அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான். அடுத்த நொடியே அவன் முகம் மாறிப்போனது. கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள் நிலா.
“நீ போ வாறன்!” என்றுவிட்டு அங்கேயே காரை நிறுத்தி இறங்கினான் அவன்.
அவன் எப்படிப் போவானாம் என்று கேட்பதற்குக் கூட வழியற்று, வந்த பாதையில் திரும்பி ஓடத் தொடங்கியிருந்தான் அவன். இதற்கு அவளோடு போயிருக்கலாம் இவன் என்று அவள் நினைத்து முடிக்க முதல், எதிரில் வந்த ஒரு பைக்காரனை தடுத்து நிறுத்தி, அவனோடு இவன் ஏறிப் போவது தெரிந்தது.
‘அண்ணாவுக்கு ஏதுமோ?’ தன்னை அவன் தவிர்த்துவிட்டுப் போவதிலேயே அவள் உள்ளம் கண்டுகொண்டது.
இருக்கையின் பின்னால் சாய்ந்த நிலாவின் மனத்தில் கலக்கமும் குழப்பங்களும் நிறைந்து வழிந்தன. ஒரு நொடி ஏன் இதெல்லாம் என்று யோசித்தாள். மறுகணம் விழிகளை இறுக்கி மூடித் தனக்குள் கிளம்பும் உணர்வுகளை அடித்து மூடினாள்.
கலிங்கராயன் சொல்வது அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால்… இன்னும் என்னென்ன நடக்கப்போகிறது என்கிற பயம் அவள் நெஞ்சைச் சூழ்ந்தது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை நிலைதான் அவள் நிலை. கண்ணோரம் கசிந்த கண்ணீரை ஒற்றை விரலால் சுண்டி விட்டுவிட்டு, நகரும் வீதியில் பார்வையைப் பதித்தாள்.
ராயன் அவனுடைய கொடவுனுக்குச் சென்று சேர்ந்தபோது அந்த இடமே பெரும் சேதத்திற்கு உள்ளாகியிருந்தது. அது போதாதென்று அவனது மூன்று பெரிய கன்டெய்னர் லொறிகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தன. அதைக் கண்டு அதிர்ந்துபோனவன் உடனடியாகச் சூர்யாவைத் தேடினான்.
“அண்ணாக்கு காயம். உள்ளுக்க இருக்கிறார்.” அவனது ஆட்களில் ஒருவன் ஓடி வந்து மூச்சிறைக்கச் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோனான்.
“சீரியஸா?”
“இல்ல… ஆனா கால்…”
“அவனுக்கு அப்பிடியாகிற வரைக்கும் நீங்க எல்லாம் என்னடா கிழிச்சுக்கொண்டிருந்தனீங்க?” என்று உறுமியவன் சூர்யாவைத் தேடி ஓடினான். அங்கே அவன் காலைப் பற்றிக்கொண்டு வலியில் துடித்துக்கொண்டிருந்தான். ஒற்றைப் பார்வையில் அவனை அளந்த ராயன், அவனைத் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடினான்.
அது ஒரு தனியார் வைத்தியசாலை. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நவீன வசதிகளுடன் இயங்கும் சாதாரண வைத்தியசாலையாகத் தெரிந்தாலும், அதன் நிர்வாகம் கலிங்கராயனின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவனுடைய ஆட்களுக்கு ஏதாவது நடந்துவிட்டால், அவர்கள் நேராக இங்கேதான் கொண்டுவரப்படுவார்கள்.
அவனைக் கண்ட நொடியே வரவேற்புப் பகுதியில் இருந்த பணியாளர்கள் பரபரப்படைந்தார்கள். அடுத்த நிமிடமே சூர்யா உள்ளே எடுக்கப்பட்டான். வைத்தியர் அவனிடம் விரைந்தார்.
அங்கிருந்த பணியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைத் தாமதமின்றிச் செய்தார்கள். கலிங்கராயன் அருகில் நின்றிருந்ததால் மட்டுமல்ல, அவனுடைய ஆட்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் எந்த விதமான அலட்சியமும் இருக்கக்கூடாது என்பது அங்கிருந்த அனைவருக்குமான எழுதப்படாத சட்டம்.
வெளியே நின்ற ராயன் ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் அடக்க முடியாமல் நின்றான். கூண்டுப் புளியைப் போன்று அந்தக் கொரிடோரில் நடந்துகொண்டிருந்தவனைக் கடந்தவர்கள் மெல்லிய பயத்துடனேயே அவனைக் கடந்தார்கள். அந்தளவில் இறுகிப்போயிருந்தது அவன் முகம்.
சூர்யா அடிபட்டிருக்கிறான். சரக்குகளோடு மூன்று லொறிகள் என்கையில் கோடிகளில் நாட்டம். அந்த சரக்குகளுக்கு உரியவர்களிடம் பதில் சொல்ல வேண்டும். இது எல்லாவற்றையும் விட அவன் எல்லைக்குள் நுழையும் தைரியம் வரதனுக்கு வந்திருக்கிறது. அதுதான் அவனை உருமா வைத்தது.
பதிலடி கொடுத்தேயாக வேண்டும். கொடுத்தேயாக வேண்டும். அதற்கு முதல் ஆதிக்கு அழைத்து உடனடியாக அவன் பார்க்க வேண்டிய வேலைகளை உத்தரவிட்டுவிட்டு வைத்த பிறகும் அவன் சினம் அடங்குவதாக இல்லை.
