கலிங்கனின் காவியம் 33.1

அத்தியாயம் 33

மனத்துக்குள் புதைத்து வைத்திருந்த ஆத்திரத்தோடும் ஆவேசத்தோடும்தான் இத்தனை நாட்களாக நடமாடிக்கொண்டிருந்தான் மாறன். வேறு வழியில்லை, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியாது என்றுதான் வெளியில் வந்தான்.

வைத்தியசாலையில் அவன் கொஞ்சம் கெடுபிடியான வைத்தியன். அவனுடைய கண்டிப்புக்கும் கோபத்துக்கும் பயந்து அடங்கிப்போகிறவர்கள் பலர். அப்படியிருக்க, அவனுடைய திருமணம் இப்படி நடந்ததும், அது ஒரு கேலிப்பொருளாக மாறிக் காணொளிகள் பல வெளியே பரவியதும், மணப்பெண்ணே அவனைப் பிடிக்காமல் ஒரு கட்டாயத்தின் பெயரில்தான் மணமேடை எறியதாகச் சொன்னதும் அவனை முற்றிலுமாகக் கூனிக்குறுக வைத்திருந்தன.

அவனை நேரடியாக எதிர்கொள்ள முடியாத பலருக்கும் அவன் முதுகின் பின்னே பேசிச் சிரிக்க இது பெரும் வாய்ப்பாயிற்று.

வெளியே வழக்கம் போன்று கண்டிப்பான வைத்தியநாத நடமாடினாலும், உள்ளுக்குள் அவமானத்தை விழுங்கவும் முடியாமல், ஜீரணிக்கவும் முடியாமல் தினம் தினம் செத்துப் பிழைத்துக்கொண்டிருந்தான்.

அப்படியிருக்கையில்தான் வைரவர் கோயில் திருவிழா வந்தது. வருடாவருடம் கலிங்கராயன்தான் திருவிழாவை முன்னின்று நடத்துவான் என்று மாறனுக்குத் தெரியும்.

இந்த வருடமும் அவன் நிச்சயமாக வருவான். வருணாவும் அங்கு வருவாள் என்கிற நம்பிக்கையில் திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

வைத்தியசாலையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் அந்தப் பெண்மணியை மிரட்டுவதோ, அவனுக்குப் படிய வைப்பதோ அவனுக்குப் பெரிய காரியமாய் இல்லை.

வேலையிலிருந்து அவரைத் தூங்கிவிடுவேன் என்பதே அவர் அவனுக்கு இணங்க போதுமாக இருக்க, பேத்திக்கும் ஆபத்தை உண்டாக்குவேன் என்றால்?

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது வரதன் வீட்டில் பார்த்த ஆதியின் கைப்பேசி நினைவுக்கு வந்தது. அதையும் எடுத்துக்கொண்டான்.

அந்தச் சம்பவம் நடந்தபோது கோயிலிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த ஒரு கடடடத்தின் மொட்டை மாடியில் நின்றிருந்தான் மாறன். அவன் கையில் பைனாகுலர். அதன் மூலம் கலிங்கனையும் அவன் கைப்பிடியில் நடக்கும் வருணனையும் பார்த்தபோது அவன் நெஞ்சு இன்னும் எரிந்தது.

அவர்கள் காதலர்கள்தான் என்பதை இன்னும் அழுத்தமாய் நம்பினான். இல்லாமல் வலுக்கட்டாயமாக மணந்த ஒரு ரவுடியோடு அவளால் இத்தனை நெருக்கமாகவும் இணக்கமாகவும் இருக்க முடியுமா என்ன?

அவன் கவனம் முழுக்க வருணாவில்தான். அவள் கலிங்கனோடு கண்ணால் பேசியத்தைக் கூட அவளைக் கொல்லும் வெறியோடு பார்த்தான்.

இந்தளவில் தனக்குத் துரோகம் செய்தவளுக்கு இந்தத் தண்டனை தகுதியானதுதான் என்று உள்ளம் சொல்லிவிட அவன் அதன் பிறகு தயங்கவேயில்லை.

ஆதியின் கைப்பேசியில் அந்தப் பெண்மணியோடு தொடர்பில் இருந்தபடியே அதிலிருந்து கலிங்கனுக்குக் குறுந்தகவல் அனுப்பினான்.

