கலிங்கனின் காவியம் 31.1

அவனை வெட்டியது யார்? எதற்காக வெட்டினார்கள்? தனக்குப் பின்னால் என்ன நடந்தது? முதலில் இது அவனுக்கு விழவிருந்த வெட்டா?

ஒன்றன்பின் ஒன்றாகக் கேள்விகள் அவளுடைய மூளைக்குள் மோதின. அப்போதுதான் அந்தப் பயங்கரமான உண்மை அவளுக்குப் புரிந்தது.

அது அவனுக்கு விழவிருந்த வெட்டல்ல. அவளுக்கு. அவளைக் கொல்லப் பார்த்திருக்கிறார்கள். அது புரிந்த கணத்தில் அவளுக்குச் சுவாசம் தடைப்பட்டுப் போயிற்று. உடல் சில்லிட்டது.

அதுவே அவளுக்குப் பேரதிர்ச்சி. இதில் எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த வெட்டைத் தன் முதுகில் தாங்கி நிற்கிறவனைச் வெறித்துப் பார்த்தாள் வருணா.

யார் இவன்? இவனால்தான் அவளுக்கு இந்த நிலை. ஆனாலும் தன் உயிரைக் கூடப் பொருட்டு கொள்ளாமல் அவளைக் காக்கத் துடிக்கும் இந்தத் துடிப்பு ஏன்? அவளுக்காக இரத்தம் சிந்துகிறான். அவளுக்காக உயிரையும் கொடுக்க அவன் தயங்கவில்லை.

அவளுடைய விழிகள் அவன் முதுகில் வழிந்த இரத்தத்தையே வெறித்துப் பார்த்தன. மருத்துவரான அவள் எத்தனையோ காயங்களைக் கண்டிருக்கிறாள். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறாள். அறுவைச் சிகிச்சைகளையும் மேற்கொண்டிருக்கிறாள். அது வேறு.

ஆனால் இது?

மூச்சை உள்ளிழுக்கக்கூட முடியாமல் தொண்டைக்குழிக்குள் சுவாசம் சிக்கிக்கொண்டது. அவன் கன்னம் பற்றப்போனவளின் கால்கள் நடுங்கின. கண்கள் இருட்டிக்கொண்டு வர, “க…லிங்…கா!” என்றபடி கைகள் அவனைப் பற்றிக்கொள்ள காற்றில் அலைய, பொங்கல் பானையின் பக்கமாகச் சரிந்தாள்.

“வரூ…!” பதறிப்போய் அவளை அள்ளி அணைத்துக்கொண்டவன் அதே நேரத்தில் அந்தப் பெண்ணை ஒன்றும் செய்யாமல் அழைத்து மட்டும் செல்லும்படி ஆதிக்கு உத்தரவிட்டான்.

மழையில் நனைந்த கோழிக்குஞ்சைப் போன்று அவன் நெஞ்சோடு ஒண்டிக்கொண்டவளின் தேகம் இன்னுமே நடுக்கத்திலிருந்து மீளவில்லை.

கலிங்கராயனின் கார் ஆதியின் கையில் மின்னல் வேகத்தில் வைத்தியசாலையை நோக்கிப் பறந்துகொண்டிருந்தது. பின்னிருக்கையில் அவளைத் தன் மடியில் தாங்கியபடி அமர்ந்திருந்தான் கலிங்கராயன்.

முதுகில் வலி சுட்டெரித்தாலும், மயக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில், தன் மார்பில் சுருண்டு கிடந்தவளைப் பார்த்தபோது, அவனுக்குள் ஒருவிதமான திருப்தியும் இதமும் பரவின.

அவனுக்காக இப்படி ஒருத்தி இருக்கிறாள். அவன் வலியைத் தன்னுடைய வலியாக உணர்ந்து தவிக்கிறாள். அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற நினைப்பில் தன்னையே மறந்து மயங்கும் அளவுக்குச் சென்றிருந்தாள்.

அந்த உணர்வே அவனுக்குள் இதுவரை அறிந்திராத ஓர் இனிய நிறைவைத் தந்தது. வலியையும் மீறி அவனுடைய உதட்டோரத்தில் மெல்லியதொரு புன்னகை அரும்பிற்று.
அவளது தலையை மெதுவாகக் கோதிவிட்டவன், ஆதி இருக்கிறான் என்பதையும் மறந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

வருணா தலையை மாத்திரம் நிமிர்த்தி அவனைப் புரியாத பார்வை பார்த்தாள். அப்போதுதான் கலிங்கராயனின் முதுகுக்காயம் நினைவுக்கு வந்தது.

சட்டென்று நிமிர்ந்து அமர்ந்து, வேகமாக அவன் முதுகைப் பார்க்க முயன்றவள், பதற்றத்தில் சரியாகக் காயத்தின் மீதே கையை வைத்துவிட்டாள்.

“ஸ்…!”

அவனுடைய வலி நிறைந்த மெல்லிய முனகலில் கையை உடனே விலக்கிக்கொண்டாள்.

“ஐயோ! நோகுதா? சொறி சொறி சொறி!” என்று பதறினாள்.

“எனக்கு ஒண்டும் இல்ல வரு. சின்ன காயம்தான். நீ பயப்பிடாத!” அவளைச் சமாதானப்படுத்த முயன்றான் அவன்.

“சின்ன காயமா? நான்தான் பாத்தனே!” என்றவள் அவன் பேச்சைக் காதில் வாங்காமல், வேகமாக அவனுடைய சட்டைப் பட்டன்களைக் கழற்றத் தொடங்கினாள்.

கலிங்கன் இதை எதிர்பார்க்கவில்லை. சிரிப்பரும்ப, “வரு!” என்றான் அவள் கைகளைப் பற்றி நிறுத்தி.

