அத்தியாயம் 25
வரதனால் சமாளிக்கவே முடியவில்லை. அந்தளவில் அவனைப் பற்றிய விமர்சனங்களும் கேள்விகளும் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே சென்றன. அவனுடைய கைப்பேசி இடைவிடாமல் அலறிக்கொண்டேயிருந்தது.
அரசியல் பிரமுகர்கள், தொழில் கூட்டாளிகள், நண்பர்கள் எனப் பலரும் அவனைத் தொடர்புகொள்ள முயன்றார்கள். ஆனால், யாருடைய அழைப்பையும் ஏற்கும் மனநிலையில் அவன் இல்லை. அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கும் அவன்தானே பதில் சொல்ல வேண்டும். கடைசியில் கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டான்.
வரதனுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் சட்டவிரோதமான செயல்கள் இடம்பெற்றதாக வெளியாகியுள்ள காணொளிகள் தொடர்பாகவும், அவற்றில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விரிவான விசாரணை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வேறு அறிவித்தது.
இதுவரை தன்னுடைய பணத்தையும் செல்வாக்கையும் வைத்துச் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த வரதனுக்கு இப்போது நிலைமை தன் கையை மீறிச் சென்றுகொண்டிருப்பது புரிய ஆரம்பித்தது.
உடனேயே அரசியல்வாதிகளைத் தொடர்புகொண்டு பேசினான். அவர்கள் மூலம் கோடிகளில் பணம் கைமாறியது. அதையெல்லாம் வாங்கிக்கொண்டுமே ஒரு அளவைத் தாண்டி உதவ முடியாது என்று காவல்துறை கையை விரித்தது.
இது கலிங்கராயனின் பழிவாங்கும் முயற்சியோ என்கிற சந்தேகத்தில் அவனையும் அழைத்து விசாரணை செய்யச் சொல்லித் தூண்டிவிட்டான் வரதன். அவனுக்கு இது எப்படி கலிங்கனின் கையில் சிக்கிற்று என்று தெரியவேண்டியிருந்தது.
இங்கே ஹோட்டலில் அத்தனை ‘சிசிடிவி புட்டேஜ்’களையும் போட்டுப் பார்த்தான். வழமையான ஊழியர்கள் வழமைபோலவே இருந்தார்கள்.
அவன் ஊழியர்களுக்கு என்று தனியான ஆடைகள் உண்டு. அவனால் பாதிக்கப்பட்ட மனிதன் தன் சட்டையில் மட்டுமல்லாமல் இன்னும் இருவர் சட்டையிலும் யாரும் அறியாமல் பட்டன் கமராவை பொருத்தியிருந்தான். அதை எப்படிப் பொருத்துவது, எப்படி எடுப்பது போன்ற தகவல் அனைத்தையும் கலிங்கனின் ஏற்பாட்டில் ஆதி அவனுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தான். கூடவே, சிறை சென்று வந்தும் வரதனோடு இருப்பதும், அவனுடைய நெடுநாளைய ஊழியன் என்பதும் சேர, அவன் எங்கும் சென்று வர அனுமதி உண்டு. அதையே தனக்குச் சாதகமாக்கி அத்தனையையும் கச்சிதமாக முடித்திருந்தான் அவன்.
இதையறியாத வரதன் யாரோ ஒருவனைத் தேடிக்கொண்டிருந்தான்.
திருமண மண்டபத்தில் வைத்து ஏன் அப்படிப் பேசினான், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தக் காணொளியை வெளியிட்டானா என்று கலிங்கராயனைக் காவல்நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தார் காவல்துறை அதிகாரி.
அளவிடுவது போன்று அவரையே சில கணங்களுக்கு ஊன்றிப் பார்த்த ராயன், “நான் எப்பிடிக் காணாமப் போனனான் எண்டு தெரியுமா?” என்று கேட்டான்.
“அதைப் பற்றி நீங்க விசாரிக்கவே இல்லையே.” என்றான் விடாமல்.
முகம் இறுகப் பேசாமல் இருந்தார் அவர்.
“உயிர் நண்பன் எண்டு ஒருத்தன் என்னோடயே இருந்தானே, அவன் இப்ப எங்க எண்டு தெரியுமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.