இதற்குள் சூர்யாவுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் அவனைத் தேடி வந்தார். அவன் முகத்தில் தெரிந்த ரவுத்திரத்தில் அவர் அப்படியே நின்றுவிட, “என்ன?” என்றான் அவன்.
அவன் என்னவோ குரலை உயர்த்தாமல் நிதானமாகத்தான் கேட்டான். அந்தப் பார்வையும் அந்தக் குரல் அமைதியாக ஒலித்த விதமும்தான் அவரின் முள்ளந்தண்டைச் சில்லிட வைத்தது.
“அது… எக்ஸ்-ரே எடுத்துப் பாத்தவங்க. நல்ல காலம் எலும்பு எதுவும் முறியேல்ல. ஆனா, கணுக்காலுக்கு மேலே நல்ல அடி. குறைஞ்சது ஒரு கிழமைக்காவது காலுக்கு அழுத்தம் குடுக்கக் கூடாது.”
“வேற ஏதாவது?”
“மற்றது எல்லாம் சின்ன சின்ன காயங்கள்தான். ரெண்டு நாளில சரியாகிடும்.”
அவர் சொன்னவற்றை எல்லாம் கேட்டுவிட்டு சூர்யாவின் அறைக்குச் சென்றான். படுக்கையில் காலைக் கொஞ்சம் உயர்த்தி வைத்திருந்த சூர்யா, அவனைப் பார்த்ததும் மெல்லப் புன்னகைத்தான்.
“இப்பிடித்தான் கவனமில்லாம இருப்பியாடா?” அவனுக்கு அருகிலிருந்த இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்துகொண்டு அதட்டினான்.
இத்தனை விரைவாக இன்னொரு மோதலுக்கு வரதன் வருவான் என்று எதிர்பாராததில் கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டான் சூர்யா.
அதைவிட அன்றைக்குத் துறைமுகத்தில் சரக்குகள் வந்து இறங்கும் நாள். அதில் அவர்களின் ஆட்கள் பெரும்பான்மையானவர்கள் அங்கே சென்றிருந்தார்கள். நம் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குள், நம் காவலைத் தாண்டி யாராலும் வரமுடியாது என்று அவன் நினைத்திருக்க, அவன் நினைப்பைப் பொய்யாக்கிக்கொண்டு வரதனின் ஆட்கள் உள்ளே ஊடுருவியிருந்தார்கள்.
திடீரென்று லொறி ஒன்று பற்றி எறியவும் முதலில் அதை விபத்து என்றுதான் நினைத்தான் சூர்யா. அவன் அங்கே ஓட, அதன் பின்னே மறைந்து நின்றிருந்தவர்கள் தாறுமாறாகத் தாக்கியதில் தடுமாறிப்போனான்.
யாரோ அவனைப் பின்னிருந்து தாக்கியிருந்தார்கள். அவனும் கடுமையாகத்தான் திருப்பித் தாக்கினான்தான். என்றாலும் அவன் காலில் பலத்த அடி. காயமும் பட்டிருந்தது. அவன் நிலைமையைச் சமாளிப்பதற்குள் அத்தனையும் நடந்து முடிந்திருந்தன.
“உனக்கு எத்தினை தரம் சொல்லியிருக்கிறன், எப்பவும் விழிப்பா இருக்கப் பழகு எண்டு!” நடந்தவற்றை அறிந்துகொண்டு அதட்டினான் ராயன்.
“விடு மச்சான். பெருசா ஒண்டும் இல்லைதானே.” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் உள்ளே நுழைந்தாள் நிலாவினி.
என்னிடம் சொன்னதை அவளிடம் சொல்லு என்பதுபோல் பார்த்துவிட்டு, நாற்காயில் சாய்ந்து அமர்ந்துகொண்டான் கலிங்கராயன்.
நிலாவினி ராயன் பக்கம் திரும்பவே இல்லை. “போதுமா அண்ணா? அண்டைக்கு அவர். இண்டைக்கு நீ. நாளைக்கு நானா?” என்று அவள் கேட்டு முடிக்க முதலே, “நிலா!” என்று இரண்டு ஆண்களின் குரலும் அதட்டின.
“சும்மா நீங்க அதட்டினா மட்டும் எதுவும் நடக்காமப் போகாது. அதான் நடக்கும். அதுக்குப் பிறகு ரெண்டு பேரும் நிம்மதியா இருங்க. ஆனா ஒண்டு, எனக்கு ஒரு ஆபத்து வந்தா நல்லா வரட்டும் எண்டு பேசாமத்தன் இருப்பன். உங்க ரெண்டு பேருக்கும் சொல்லவே மாட்டன்.” என்றுவிட்டு வந்ததை விடவும் வேகமாக வெளியேறிப் போனாள்.
ஆண்கள் இருவராலும் பேசவே முடியவில்லை. முதலில் என்ன பேசுவது? “விடு மச்சான். அவள் சொல்லாம இருக்கிறதுக்கு நாங்க என்ன அவளைத் தனியாவா விடப்போறம்?” என்றான் சூர்யா.
இதற்குள் ஆதியிடமிருந்து ராயனுக்கு அழைப்பு வந்தது. “அண்ணா, கோடவுனுக்கு போலீஸ் வந்திருக்கு.”
ஒன்றுக்கு மூன்று லாரிகள் சரக்குகளோடு எரிந்திருக்கையில் வராமல் இருக்க மாட்டார்கள். இனி அவர்களையும் சமாளிக்க வேண்டும். எழுந்து அங்கு புறப்பட்டான் ராயன்.

