நீ வந்து தங்கிய நெஞ்சில் 22.2

அவர்களின் நாள்கள் வழமைக்குத் திரும்பியிருந்தன. எல்லோரும் மறுபடியும் கொழும்பு வந்து சேர்ந்திருந்தார்கள். அஜந்தா உட்பட.

அதன் பிறகுதான் யாமினியிடம் கேட்டு, நடந்தவற்றை அறிந்துகொண்டாள் அஜந்தா. நிரோஜன் கை நீட்டியதை அறிந்து அவளுக்கும் அதிர்ச்சிதான். அதே நேரத்தில் யாமினியின் தவறுகளும் தெளிவாகப் புரிந்தன.

“அவர் கேட்டதில பிழை இல்லையே யமி. அண்டைக்கு எங்களுக்கு பார்ட்டி அரேஞ்ச் பண்ணினது நீயும் அவரும். அப்ப கடைசிவரைக்கும் நிண்டு எல்லாத்தையும் நீயும் செய்திருக்கோணும்தானே? அதவிட ஃபிரெண்ட்ஸ்க்கு குடுக்கிறதை அவர் ஒண்டும் இண்டைக்கு நேற்றுச் செய்யேல்ல. எப்பவும் நடக்கிறதுதான். அப்பிடியிருக்க பிரச்சினை வேண்டாம் எண்டு அவர் மறைச்சத அந்த இடத்தில வச்சுப் பெருசாக்கி, அவ்வளவு பிடிவாதமா நிண்டு சண்டை பிடிச்சு, தனியா வெளிக்கிட்டுப் போனது எவ்வளவு பெரிய பிழை சொல்லு?” என்று அவள் கேட்டபோது இவளுக்கு முகம் கன்றிப்போயிற்று.

“அது காணாது எண்டு எல்லாருக்கும் முன்னுக்கு வச்சு அவருக்கு அடிக்கிறது எல்லாம் என்னடி? உண்மைய சொல்லப்போனா சீப்பா நடந்தது நீ. அவர் குடிக்கிறதக் கண்டுட்டு நீ அந்த இடத்தில இருந்து வெளில வந்திருந்தா கட்டாயம் அவரும் பின்னால வந்திருப்பார். அப்ப நீ கேக்கிறத கேட்டிருக்கலாம்.” என்று அவள் சொன்னபோது, இதை ஏன் தான் செய்யாமல் போனோம் என்று யோசித்தாள் யாமினி.

“எங்கட கலியாண வீட்டில வச்சு நீ கதச்சது சரியெண்டு உனக்குப் படுதா யமி? அண்டைக்கு உனக்கும் அவருக்கும் இடையில் நடந்தது எப்பிடியான ஒண்டு எண்டு உன்னைத் தவிர இன்னொருத்தரால சொல்லவே ஏலாது. நீ சொன்ன மாதிரித்தான் நீ உணந்தியா? அவர் உண்மையிலேயே அந்த எண்ணத்திலதான் உன்னை நெருங்கினவரா?” என்று அவள் கேட்டபோது, அஜந்தாவை நிமிர்ந்து பார்க்கவே வெட்கினாள் யாமினி.

அன்று வாங்கிய பைகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டு அப்படியே போகத்தான் அவன் நின்றான். அவள்தான் சாப்பாட்டைப் பற்றிப் பேசித் தடுத்தாள். அதன் பிறகும் ஒரு சிறு ஆறுதல் தந்துவிட மாட்டானா என்று ஏக்கத்தோடு அவனைப் பார்த்ததும் அவள்தான்.

இப்படி, நடந்த அனைத்திலும் சரி சமமான பங்கு அவளுக்கும் உண்டு. தப்பித்தவறி, திட்டம் போட்டு என்னை வளைத்தது நீதான் என்று பதிலுக்கு அவன் சொல்லியிருந்தால் என்னாகியிருக்கும்? மேலே யோசிக்கக் கூட முடியாமல் முகம் கன்ற நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள் யாமினி.

“இப்ப போடுற சண்டையை விட ஓராயிரம் சண்டை கலியாணத்துக்குப் பிறகு போடுவீங்க. அப்ப எல்லாம் இரவில உங்களுக்க நடக்கிறத, பகல்ல நடக்கிற சண்டையில சொல்லிக் காட்டிக் கதைப்பியா நீ? அப்பிடி அத இழுத்து நீ கதச்சதே பிழை. இதுல கேவலமான டெக்னிக் எண்டு வேற சொல்லி இருக்கிறாய். உண்மையச் சொல்லப்போனா உனக்கும் அவருக்குமான உறவை, நெருக்கத்தை நீதான் கொச்சைப்படுத்தியிருக்கிறாய்.” என்று அஜந்தா சொன்னதும், யாமினி குன்றிப்போனாள்.