இது அத்தனையும் அவருக்குத் தெரியும். காரணம் அவர் வரதனின் ஆள். அது கலிங்கனுக்கும் தெரியும். ஏன், இந்த விசாரணை வரதனால் நடக்கிறது என்றுகூட அவனுக்குத் தெரியும். அதில், “வாங்க, வெளில நிண்டு கதைப்பம்.” என்று அவரை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்துக்கு வெளியே வந்தான்.
என்னதான் அவர் அதிகாரம் மிக்கவராகவும், அரசாங்க ஊழியராகவும் இருந்தாலும் அவனைப் பகைக்க முடியாது. சத்தமே இல்லாமல் தட்டித் தூக்கிவிட்டு, அவர்களிடம் இருக்கும் காணாமல் போனவர்களின் வரிசையில் அவர் பெயரையும் சேர்த்துவிடுவான் என்பதில் அவரும் எழுந்து வெளியே வந்தார்.
ஒரு சிகரெட்டை எடுத்துத் தீ மூட்டிப் புகையை இழுத்துவிட்டபடி, “சமாதானம் கதைக்க எண்டு என்னை வரதன்ர ஏரியாக்கு போக வச்சது சூர்யா. அங்க வச்சு முதுகிலயும் வயித்திலயும் குத்தினதும் அவன்தான். அதைப் பாத்துக்கொண்டு நிண்டது வரதன். இடையில வந்து என்னை காப்பாத்திக்கொண்டு போனது என்ர ஆள். காரை எரிச்சு, உங்கட கவனத்தத் திருப்பி என்னை பாதுகாத்ததும் அவன்தான்.” என்றுவிட்டு அவரைப் பார்த்தான்.
பார்க்கும் வேலை கொடுத்த அனுபவத்தில் முகத்தில் எதையும் காட்டாமல் நின்றார் அவர்.
“உங்களுக்கு இதெல்லாம் தெரியாது?” கோணலாய் உதட்டை வளைத்துப் புகையை வெளியேற்றியபடி கேட்டான்.
அவருக்கு உள்ளுக்குள் புகைந்து. ஆனாலும் இல்லை என்று தலையை ஆட்டினார். அவரின் அந்தப் பதிலை ஏற்றுக்கொள்வது போன்று தலையை மேலும் கீழுமாக அசைத்துவிட்டு, “வவுனியால மூண்டு மாடிக் கடை ஒண்டு வாங்கி விட்டிருக்கிறீங்க போல.” என்றான் சாம்பலைத் தட்டியபடி.
அவருக்கு ஒருமுறை தூக்கிவாரிப்போட்டது. தன் அதிர்ச்சியை மறைக்க மறந்தவராக, “இல்ல…அது…” என்று தாக்கினார்.
“இருக்கட்டும். சொத்துப்பத்து வாங்கி வைக்கிறது நல்லதுதானே.” என்று சிரித்தான் அவன்.
அவருக்கு வார்த்தைகளே வரவில்லை.
“நான் சொன்னதெல்லாம் பொய் எண்டு சொன்னா, சூர்யாவையும் அவன்ர தங்கச்சியையும் எனக்கு முன்னால வந்து நிக்கச் சொல்லுங்க. இல்லையா நான் சொன்னதை வச்சு கேஸ் ஃபைல் பண்ணி விசாரணையை ஆரம்பிங்க.” என்றுவிட்டு கையிலிருந்த சிகரெட்டை சுண்டி எறிந்துவிட்டுப் போனான் அவன்.
அடுத்த கணமே வரதனுக்குச் செய்தி பறந்தது. பல்லைக் கடித்தான் வரதன். எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே வந்து நின்று முட்டுக்கட்டை போடுகிறவனைக் கண்டு அவனுக்குக் கொலைவெறியே வந்தது.
*****
அது வரதனின் இரகசியக் கிடங்கு. அந்த நடுச்சாமத்தில் போதைப்பொருட்களை லொறியில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். சுற்றவர வேறு பொருட்களை வைத்து, நடுவில் இது இருந்தது.
இது அவனுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆர்டர். எந்தச் சிக்கலும் இல்லாமல், சேர வேண்டிய இடத்தில் பத்திரமாகச் சேர்த்தாக வேண்டும்.
