கலிங்கனின் காவியம் 14.2

இந்தச் செய்தி கலிங்கராயனின் காதை எட்டியதும் உதட்டோரத்தில் இகழ்ச்சிப் புன்னகை ஒன்றைச் சிந்தினான் அவன்.

அடுத்ததாக வரதனை அடிப்பதற்கான வேலையில் இறங்கியிருந்தவன் வழக்கத்தைவிட விரைவாக வீட்டிற்குத் திரும்பி, வருணாவைத் தேடிக்கொண்டு வந்தான்.

வருணா தவித்துக்கொண்டிருந்தாள். அவளை அவன் மாளிகைக்குக் கொண்டுவந்த கலிங்கராயன், மாடியிலிருந்த ஓர் அறைக்குள் தள்ளிவிட்டு, அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கதவை அடித்து மூடிவிட்டுச் சென்றிருந்தான்.

இது என்ன இடம், தன்னை எங்கே கொண்டுவந்து அடைத்திருக்கிறான், இனி என்ன செய்யப்போகிறான் என்கிற கேள்விகள் அவளைப் போட்டு ஆட்டிப்படைத்தன. என்னென்னவோ எல்லாம் நினைவில் வந்து நெஞ்சை நடுங்க வைத்தன.

இவை எல்லாவற்றையும்விட, அவளுடைய அம்மா அப்பாவின் நிலை என்னவாக இருக்கும் என்கிற கவலைதான் அவளை அதிகமாக வாட்டியது. தன்னை நினைத்துத் துடித்துக்கொண்டிருப்பார்கள் என்று தெரியும். இன்னுமே மண்டபத்தில்தான் இருக்கிறார்களா, இல்லை, அவளைத் தேடிக்கொண்டிருக்கிறார்களா, முதலில் அவர்களுக்கு எதுவுமாகியிருக்குமா, அவர்களால் இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டிருக்க முடியுமா என்று அவர்களை
நினைக்க நினைக்கக் கண்ணீர் பெருகியது.

அப்போதுதான் படாரென்று அவளுடைய அறைக் கதவு திறக்கப்பட்டது. திடுக்கிட்டுத் துள்ளியெழுந்து திரும்பிப் பார்த்தாள்.

அவளுடைய வாழ்க்கையைச் சிதைத்தவன் உள்ளே வந்துகொண்டிருந்தான்.

அவளுக்குள் பயமும் பதற்றமும் ஒருசேர எழுந்தன. அவனுடைய இடத்தில் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கும் நிலையில், அவன் என்ன வேண்டுமானாலும் செய்துவிடக்கூடும் என்ற அச்சம் அவளை ஆட்கொண்டிருந்தது. நெஞ்சில் கொழுந்துவிட்டெரியும் கோபத்தையும் ஆத்திரத்தையும் அவனிடம் காட்டக் கூடப் பயந்தாள்.

அவளுக்கு முன்னால் வந்து நின்றான் கலிங்கராயன். இமைக்காது அவளையே பார்த்தன. அவளுக்குச் சுவாசம் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது. இதயம் வெடித்துவிடுமோ எனுமளவுக்கு அடித்துக்கொண்டது. அடிப்பானோ, உயிரை எடுத்து விடுவானோ, மானபங்கப்படுத்துவானோ என்று என்னவெல்லாம் நொடியில் அவளுக்குள் சுற்றிச் சுழன்றதில் கண்ணீர் தானாக வெளியேறிற்று.

அவள் தவிக்கிற தவிப்புகளை எல்லாம் கவனித்தபடி பேசத் தொடங்கினான்.