“ப்ச் என்ன? விடுங்க!” அவன் கைகளைத் தட்டி விட்டுவிட்டு வேகமாக மிகுதி பட்டங்களையும் கழற்றி முடித்தாள்.

காயத்தை ஆராயத்தான் செய்கிறாள் என்று தெரியாமல் இல்லை. ஆனாலும் அவள் செயல் வேறு வகையில் அவனுக்குச் சிரிப்பை மூட்டின. ஆனாலும் அவள் அவசரத்தையும் பதற்றத்தையும் கண்டு, அவளுக்கு வசதியாகத் தன் உடலைத் திருப்பிக் கொடுத்து, சட்டையைக் கழற்ற உதவினான்.
உள் பெனியனையும் விலக்கி அவனுடைய முதுகைப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் திரண்டது. ஒரு கையளவுக்குப் பெரிய காயம்! ஏற்கனவே கத்திக்குத்து வாங்கிய உடம்பு வேறு.

“என்ன கலிங்கா இது?” அவளுடைய குரல் உடைந்தது. ஆனால் அடுத்த கணமே தன்னைச் சுதாரித்துக்கொண்டாள்.

அவனுடைய காயத்தை நெருங்கிப் பரிசோதித்தாள். இரத்தப்போக்கின் அளவைக் கவனித்தவள், அவன் சட்டையைக் கொண்டே காயத்தைச் சுற்றியிருந்த பகுதியை மெதுவாக அழுத்திப் பிடித்து, மேலும் இரத்தம் வெளியேறாமல் பார்த்துக்கொள்ள முயன்றாள்.

“ஆதி, கொஞ்சம் வேகமாகப் போங்க!” முன்னிருக்கையை நோக்கிப் பதற்றத்துடன் குரல் கொடுத்தாள்.

“கலிங்கா, என்னைப் பாருங்க. மயக்கம் வருதா? தலை சுத்துதா?”

அவளுடைய குரலில் தெரிந்த அவனுக்கான தவிப்பை உணர்ந்தபடி, வலியையும் மீறி அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அவள் பணிபுரியும் வைத்தியசாலை வந்ததும் அவனைக் கரம் பற்றி அழைத்துக்கொண்டு போனாள்.

அவனுக்கு அத்தனையும் புதிதாயிருந்தன. அவள் கையில் இழுபட்டுப் போவது நன்றாயிருந்தது. அவன் வாழ்க்கையில் முதன்முறையாக ஒருவரின் வழிநடத்தலில் நடக்கிறான்.

இதுவரை காலமும் அவனாகத்தான் பாதைகளை வகுத்தான். அவனாகத்தான் பாதைகளைக் கண்டெடுத்தான். அவனாகத்தான் ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டான். அவனாகத்தான் அத்தனையும் செய்தான்.

இன்றுதான் முதன்முதல் ஒருத்தி வழிநடத்த அவன் அவளின் பாதம் பின்தொடர்கிறான். அவளையே பார்த்தபடி நடந்தான். அவன் இதயம் அவள் காலடியில் உருகி கரைவதுபோல் ஒரு உணர்வு.

சிகிச்சைக்காக அவனை அமர வைத்தவள், அடுத்த கணமே முழுமையான மருத்துவப் பொறுப்புடன் அவனுடைய காயத்தைப் பரிசோதித்தாள்.

காயத்தைச் சுற்றியிருந்த இரத்தத்தைச் சுத்தம் செய்து, இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி, காயத்தின் ஆழத்தையும் திசுக்களின் பாதிப்பையும் பரிசோதித்தாள். தேவையான தையல்களைப் போட்டு, மருந்திட்டு சுத்தமான கட்டுப் போட்டாள்.

கலிங்கராயன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். சிகிச்சையின் பொது கட்டிலில் குப்புறப் படுக்கச் சொல்லி அவள் சொன்னபோது அவன் மறுத்திருந்தார். அவனுக்கு அவனுக்காக அவள் துடிக்கிற துடிப்பையும் தவிப்பையும் பார்க்க வேண்டுமாயிருந்தது.

இப்போதும் ஊசி ஏற்றும்போது அவளுடைய விரல்களில் தெரிந்த மெல்லிய நடுக்கத்தையும், உதடுகளைக் கடித்துக்கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்ட விதத்தையும், கண்ணீரை அடக்க முடியாமல் தவித்த அவளுடைய விழிகளையும் பார்த்துக்கொண்டிருந்தவனின் இதயம் மேலும் மேலும் உருகியது.

தனக்காக இத்தனை தூரம் தவிக்கிறாளா? தன் வலியைப் பார்த்து இவளுக்கு ஏன் இத்தனை வலி? அவன் பார்வையில் மெல்லியதொரு நேசம் படர்ந்தது. அவளோ அவனுடைய பார்வையை உணராதவளாக, “வலிக்குதா?” என்று கண்ணீரோடு கேட்டாள்.

ஒன்றுமே சொல்லாமல் அவளையே சில கணங்காலுக்குப் பார்த்தவன் அவளை மிக மென்மையாய் தன்னிடம் கொண்டு வந்து மடியில் அமர்த்தினான். அவள் கன்னம் தாங்கி, அவள் நெற்றியில் அழுத்தமாய் ஆழமாய் நிதானமாய் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு நிமிர்ந்து, விழிகள் இரண்டையும் சேர்த்துச் சிமிட்டிப் புன்னகைத்து அவள் கேள்விக்குப் பதில் சொன்னான்.

வருணா வியப்பா, அதிர்ச்சியா வெட்கமா என்று பிரித்தறிய முடியா உணர்வில் சிக்கி, அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.

error: Alert: Content selection is disabled!!