அத்தியாயம் 29
திடீரென்று சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், யூடியூப் சேனல்கள் என அனைத்தும் பெரும் பரபரப்புக்குள்ளாகின.
காரணம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், வரதனுக்குச் சொந்தமான ஹோட்டல்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தத் தொடங்கியிருந்தார்கள்.
அத்தனை ஹோட்டல்களின் முன்னாலும் பெரும் பரபரப்பு. காவல்துறை வாகனங்களின் சைரன் ஒலிகள் காற்றைக் கிழித்தன. அவற்றின் சிவப்பு நிற எச்சரிக்கை விளக்குகள் தொலைக்காட்சித் திரைகளில் மின்னி மின்னி மறைந்தன.
அதேநேரம், கலிங்கராயன் கசியவிட்டிருந்த அந்த வீடியோவும் இடைவிடாமல் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
அப்படி, தொலைக்காட்சித் திரையில் மாறி மாறி வந்துகொண்டிருந்த செய்திகளையும் காட்சிகளையும், தனக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்த ஆத்திரத்தையும் அழுத்தத்தையும் வெளிக்காட்டாமல், சிலை போன்று அமர்ந்திருந்து கவனித்துக்கொண்டிருந்தான் வரதன்.
இந்தச் சோதனை நடக்கப்போகிறது என்கிற செய்தி அவர்களுக்கு முன்கூட்டியே வந்திருந்தது. அதனால், அங்கிருந்த போதைப்பொருட்கள் அனைத்தும் ஏற்கெனவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தன. சந்தேகத்துக்கு இடமளிக்கக் கூடிய தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.
அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தவர்களும் வரதனைப் போலவே பெரும் பதற்றத்தில் இருந்தார்கள்.
அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சமூகத்தில் உயர்ந்த பதவிகளிலும், அதிகாரம் மிக்க பொறுப்புகளிலும், செல்வாக்கான இடங்களிலும் இருப்பவர்கள்.
ஏற்கனவே இத்தனை காலமாகக் கட்டியெழுப்பியிருந்த அவர்களுடைய மானம் மரியாதை, நற்பெயர், கௌரவம், அதிகாரம் அத்தனையும் ஒரே நாளில் ஆட்டம் கண்டிருந்தது.
வீட்டில் மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர் என்று யார் முகத்திலும் விழிக்க முடியா நிலை.
அப்படியிருக்க வரதனின் ஹோட்டல்களில் ஏதாவது ஒரு சிறிய தடயம் கிடைத்துவிட்டால் கூட, அதன் பிறகு என்றைக்குமே அவர்களால் தலை நிமிர முடியாமல் போய்விடும்.
ஆக, அந்த வீடியோ உண்மையானது இல்லை என்று சும்மீவேனும் சொல்லிச் சமாளிப்பதற்கு அவர்களிடம் இருக்கிற ஒரே வழி, அந்த ஹோட்டல்களில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நிரூபிப்பதே.
அதுவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மூலமாக அறிவிக்க வேண்டும்.
அதனால், அவர்கள் இதை தங்களுடைய பிரச்சனையாகப் பார்த்தார்கள். வரதனோடு சேர்ந்து தங்களுக்கிருந்த அரசியல் செல்வாக்கு, அதிகாரத் தொடர்புகள், பணபலம் என அனைத்தையும் களத்தில் இறக்கினார்கள்.
யாருடைய பலவீனத்தைத் தொட்டால் அவர்கள் பணிவார்கள், யாருக்கு ஆசை காட்டினால் காரியம் சாதிக்கலாம், யாரை அதிகாரத்திலிருந்து அகற்றினால் தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதையெல்லாம் முன் கூட்டியே கூடிப் பேசிச் செய்தார்கள்.
அதிகாரத்தின் அத்தனை கரங்களும் ஒன்றாக இணைந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் செயல்பாட்டை முடக்கின. நேர்மையாக விசாரணை நடத்த நினைத்தவர்களுக்குப் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன.
எந்த விலையைக் கொடுத்தாவது வரதனின் ஹோட்டல்களில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்ற ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பெற வேண்டும் என்பதே அவர்களுடைய ஒரே நோக்கமாக இருந்தது.
அவர்கள் எதிர்பார்த்தபடியே சோதனையும் முடிவுக்கு வந்தது.
இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், வரதனின் ஹோட்டல்களில் முழுமையான சோதனை நடத்தப்பட்டதாகவும், அங்கே போதைப்பொருட்களோ, வீடியோவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தக்கூடிய தடயங்களோ கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்கள்.
அந்த அறிவிப்பு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான மறுகணமே, இத்தனை நேரமும் பதற்றத்தில் தவித்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
இதைத்தான் சொல்வார்கள் என்று தெரியும். ஆனாலும் அவர்கள் அப்படிச் சொல்கிற வரையில் இவர்களுக்கு மூச்சே விட முடியவில்லை.
இப்போதுதான் ஆசுவாசமானார்கள். ஆபத்து தற்காலிகமாக விலகிவிட்டதாக நிம்மதியடைந்தனர். இத்தனை நேரமாக அருந்தப்படாமல் கிடந்த மதுக்குவளைகளை எடுத்து, ஒருவருக்கொருவர் குவளைகளை உயர்த்தி ‘சியர்ஸ்’ சொல்லிவிட்டு அருந்தத் தொடங்கினார்க
வரதனுக்கு மட்டும் அந்த ஆசுவாசம் கிடைக்கவில்லை.
அவன் திரையை நோக்கி நடந்தான். திரையில் அதிகாரி பேசி முடித்திருந்தாலும் அவனது மனக் கண்ணில் கலிங்கராயன் வெளியிட்ட அந்த ஒற்றை வீடியோவே திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.