இத்தனை ஜனத்திரளுக்குள் வருணாவைக் கத்தியால் குத்திவிட்டு, அந்தப் பெண்மணி யாருக்கும் தெரியாமல் தப்பிவிட வேண்டும் என்றுதான் சொல்லியிருந்தான். இப்படி எளிதில் பிடிபட்டுவிடுவார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அப்படித் தப்பிக்க முடியாது என்கிற விபரம் அவனுக்கு இருக்கவில்லை. சனத்திரளுக்குள் ஓடி மறைவது இலக்கு என்று நினைத்திருந்தான்.

அவனுக்கோ அவர் மீது மிகுந்த ஆத்திரம். நின்றிருந்த மாடியின் தரையில் ஓங்கி உதைத்துவிட்டு அந்த நொடியே அந்த இடத்தைவிட்டு வந்திருந்தான்.

அதன் பிறகுதான் பயம் அவனைக் கவ்விப் பிடித்தது. என்னாகுமோ என்கிற பதற்றம். மாட்டினாலுமே அந்தப் பெண்மணிதான் மாட்டுவார், தான்தான் அவரை ஏவினோம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிற தைரியமும், ஆதியின் கைப்பேசி பிரச்சனையாக வந்தால் அதைத் தூக்கி எறிந்துவிடலாம் என்றுதான் எண்ணியிருந்தான்.

ஆனால், சட்டத்துக்குத்தான் சாட்சிகள் தேவை, கலிங்கனுக்கு இல்லை என்பது அதன் பிறகுதான் புத்திக்கு உரைத்தது.

இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. பயத்தில் வரதனிடம் போய் நின்றான். விசயத்தைக் கேட்ட வரதன் தலையில் கைவைத்துக்கொண்டான்.

“ஏன் மாறா, ஏன் இந்த வேலை பாத்தாய்? என்னட்ட முதலே சொல்லியிருக்கலாமே! அதவிட அந்தப் பிள்ளையில எந்தப் பிழையும் இல்ல. கலிங்கன்தான் ஏதோ சொல்லி அவளை அப்பிடிச் சொல்ல வச்சிருப்பான்.” என்று சொன்னான்.

“இல்ல சித்தப்பா. அவே முதலே விரும்பி இருக்கினம். இல்லாம அவளால இவ்வளவு நெருக்கமா அவனோட பழகேலாது. நீங்க அதப் பாக்கேல்லை. பாத்திருந்தா தெரிஞ்சிருக்கும்.” குமுறும் மனதோடு முகம் திருப்பிச் சொன்னவனை வேதனையோடு பார்த்தான் வரதன்.

ஆசைப்பட்ட பெண்ணை இழந்த வேதனையும் அவமானமும் அவனைக் கொள்வதை உணர்ந்தான். அதற்கென்று அவன் பார்த்திருக்கும் வேலை?

இந்தச் சிக்கலில் இருந்து அவனை எப்படி வெளியில் கொண்டு வருவது என்று யோசித்தான்.

ஒருவன் மீது சந்தேகம் வந்தாலே அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறவன் கலிங்கராயன். அப்படியிருக்கையில், இந்தத் தாக்குதலின் பின்னணியில் மாறன் இருப்பது அவனுக்குத் தெரிந்துவிட்டால் என்னாகும்?

அவர்களுடைய குடும்பத்தின் ஒரே வாரிசு அவன். அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று வரதனால் நினைத்துக் கூட முடியவில்லை. எதற்காக இந்தத் தேவையில்லாத வேலையைச் செய்தான் என்கிற கேள்விதான் திரும்ப திரும்ப உண்டாயிற்று.

ஆனாலும், “பயப்பிடாத. அந்தளவுக்கு ஈஸியா உன்னில கைய வைக்க ஏலாது. வைக்கிறதுக்கு உன்ர சித்தப்பா விடவும் மாட்டன். இனி உன்னச் சுத்தியும் என்ர பாதுகாப்பு இருக்கும். தைரியமா இரு. என்ன வந்தாலும் பாக்கலாம். ” என்று அவன் தோளில் தட்டித் தைரியம் கொடுத்தான்.

மாறன் சரி என்று கேட்டுக்கொண்டான். அவனுக்குத் தன் சித்தப்பா மீது பெரும் நம்பிக்கை இருந்தது.

“ஆனா, கவனமா இரு. இனியாவது என்ன செய்றதா இருந்தாலும் என்னட்ட ஒரு வார்த்த சொல்லிப்போட்டுச் செய். உனக்கு அந்தப் பிள்ளைக்கு ஏதாவது செய்துதான் ஆகோணுமெண்டு உறுதியா இருந்திருந்தா, முறையான ஆக்களை வச்சுச் செய்திருக்கலாம். இப்ப நீ செய்தது பிரச்சினை இல்லை. அதுக்குத் தேர்ந்தெடுத்த ஆள்தான் பிரச்சினை.”