“திரியத் தூண்டிவிட்டா விளக்கு ஆங்காரமாத்தான் எரியும். பிறகு வந்து நெருப்புக் கையச் சுட்டுட்டுது எண்டு சொல்லுறதில அர்த்தம் இல்ல. நீயும் அந்த வேலையைத்தான் பாத்திருக்கிறாய். இதுவரைக்கும் நடந்த எல்லா பார்ட்டிக்கும் நானும் உன்னோட வந்திருக்கிறன். எப்பயாவது குடிப்பாராம் எண்டு நீ சொல்லித்தான் எனக்கும் தெரியும். ஒரு நாள் கூட அவர் குடிச்சு நான் பாத்ததே இல்ல. அப்பிடி இருக்க அண்டைக்கு ஒரு நாள் நடந்தத வச்சு எங்கட கலியாண வீட்டில நீ கதைச்சதும் பிழை யமி. அவர் சொன்ன மாதிரி அவருக்கும் எல்லாம் தெரியும். அங்கங்க சப்போர்ட்டாவும் எடுத்துச் சொல்லுற துணையாவும்தான் நாங்க இருக்கோணும் தவிர, அவருக்கு ஒண்டும் தெரியாத மாதிரி நாங்க கதைக்கப் போகக் கூடாது.”

“இப்ப என்னடி, எல்லா பிழையையும் நான்தான் செய்தனான் எண்டு சொல்லுறியா?” அவள் சொல்வது புரிந்தாலும் அவனைப் போலவே அவளும் இவள் தவறுகளை மாத்திரமே சுட்டிக்காட்ட, கண்ணீருடன் வினவினாள்.

“இல்லை. நீ செய்த பிழைகள் என்ன எண்டு உனக்கு விளங்கப்படுத்திறன். இனி நீ எதில எல்லாம் கவனமா இருக்கோணும் எண்டு சொல்லுறன். அதுக்காக அவர் செய்தது எல்லாம் சரி எண்டு சொல்லேல்ல. அதுவும் உன்னை அறைஞ்சது இருக்குத்தானே…” என்ற அஜந்தாவுக்கு அந்த விடயத்தில் நிரோஜன் மீது பெரும் அதிருப்தி.

“எல்லாத்தையும் விட எவ்வளவு பெரிய சண்டையா இருந்தாலும் ஆம்பிளைகள் எங்களில கை வைக்கிற அளவுக்கு நாங்க அதக் கொண்டுபோகக் கூடாது யமி. பிறகு அவேக்கு அது பழக்கமா போயிடும். முதல்முறைக்கு மட்டும்தான் அடிச்சிட்டமே எண்டு குற்ற உணர்ச்சியும், வருத்தமும் இருக்கும். அதுவே தொடந்து நடக்க ஆரம்பிச்சிட்டா அவசரத்தில ஏறி விழுற மாதிரி, யோசிக்காம வார்த்தைகளை விடுற மாதிரி, கை நீட்டுறதும் அவேக்கு சாதாரணமா போயிடும். விடிய அடிச்சுப்போட்டுப் பின்னேரம் வந்து மன்னிப்புக் கேக்கிறதோட முடிச்சிடுவினம். இனியாவது இப்பிடி ஒண்டு நடக்காத மாதிரிக் கவனமா இரு.”

யாமினிக்கும் புரிந்தது. அன்று அறையக் கையை நீட்டிவிட்டு நிறுத்தினான். இன்று அறைந்திருக்கிறான். இனி அவள் இந்த விடயத்தில் மிகக் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

அஜந்தாவுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவள் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டு, “உன்ர எதிர்காலம் மொத்தமும் அவரோடதான் எண்டேக்க நீயும் கவனமா இருக்கோணும் யமி. எங்க, எப்பிடி எண்டில்லாம நான் கதைப்பன், என்ன வார்த்தையையும் விடுவன், அவர் மட்டும் என்ர மானம் மரியாதையக் காப்பாத்தோணும் எண்டு எதிர்பாக்கிறதில என்ன நியாயம் இருக்குச் சொல்லு?” என்று இதமாக வினவிவிட்டு,

“கொஞ்ச நாலைக்குப் பேசாம இரு. அவரையும் கொஞ்சம் விட்டுப்பிடி. உன்னை மாதிரி அவரும் நடந்துகளின்ர சரி பிழையத் தனியா இருந்து யோசிக்கட்டும். யோசிச்சிட்டு அவரா வரட்டும். கொஞ்சம் வெய்ட் பண்ணு.” என்றாள் ஆறுதலாக.

