கலிங்கனின் காவியம் 27.1

அத்தியாயம் 27

உடனடியாகக் கடலிலிருந்த தன்னுடைய ஆட்களுக்குத் தகவல் கொடுத்தான் கலிங்கராயன். அடுத்த நிமிடமே காத்திருந்த சரக்குப் படகுகள் அத்தனையும் மீண்டும் கப்பலை நோக்கிப் புறப்பட்டன. கப்பலில் இருந்த கிரேன் மறுபடியும் இயங்கத் தொடங்கிற்று. சரக்குப் பெட்டிகள் ஒவ்வொன்றாகப் படகுகளில் இறக்கப்படுவதற்கு ஆயத்தமாகின்.

இங்கே வருணாவை அழைத்துக்கொண்டு வந்த கலிங்கராயன், கரையோரத்தில் வரிசையாக படகுகள் நின்றிருந்த இடத்திற்கு வந்தான். அங்கே நின்றிருந்தவர்களிடம் என்னவோ கேட்டுத் தெரிந்துகொண்டு, அங்கிருந்த ஒரு படகைத் தேர்ந்தெடுத்து, அதில் ஏறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த வருணாவுக்கு இவன் என்ன செய்யப்போகிறான் என்கிற கேள்வி உண்டாயிற்று.

“நீங்களும் கடலுக்க போகப் போறீங்களா?”

“நீயும்!” என்றான் அவன்.

“நானுமா?” என்று வாயைப் பிளந்தாள் அவள். அவளால் நம்ப முடியவில்லை. அவனையும் கடலையும் மாறி மாறிப் பார்த்தாள்.

பார்த்துக்கொண்டிருந்த வேலையை நிறுத்துவிட்டுத் திரும்பி அவளின் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ரசித்துவிட்டு, “ம்!” என்றான் அவன்.

அவளால் அப்போதும் நம்ப முடியவில்லை. அவளுக்குப் படகில் பயணம் செய்வது பிடிக்கும்தான். ஒருசில முறைகள் சென்ற அனுபவங்கள் உண்டுதான். அலைகளின் அசைவில் படகு மிதக்கையில் அதில் பயணிப்பது நன்றாகத்தான் இருக்கும்.

ஆனால் அது பகல் நேரத்தில், கரை கண்ணுக்குத் தெரிகிற தூரத்தில்! இப்போது நள்ளிரவு. கடல் முழுவதும் இருள். இப்போது போவதென்றால்?

“உண்மையா போகப்போறமா? பயமில்லையா இந்த நேரம்?” கடலை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு வினவினாள்.

“என்ன பயம்?” என்றான் அவன் இலகுவாய்.

கருமையான நீர்ப்பரப்பு எங்கே முடிகிறது, வானம் எங்கே தொடங்குகிறது என்றே தெரியவில்லை. தொலைவில் மங்கலான விளக்கொளி ஒன்று மட்டும் தெரிந்தது. தப்பித்தவறி கடலுக்குள் விழுந்தால் கரையில் நிற்கிறவர்களுக்குத் தெரியவே தெரியாது.

அப்படியான அந்த இருளுக்குள் அவளை அழைத்துச் செல்லப்போகிறானாம். இதில் என்ன பயமாம்? “என்னை ஏதும் கடலுக்கு தள்ளிக் கிள்ளி விடப்போறீங்களா?” அவனைச் சந்தேகத்துடன் நோக்கிக் கேட்டாள் அவள்.

அப்படிக் கேட்பாள் என்று எதிர்பாராததில் ஒரு கணம் அதிர்ந்து பின் வாய்விட்டுச் சிரித்தான் அவன். “அப்பிடி உன்னைத் தள்ளிவிட்டா பின்னால நானும்தான் வருவன்.” என்றுவிட்டு எழுந்துபோய் படகில் ஒரு ஓரத்தில் இருந்த லைஃப் ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு வந்தான் அவன்.

அவன் சிரித்ததே அவளுக்குப் பெரும் அதிசயம். இதில் அவன் சொன்ன வார்த்தைகள்? அவள் பேசும் நிலையிலேயே இல்லை. அவள் இதயம் ஒரு கணம் துடிப்பை மறந்துவிட்டதைப் போன்று இருக்க, அவனையே பார்த்து நின்றாள்.

அவள் முன்னே வந்து, மார்போடு சேர்த்துக் கட்டிக்கொண்டு நின்றிருந்த அவள் கைகளை மெதுவாக விலக்கிவிட்டு, அவள் தன்னைச் சுற்றி போர்த்தியது போன்று அணிந்திருந்த ஜாக்கெட்டினுள் அவள் கைகளை நுழைத்து, அந்த ஜாக்கெட்டைச் சரியாக அவளுக்கு அணிவித்தான். அதன் ஸிப்பையும் கவனமாக இழுத்துக் கழுத்துவரை மூடினான்.

அடுத்ததாய் அவன் கொண்டுவந்த லைஃப் ஜாக்கெட்டினுள்ளும் அவள் கைகளை நுழைத்து, அவளுடைய தோள்களில் அதைப் பொருத்தினால்.

