அவளுக்கு முகமெல்லாம் கன்றிக் கண்கள் கலங்கிப்போயின. “அதை ஏன் என்னட்ட சொல்லுறீங்க? பாவம் பாவத்தோடதான் சேரோணும். நீங்க உங்களுக்கு ஏற்ற மாதிரி ஒருத்திய கட்டியிருக்கோணும். அவளுக்கு வேணுமெண்டா நீங்களும் நீங்க வாங்கிக் குடுக்கிறதுகளும் பெருசா இருக்கலாம். எனக்கு இல்ல. நியாயமே இல்லாம என்னை இழுத்து இந்த நரகத்துக்க போட்டது நீங்க. இப்ப விட்டாலும் நீங்களும் வேண்டாம் உங்கட சங்காத்தமும் வேண்டாம் எண்டு ஓடிப்போயிடுவன் நான்.” என்றதும் அவன் முகம் கல்லை போன்று இறுகிப்போனது.
அவன் வாழ்க்கை முறையை மாத்திரமல்லாமல், அதிலிருந்து வந்த அவனையும் அவள் அருவருக்கிறாள் என்கிற உண்மை அவனை மிக ஆழமாகத் தாக்கிற்று.
அவளைத் தன் தீ விழிகளால் எரித்துவிட்டு வாகனத்தைச் சீறிக்கொண்டு பாயவிட்டான். அவன் வேகத்தில் அவளுக்குப் பயத்தில் மூச்சடைத்தது. கதவின் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
என்னவோ அவள்தான் தவறிழைத்தவள் போன்று அவன் அதன் பிறகும் வேகத்தைக் குறைக்கவே இல்லை. அவளுக்கு மனம் குமுறியது.
ஏற்கெனவே அவளுக்குப் பிடிக்காத அவனுடன் வாழச் சொல்லிக் கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறான். அவனுடைய விருப்பங்களுக்கும் உத்தரவுகளுக்கும் கட்டுப்பட வேண்டிய நிலை. அவனிடம் எதிர்த்துப் பேசினாலும், கோபப்பட்டாலும், அவளுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்கிற இயலாமை என்று கலங்கிக்கொண்டிருக்கிறாள்.
அவளுடைய பெற்றோரைக் கூட நினைத்த நேரத்தில் பார்க்க முடியாத நிலை. இதில் அவளுடைய கைப்பேசியில் யார் இருக்க வேண்டும், யார் இருக்கக் கூடாது என்பதைக் கூட அவன் தீர்மானிப்பானா?
ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை அடக்க முயன்றவளால் முடியவில்லை. இப்படி யாரையும் குத்திக்காட்டுவதோ, அவர்களின் இயலாமைகளையும் இல்லாமைகளையும் சொல்லிக்காட்டி நோகடிப்பதோ அவள் இயல்பு இல்லை. இன்று அதைக் கூடச் செய்ய வைத்துவிட்டான் என்று அது வேறு வலிக்க, உதட்டினைக் கடித்து அழுகையை அடக்கினாள்.
சற்று நேரத்தில் கலிங்கராயன் காரை கொண்டுபோய், அவன் நிறுவனத்தின் முன்னே நிறுத்தினான்.
இறங்கவேண்டும் என்று புரிந்து தன் கண்களையும் முகத்தையும் துடைத்தாள் அவள். அது வரை காத்திருந்துவிட்டு இறங்கினான் கலிங்கராயன். தானும் இறங்கிய வருணா, அந்தக் கட்டடத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
KNS Transport & Logistics என்று பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு, ‘அது என்ன KNS?’ என்கிற கேள்வி அவளுக்குள் உண்டாயிற்று.
நுழைவாயிலின் இருபுறமும் அழகாகப் பராமரிக்கப்பட்ட செடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் விசாலமான வரவேற்புப் பகுதி வரவேற்றது. அதற்குப் பின்னாழும் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட சுவர்.
