அவளையே பார்த்தான். அவள் அந்த விடயத்தில் தீவிரமாக இருப்பது புரிந்தது. என்னென்னவோ எல்லாம் அவனுக்குள் நிகழ்ந்தன. அணிந்திருந்த கோர்ட்டுக்குள் கையை விட்டு, ஒரு பக்க மார்பை வருடிவிட்டான்.
“என்ன நோகுதா?” அவளுடைய முகத்தில் சட்டென்று கவலை படர்ந்தது. தானும் தொட்டுப் பார்க்க அவனை நெருங்கினாள்.
“ஏய் வரு!” சத்தமாகச் சிரித்தபடி விலகி நின்றான் அவன்.
“உண்மையச் சொல்லுங்க. நோகுதுதானே உங்களுக்கு? நாளைக்கு ஹொஸ்பிடல் போறம். ஒரு புல் செக்கப் போடுறம்!” இதை நீ மீறவே கூடாது என்கிற தொனியில் சொன்னாள் அவள்.
அவ்வளவு நேரமாக சிரித்துக்கொண்டிருந்தவன் இப்போது இமைக்காது அவளையே பார்த்தான். ஒன்றுமே சொல்லாமல் அவள் கையைப் பற்றிக்கொண்டான்.
அந்தத் தளிர் விரல்கள்தான் அவனுக்காகப் போராடியவை. அவன் உயிரை மீட்டுத் தந்தவை. அவன் கையை வருடிவிட்டு, மார்பைத் தடவிக்கொடுத்து உனக்காக நான் ஒருத்தி இருக்கிறேன் என்று, அவன் உணர்வற்றுக் கிடந்த நாள்களில் உணர்வால் சொன்னவை.
ஆனால், அந்தக் கரங்களுக்கு அவன் நியாயமாக நடக்கவேயில்லை. அவளுடைய அருமையான எதிர்காலத்தைச் சிதைத்து, கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத தன்னோடு அவள் வாழ்க்கையைப் பிணைத்தது மாத்திரமல்லாமல், காலம் முழுக்க ஆபத்தான ஒரு வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்துவிட்டான்.
அவள் கரத்தை உயர்த்தி தன் நெற்றியில் முட்டினான். இறைவனை உள்ளத்தால் வணங்குவது போன்று, கண்களை மூடிக்கொண்டு மனத்தால் அவளிடம் மன்னிப்பை யாசித்தான். பின் அவள் கையை விட்டுவிட்டு திரும்பி நடந்தான்.
அவள் ஸ்தம்பித்துப்போய் அப்படியே நின்றுவிட்டாள். இப்போது அவன் என்ன செய்துவிட்டுப் போகிறான் என்று அவளுக்குப் புரியவேயில்லை. ஆனால், அவள் உள்ளம் பிசைந்தது. தொண்டையில் எதுவோ சிக்கிக்கொண்டு நின்றது. கண்ணைக் கரித்தது. ஒரு நொடிக்கு மேல் அவன் விலகிப் போவதை அனுமதிக்க முடியாது, “கலிங்கா!” என்று அழைத்தபடி அவனிடம் ஓடினாள்.
திரும்பி அவளைப் பார்த்தான் அவன்.
“ஏன் அப்பிடி செய்தனீங்க?” அவன் முன்னே வந்து நின்று வினவினான்.
“என்ன செய்தனான்?” தெரியாததுபோல் வினவினான்.
“அது இந்தக் கைய… நீங்க என்னவோ… என்னட்ட சொன்ன மாதிரி இருந்தது.” தன் கையைக் காட்டிச் சொன்னாள்.
“இல்லையே:” என்றான் அவன் கண்ணோரங்கள் சுருங்க.
அவள் முறைத்தாள்.
அவன் முறுவல் விரிந்தது. “உண்மையாவே ஒண்டும் இல்ல வரு.” அவள் கோபத்தை ரசித்தபடி சொன்னான்.
பட்டென்று அவன் கையில் ஒன்றைப் போட்டுவிட்டு, “பொய் சொன்னா எனக்கு கெட்ட கோபம் வரும்!” என்று விரல் நீட்டி மிரட்டினாள்.
“பொய் சொன்னாத்தானே?” அவள் மிரட்டிய விரலையே பற்றி அவளை அழைத்துக்கொண்டு போனான் அவன்.
*****
கலிங்கன் தனது சரக்குகளைப் பத்திரமாகக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டான் என்கிற செய்தி வரதனின் காதுகளை எட்டிய நொடி, அவன் அறையில் இருந்த கண்ணாடிக் கிண்ணம் சுக்குநூறாக உடைந்து சிதறியது.
பற்கள் ஆத்திரத்தில் நரநரத்தன. அவனது கண்கள் கோபத்தில் சிவந்து, நரம்புகள் புடைத்தன. அருகில் நின்ற சூர்யாவுக்கும் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
தாம் விரிக்கும் வலைகளையெல்லாம் அவன் லாவகமாகக் கிழித்தெறிந்துவிட்டுச் செல்வதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. தனி ஒருவனாக நின்று அவன் அடிக்கும் ஒவ்வொரு அடியும், இவர்களின் அகந்தையைச் சாம்பலாக்கிக் கொண்டிருந்தது.
ஆனாலும், தோல்வியை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. ஒவ்வொரு தோல்வியும் அவர்களுடைய வன்மத்தையும் வெறியையும் ஏற்றிவிட்டன.
இந்த வியாபாரத்தை அவன் நல்லபடியாக முடிக்கவே கூடாது என்று நினைத்தனர்.