அவனுடைய முகம் அவளுக்கு மிக அருகில் இருந்தது.
அவன் ஜாக்கெட்டின் பட்டிகளைச் சரிசெய்து, அவளுடைய இடுப்புக்கு அருகிலிருந்த கட்டுகளைப் பொருத்தினான். முன்புறம் இருந்த இணைப்புகளையும் இறுக்கமாகப் பூட்டினான்.

தன்னைத் தொடக்கூடாது என்று சொன்னவள் இன்னுமே அசைவற்றவள் போன்று அவனுக்கு இசைந்தபடி அப்படியே நின்றாள்.

“வருணா!”

“ம்?”

“ஆக இறுக்கமா இருந்தா சொல்லு.”

சரி என்பதுபோல் அவள் தலையை மட்டும் அசைத்தாள். இதயம் மட்டும் ஏனோ படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது. பார்வையை அவனிடமிருந்து அசைக்கவே முடியவில்லை.

இவ்வளவு அருகில் ஒரு ஆண் நின்று, அவளுக்கு ஆடை அணிவித்துவிடுவது இதுதான் முதல் தடவை. அதுவும் அவள் மனத்துக்குள் ஆயிரம் குழப்பங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் கலிங்கராயன்!

அவன் இதையெல்லாம் உணர்ந்தானா? அவள் அவனுடைய முகத்தைப் பார்த்தாள். அவனோ லைஃப் ஜாக்கெட்டின் பட்டைகள் சரியாகப் பொருந்தியிருக்கின்றனவா என்று ஆராய்ந்துகொண்டிருந்தான்.

எல்லாம் சரியாக இருக்கவும் அவளைப் படகுக்கு அழைத்துச் சென்றான். அந்தச் சிறிய மோட்டார் படகுக்குள் முதலில் தான் ஏறிக்கொண்டு அவளுக்காகக் கையை நீட்டினான்.

வருணாவினால் இன்னுமே இயல்பாக ஒன்றைச் செய்ய முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் அவன் கரத்தைப் பார்த்தாள். பிறகு அவனுடைய முகத்தைப் பார்த்தாள்.

“ஏறு!” என்றான் அவன்.

படகில் ஏறுவது அவ்வளவு கடினமான காரியமில்லை. ஆனாலும் அசைந்து கொண்டிருக்கும் அந்தச் சிறிய படகுக்குள் காலைத் தூக்கி வைக்கும்போது, தடுமாறி விழுந்துவிடுவோமோ என்று பயந்தாள்.

ஆனாலும் அவன் இருக்கிறான் என்கிற தைரியத்தில் அவன் கையைப் பற்றிக்கொண்டு ஒரு வழியாக உள்ளே ஏறினாள். ஆனால், படகு ஆடிய ஆட்டத்தில், “அம்மா!” என்று அவனை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவளின் விழிகளில் அப்பட்டமான பயம் தெரிந்தது.

“ஒண்டும் இல்ல. நீ ஏறினதில ஆடுது. அவ்வளவுதான்.” என்று அவளைப் பற்றி நிலைப்படுத்தினான் அவன்.

படகு மெல்ல மெல்லத் தன் ஆட்டத்தை குறைத்தபிறகே அவள் ஆசுவாசமானாள். அதுவரை பொறுமையாக அவளோடு நின்றவன் அவளைப் படகின் நடுவில் இருந்த பலகை போன்ற அமைப்பில் இருத்திவிட்டு, அவனே அதன் இயந்திரத்தை இயக்கினான்.

அடுத்த கணம் மோட்டார் படகு அதிர்ந்தது. வருணா இருக்கையின் இரு பக்கங்களையும் இறுகப் பற்றிக்கொண்டாள். படகு வேகம் எடுத்தது.

கரையோரத்து விளக்குகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிறிய புள்ளிகளாக மாறின. இருளைக் கிழித்துக்கொண்டு படகின் முன்புறம் முன்னேறியது. அலைகள் படகின் பக்கவாட்டில் மோதி, நீர்த்துளிகளைத் தெறிக்கச் செய்தன.

இரவு, காற்றைக் கிழித்துக்கொண்டு போகும் படகு, அதை அனாயாசமாகச் செலுத்தும் அவன் பாங்கு என்று அத்தனையும் உள்ளத்தைக் கவர்ந்த அதே நேரம் பயமும் அவளை விட்டு நீங்கிய பாடாய் இல்லை.

படகைச் செலுத்துவதில் கவனமாக இருந்தாலும் அவள் எப்படி இருக்கிறாள் என்பதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான் அவன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, தொலைவில் பிரம்மாண்டமான ஒரு உருவம் இருளிலிருந்து மெல்ல வெளிப்படத் தொடங்கியது.

முதலில் விளக்குகள் மட்டுமே தெரிந்தன. பிறகு, வானத்தையும் கடலையும் பிரிக்கும் கோட்டின் மீது ஒரு கருமையான மலை எழுந்து நிற்பதைப் போலத் தோன்றியது.

error: Alert: Content selection is disabled!!