காரின் கதவைச் சாற்றிய கணத்தில் சாதுவான புன்னகை மறைந்து, அங்கே கடுமையான வன்மம் குடிகொண்டது.
“என்னவாம்?” அவனுடைய வாகன ஓட்டியைப் பார்த்து உறுமினான்.
“எங்களுக்குக் கிடச்சது பிழையான தகவலாம். அங்க ராயன் நிண்டிருக்கிறான். எங்கயும் போகேல்ல.”
இல்லை. அவனுக்குத் தகவல் தந்தவன் நம்பிக்கையானவன். அவன் போய் சொல்லப்போவதில்லை. கொழும்பு செல்லும் அவனுடைய சரக்கு லொறியில் அவனும் போவதைக் கண்டதாகச் சொல்லியிருந்தான். அப்படிக் கொழும்பு புறப்பட்டவன் இங்கே நின்றிருக்கிறான் என்றால்… அவன் தலை ஆவேசத்துடன் மறுப்பாக அசைந்தது. “இல்ல. பிழையான தகவல் கிடைக்கேல்ல. அப்பிடிக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.” என்றவனின் வாய்க்குள் அதன் பிறகு அரைபட்டவை அத்தனையும் செந்தமிழே.
அந்தளவில் கொதித்துப்போயிருந்தான். திரும்ப திரும்பத் தோற்றுக்கொண்டேயிருக்கும் கோபம் அவன் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது.
நேற்றிரவு கலிங்கராயனின் கோரப் பிடியில் சிக்கி, கை கால்கள் முறிந்து, உடலெங்கும் இரத்தக் காயங்களுடன் எழும்ப முடியாமல் கிடந்தவர்களைப் போய்ப் பார்த்தான். மிச்சம் மிகுதியாக இருக்கும் அவர்களின் உயிரைத் தானே பறித்துவிடலாமா என்று நினைக்கிற அளவில் இன்னும் வெறியேறியது.
ஒரு காலத்தில் அந்தத் துறைமுகத்தில் அவனுடைய அனுமதியில்லாமல் எதுவுமே அசையாது. அந்தளவில் முழு அதிகாரமும் அவன் கையில் மட்டும்தான் இருந்தது.
அன்றைக்கு அவனுக்குக் கீழே கூட இல்லை, அவனுடைய ஆட்களுக்கு எடுபிடிகளாகத் திரிந்த கலிங்கராயனும் அவனது நண்பனும் இன்றைக்கு அதே துறைமுகத்தில் கால் பதித்து, அவனுடைய அதிகாரத்தைப் பறித்துக்கொண்டு, அங்கே கோலோச்சுவது அவனது அகங்காரத்தையும் ஆணவத்தையும் சீண்டிக்கொண்டே இருந்தது.
ஊர் பேர் தெரியாத அனாதைகள். ஒட்டுறவுக்கு என்று யாருமில்லை. அப்படியானவர்கள் அவனுடைய சொந்த மண்ணிலேயே அவனை ஒன்றுமில்லாமல் ஆக்கியதை எப்படிச் சகிப்பான்? பதிலுக்குப் பதில் கொடுத்து, அவனை ஒன்றுமில்லாதவனாக்கி, வேரோடு சாய்த்தால்தான் அவன் ஆக்ரோஷம் அடங்கும்.
அவனது வெறித்தனமான அந்த ஆத்திரம், அடுத் சதித் திட்டத்திற்குத் அடிக்கல் நாட்டத் தயாராகிற்று.
*****
இரவு நேரம். ராயனின் மாளிகை முழுமையான இருளிலும் அடர்ந்த அமைதியிலும் மூழ்கியிருந்தது.
அப்போது, அவனது அறைக் கதவு சத்தமே இல்லாமல் மிக மெதுவாகத் திறக்கப்பட்டு, ஒரு உருவம் உள்ளே நுழைந்தது. அது நுழைந்த கணத்திலேயே விழித்திருந்தான் கலிங்கராயன்.
உறக்கத்தில்தான் இருந்தான். ஆனால், எப்போதுமே ஆபத்து எந்தத் திசையிலிருந்தும் வரலாம் என்பதால், ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருப்பது அவனது இரத்தத்தில் ஊறிப்போன ஒரு வழக்கம்.
காலடிச் சத்தத்திலேயே வருவது யார் என்று கண்டுகொண்டவனது உதட்டோரம் சிறு புன்னகை துடிக்கத் தொடங்கியது. அது அடங்குவதற்குள் பொத்தென்று பூ போன்ற சுமை ஒன்று அவன் மீது விழுந்தது!
“நிலா!” மெல்லிய சிரிப்புடன் அவள் பெயரை முணுமுணுத்தவன் அவள் விழுந்து விடாதபடிக்குப் பிடித்துக்கொண்டான்.
அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் முகத்தை அவனது கழுத்து வளைவுக்குள் புதைத்தாள் நிலாவினி. அவள் நெஞ்சின் படபடப்பும், அவளது இதயத் துடிப்பின் வேகமும், அணைப்பின் இறுக்கமும் ராயனின் புருவங்களைச் சுருங்க வைத்தன.
“என்ன நிலா?” என்றான் புரியாமல்.
அவள் அணைப்பு இறுகிற்றே தவிரப் பதில் சொன்னாள் இல்லை. கூடவே, மெல்ல மெல்ல அவன் தோள் வளைவு அவள் கண்ணீரால் நனையத் தொடங்கிற்று.
“ஏய் என்ன?” திரும்பிப் படுத்து, அவளைக் கட்டிலில் சரித்துவிட்டுக் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த மேசை விளக்கை எட்டித் தட்டினான். பரவிய மங்கலான வெளிச்சத்தில் அவளது முகத்தைப் பார்க்க முயன்றான்.
