கலிங்கனின் காவியம் 16.2

“உன்ர கழுத்தில தொங்குற தாலிக்கு என்ன அர்த்தம் எண்டு தெரியுமா உனக்கு?” என்றான் அவன் அழுத்தமாய்.

“என்ன அர்த்தமா இருந்தாலும் அத மதிக்கோணும் எண்டுற கட்டாயம் எனக்கு இல்ல. அது என்ர விருப்பத்தோட என்ர கழுத்தில ஏற இல்ல. அதால அதுக்கு மதிப்புக் குடுக்கோணும் எண்டுற கட்டாயம் எனக்கில்ல!”

“ஆனா, கட்டினது கட்டினதுதான்!” என்றான் அவனும் விடாமல்.

“அது உனக்கு. எனக்கு இல்ல. நான் நினைச்சா இப்ப, இந்த இடத்திலேயே இதக் கழட்டி எறிவன்.” அவளுக்கு அந்தத் தைரியம் இருக்கிறதா தெரியாது. ஆனால், அவனுக்கு அடங்கிப் போகவோ, அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அவனுக்கு மனைவியாக வாழவோ அவளால் முடியவே முடியாது.

அவன் எழுந்து வந்து அவள் முன்னே நின்றான். “எங்க கழட்டு பாப்பம்!” என்றான் நிதானமாக.

அவன் பார்வை, அதிலிருந்த கூர்மை கண்டு அவள் சுவாசம் அப்படியே நின்றுபோயிற்று. தொண்டைக்குழி உலர்ந்துவிட பயத்துடன் அவனைப் பார்த்தாள்.

இதற்குள் மகளுக்கும் அவனுக்கும் நடுவில் வந்து நின்றார் மதியழகன். “தம்பி, நடந்த விஷயங்களால அதிர்ச்சில இருக்கிற பிள்ளை அவா. அதால நிதானமிழந்து நிக்கிறா. நாங்க உங்களோட சண்டை பிடிக்க வரேல்ல. எங்கட மகளை விடுங்கோ, கூட்டிக்கொண்டு போறம் எண்டுதான் சொல்லுறம்.” என்று நயமாகத் தன் காரியம் சாதிக்க முயன்றார்.

“இனி நீங்க வெளிக்கிடலாம்!” என்றான் அவன் வேறு பேசாமல்.

அவருக்கு முகம் கன்றிப்போயிற்று. வீட்டை விட்டு வெளியே போ என்கிறான். அந்த அவமானம் கொடுத்த ஆத்திரத்தோடு, “இல்லை தம்பி, மகள் இல்லாம நாங்க இஞ்ச இருந்து போக மாட்டம்.” என்று உறுதியாக மறுத்துச் சொன்னார்.

அவன் திரும்பி ஆதியைப் பார்த்தான். அவன் மதியழகன் சிவசுந்தரியை நோக்கி வரவும் வருணா அதிர்ந்துபோனாள்.

ஓடி வந்து அவனுக்கும் பெற்றவர்களுக்கும் நடுவே நின்றுகொண்டு, “அம்மா அப்பாவத் தொட்டியோ நடக்கிறதே வேற. மரியாதையா தள்ளிப் போ!” என்று எச்சரித்தாள்.

“அண்ணி…” என்று தயங்கினான் ஆதி. அடுத்த கணமே பளார் என்று அவள் கரம் அவன் கன்னத்தில் இறங்கிற்று. “ராஸ்கல்! அண்ணி எண்டு சொன்னியோ கொன்றுவன் உன்ன. அநியாயமும் அக்கிரமும் செய்ற உனக்கு நான் அண்ணியா?” என்று அவள் சொல்லி முடிப்பதற்கு, “ஏய்!” என்று உறுமிக்கொண்டு அவளை நோக்கிப் பாய்ந்தான் கலிங்கன்.

அதற்குள் அவனை இழுத்துப் பிடித்த ஆதி, “அண்ணா, இது அண்ணிக்கும் எனக்குமானது. நீங்க இதுக்கா வராதீங்க!” என்று அவனைத் தடுத்து நிறுத்தினான்.

அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்றுகொண்டே, “வலு கவனமா இரு! இஞ்ச இருக்கிறவன் எல்லாம் என்ர சொந்தப் பிள்ளைகளுக்குச் சமன். அவங்களில இன்னொருக்கா கைய வச்சாய் எண்டு வை, உனக்குக் கையே இருக்காது!” என்று எச்சரித்தான்.