அவளும் தன் பக்கத் தவறுகள் என்னவென்று தெளிவாகப் புரிந்துபோனதில் பொறுமையாகக் காத்திருக்க முடிவு செய்தாள்.

ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று அந்த வளாகத்தில் இருக்கிற மூன்று ஐடி நிறுவனங்களும் சேர்ந்து ஒரு ஒன்றுகூடலை நடத்தின. குறைந்தது வருடத்தில் இரண்டு முறையாவது இப்படி நடத்துவார்கள்.

அவர்களுக்குள் இருக்கிற நட்புப் பெருகவும், ஒருவர் மற்றவர்களின் பிரஜெக்டுகளுக்கு உதவியாக இருப்பதற்கும், தேவையான பொழுதுகளில் ஆட்களை மாற்றி எடுத்துக்கொள்வதற்கும் இது உதவி புரிந்திருக்கிறது.

நிறைய நாள்களுக்குப் பிறகு நிரோஜனை அங்கு வைத்துப் பார்த்தவள் விழிகள் கரிக்க ஆரம்பித்தன. அவன் புறம் ஓடும் விழிகளைத் தடுத்து, நடக்கும் ஒன்றுகூடலில் கவனம் வைப்பது என்பது பெரும் சவாலாயிற்று. வந்து பேசுவான் என்று பெரிதும் எதிர்பார்த்தாள். ஆனால், அவன் வரவில்லை.

நடந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டிக்கொண்டு இப்படி விலகியே நிற்கப்போகிறானா என்கிற கேள்வி எழுந்து வந்து அவளை மருட்டியது.

அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல், அஜந்தாவோடு நேரே கேண்டீனுக்கு வந்து அமர்ந்தாள்.

“ஏய் என்னடி?” தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்து வினவினாள் அஜந்தா.

“பக்கத்தில பாத்தும் வந்து கதைக்கேல்ல எண்டா என்னடி இது?”

அவளும் இதை யோசித்தாள்தான். அதைச் சொல்லாமல், “நான் கதைக்கவா?” என்று கேட்டாள்.

சில கணங்களுக்கு யோசித்துவிட்டு மறுப்பாகத் தலையை அசைத்தாள். “நானே கதைக்கிறன். நான் பிழையா கதைச்சதால அவர் அடிச்சதாவே இருக்கட்டும்.”
இத்தனை நாள்களையும் கூட எப்படியோ கடந்துவிட்டாள். இப்போது அவனை நேரில் பார்த்தபிறகு விலகியிருக்க அவளால் முடியவில்லை.

இதற்குள் ஒன்றுகூடல் முடிந்திருந்தது. பக்கத்தில் இருந்த அந்தக் கேண்டீனுக்குத்தான் எல்லோருமே வந்தனர். அதைக் கவனித்துவிட்டு, “லைன் வர முதல் ஓடிப்போய் ரெண்டு கோப்பி வாங்கிக்கொண்டு வாறன்.” என்று எழுந்துபோய் இரண்டு கோப்பிகளுக்குச் சொல்லிவிட்டு நின்றாள்.

கோப்பி வந்ததும் பணம் செலுத்துவதற்குக் கைப்பேசியை நீட்டப்போனபோதுதான் அஜந்தாவின் கைப்பேசியை மாற்றி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்று புரிந்தது.

“ஒரு நிமிஷம் அண்ணா. ஃபோன மாத்தி எடுத்துக்கொண்டு வந்திட்டன்.” என்றுவிட்டுத் தம் மேசைக்கு ஓட முயன்றவள் முன்னே தன் கைப்பேசியை நீட்டினான் நிரோஜன்.

அங்கே அவனை எதிர்பாராமல் ஒரு கணம் திகைத்தாலும் அவன் பார்வையைச் சந்தித்த கணத்தில் தொண்டையை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது. காட்டிக்கொள்ளாமல் அதை வாங்கிக் கடவு இலக்கங்களை அழுத்தினாள். அது தவறு என்று சொன்னது. திரும்பவும் அவள் அழுத்தப்போக, அதை வாங்கித் தடையை நீக்கிவிட்டு மறுபடியும் அவளிடம் நீட்டினான் அவன்.

இந்த முறை அவள் அதை வாங்கவில்லை. வேதனையில் விழிகள் அகல அவனையே வெறித்தாள். கண்களில் நீர் சேர ஆரம்பிக்கவும் வேகமாகச் சென்று, தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு திரும்பியபோது, அவர்களுக்கான கோப்பிகளைக் கொண்டுவந்து அவர்களின் மேசையில் வைத்தான் அவன்.

ஒரு கணம் நின்று அவனையே பார்த்தவள் அஜந்தாவையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.

error: Alert: Content selection is disabled!!