எதை மறைத்தாலும் வயிற்றுப் பிள்ளையை மறைக்க முடியாது என்பார்கள். அதை போன்று சட்டத்தையும் அதிகாரத்தையும் பணத்தால் விலைக்கு வாங்கிவிட்டான். போலீஸின் அறிக்கையைத் தனக்குச் சாதகமாக மாற்றியும் விட்டான். ஆனால், இணையத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவிவிட்ட அந்த வீடியோவை அவனால் என்ன செய்தும் அழிக்க முடியவில்லையே!
சோதனையில் எதுவுமே கிடைக்கவில்லை என்று காவல்துறை சொன்ன பிறகும், “அப்ப வீடியோல இருக்கிறது பொய்யா?” என்கிற மக்களின் கேள்வி அடங்கியபாடாக இல்லை.
*****
அன்றிரவு கலிங்கன் கப்பலில் தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு, வருணாவையும் அழைத்துக்கொண்டு கரைக்குத் திரும்பினான். அவளுக்கு அந்தக் கடலையும் கடற்கரையையும் விட்டுவிட்டு வரவே மனமில்லாமல் போயிற்று.
இத்தனை நாட்களாக அடைந்து கிடந்ததா, மனத்தளவில் அனுபவித்த வேதனைகளும் போராட்டங்களும் காரணமா தெரியவில்லை. அந்தச் சில மணி நேரத்தை அனுபவித்து மகிழ்ந்திருந்தாள்.
மீண்டும் வீட்டுக்குள் சென்று அடைந்துகொள்ள அவளுக்கு விருப்பமே இல்லை.
ரேஞ்ச் ரோவரில் ஏறி அமர்ந்ததும், காரைக் கிளப்பிய கலிங்கனைப் பார்த்து, “கலிங்கா, ஒரு லோங் ட்ரிப் போவமா?” என்று கேட்டாள்.
துறைமுகப் பகுதியிலிருந்து காரை மிக லாவகமாக வெளியே எடுத்துக்கொண்டிருந்தவன், சிறு புன்னகையுடன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“எனக்குத் திரும்பவும் போய் அந்த அறைக்க அடைய விருப்பமே இல்லை.”
அவள் முகத்தையும் அதில் தெரிந்த செல்லப் பாவனையையும் தனக்குள் உள்வாங்கிவிட்டு, அளவான வேகத்தில் ரேஞ்ச் ரோவரைப் பிரதான வீதிக்கு ஏற்றி, வேகம் கூட்டினான் அவன்.
பொழுது விடியத் தொடங்கியிருந்த அந்த நேரத்தில் சாலைகளில் பெரிதாக வாகனப் போக்குவரத்து இருக்கவில்லை. கும்மிருட்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளிர்ந்துகொண்டிருந்த தெருவிளக்குகள். முகத்தில் மோதிய குளிர்ந்த காற்று, சீரான வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த கார் என்று வித்தியாசமான உணர்வில் மிதந்துகொண்டிருந்தாள் வருணா.
இருக்கையை நன்றாகப் பின்னால் தள்ளிச் சரித்துவிட்டு, கால்களை டாஷ்போர்டின் மீது தூக்கி வைத்துக்கொண்டு, அந்தப் பயணத்தை அனுபவித்தாள்.
கலிங்கனும் அவளும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கடலில் கடந்து போன அழகான பொழுதும், இப்போது கடந்து கொண்டிருந்த அமைதியான பொழுதும் அவர்களின் உள்ளத்தில் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்தன.
சுகமான தாலாட்டுப் போல, இதமான பாடல் போல, வார்த்தைகளில் வடிக்க முடியாத ஏதோவொரு நிம்மதியும் நிறைவும் அவர்களுக்குள் நிறைந்திருந்தன. அந்த உணர்வில் திளைத்தபடியே பயணித்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் கலிங்கன் திரும்பி அவளைப் பார்த்தான்.
ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள். வேண்டாம் என்று அவள் மறுத்த அவனுடைய ஜாக்கெட் இன்னும் அவளை மூடியிருக்க, அதன் பொக்கெட்டுகளுக்குள் இரு கைகளையும் நுழைத்துக்கொண்டு, குழந்தையைப் போல உறங்கிக்கொண்டிருந்தாள்.
அதற்குப் பிறகு அவன் வேகத்தைக் கூட்டவில்லை. மிதமாகச் சென்று வீட்டின் முன்னால் காரைக் கொண்டுவந்து நிறுத்தினான். அவளை எழுப்பவே மனமில்லை.
அந்தளவுக்கு எந்தவிதமான யோசனைகளும் இல்லாமல், நிம்மதியாகவும் அமைதியாகவும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் அவள்.
கடற்காற்றில் பயணித்ததன் விளைவாக அவளுடைய கூந்தல் முழுவதும் கலைந்து முகத்தில் விழுந்து கிடந்தது. அதை ஒற்றை விரலால் ஒதுக்கிவிடப் போனவன், தன்னைத் தொடக்கூடாது என்று அவள் சொன்னது நினைவுக்கு வரவும் சட்டென்று தன் கையை இழுத்துக்கொண்டான்.
“வருணா!” என்றான் அவளை எழுப்பும் விதமாக.
அவள் எழுவதாக இல்லை.
“வரு!” என்று மீண்டும் அழைத்தான்.
அவளிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. விழித்திருந்த நேரத்துக்கெல்லாம் சேர்த்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
சிறு புன்னகையுடன் அவளுடைய கையில் மெல்லத் தட்டினான். அப்போதுதான் மெதுவாக விழிகளை மலர்த்தினாள்.

