொன்னான்.
கேட்டுக்கொண்டிருந்த கலிங்கராயனின் விழிகள் அதீத கோபத்தில் சிவந்தன. ஆத்திரத்தை அடக்கியவனின் புஜங்கள் புடைத்துக்கொண்டு நின்றன. அவனின் கை முஸ்டி இறுகியது.
உடனேயே புகைக்க வேண்டும்போலிருந்து. “சிகரெட்?” என்று கையை நீட்டினான்.
ஆதி தடுமாறிப்போனான். “அண்ணா இது ஆஸ்பத்திரி. நீங்க பாத்தவும் கூடாது.” என்றான் திணறலாக. அப்போதுதான் அவனுக்கும் அது புரிந்தது. விழிகளை இறுக்கி மூடித் தன்னை நிதானப்படுத்த முயன்றான். முடியவேயில்லை.
அந்த நேரத்தில் கதவைத் தட்டிவிட்டு அவனுடைய வழமையான பரிசோதனைகளுக்காக உள்ளே வந்தாள் வருணா.
அவளை எதிர்கொள்ளும் மனநிலையில் கலிங்கராயன் அப்போது இல்லை. அதில் அவளை வெளியே போகுமாறு இரண்டு விரல்களால் சைகை காட்டினான்.
அந்தச் சைகையே அவளை அவமானப்படுத்துவது போலிருக்க, “நான் டொக்டர்!” என்றாள் அவள் கோபத்துடன்.
“தெரியும். போ!”
‘போ’வா? அதைவிட என்ன அலட்சியம் அவனுக்கு? உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தவளிடமே தன் திமிரைக் காட்டுவானா?
“மரியாதை தெரியாதா உங்களுக்கு?” என்று சீறினாள். “நான் என்ன செய்யோணும் எண்டு நீங்க எனக்குச் சொல்லாதீங்க!” என்றபடி அவனை நெருங்கினாள்.
கலிங்கராயன் ஆதியைப் பார்த்தான். அவன் பார்வையில் இருந்ததைப் படித்த ஆதியும், “கொஞ்ச நேரம் கழிச்சு வாங்க டொக்டர் ப்ளீஸ்.” என்றபடி அவளை நெருங்கினான்.
“ஏய்! என்ன?” அதிர்ச்சியுடன் அதட்டியபோதும் அவளுடைய கால்கள் தானாகவே பின்னால் நகர்ந்தன. அவன் வார்த்தையில் இருந்த பணிவும் மரியாதையும் செயலில் இல்லை என்பதைக் கண்டு திகைத்தாள்.
அவளை அறைக்கு வெளியே அனுப்பிவிட்டுக் கதவைச் சாற்றினான் ஆதி. வருணாவின் முகம் கோபத்திலும் அவமானத்தில் கன்றிச் சிவந்துபோனது.
உள்ளம் கொதிக்க நிர்வாகியைத் தேடிச் சென்றாள்.

