கலிங்கனின் காவியம் 30.1

அத்தியாயம் 30

மெல்லிய மரகதப் பச்சை நிறப் பாட்டுக்குத் தங்க நிற ஜரிகை வேலைப்பாடுகளுடன் இருந்த சேலையில் தயாராகிப் வந்த வருணாவைக் கண்டு அப்படியே நின்றான் கலிங்கராயன். அதுவும் பட்டுச் சேலையின் முந்தானையை ஒரு கையால் பற்றியபடி, ஒவ்வொரு படியாக அவள் காலடியாக எடுத்து வைத்து வந்தபோது, என்னவோ தனக்குள்ளேயே வருவது போலொரு தோற்றம் அவனுக்கு.

அன்றைக்கு வைரவர் கோயில் திருவிழா. சேலை அணிந்துகொள்ளும்படி அவன்தான் சொல்லியிருந்தான். இன்னும் சொல்லப்போனால் இங்கே அவளிடம் சேலை இருக்காது என்று தெரிந்து, அவன் வாங்கிய அந்தச் சேலைக்கு அவள் அன்னையைக் கொண்டு பிளவுஸ் தைப்பித்து எடுத்து வந்தது எல்லாமே அவன்தான்.

ஆனாலும் அவள் உடலை அந்தச் சேலை இத்தனை பாந்தமாய்த் தழுவி நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கழுத்தில் அவன் அணிவித்த தாலிக்கொடி, அதனோடு கூடவே சேலைக்குப் பொருத்தமான முத்துக்கள் தொங்கும் ஆறாம், ஜிமிக்கி, கைகளில் காப்பு என்று இருந்தாள் அவள்.

அவனும் வேட்டி சட்டையில்தான் இருந்தான். உள்ளே வியப்புடன் அதைக் கவனித்தாலும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தாள் அவள்.

தாய் தந்தையரைப் பார்க்க ஏற்பாடு செய்யவில்லை என்கிற கோபம் அவளுக்கு. கைப்பேசியில் பேசு என்றுவிட்டான் அவன்.

கடைசியில் அப்படித்தான் பெற்றோருடன் உரையாடியிருந்தாள். அவன் சொன்னது போலவே, மதியழகனுக்குக் கல்லூரியில் அலுவலக ரீதியாகப் பிரச்சனைகளோ, சங்கடங்களோ ஏற்படவில்லை என்பதை அறிந்து நிம்மதியடைந்தாள்.

ஆனால், அது எப்படி ஒரு சிறு விசாரணை கூட இல்லாமல் முடிவுக்கு வந்தது, அதற்காக இவன் என்ன செய்தான், யாருடைய கழுத்தில் கத்தியை வைத்தான், இவன் நேர்வழியில் எதையும் செய்திருக்கப் போவதில்லையே என்று பல கேள்விகளும் குழப்பங்களும் அவளுக்குள் எழுந்தன.

அதோடு, அந்தக் கைப்பேசி கையில் கிடைத்ததும், பெற்றோர் மூலமாக அவளுக்குத் தெரியவந்த விடயங்களும் சேர்ந்து அவளைப் பழையபடி வேதனையுற வைத்தன.

அவள் பற்றிய பேச்சு ஓரளவுக்கு அடங்கியிருந்தாலும் அவள் பெயர் கெட்டுப்போனது கெட்டுப்போனதுதான்.

வரதனின் ஹோட்டலில் அன்று கலிங்கராயன் காட்டிய அந்தக் காணொளி, அதன்பிறகு அங்கு நடந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் சோதனை, அங்கே அப்படியொன்றும் இல்லை என்று அவர்கள் மறுத்துக் கூறியது என்று எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தவளுக்கு மிகுந்த வருத்தமாகப் போயிற்று. அப்படியானால் இதுவும் பொய்தானே? பிறகு ஏன் அதைக் காட்டி அவளிடம் வரதனைத் தவறானவனாகக் காட்ட முயன்றான்?