அடுத்ததாக அலுவலகப் பிரிவு. அங்கிருந்த அனைவரும் கணினிகளின் முன்னால் அமர்ந்திருந்து தங்களுடைய வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். இவனைக் கண்டதும் மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார்கள். இவளுக்கும் அதே பணிவும் வணக்கமும் கிடைத்தபோதும் அவர்களின் பார்வையில் இருந்த குறுகுறுப்பு இவள் முகத்தை மாற்றிவிடப் பார்த்தது.
வீடியோக்களில் பார்த்தவளை நேரில் பார்க்கிறார்களே. இப்போது அவளைப் பற்றியும் அவளுக்கு நடந்த திருமணத்தைப் பற்றியும் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கையிலேயே முகம் கன்றிவிடப் பார்த்தது.
அவன் எதுவுமே நடக்காதது போல முன்னால் நடந்தான். அவள் எதையும் வெளிக்காட்டாமல் அவனைப் பின்தொடர்ந்தாள்.
சிறிது தூரம் நடந்ததும், ஒரு பெரிய கதவைத் திறந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றான். விசாலமான அறையின் நடுவில் நீண்ட மேசையும் அதைச் சுற்றி நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த இருக்கைகளும் காணப்பட்டன.
அறையின் ஒரு பக்கச் சுவரில் பெரிய திரை பொருத்தப்பட்டிருந்தது. தேவையான ஆவணங்களையும் கணினிகளையும் பயன்படுத்துவதற்கான வசதிகளும் அங்கே இருந்தன.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கான அத்தனை அமைப்புகளோடும் இருந்த அவன் நிறுவனத்தைக் கண்டு அவளுக்கு ஆச்சரியம்தான். என்றாலும் அவன் என்னவோ சற்று முன் அவள் சாட்டிய குற்றச்சாட்டுகளை மறுப்பதற்காகவே இங்கே அழைத்து வந்தது போலிருந்தது.
அவளுக்குக் கோபம்தான் வந்தது. இப்போது என்ன சொல்ல வருகிறான்? அவன் நேர் வழியிலும் உழைக்கிறான் என்றா? அல்லது அவன் எந்தத் தவறுகளுமே இல்லாத நல்ல மனிதன் என்றா? உள்ளுக்குள் கேள்விகள் குமுறினாலும், அவன் காட்டிய இடத்தில் சென்று அமர்ந்துகொண்டாள்.
சிறிது நேரத்தில் அங்கே பணிபுரிபவர்கள் அந்த ஒன்றுகூடல் மண்டபத்திற்குள் கூடினார்கள். அனைவரின் முன்னிலையிலும் அவளை அழைத்து, தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினான் கலிங்கராயன்.
வருணா இப்படியான எத்தனையோ ஒன்றுகூடல்களை எதிர்கொண்டவள். ஏன், பல பிரசன்டேஷன்களை முன்னின்று வழிநடத்தியவள் கூட. ஆனால், இன்றைக்கு இந்த அறிமுகத்தை வெறுத்தாள். அவன் அவளைத் தன் மனைவி என்று அறிமுகப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் நின்றாள்.
அதே நேரத்தில் இதைவிடப் பெரிய அறிமுகம், இணைய வழியாகவும் சமூக ஊடகங்களின் மூலமும் மிகச் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது என்பதை மிகுந்த வேதனையுடன் உணர்ந்துகொண்டாள்.
இனி இந்த உலகத்திற்கு அவள் கலிங்கராயனின் மனைவி. சும்மாவல்ல. வீரசாகசம் எல்லாம் புரிந்து அவன் மணந்த அவனின் காதல் மனைவி.
எல்லோரும் அவளுக்குத் திருமண வாழ்த்துச் சொன்னார்கள். மனத்தின் கசப்பைத் தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு ஏற்றுக்கொண்டால்.
அவர்களின் ஒன்றுகூடல் ஆரம்பமாயிற்று.
எரிக்கப்பட்ட அவனது லொறிகள், தீக்கிரையாக்கப்பட்ட பெரும் தொகை பெறுமதியான சரக்குகள், அவர்களின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையில் விழுந்துவிட்ட விரிசல் போன்றவற்றை எல்லாம் சமாளித்து, மறுபடியும் அவர்களின் நிறுவனத்தைக் கட்டியெழுப்புவது எப்படி என்று பேசவே அந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக சொல்லி, அந்தக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தான் கலிங்கராயன்.