“நீயும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினோம். அது வரதனுக்குப் பிடிக்கேல்ல. அவன்ர அண்ணன் மகன் உன்னில ஆசைப்பட்டதால, தன்ர அதிகாரத்தப் பயன்படுத்தி உனக்கும் அவனுக்கும் கலியாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தவன். உன்ர அம்மா அப்பாவுக்கு வேற வழி இருக்கேல்ல. அவன்ர அதிகாரத்துக்கு அடங்கிப் போக வேண்டிய கட்டாயம்.
அந்தக் கலியாணத்தை நடத்திறதுக்காக என்னைக் கொல்லப்பாத்தவன். ஆனா, நான் எப்பிடியோ தப்பி வந்து, சரியான நேரத்தில உன்ர கழுத்தில தாலி கட்டி, உன்னைக் கூட்டிக்கொண்டு வந்திட்டன்.”

அவன் சொல்ல சொல்ல, அவன் ஏதோ தனக்குப் புரியாத மொழியில் பேசுவதுபோல விழித்தாள் வருணா. அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இல்லை! அப்படியில்லை! நீதான் என் வாழ்க்கையை அழித்தாய்! நீதான் என் சந்தோசத்தைக் கெடுத்தாய். நீதான் என் கனவுகளைச் சிதைத்தாய் என்று அவன் முகத்தைப் பார்த்துக் கத்த வேண்டும் போலிருந்தது.

ஆனால், வார்த்தைகள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டன. ஒரு வார்த்தை கூட வரவில்லை. ஆனால், என்னால் முடியாது என்பதுபோல் பெரும் சிரமப்பட்டது தலையை அசைத்தாள்.

அவன் அதைக் கவனித்தது போலவேம் தெரியவில்லை.
“இன்னும் கொஞ்ச நேரத்தில பொலிஸும், பேப்பர் ரிப்போர்ட்டர்ஸும் வருவினம். அப்ப நீ இதத்தான் சொல்லுறாய்!” அவன் கட்டளையிடும் தொனியில் கூறியபோது வருணா இன்னும் வேகமாக மறுத்துத் தலையசைத்தாள்.

“இல்ல! இது உண்மையில்ல. நான் அப்பிடிச் சொல்ல மாட்டன். அப்பிடி எதுவும் நடக்கேல்ல. நீங்கதான் என்ர வாழ்க்கையக் கெடுத்தீங்க! அதத்தான் சொல்லுவன்.” கண்ணீரோடு கதறினாள்.

“இருக்கலாம். ஆனால், நீ அவேட்ட நான் சொன்னதை மட்டும்தான் சொல்லோணும்.”

அவன் அப்போதும் நிதானமாகவே கூறினான். அவனுடைய கோபத்தை விட அந்த நிதானம்தான் அவளை அதிகமாகக் கலங்க வைத்தது. அவன் அடுத்து என்ன செய்யப்போகிறான் என்பதை அவளால் கணிக்கவே முடியவில்லை. ஆனாலும் அவன் சொல்வதற்கு உடன்பட முடியவில்லை.

“மாட்டன்! நீங்க என்ன செய்தாலும் சரி, நான் பொய் சொல்ல மாட்டன். உண்மைய மட்டும்தான் சொல்லுவன். உங்களுக்குக் கட்டாயம் தண்டனை கிடைக்கோணும். நீங்க ஜெயிலுக்குப் போகோணும்!” பயத்தில் நெஞ்சம் நடுங்கினாலும், அவள் தன்னால் முடிந்த தைரியத்தைத் திரட்டிக்கொண்டு பேசினாள்.

“ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர வாழ்க்கையை அழிக்கிறது அவ்வளவு ஈஸியில்ல. அதைப் பற்றி ஒரு நிமிஷம் கூட யோசிக்காமச் செய்த உங்களுக்கு அதுக்கான தண்டனை கிடச்சே ஆகோணும்! அதால நீங்க என்னை என்ன செய்தாலும் நடந்ததைத்தான் சொல்லுவன்.”

அவளுடைய உறுதியைக் கண்டு புருவங்களை உயர்த்தி வியந்தான் அவன்.