இப்போது அவன் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்காகக் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக்கொண்டிருந்தான். அந்தச் செலவுகளை ஈடுகட்ட, இந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கப்போகும் பணம் அவனுக்கு மிகவும் முக்கியமானது. அதில் அவனே நின்று அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தான்.
ஆனால், இத்தனை காலமும் இல்லாத ஒரு பயம் இப்போது அவனுக்குள் தலைதூக்கியிருந்தது. அதற்குக் காரணம் கலிங்கராயன்! அடிபட்ட புலியாகச் சீறிக்கொண்டிருக்கும் அவன், எந்தப் பக்கத்திலிருந்து தன்னைத் தாக்குவான் என்பதை வரதனால் கணிக்க முடியவில்லை.
எனவே, இந்தப் பொருட்களை எப்படியாவது எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
அப்போது அங்கே வந்தான் சூரியா. லொறியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்த பொருட்களை பார்த்துவிட்டு, “இது எந்த ரூட்ல போகுது?” என்று விசாரித்தான்.
இவனிடம் சொல்லலாமா என்று ஒரு கணம் யோசித்தான். ‘தான் திருடன் பிறரை நம்பான்’ என்பதற்கு ஏற்ப, சூர்யாவைப் சந்தேகித்தான். அதை உணர்ந்த சூர்யா, “என்னைச் சந்தேகப்படுறியா?” என்று சீறினான்.
சட்டென்று சமாளித்துக்கொண்டு, “நீயா நினைக்கிறதுக்கு நான் பொறுப்பில்லை.” என்றுவிட்டு அதைக் கொண்டுபோக எண்ணியிருக்கும் பாதையைச் சொன்னான்.
சூர்யா உடனடியாக வேண்டாம் என்று தலையசைத்தான்.
“அது பாதுகாப்பான வழி. ஆருக்கும் தெரியாது. இப்ப வரைக்கும் அப்பிடித்தான் கொண்டு போயிருக்கிறம்?” என்று சொன்னான் வரதன்.
சூர்யா ஒரு மாதிரிச் சிரித்தான். கூடவே கடகடவென்று இத்தனை காலமும் எதை எந்த வழியில் வரத்தான் கொண்டுபோவான் என்று அடுக்கினான். கேட்ட வரத்தான் திகைத்துப்போனான்.
“நீங்கதான் கலிங்கராயனுக்கு இதெல்லாம் தெரியாது எண்டு நினைச்சுக்கொண்டு இருக்கிறீங்க. அவனுக்கு எல்லாமே தெரியும். என்ன, இதுவரைக்கும் இதில தலையிட அவன் நினைக்கேல்ல. இனியும் அப்பிடி இருப்பான் எண்டு நினைச்சா, எங்களை விட முட்டாள் வேற எவனும் இல்ல.” என்று சொன்னான்.
அந்த வார்த்தைகள் வரதனுக்குப் பிடிக்கவில்லை. கலிங்கராயனுக்குத் தான் செய்யும் தொழில் பற்றித் தெரியும் என்று அவனுக்கும் தெரியும். ஆனால், இத்தனை காலமும் இரகசியமாக வைத்திருப்பதாக நினைத்திருந்த பல விஷயங்கள் அவனுக்குத் தெரிந்திருக்கிறது என்பது ஒருவித எரிச்சல் உண்டாயிற்று.
அவனுடைய புத்திசாலித்தனம், கெட்டித்தனம் என்று நினைத்திருந்த ஒன்றுக்கு விழுந்த பெரும் அடியாக அதைப் பார்த்தான்.
அதேநேரத்தில், கலிங்கராயனுக்குத் தெரிந்திருக்கக்கூடிய ஒரு வழியில் இந்தப் பொருட்களைக் கொண்டு செல்ல அவனுக்கு இப்போது விருப்பமில்லை.
சூரியா உடனே ஒரு பாதையைச் சொன்னான். அது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பாதையல்ல. காட்டுப் பகுதியினூடாகச் செல்ல வேண்டும். என்ன மழையோ, சேறோ இருந்தால் லொறிகள் புதைந்துவிடும். அதனால் தவிர்த்துவிடுவான்.

