கலிங்கனின் காவியம் 13.2

மதியழகன், சிவசுந்தரி தம்பதியினருக்கு அடுத்து என்ன செய்வதென்றே புரியவில்லை. வரதனும் விஜயராஜனும் நின்றுவிட்ட திருமணத்தினால் போய்விட்ட மானம் மரியாதையைப் பற்றியும், அவர்களின் மகன் திருமணம் இப்படியாக்கிற்றே என்றும் பேசிக்கொண்டிருக்க, மாறன் ஒரு புறம் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

அங்கிருந்த யாருக்கும் அவர்களுடைய மகளைப் பற்றிய கவலை இருப்பதாகத் தெரியவில்லை. மதியழகனுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. ஆனால், அதைவிட முக்கியமானது மகள் எங்கே இருக்கிறாள், அவளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்வதுதான்.

“இஞ்ச பாருங்க! ஆளாளுக்கு உங்கட பிரச்சினையைப் பற்றிக் கதைக்கிறீங்களே தவிர, எங்கட மகளைப் பற்றி ஆருக்கும் அக்கறை இருக்கிற மாதிரித் தெரியேல்ல. உங்களை எல்லாம் நல்ல குடும்பம் எண்டு நம்பிச் சம்பந்தம் வைக்க வந்த என்னைச் சொல்லோணும்! அவன் ஆர்? இப்ப எங்க எங்கட மகள்? அதையாவது சொல்லுங்க. எங்களுக்கு அவாவப் பார்க்கோணும்!” என்று அண்ணன் தம்பி இருவரையும் பார்த்துச் சீறினார்.

விஜயராஜன் வரதனைப் பார்த்தார். அவன் கலிங்கராயனின் இருப்பிடத்தைச் சொன்னான்.

அந்த நிமிடமே அவளைப் போய்ப் பார்த்துவிடும் வேகத்துடன் மனைவியோடு புறப்பட்டவர் நின்று திரும்பி, “உங்களுக்க இருக்கிற பிரச்சனையாலதான் எங்கட மகளுக்கு இந்த நிலமை எண்டு மட்டும் வடிவாத் தெரியுது. ஆனாலும் இப்ப பேசாமப் போறன். அதுக்காக என்னைக் கேனயன் எண்டு நினைச்சிடாதீங்க. நான் நல்லவன்தான். நேர்மையானவன்தான். உங்கள மாதிரி அடிதடி எல்லாம் எனக்குத் தெரியாதுதான். ஆனால், என்ர பிள்ளைக்கு மட்டும் ஏதாவது நடந்திருந்தது, உங்கள்ள ஒருத்தரையும் விட்டுவைக்க மாட்டன்.” அவர்களின் உயரம் என்னவென்று தெரிந்தும் பயப்படாமல் சொல்லிவிட்டு, மனைவியோடு மண்டபத்தை விட்டு வெளியே வந்தார்.

உடனேயே யாரோ நால்வர் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றார்கள். திடீரென அவர்களை வழிமறித்தவர்களைக் கண்டதும் தம்பதியினர் பதற்றமடைந்தனர்.

“என்ன, ஆர் நீங்க?” என்றார் மதியழகன் பதறி.

“பயப்பிடாதீங்க ஐயா. உங்கட பாதுகாப்புக்குத்தான் அண்ணா எங்களை விட்டிருக்கிறார்.” என்றான் அவர்களில் ஒருவன்.

“எங்களுக்கு என்னத்துக்குப் பாதுகாப்பு? நாங்க என்ன கொலைகாரரா, கொள்ளைக்காரரா? முதல் நீங்க எல்லாம் ஆரடா? என்னத்துக்கு எங்கட பிள்ளையின்ர வாழ்க்கைல விளையாடுறீங்க?” என்று கொதித்தார் மனிதர்.

சிவசுந்தரி பயத்தில் நடுங்கினார். கணவர் மீதான கோபத்தில் மகளை ஏதும் செய்துவிடுவார்களோ என்று அதுவேறு அவர் உயிரை நடுங்க வைத்தது. “அப்பா, கொஞ்சம் அமைதியா இருங்கோ. முதல் நாங்க பிள்ளையை போய்ப் பாப்பம்.” என்றார் அவரிடம் கண்ணீருடன்.

“அதுக்கு இவனுகள் விடோணுமே! எவன் அவன் உங்கட அண்ணா? எங்கட பிள்ளைக்கு என்னத்துக்கு இப்பிடி ஒரு அநியாயத்தைச் செய்தவன்? எங்க எங்கட மகள்?” என்று மதியழகன் அவனுடன் சண்டைக்குச் சென்றார்.

“ஐயா, அதையெல்லாம் நீங்க அண்ணாட்டையே கேளுங்க. அவர் ‘கே.என்.எஸ்’ ஓனர். அண்ணிக்கு நீங்க பயப்பிடுற மாதிரி ஒண்டும் நடக்காது.”

‘அண்ணி!’ அந்த வார்த்தையைக் கேட்டதும் தம்பதியினர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவன் தங்கள் மகளைத்தான் அப்படிச் சொல்கிறான் என்று புரிந்துகொள்ளவே அவர்களுக்குச் சில கணங்கள் பிடித்தன. இப்படி ஒரு ரவுடிக் கும்பலைத் தலைமை தாங்குகிறவனுக்கு அவர்கள் மகள் மனைவியா? அதைக் கற்பனையில் கூட யோசிக்க முடியாமல் மதியழகன் உடைந்துபோனார்.

என்ன பாவமடா உங்களுக்குத் செய்தனாங்க? நாங்க உண்டு எங்கட பாடு உண்டு என்றுதானே இருந்தோம். எப்பிடி மனம் வந்தது உங்களுக்கு இப்பிடி எங்கட சந்தோசத்தை அழிக்க? அவ்வளவு நேரமாகக் கோபப்பட்டவர் இப்போது இயலாமையோடு குமுறினார்.