“அப்ப நீ என்ன நடந்தாலும் மாத்திச் சொல்ல மாட்டாய்?”

“இல்ல. சொல்ல மாட்டன்!” தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, இவனை விடக்கூடாது என்கிற வைராக்கியம் அந்த நொடியில் உண்டாக்கிவிட, அவளும் தைரியமாகவே சொன்னாள்.

“உன்ர அம்மா அப்பா உயிரோட இல்லாமப் போனாலும் இதையேதான் சொல்லுவியா?”

அவன் சொல்லி முடிப்பதற்குள் அவனுடைய சட்டையை எட்டிப் பற்றியிருந்தாள் வருணா.

“பாவி! பாவி! எப்பிடியடா உனக்கு இப்பிடியெல்லாம் கதைக்க மனம் வருது? நான் அப்பிடி என்ன பாவம் செய்தனான்? என்ர குடும்பம் உனக்கு என்ன செய்தது? ஏன் எங்களப் போட்டு வதைக்கிறாய்? நீ நல்லாவே இருக்க மாட்டாய்!” அவளுடைய குரல் ஆத்திரத்தில் நடுங்கியது.

“உன்ர உயிரக் காப்பாத்தித் தந்ததுக்கு நீ எனக்குச் செய்கிற நல்லது இதுதானா? நீ நல்லா இருப்பியா? நாசமாத்தான் போவாய்! உன்னக் குத்தினவங்கள் ரெண்டு குத்தோட விட்டிருக்கக் கூடாது. உன்னைக் கொண்டிருக்கோணும். உயிரோட விட்டதாலதான் இண்டைக்கு என்ர குடும்பத்தையே அழிக்க நிக்கிறாய்.” கண்ணீர் அவளுடைய கன்னங்களில் வழிந்தோடியது.

“ஆனா ஒண்டு, என்ர அம்மா அப்பாவுக்கு ஏதாவது நடந்திது உன்னைக் கொல்லுறதுக்கும் யோசிக்க மாட்டன்!” தனக்காகக் கூட அவனிடம் சண்டையிடப் பயந்தவள் தன் தாய் தந்தையருக்கு ஏதும் ஆகிவிடுமோ என்ற மாத்திரத்தில் எதை பற்றியும் யோசிக்கவில்லை.

அவன் அவள் கோபத்தைக் கண்டோ, ஆக்ரோசத்தைக் கண்டோ அசையவில்லை. அதற்கு மாறாக அவளுடைய கைகளை மெதுவாகத் தன் சட்டையிலிருந்து எடுத்துவிட்டான். அவளுடைய தோள்களைப் பற்றித் தன் முன்னால் நிறுத்தினான்.

“நான் சொன்ன மாதிரி நீ சொல்லுற வரைக்கும் உன்ர அம்மா அப்பாக்குச் சின்னக் கீறல் கூடப் படாது.” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.

அவன் சென்ற பின்னரும் வருணா அப்படியே நின்றிருந்தாள். அவளால் அசையக் கூட முடியவில்லை. நியாயத்துக்கு அநியாயத்துக்கும் நடுவில் நின்று அவள் உள்ளம் துடியாகத் துடித்தது.

அவளுடைய அம்மா அப்பாவை நினைக்கையிலேயே அவள் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. அவளைப் பெற்று வளர்த்ததைத் தவிர்த்து வேறு எந்தத் தவறும் செய்யாதவர்கள். அவர்களுக்கு ஒன்று நடந்த பிறகு அவளால் வாழ முடியுமா? அப்படியானால் தன் நெஞ்சறிய போய் சொல்லப்போகிறாளா? அப்படிச் சொல்லி ஒரு கேடு கெட்டவனைக் காப்பாற்றப் போகிறாளோ?

அன்றைய நாளில் இரண்டாவது முறையாக, சிந்திக்கும் திறனையே இழந்து நின்றாள் வருணா.

error: Alert: Content selection is disabled!!