அவ்வளவு நேரமாக அசுவாரஸ்யமாகக் கவனித்துக்கொண்டிருந்த வருணா இப்போது கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.
அவளுக்கு இத்தனை நடந்ததா என்கிற கேள்வியும் ஆச்சரியமும். இவற்றோடு அவனுக்கு விழுந்த கத்திக்குத்துகளுக்கும் தொடர்பு இருக்குமா என்கிற யோசனையும் அவளுள் ஓடியது.
தொடர்ந்த மீட்டிங்கில் புதிதாக வாங்கப்பட்ட ஸ்லீப்பர் கேபின் லொறிகளை எப்படிப் பயன்படுத்துவது, எந்தெந்த வழித்தடங்களில் சேவைகளை விரிவுபடுத்துவது, ஏற்பட்ட நட்டத்தை எப்படிச் சரிசெய்வது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் எப்படிப் பெறுவது எனப் பல விடயங்கள் அந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
கலிங்கராயன் ஒவ்வொரு விடயத்தையும் தனித்தனியாகத் தெளிவாக விளக்கினான். தற்பொழுது தொழில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதிலிருந்து மீண்டெழுவதற்கான திட்டங்களை ஏற்கெனவே வகுத்து வைத்திருந்தான்.
தொழிலில் ஏற்பட்ட நட்டத்தை நினைத்து அவன் கலங்கவுமில்லை, அதை எண்ணித் துவண்டுபோகவுமில்லை. மாறாக, அடுத்து என்ன செய்ய வேண்டும், எப்படித் தொழிலை மீண்டும் முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் அவனுடைய கவனம் முழுவதும் இருந்தது.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான வழிகள் குறித்தும் தனது ஆட்களுடன் கலந்துரையாடினான். அவர்களுடைய கருத்துகளைக் கேட்டான். சில விடயங்களில் கேள்விகளை எழுப்பினான். தன்னுடைய கருத்துகளை மட்டும் திணிக்காமல், அவர்கள் சொல்வதிலும் சரியானவற்றை ஏற்றுக்கொண்டான்.
அவனுடைய தெளிவான திட்டமிடலும், நட்டத்தைக் கண்டு கலங்காத அஞ்சா நெஞ்சமும், எதிரியின் சதியையும் மீறித் தொழிலை மீண்டும் நிமிர்த்த வேண்டும் என்கிற உறுதியும் வருணாவுக்கு வியப்பை ஏற்படுத்தின.
உண்மையில் இவன் யார் என்கிற கேள்வி அவளுக்குள் முதல் முதலாக எழுந்தது.
அவனைப் பற்றி அவளுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் ஒரு பெரிய ரவுடி என்பதும், பொல்லாதவன் என்பதும், ஈவிரக்கமற்றவன் என்பதும், அவனுடைய உலகம் ஆபத்துகள் நிறைந்தது என்பதும்தான்.
ஆனால், இப்போது அவள் பார்த்துக்கொண்டிருக்கும் கலிங்கராயன் வேறொருவனாகத் தெரிந்தான். ஒரு நிறுவனத்தை எப்படிக் கொண்டுநடத்த வேண்டும், ஏற்பட்ட நட்டத்திலிருந்து எப்படித் தொழிலை மீட்டெடுக்க வேண்டும், தனது ஆட்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதெல்லாம் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தன.
ஒருவர் கதவைத் தட்டிவிட்டு அனைவருக்குமான பானம் கொண்டுவந்தார். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து கலிங்கனே அவளிடம் தந்தான். மெல்லிய வியப்புடன் அவனைப் பார்த்துவிட்டு வாங்கிக்கொண்டாள் வருணா.
அதை மெல்லப் பருகத் தொடங்கியவளின் பார்வை மட்டும் அவனிடமிருந்து விலகவில்லை.