கூடவே, மாறன் எப்படி இருக்கிறான், அவன் குடும்பத்தினர் என்ன நிலையில் இருக்கிறார்கள், அவள் வேலை இனி என்னாகும், இப்படியே இன்னும் எத்தனை நாள்களுக்கு அடைந்து கிடப்பது, அவளைப் பற்றி என்ன யோசித்து வைத்திருக்கிறான் என்று ஓராயிரம் கேள்விகள் அவளுக்குள்.

அதைப் பற்றிப் பேசப்போனால் மட்டும் இறுக்கமாகிவிடுவான்.

அதுமட்டுமன்றி, அவள் எத்தனையோ முறை அழைத்தும் அவன் வைத்தியசாலைக்குப் பரிசோதனைக்காக வரவும் இல்லை. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவளை மறுபடியும் அவனிடமிருந்து விலகி நிற்க வைத்திருந்தன.

வீட்டை விட்டு வெளியே வந்தால் ஆதி உட்பட அவனுடைய ஆட்கள் அனைவரும் வேட்டி சட்டையில்தான் இருந்தார்கள். அவள் காரை நெருங்கியதும் வழக்கம்போல ரேஞ்ச் ரோவரின் கதவைத் திறந்துவிட்டான் கலிங்கராயன்.

“எனக்குக் கை இருக்கு!” என்றாள் அவள்.

“தெரியும். ஆனா, உனக்குச் செய்றதுல எனக்கு ஒரு குறையும் இல்ல.” அவள் கோபத்தைக் குறைக்க முயலும் சிறு முறுவலுடன் சொல்லிவிட்டு, ஏறு என்று கையால் காட்டினான் அவன்.

அவனை முறைத்துவிட்டு ஏறி அமர்ந்தாள் அவள்.

அவர்களின் கார் புறப்பட, அங்கே நின்றிருந்த மற்றைய கார்களில் அவன் ஆட்கள் பின்தொடர்ந்தார்கள்.

திரும்பி அவளைப் பார்த்தான். அதே இறுக்கத்தோடுதான் அமர்ந்திருந்தாள். அவன் பாதையில் கவனம் வைத்தான். இதேபோன்றதொரு பயணத்தை நடுநிசியில் அவனும் அவளுமாகச் செய்திருக்கிறார்கள். அப்போதும் இருவரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை. அவள் உறங்கியிருக்க அவன் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

ஆனாலும், அன்றைய மௌனத்திற்குள் அவர்களுக்கிடையிலான நெருக்கம் இருந்தது. சொல்லத் தெரியாத இதமானதொரு மனநிலை இருந்தது. ஒருவர் மீது மற்றவருக்கு வார்த்தைகளால் வடித்துவிட முடியாத ஈர்ப்பு, உரிமை, நெருக்கம் எல்லாம் இருந்தன.

ஆனால், இன்றைய பயணம் அப்படியல்ல. இருவரும் அருகருகே இருந்தும் வெகு தொலைவில் இருப்பதுபோலத் தோன்றியது. ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தவன், மீண்டும் பார்வையைச் சாலையில் பதித்தபடி, “சாறி பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

அவள் அவன் கேள்வி காதில் விளைவே இல்லை என்று அமர்ந்திருந்தாள்.

“வடிவா இருக்கு.” என்றான் அவன் திரும்பவும்.

அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள். “இப்ப என்ன, நீங்களும் வேட்டி சட்டையில வடிவா இருக்கிறீங்க எண்டு சொல்லோணுமா?” என்று கேட்டாள்.

அவனது இதழோரம் மெல்லிய புன்னகை. “எனக்கு நீ வடிவா இருந்தாலே போதும்.” என்றான் சுருக்கமாக.

அவன் இயல்பாகச் சொன்ன அந்த வார்த்தைகளில் இருந்த ஏதோ ஒன்று அவளை என்னவோ செய்தது. முன்னர் போன்று முற்றிலுமாக அவனை வெறுக்கவும் முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் அவளை இளக்க ஆரம்பித்திருந்தன. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மீண்டும் பார்வையை வெளியே திருப்பிக்கொண்டாள்.