அவர் அடித்தால் கூட வாங்கிக்கொள்வோம் என்பதுபோல் நின்றார்கள் அந்த நால்வரும்.

“எங்களுக்கு எங்கட மகளப் பார்க்கோணும். அவா எப்பிடி இருக்கிறா எண்டு தெரியோணும்.” கண்ணீருடன் சொன்னார் சிவசுந்தரி.

“பார்க்கலாம்அம்மா. அண்ணா சொல்லுவார். இப்ப வாங்க, உங்கட வீட்டுக்குப் போகலாம்.”

மதியழகனுக்கு மறுபடியும் கோபம் வந்தது. “எங்கட வீட்டுக்கா? எங்கட மகளைப் பார்க்காம எங்கயும் நாங்க வர மாட்டம்!” என்று நின்றார்.

ஆனால், அவர்களுடைய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வலுக்கட்டாயமாக மதியழகனின் காரிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு போனார்கள். அவர் எவ்வளவு போராடியும் தடுக்க முடியவில்லை. அவர் சொல்லாமலேயே அவர்களின் வீட்டு வாசலில் சென்று கார் நின்றது.

உள்ளே போனதும், “அண்ணி பாதுகாப்பாத்தான் இருப்பா. அண்ணா உங்களோட கதைப்பார். கட்டாயம் அண்ணியப் பாக்க ஏற்பாடு செய்வர். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க.” எண்றுவிட்டுப் போனார்கள் அவர்கள்.

அந்தத் தம்பதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மதியழகன் எவ்வளவு சத்தம் போட்டும் எதுவும் நடக்கவில்லை. அந்தக் கலிங்கராயனுடன் பேசவேண்டும் என்று கூடக் கேட்டுப்பார்த்தார். அதற்கு அவனே ஏற்பாடு செய்வானாம் என்று சொன்னார்கள் அவர்கள்.

அந்த நால்வரும் அங்கிருந்து போகவும் இல்லை. வீட்டுக்கு வெளியே அங்கேயேதான் இருந்தார்கள். அதுவே அவர்களும் இப்போது அந்த அவனின் கட்டுப்பாட்டினுள் வந்துவிட்டார்கள் என்று சொல்லியதில் தளர்ந்து அமர்ந்துவிட்டார் மனிதர்.

வரதனுக்குச் சூர்யாவைக் கொன்றுவிடும் அளவுக்குக் கோபம் வந்தது. எல்லாவற்றுக்கும் அவன்தான் காரணம். திட்டமிட்டபடி காரியத்தைச் கச்சிதமாக முடித்திருந்தால் இன்றைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இத்தனை காலமாகக் கட்டிக் காத்த அவனுடைய மானமும் மரியாதையும் செல்வாக்கும் சாந்தி சிரித்திருக்காது.

கலிங்கராயனை யாருக்கும் தெரியாமல் தனியாக அழைத்து வருவதாகச் சொன்னான். அதைச் செய்யவில்லை. இடையில் ஆதி புகுந்து எல்லாவற்றையும் குழப்பிவிட்டான்.

கத்தியால் குத்தியதையாவது ஒழுங்காகக் குத்தியிருக்க வேண்டாமா? அப்போதும் எனக்குத் தெரியும், கலிங்கராயன் உயிரோடு வரவே மாட்டான் என்று அடித்துச் சொன்னான்!

ஆனால் உயிரோடு வந்தது மாத்திரமல்லாமல், இத்தனை காலமாகச் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை கௌரவத்தையும் ஒரே நாளில் தரைமட்டமாக்கிவிட்டுப் போய்விட்டான்.

அதுவும் சாதாரணமான இடத்தில் வைத்து அல்ல. முக்கியமான தொழிலதிபர்கள், செல்வாக்கானவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எனப் பலரும் கூடியிருந்த திருமண மண்டபத்தில் வைத்து!

அந்த அவமானத்தை நினைக்க நினைக்க வரதனின் ஆத்திரம் அதிகரித்தது. காரைக் கிளப்பிக்கொண்டு சூர்யாவைத் தேடிப் புறப்பட்டான். நேராகச் சென்று சட்டையைப் பிடித்து உலுக்கினான்.

“என்னடா செய்து வச்சிருக்கிறாய்? என்ன செய்து வச்சிருக்கிறாய்? உன்னை நம்பினதுக்கு இதுதானா பலன்? இல்ல, என்னையே ஏமாத்தப் பார்த்தாயா? அப்பிடி மட்டும் ஏதாவது பிளான் இருந்தது, உன்னை மட்டுமில்ல உன்ர தங்கச்சியையும் சேத்து அழிச்சிடுவன்!” என்று உறுமினான்.

வரதனின் ஆத்திரத்தைக் கண்டு சூர்யா முதலில் திகைத்துப்போனான். என்ன நடந்தது என்றே அவனுக்குப் புரியவில்லை. ஆனால், நடந்ததை அறிந்த பிறகு அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான்.

திரும்பி வந்த முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறான் என்றால் இனி இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறானோ? அந்த எண்ணமே சூர்யாவை நடுங்கச் செய்தது.

நிலாவினிக்கும் இனிக் கலிங்கராயன் தனக்கு இல்லை என்று எப்போதோ தெரியும்தான். அதைச் செய்ததே அவள்தான்.

ஆனாலும் கூட அவன் இன்னொரு பெண்ணை மணந்துவிட்டானாம் என்ற செய்தி அடிநெஞ்சுவரை வலித்துக்கொண்டு இறங்கிற்று.

error: Alert: Content selection is disabled!!