கலிங்கனின் காவியம் 33.2

அன்றும் அப்படித்தான். கப்பலின் பக்கவாட்டில் படகு நிறுத்தப்பட்டதும், ஏணியைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். அவன் உள்ளே வந்ததும் ‘க்ளிக்!’ என்று ஒரு சத்தம்.

திடீரெனக் கேட்ட அந்தச் சத்தத்தில் சட்டென்று திரும்பினான்.
அங்கே சற்று உயரமான மரப்பெட்டியின் மீது அமர்ந்திருந்தான் கலிங்கராயன்.

உதடுகளுக்கிடையே இருந்த சிகரெட்டை ஆழமாக ஒரு இழுப்பு இழுத்துப் புகையை வெளியேற்றிவிட்டு வரதனைப் பார்த்தான்.
“வா வரதா! நேரில பார்த்து நிறைய நாளாச்சு என்ன?” கைகள் இரண்டையும் பின்னால் ஊன்றி அமர்ந்தபடி நிதானமாக வினவினான் கலிங்கன்.

சத்தியமாக இப்படியொரு சந்திப்பை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவர்களுடைய கடைசிச் சந்திப்பு அவனுடைய நினைவில் மின்னி மறைந்தது. அன்று நடந்த அத்தனையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண்முன்னால் வந்து போயின.
ஒரு கணம் என்ன செய்வதென்றே புரியாமல் அப்படியே நின்றான் வரதன்.

கூடவே தன்னுடைய ஆள் எங்கே என்று பதறினான். அவனை உணர்ந்தவனாக உதட்டோரம் வளைய, ஒரு பக்கத்தை அவனுக்குக் காட்டினான் ராயன்.

அங்கே பார்த்த வரதன் மீண்டும் அதிர்ந்தான். அவனுடைய ஆள் கட்டப்பட்டிருந்தன. அவன் இருந்த கோலமே அவனுக்கு என்ன நடந்திருக்கிறது என்று சொல்லிற்று. கூடவே தான் வசமாகக் கலிங்கனிடம் சிக்கிக்கொண்டுவிட்டதும் புரிந்தது.

“ஏன் நிக்கிறாய்? வந்து இரு!” தனக்கு முன்னால் கிடந்த இன்னொரு மரப்பெட்டியைக் கண்ணால் காட்டினான் கலிங்கன்.

“இல்ல. எனக்குப் போகோணும்!” என்றுவிட்டுத் திரும்பியவன் பின்னால் நின்ற ஆதியில் மோதி நின்றான்.

ஆதி பேசவே இல்லை. தன் நெஞ்சினாலேயே முட்டி வரதனைப் பின்னால் தள்ளினான். தான் வசமாக மாட்டிக்கொண்டது வரதனுக்கு மிக நன்றாகவே புரிந்துபோயிற்று.

“நீ தேவையில்லாத வேலை பாக்கிறாய் ராயன்!” என்றான் எச்சரிக்கும் குரலில்.

“எப்பிடி? உன்ர பெறாமகன் பாத்தானே, அப்பிடியா?”

அவன் தலையில் விழுந்த அடுத்த இடி அது. இது தனக்கு விரிக்கப்பட்ட வலை என்று நினைத்தான். அப்படி இல்லை என்றான் கலிங்கன்.

“எனக்குச் செய்த வேலைக்கு உங்களை எல்லாம் விட்டு வச்சதே பெருசு. அப்பிடியிருக்க அவளில கை வச்சிருக்கிறான் அவன். அவனை என்ன செய்யலாம்?”

வரதனுக்கு மூச்சும் வரவில்லை; பேச்சும் வரவில்லை. அவனையே என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை. அப்படி இருக்க மாறனையும் இதில் இழுக்கிறான் என்றால் என்ன பேசுவது? எதைச் சொல்வது?

ஆனாலும் சமாளித்துக்கொண்டு, “எனக்கும் உனக்குத்தான் பிரச்சினை. இப்ப என்னத்துக்கு புதுசா மாறனை இழுக்கிறாய்?” என்று எதுவுமே தெரியாதவன் போன்று வினவினான்.

“அப்ப அவன் ஒண்டும் செய்யேல்ல.” உதட்டோரத்தில் மெல்லிய புன்னகையுடன் சிகரெட்டை மீண்டும் ஒரு முறை இழுத்தபடி வினவினான்.

