அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தது ஒரு வகையில் மூச்சு முட்ட வைத்தது என்றால், அதை விட்டு வெளியே வந்தது ஒருவிதப் பாதுகாப்பின்மையைக் கொடுத்தது. என்னவோ, பாதுகாப்பற்ற ஒரு பிரதேசத்துக்குள் நடமாடுவதைப்போல் உணர்ந்தாள். அவள் விழிகள் தானாகவே அந்த மாளிகைக்குள் வேறு யாரும் இருக்கிறார்களா என்று அலசியது. யாரையும் காணோம். இரவு வேறு. விளக்குகள் அனைத்தும் போடப்பட்டிருந்தால் அந்த மாளிகையின் பிரமாண்டமும் சேர்ந்து அவளை பயமுறுத்தின.
அங்கே இருந்த மேசையில் உணவுண்ண அமர்ந்தவளுக்குப் பெற்றவர்களின் நினைவு வந்து நெஞ்சை அடைத்தது. நிச்சயம் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். அவளை எண்ணி அழுதுகொண்டிருப்பார்கள். அவளை இந்தச் சிறையிலிருந்து விடுவிக்க முடியாமல் போய்விட்டதே என்று துடித்துக்கொண்டிருப்பார்கள். அதுவும் அவளை அவன் பிடித்துவைத்துக்கொண்டு அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதில் அவளுக்கு என்ன நடக்குமோ, எந்த நேரத்தில் என்ன கெட்ட செய்தி வருமோ என்று நடுங்கிக்கொண்டிருப்பார்கள்.
உணவில் கையை வைத்தவளால் உண்ணவே முடியவில்லை. நெஞ்சு வெடிக்குமளவுக்குத் துயர் வந்து தொண்டையை அடைத்தது.
“எதையும் யோசிக்காதீங்கோ பிள்ளை. எல்லாமே நல்லதா நடக்கும்.” அவள் துயரை உணர்ந்தோ என்னவோ சொன்னார் அவர்.
அவள் வாழ்க்கையில் இனி என்ன நல்லது நடக்க இருக்கிறதாம்? அதான் அவரின் தம்பி படுகுழியில் அவளைத் தள்ளிவிட்டுவிட்டானே. அவளுக்கு ஆத்திரம்தான் வந்தது. பெற்றோர்களுக்காகவாவது அவள் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு உணவை அள்ளி விழுங்கினாள்.
*****
அந்த இரவு அத்தனை பேருக்கும் உறங்கா இரவாகவே மாறிப்போயிற்று.
அடுத்த நாள் காலையில், காவல்துறையிடம் வருணா சொன்ன செய்தி பரபரப்பாக வெளியாகியது. ஏற்கனவே, நின்றுபோன திருமணத்தாலும், அது ஊர் முழுக்க வீடியோக்களாகப் பரவியதாலும் கூனிக்குறுகிப்போயிருந்த மாறன், இதைக் கேள்விப்பட்டுக் கொதித்துப்போனான்.
அவள் சொன்னதெல்லாம் பொய் என்பதும், ராயனின் கட்டாயத்தினால்தான் அப்படிச் சொல்லியிருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும், அவளால் அப்படிச் சொல்ல முடிந்திருக்கிறதே! அவளும் சேர்ந்து அல்லவா அவனை அவமானப்படுத்திவிட்டாள்?
அவள் சொன்னதன் பொருள் என்ன? பிடிக்காத அவளை வலுக்கட்டாயமாக அவன் திருமணம் செய்ய முயன்றான் என்பதுதானே!
அப்படியானால் அவனிடம் அவள் பரிமாறிய பார்வைகளும், சிந்திய புன்னகைகளும், பேசிய பேச்சுகளும் பொய்யா என்ன?
இந்த ஊரும் உலகமும் இனி அவனைப் பற்றி என்ன நினைக்கும்? கேவலமாகப் பார்க்க மாட்டார்களா? அசிங்கமாகப் பேச மாட்டார்களா? நாளைக்கு அவனால் சமூகத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியுமா? ஒரு மருத்துவராக தொடர்ந்து வைத்தியம் பார்க்க முடியுமா?
வருணாவின் மீதும், தன்னைச் சுற்றியிருந்த அத்தனை பேர் மீதும் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. பொறாமை, கசப்பு, விரக்தி, ஆத்திரம், அவமானம் என்று அத்தனை எதிர்மறை உணர்வுகளும் அவனைப் போட்டுப் பாடாய்ப்படுத்தின.
*****
அடுத்து வந்த நாள்கள் கலிங்கராயனுக்கு மிகுந்த சவாலான நாட்களாயிற்று.
கலிங்கராயனுக்கு அடுத்த ஒரு வாரமும் ஓய்வெடுக்கக் கூட நேரமில்லை.
இரவு பகல் பாராமல், கணப் பொழுதும் தாமதிக்காமல் சூர்யா நாசம் செய்த அத்தனையையும் ஒவ்வொன்றாகச் சீராக்கி, அவனுக்குத் தன் உலகத்தை மீண்டும் தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டியிருந்தது.
அங்கே சூர்யாவும் சும்மா இருக்கவில்லை. வெளியே வந்த கலிங்கராயன் நேராகத் தன்னை அழிக்கத்தான் வருவான் என்று நினைத்தான். அவனானால் தொழிலைக் கவனிக்கப் போய்விட்டானாம் என்று தகவல் வந்திருந்தது.