ஏற்கெனவே பல கோடி நட்டத்தில் லொறிகள் எரிந்து சாம்பலானதைப் பற்றிக் காவல்துறையிடம் புகார் அளிக்கவோ, வெளியில் சொல்லவோ முடியாமல், நஞ்சை விழுங்குவதுபோல் அனைத்தையும் உள்ளுக்குள் விழுங்கிக்கொண்டிருந்தான் வரதன். இந்த நிலையில் அடுத்த தோல்வியை அவனால் நிச்சயமாகத் தாங்கிக்கொள்ள முடியாது.
கலிங்கன் இந்த வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துவிட்டால், அடுத்தடுத்து ஒவ்வொருவராக அவனைத் தேடிப் போக ஆரம்பித்துவிடுவார்கள். அது அவனுக்குப் பெரும் அவமானம்.
எப்படியாவது இந்த வியாபாரத்தைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று முடிவெடுத்த வரதன், சூரியாவுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினான்.
*****
துரைமுகத்தின் பெருவெளியைக் கடந்து நள்ளிரவில் வெளியேறிய ராயனின் சரக்கு லொறி, அமைதியான நெடுஞ்சாலையில் உறுமிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது.
திடீரென இருளைக் கீறிக்கொண்டு பாய்ந்து வந்த இரு பெரிய ட்ரக்குகள், லொறியை முன்பின்னாக மறித்துச் சுற்றி வளைத்தன. இவர்கள் நிதானிப்பதற்குக் கூட இடம் கொடுக்காமல் படபடவென்று பாய்ந்து இறங்கி ஓடி வந்தவர்கள் கைகளில் இரும்புத் தடிகளுடனும், கூர்மையான ஆயுதங்களுடனும் லொறியைத் தாக்கத் தொடங்கினர்.
கலிங்கனுக்குத் தகவல் பறந்து வந்தது. இதை அவனும் எதிர்பார்த்துத்தான் இருந்தான். அதனால்தான் குறிப்பிட்ட தூரத்தில் அவன் லொறியை அவனே பின்தொடர்ந்துகொண்டிருந்தான். அதில் மின்னல் வேகத்தில் அங்கே வந்து சேர்ந்தான்.
காரை பிரேக் போட்டு நிறுத்தக் கூடச் செய்யாமல், ஓடும்போதே கதவைத் திறந்து குதித்தான். அவனது கண்கள் கோபத்தில் தகித்தன. கையில் கிடைக்கிறவர்களைத் துவம்சம் செய்யும் ஆவேசத்தில் அவன் நெஞ்சுத் தசைகள் துடித்தன.
எதிர்ப்பட்ட முதல் ஆளின் தலையில் இரும்பு ராடினால் ஓங்கி அடித்தான். ஒற்றை அடித்தான். பம்பரம்போல் சுழன்று அந்த இடத்திலேயே மூர்ச்சையாகி விழுந்தான் அவன்.
அதன் பிறகும் அவன் ஓயவில்லை. ஆதியும் ஆட்களோடு வந்துவிட, அவன் அடிகள் ஒவ்வொன்றும் இடிகளென எதிரிகள் மீது இறங்கிற்று.
அவன் காட்டிய ஆக்ரோசத்தில் எதிரிகள் நிலைகுலைந்தனர். யாராலும் அவனைச் சமாளிக்க முடியவில்லை. யாரோ ஒருவன் அவனைப் பின்னிருந்து தாக்க முயல, அவன் கையைப் பிடித்து முறித்துவிட்டுத் தன் காலால் நெஞ்சில் எட்டி மிதித்தான்.
அந்தத் தார்ச்சாலை முழுவதும் இரத்தம் தெறிக்கத் தொடங்கியது. மிரண்டுபோன வரதனின் ஆட்கள் அடிவாங்கிக்கொண்டு திசைக்கு ஒருவராக ஓடத் தொடங்கினர்.
அங்கே விசிரிக் கிடந்த மண்ணெண்ணெய்க் கேன்களைக் கண்டு அவனைப் போலவே திட்டமிட்டிருக்கிறார்கள் என்று புரிந்து ஆத்திர முறுவல் ஒன்று அவனிடத்தில் சீறிக்கொண்டு வந்துபோயிற்று.
“விடக்கூடாது அண்ணா. இனியும் விடவே கூடாது!” இன்னும் யாராவது இருக்கிறார்களா என்று தம்மைச் சுற்றி ஆராய்ந்துவிட்டு வந்த ஆதி சொன்னான்.
அவனுக்குப் பதில் சொல்லாமல், லொறியின் டிரைவர் கேபின் சென்று பார்த்தான் கலிங்கன். ஓட்டுநர் மயங்கிக் கிடந்தார். அவர் தலையிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. அவரைக் கவனிக்கும்படி ஆதியிடம் சொல்லிவிட்டு, லொறி சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை சுற்றிவந்து ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டான்.
ஓட்டுநர் இப்போதைக்கு வாகனம் செலுத்தும் நிலையில் இல்லை என்று தெரிந்தது. அவரை ஆதியோடு அனுப்பிவிட்டுத் தானே ஏறி அமர்ந்தான்.
சற்றுமுன் அப்படியொரு கோரத்தாண்டவம் நடந்ததா என்று நம்ப முடியாத அளவிற்கு அந்தத் துரைமுகச் சாலை மீண்டும் அமைதியானது.
அந்த நடுநிசியில் ரத்தக் கறையுடன் லொறியை சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்த ராயனின் மூச்சின் சூடு மட்டும் அடங்குவதாக இல்லை. அந்த லொறியின் கண்களைப் போலவே அவன் விழிகளும் ஆத்திரத்தில் ஆவேசத்திலும் பளபளத்தன.