சற்று நேரம் கழிந்ததும், “எனக்கு எங்கட வீட்ட போகோணும்.” என்று ஒருவிதப் பிடிவாதம் குரலில் துலங்கச் சொன்னாள் அவள்.

அவன் அமைதியாகிவிட்டான்.

பொதுவாகவே அவன் பேசுவது குறைவுதான். எதையும் செயலில்தான் காட்டுவான். இல்லையா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நேராகச் சென்று அவள் உள்ளத்தின் ஆழத்தில் அமர்ந்துகொள்ளும். இத்தனை நாள்களில் அவனைப் பற்றி அவள் அறிந்துகொண்டது இது.

இந்த விடயத்தைப் பற்றி அவள் பேசினால் இன்னும் அழுத்தமான அமைதிக்குள் சென்றுவிடுவான். அவனிடமிருந்து ஒரு வார்த்தை கூடப் பிடுங்க முடியாது.

இன்றும் அதே அழுத்தமான மௌனத்தை அவன் கடைப்பிடிக்கவும் அவளால் பொறுக்க முடியவில்லை.

“இன்னும் எத்தினை நாளைக்கு என்னை இப்படியே வச்சிருக்கப் போறீங்க? எனக்கு விசர் பிடிக்கும் போல இருக்கு. வெளில என்ன நடக்குது எண்டே தெரியேல்ல. நான் உயிரும் உணர்வும் உள்ள ஒரு பொம்பிளை கலிங்கன். கொஞ்சமாவது யோசிச்சு நடங்க. எனக்கு என்ர வீட்ட போகோணும். என்ர அம்மா அப்பாவப் பார்க்கோணும். அம்மான்ர கையால சாப்பிடோணும். என்ர அறையில படுக்கோணும். எனக்குக் கொஞ்சம் நிம்மதி வேணும். கலிங்கா, தயவு செய்து என்னை விட்டுடுங்க.” பொறுமைகளெல்லாம் முற்றாகத் தீர்ந்துபோனவளைப் போன்று கொட்டித் தீர்த்தாள்.

அவனோ வாகனம் செலுத்துவதில் மட்டுமே கவனமாக இருந்தான். அவளுக்கு இன்னும் ஆத்திரமாக வந்தது.
“கலிங்கா, நான் சொல்லுறது விளங்குதா இல்லையா? பதில் சொல்லுங்க. கோயிலுக்குப் போயிற்று வரேக்கயாவது என்னைக் கொண்டு போய் விடுறீங்களா?” என்று கேட்டாள்.

அப்போதும் அவன் எதுவும் பேசுவதாக இல்லை என்றதும் அவளுக்கு ஆத்திரத்தோடு அழுகையும் சேர்ந்து வந்தன. “கொடுமை செய்றீங்க கலிங்கா. என்னைப் போட்டு வதைக்கிறீங்க. கடைசில பைத்தியமாத்தான் அலையப்போறன் பாருங்க! அதுக்குப் பிறகு நிம்மதியா இருப்பீங்க!” என்று வெடித்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

கனத்த மௌனமான பயணத்தின் பின்னே, “அந்தக் கோயில் ரெண்டு ஊருக்குப் பொதுவானது. அதால நிறையச் சனம் வருவினம். பயந்திடாத.” என்று சொன்னான் அவன்.

“ஒரு ரவுடி உங்களோடயே இருக்கிறானாம். அப்பாவிச் சனத்தைப் பாத்து எனக்கு என்ன பயம்?” என்று இருந்த ஆத்திரத்தில் சீறினாள் அவள்.

அவன் முகத்தில் பெரும் இறுக்கம் படர்ந்தது. கொஞ்ச நேரத்தில் ஒரு இடத்தில் கொண்டுபோய் காரை நிறுத்தினான். “கை இருக்கு எண்டு கதவைத் திறந்திடாத!” என்றுவிட்டு வந்து அவள் பக்கக் கதவைத் திறந்தான்.

error: Alert: Content selection is disabled!!