தன் முகத்தை அவனுக்குக் காட்ட விரும்பாமல், அவன் மார்புக்குள்ளேயே மீண்டும் புதைத்துக்கொண்டாள் நிலா.
அவளது முதுகைப் பரிவோடு தட்டிக் கொடுத்தபடியே, “என்ன நிலா? ஏன் அழுறாய்? எனக்கு நீ அழுதா பிடிக்காது எண்டு உனக்குத் தெரியுமெல்லா?” என்றான் கண்டிப்பையும் கனிவையும் கலந்த குரலில்.
அவளிடமிருந்து உடனே பதில் வரவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தவள், மெலிந்த குரலில், “பயமா இருக்கு… ராயன்.” என்று முணுமுணுத்தாள்.
“எதுக்குப் பயம்?” புதிதாக என்ன வந்தது என்கிற குழப்பம் அவன் கேள்வியில் தொக்கியிருந்தது.
அவள் அதற்கு நேரிடையாகப் பதிலளிக்கவில்லை. “தெரியா.” என்றுவிட்டு இன்னும் இறுக்கமாக அவனைக் கட்டிக்கொண்டாள்.
முதல் நாள் அவன் காயப்பட்டு வந்தது காரணமோ என்று நினைத்தான்.
அவள் மீது பரிதாபம் எழுந்த அதே நேரத்தில், “இதுதான் எங்கட வாழ்க்கை நிலா.” என்றான் அழுத்தி.
“இல்ல. எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம். என்னை எங்கயாவது கூட்டிக்கொண்டு போங்க. எனக்கு உங்களோட இப்பிடியே இருக்கோணும்.” அவன் மார்புக்குள் இருந்தே முணுமுணுத்தாள் அவள்.
அவன் உதட்டில் முறுவல் பூத்தது. பிடிவாதமாக அவளைத் தன்னிலிருந்து விலக்கி, அவள் முகம் பார்த்தான். அழுது சிவந்து, அப்போதும் அவனைப் பார்க்க மறுத்து விழிகளை இறுக்கி மூடிக்கொண்டவளைக் கண்டு முறுவல் விரிய, அவள் உதட்டில் தன் உதட்டினை அழுத்தி எடுத்தான்.
படக்கென்று விழிகளைத் திறந்து அதிர்ந்து பார்த்தாள் நிலா. எப்போதும் இதைச் செய்வது அவள்தான். இன்று அவனாகச் செய்திருக்கிறான். அந்தத் திகைப்பு நீங்காமல் பார்த்திருந்தவளிடம் ஒற்றைப் புருவம் உயர்த்தினான் அவன்.
ஒரு கணம் அவனுடைய அந்தச் செய்கையின் அழகில் லயித்தாலும், “பயமா இருக்கு!” கண்ணில் நீர் சூழ முணுமுணுத்தாள்.
அவன் புருவங்கள் சுருங்கின. அவள் ஒன்றும் பயந்த சுபாவம் கொண்டவள் இல்லை. அவர்களுக்கு இணையான மனத்திடம் கொண்டவள். அவர்கள் கடந்துவந்த பாதை அந்தளவில் அவளை உறுதியானவளாக மாற்றியிருந்தது. அப்படி இருக்க இது என்ன புதுவிதமான பயம் என்று உள்ளே ஓடினாலும், “நான் இருக்கேக்க உனக்கென்ன பயம்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
அவளது கண்கள் மீண்டும் பெருக்கெடுத்துக் கண்ணீரைச் சிந்தின.
இப்போது அவனுக்கு கோபம் வந்தது. “நிலா!” என்றான் அதட்டலாக. “இந்தக் கண்ணீர் நீ என்னை நம்பேல்ல எண்டு சொல்லுது!”
அந்த வார்த்தைகள் அவள் நெஞ்சைச் சுட்டது. நனைந்திருந்த ஈர விழிகளை நிமிர்த்தி, “உங்களை நம்பாம வேற ஆர நம்பப்போறன்?” என்று கேட்டவள், மறுநொடி தன் பலம் அனைத்தையும் கூட்டி, அவனைத் தன் மீது இழுத்துப் போட்டுக்கொண்டாள். தன் கரங்களால் அவனது முகத்தைப் பற்றி, முகமெங்கும் முத்தமிட்டாள்.
அதில் நேசத்தைத் தாண்டி ஒருவிதத் தவிப்பும், பயமும், ஆற்றாமையும் கலந்துகிடந்தன.
அவன் முகத்தைத் தன்னிடமிருந்து பிரித்துப் பிடித்து, “இதையெல்லாம் விட்டுட்டு வரமாட்டீங்களா?” என்றாள் தவிப்புடன்.
அவன் உதட்டோரம் அழுந்தியது. கண்களில் கோபம் படர்ந்தது. இதற்குள்ளேயே வளர்ந்தவள் கேட்கிற இந்தக் கேள்வி அவனுக்குப் பிடிப்பதேயில்லை. அவளின் இந்த எதிர்பார்ப்புத்தான் திருமண பந்தத்தை நோக்கிக் காலெடுத்து வைக்காமல் அவனைத் தடுத்துப் பிடிப்பதே.
அவளை விட்டு விலகிப் படுத்து, “எழும்பி உன்ர ரூமுக்குப் போ!” என்று சொன்னான்.
அவள் விழிகளில் மீண்டும் கண்ணீர் பெருகிற்று. ஒன்றுமே சொல்லாமல் தலையை மட்டும் திருப்பி அவளை பார்த்தாள்.
“போ எண்டு சொன்னனான் நிலா!” அவன் குரலில் ஏறிய கடுமை அவள் இதயத்தைப் புண்ணாக்கை விருட்டென்று எழுந்து போனாள்.