இனிமேல் பழையபடி அவனோடு போய்ச் சேர முடியாது. செய்த துரோகம் துரோகம்தான். கூடவே அவனுக்கு அவனை அழிக்க வேண்டும். தப்பிவிட்டான் என்று விட மனமில்லை. அவனுக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி ஒளியவும் விருப்பமில்லை.
வரதனின் உதவியோடு காவல்துறையினரிடம் கலிங்கராயன் செய்யும் கறுப்பு வேலைகள் பற்றிய தகவல்களைக் கொடுக்கத் தொடங்கினான். அவன் என்ன செய்வான், எப்படிப் பொருட்களைக் கைமாற்றுவான், வாகனங்கள் எந்த வழியில் பயணிக்கும் என்று அத்தனையையும் சொன்னான். வரதனின் ஆட்களை வைத்து கலிங்கராயனின் லொறிகள் போகும் இடங்களைத் தடுத்து நிறுத்தினான்.
கலிங்கன் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான். அவன் வந்த பிறகு கூட பொருட்களைக் கைமாற்ற முடியவில்லை என்பது அவனை மிகவுமே தொந்தரவு செய்தது.
சூர்யாவின் குடைச்சல் ஒரு பக்கம் என்றால், வரதனின் அதிகாரக் குடைச்சல் மறுபக்கம். காவல்துறையின் நெருக்கடி இன்னொரு பக்கம் என்று திரும்பும் இடமெல்லாம் ஆபத்தும் மிரட்டல்களுமே அவனைச் சூழ்ந்தன.
சூர்யா இத்தனை வேலைகளையும் துணிச்சலாகச் செய்கிறான் என்றால், கலிங்கராயனின் தொழிலின் அத்தனை ரகசியங்களும் அவனுக்குத் தெரியும் என்பது ஒரு காரணம்.
வரதனின் பலமான பாதுகாப்பு வளையம், பணபலம், ஆட்களின் பலம் அனைத்தும் அவனுக்குப் பின்னால் அரணாக இருப்பது.
அதைக் கலிங்கனால் உணர முடிந்தது. ஆத்திரத்தில் அவன் உள்ளம் உறுமினாலும் அடக்கி வாசித்தான். அவன் எதற்கும் முடங்கிப் போகத் தயாராயில்லை.
இந்த வாழ்க்கையை ஆரம்பித்தபோது அவன் யாரையும் நம்பி ஆரம்பிக்கவில்லை. எந்தப் பின்புலத்தில் இருந்தும் தொடங்கவுமில்லை. பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்தவன். இன்றைக்கு என்ன இருந்தாலும் செல்வம், செல்வாக்கு, அதிகாரம், பணபலம் என்று அத்தனையோடும்தான் இருக்கிறான்.
அப்படி இருக்க அவனால் முடியாதா? அவனுடைய இறுமாப்புக் கொண்ட நெஞ்சம் உறுமியது. திட்டங்களை வேகவேகமாகத் தீட்டினான்.
இத்தனை நாள்கள் ரகசியப் பதுங்குமிடங்களாகப் பயன்படுத்திய கிடங்குகளை மாற்றிவிட்டு, புதிய இடங்களை உருவாக்கினான்.
சூர்யாவுக்குத் தெரிந்த பழைய வழிகளை அப்படியே கைவிட்டான். கடைசி நிமிடம் வரை யாருக்கும் தெரியாத புதிய, கணிக்க முடியாத காட்டு வழிகளையும் ஆபத்தான மலைப் பாதைகளையும் சரக்குக் கைமாற்றுவதற்குப் பயன்படுத்தத் தொடங்கினான்.
சூர்யாவின் ஆட்கள் என்று ஒரு சிலர் எப்படியும் தன்னிடம் இருப்பார்கள் என்று தெரியுமாதலால், வேண்டுமென்றே தவறான தகவல்களை அவர்கள் மத்தியில் கசியவிட்டான். ஒரு லொறிக்குப் பதிலாக இரண்டு மூன்று லொறிகளை வெவ்வேறு திசைகளில் அனுப்பி, சூர்யாவின் ஆட்களைத் திசைதிருப்பினான்.
உண்மையான சரக்கு எங்கே போகிறது என்பது ராயனுக்கும் அவனது மிக நம்பகமான ஆட்களுக்கு மட்டுமே தெரிவது போல் பார்த்துக்கொண்டான்.
காவல்துறைக்குப் பெரும் பணம் கைமாறியது. அவர்களுக்கு ஆதரவாக ஒரு பகுதியினர் இருந்தால் இவனுக்கு ஆதரவாகவும் இன்னொரு பகுதியினர் இருப்பார்கள்தானே.
பணத்தால் அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டான். அரசுத் தரப்பு சோதனைகளும் வேட்டைகளும் மெல்ல மெல்ல மௌனமாயின.
காவல்துறையின் காவலில்லேயே தன்னுடைய சரக்குகளை இடமாற்றினான். காவல்துறையைக் கொண்டே தன் காரியங்களைச் சாதித்தான்.
அவனோடு இருந்தவன்தான் சூர்யா. அதற்கென்று சூர்யா ஒன்றும் அவன் இல்லையே. அவனும் சூர்யா இல்லையே. துரோகிக்கே முதுகில் குத்துவதற்கு ஆயிரம் வழிகள் என்றால் அவன் வீரன். நெஞ்சை நிமித்துக் கொண்டு முன்னால் நிற்பவன். தோற்றுவிடுவானா என்ன?
அத்தனையும் பழையபடி நகரத் தொடங்கின. அதன் பிறகே அவனுக்கு வீடு என்கிற ஒன்று இருப்பதும், அங்கே ஒரு பெண் இருக்கிறாள் என்பதும் நினைவில் வந்தன.