தன் தவறு என்னவென்று புரிந்துகொண்ட மாறன், “பயமா இருக்கு சித்தப்பா.” என்றான் சின்ன குரலில்.

வரதனுக்கு ஐயோ என்றிருந்தது. அவனுக்குத் தன் பெறா மகனின் இந்தப் பயந்த முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை.

“என்னடா பயம்? இந்தச் சித்தப்பனுக்கு மகனா இருந்துகொண்டு எதுக்குப் பயப்படுற? நான் இருக்கிறன். கவலைப்படாம போயிட்டு வா.” என்று அவனுடைய தோளில் தட்டிக் கொடுத்து அனுப்பிவைத்தான் வரதன்.

ஆனால், அவன் சென்ற பிறகும் வரதனின் மனம் அமைதியடையவில்லை. கலிங்கராயன் என்ன செய்வானோ என்கிற கேள்வி அவனைக் குடைந்துகொண்டேயிருந்தது.

*****

அவன் வீட்டுக்கு வந்த பின்பும் அவள் அவனைக் கவனிப்பதை நிறுத்தவில்லை.

என்னவோ அவனுடைய முழுப் பொறுப்பும் தன்னுடையது என்பதுபோல் நடந்துகொண்டாள். அவனுக்குக் கொடுக்க வேண்டிய உணவு, மருந்து மாத்திரைகள், காயத்துக்குச் செய்ய வேண்டிய பராமரிப்பு என்று ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டாள்.

முன்பெல்லாம் அவனருகில் வருவதற்குத் தயங்கியவள் இப்போது அவனுடைய தேவைகளைத் தானாகவே கவனித்துக்கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள். அவன் ஏதாவது செய்ய முயன்றால்கூட உடனே தடுத்துவிடுவாள். ஓய்வெடுக்கச் சொல்லுவாள். தேவையில்லாமல் அசையக்கூடாது என்று கண்டிப்பாள். அவளுடைய குரலில் அக்கறையும், செயலில் உரிமையும் கலந்திருந்தன.

அதையெல்லாம் அவன் ஒரு சிறு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான்.

*****

ஒரு வாரம் கடந்திருந்தது . அன்று வரதனுக்கு அவனுடைய நம்பிக்கைக்குரிய ஆளிடமிருந்து அழைப்பு வந்தது. அவன்தான் வரதனுடைய போதைப்பொருள் வியாபார உலகத்தின் பொறுப்பாளன்.

முக்கியமான விஷயம் ஏதுமில்லாமல் வரதனின் இரகசியக் கைப்பேசிக்கு அவனிடமிருந்து அழைப்பு வராது. அப்படி அவன் அழைக்கிறான் என்றால், பெரிதாக ஏதாவது வியாபாரம் கைகூடப் போகிறது என்று அர்த்தம்.

ஏற்கெனவே பல கோடிகளில் ஏற்பட்ட நட்டத்தால் நிலைகுலைந்து போயிருந்த வரதனுக்கு துறைமுகத்திலும் தன்னுடைய வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து மீள்வதற்கு பெரிய வாய்ப்பு ஒன்று தேவைப்பட்டது.

எனவே, வழக்கம்போல நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தான்.

கடலுக்கு நடுவே நின்றிருந்த கப்பல் ஒன்றை நோக்கி அவனுடைய சிறிய படகு புறப்பட்டது.

அவ்வப்போது சரக்குகளைக் கொண்டு வரும் கப்பல்களுக்குச் சென்று வருவது அவனுக்குப் புதிதான விசயமல்ல. துறைமுகத்தில் அவனுக்கிருந்த செல்வாக்கும், அவனுடைய தொழில் தொடர்புகளும் காரணமாக அவனது நடமாட்டத்தை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

அதிகாரிகளுக்கும் அங்கே என்ன நடக்கிறது என்பது ஓரளவுக்குத் தெரியும். தெரிந்திருந்தாலும் தெரியாதது போலவே இருப்பார்கள். அவர்களுடைய கண்கள் திறந்திருந்தாலும் தேவையற்ற இடங்களில் மூடியிருக்கும்.

அதனாலேயே எந்தவிதச் சந்தேகத்தையும் ஏற்படுத்தாமல் தன்னுடைய ஆட்களைச் சந்திப்பதற்கு கப்பல் அவனுக்கு வசதியாக இருந்தது.

error: Alert: Content selection is disabled!!