அவன் உறுமியபோதே வருணாவின் உடல் முழுவதும் நடுங்கிப் போயிருந்தது. இதில் அவன் மிரட்டலைட் கேட்டு தகப்பனின் மார்புக்குள் ஒண்டிக்கொண்டு நடுங்கினாள் வருணா.

அடுத்த நிமிடமே வலுக்கட்டாயமாக மதியழகனும் சிவசுந்தரியும் அங்கிருந்து அகற்றப்பட்டார்கள். அவர்களோடு சென்றுவிடத் துடித்த வருணாவைத் தடுத்துப் பிடித்து, தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான் கலிங்கராயன்.

“விடு! என்னை விடு! எனக்கு என்ர அம்மா அப்பாவோட போகோணும். விடு…!” என்று துடியாய்த் துடித்தவளின் அத்தனை போராட்டங்களும் வீணாயின.

“பாவி! படுபாவி! என்னை ஏன் இந்தப் பாடு படுத்திறாய்? என்னை ஏன் இவ்வளவு சித்ரவதை செய்றாய்? என்னால உன்னோட இருக்கேலாது. என்னை விடு! எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம். எனக்கு நீ வேணாம். உன்னை எனக்குப் பிடிக்கேல்ல. என்னை விடு!” என்று அவன் மார்பிலும் கைகளிலும் அடித்துக் கதறினாள் வருணா.

தாய் தந்தையரைக் கண்டபோது இனி தன் துன்பங்கள் அத்தனையும் முடிந்துவிடும் என்று நம்பியிருந்தாள். எப்படியாவது அவள் தந்தை அவளை இந்தச் சிறையிலிருந்து மீட்டுவிடுவார் என்று நினைத்திருந்தாள். அது இல்லை என்றானதும், இனி இங்கேதான் தன் வாழ்க்கையைக் கழிக்க வேண்டுமோ என்கிற பயமும் அவளின் மொத்தக் கட்டுப்பாட்டையும் உடைத்திருந்தன.

கடைசியில், “ஏய்!” என்ற அவனுடைய பலமான அதட்டலில் அவளுடைய தேகம் ஒருமுறை தூக்கிப் போட்டது. கண்ணீர் கூட அப்படியே நின்றுவிட, மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் அவனைப் பார்த்துக் கிடுகிடுவென்று நடுங்கினாள்.

அவளை அழைத்துச் சென்று சோஃபாவில் அமர்த்தினான் கலிங்கராயன். தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். அதை வாங்க வேண்டுமென்றுகூட அவளுக்குப் புரியவில்லை. அவனையும் அந்தக் குவளையையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“குடி!” என்றான் தணிந்த குரலில்.

சொன்னதைக் கேட்கும் கிளிப்பிள்ளை போன்று குவளையை வாங்கி, மெல்ல மெல்லப் பருகினாள்.

அவள் குடித்து முடிக்கும்வரை பொறுமையாகக் காத்திருந்தான் ராயன். பின்னர், குவளையை வாங்கி அங்கிருந்த டீப்போவில் வைத்துவிட்டு, “நடந்த கலியாணம் நடந்ததுதான். நான் சாகிற வரைக்கும் நீதான் எனக்கு மனுசி. இதுதான் உனக்கு வீடு. மற்றும்படி உனக்கு எந்த ஆபத்தும் வராது. உன்ர அம்மா அப்பாக்கும் எந்தப் பிரச்சினையும் வராது. விளங்கினதா?” என்றான்.

அவளுக்கு விளங்காமல் இல்லை. இனி இந்த நரகத்தில்தான் அவள் வாழ்க்கை இருக்கப்போகிறது என்று நன்றாகவே விளங்கியது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.

அதைச் சொல்லத் தைரியமின்றி, கண்களில் கண்ணீர் வழிய அவனையே பார்த்தாள்.

“விளங்கினதா? இல்லையா?”

வருணா விக்கி விக்கி அழுதபடியே, விளங்கியது என்பதுபோலத் தலையசைத்தாள்.

அவளையே பார்த்திருந்தான் கலிங்கராயன். தலை கலைந்து, அழுகையில் கசங்கிப்போயிருந்த முகமும் கண்ணீரில் நனைந்திருந்த அவள் விழிகளும் அவனுக்குள் எந்த மாற்றத்தையும் விதைக்கவில்லை. “அழுதது போதும் வருணா. முகத்தைத் துடை!” என்றான்.

சட்டென்று இரு கைகளாலும் முகத்தைத் துடைத்துக்கொண்டாள் வருணா.

“எழும்பி உன்ர ரூமுக்குப் போ!” என்றான் அவன்.

விட்டால் போதும் என்று எழுந்து ஓடினாள் வருணா.

error: Alert: Content selection is disabled!!