“இல்ல!”

அதற்கு ஒன்றும் சொல்லாமல் சிகரெட்டைப் புகைத்தான். அவன் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் போல அவனது பார்வை வரதனின் முகத்திலேயே நிலைத்திருந்தது.

வரதன் உள்ளுக்குள் பதறினான். கூடவே இப்படி இவனிடம் மாட்டிக்கொண்டோம் என்று அவன் அகங்காரம் உறுமியது.

போதைப்பொருள் கைமாற்றும் வேளையில் வரதன் நிறைய ஆட்களை உள்நுழைக்க மாட்டான். அது கயிற்றில் நடப்பது போன்று மிக மிக ஆபத்தானது. அப்படியிருக்க குறிப்பிட்ட ஆட்களைத்தான் அதில் ஈடுபடுத்துவான்.

ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகள். ஒருவரைப் பற்றிய தகவல் இன்னொருவருக்கு தேவையான அளவுக்குத்தான் தெரிந்திருக்கும்.

இன்றும் அதே எச்சரிக்கையுடன்தான் வந்திருந்தான். ஆட்கள் யாரையும் உடன் அழைத்து வரவில்லை.

பாதுகாப்பு என்று நினைத்து தனியாக வந்ததே அவனுக்கு ஆபத்தாக மாறியிருந்தது.

கலிங்கராயனின் முகத்தைப் பார்த்தான். அவனிடம் எந்தப் பதற்றமும் இல்லை. மாறாக, ஏதோ ஒரு விளையாட்டை ரசித்துக்கொண்டிருப்பவனைப் போன்ற நிதானம். அந்த நிதானம்தான் வரதனுக்கு இன்னும் அச்சத்தை உண்டாக்கிற்று.

“உன்ன இதே மாதிரி ஒரு நொடில கொல்லுறது எல்லாம் எனக்கு ஒரு வேலை எண்டு நினைச்சியா வரதா?” அவன் கேள்வியே இவனுக்குள் அதிர்ச்சியாய் இறங்கிற்று.

“ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல. ரெண்டு மாதம். உடம்பாலயும் மனதாலயும் நீயும் அந்த ரெண்டு நாயும் தந்த துரகத்தின்ர வலிய அனுபவிச்சிருக்கிறன். பிறகு எப்பிடி ஒரு நிமிசத்தில இந்த உலகத்தை விட்டுப் போற சாவ உனக்குத் தருவன்?”

அவன் கோபமாகக் கேட்கவில்லை. உறுமிவில்லை. ஆக்ரோஷப்படவில்லை. நிறுத்தி நிதானமாகத்தான் பேசினான். ஆனால், கவனமாகப் பார்த்து அறையும் ஆணி எப்படிச் சரியாகச் சென்று தாக்குமோ அப்படி வரதனுக்குள் இறங்கிற்று அது.

அந்தக் கப்பலின் மேல்தளத்தில் கடல்காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. சுற்றிலும் கடல் மட்டுமே. தொலைவில் துறைமுகத்தின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. இங்கிருந்து அவன் எழுப்பும் சத்தம் கரையை எட்டப்போவதில்லை.

வரதன் இப்போது உண்மையாகவே பயந்தான்.

கலிங்கன் தன் விரல்களுக்கிடையே இருந்த சிகரெட்டைச் சுண்டித் தூர எறிந்தான். அடுத்த கணம் ஆதியை நோக்கிக் கண்ணைக் காட்டினான்.

அவ்வளவுதான்!

அடுத்த நொடியே ஆதி வரதனின் சட்டைக் கொலரைப் பிடித்து இழுத்து, அருகிலிருந்த மரத்தூணில் அவனைப் பலமாக மோதவிட்டான்.

“டேய்!”

அவன் சுதாரிப்பதற்குள் ஆதி அவனது கைகளைப் பின்னால் மடக்கிப் பிடித்து, அருகிலிருந்த கயிற்றை எடுத்து, அவனது இரு கைகளையும் இறுக்கமாகப் பிணைத்துக் கட்டினான். திமிறித் தப்பிக்க முயன்ற வரதனின் முதுகில் விழுந்தது ஆதியின் முஷ்டி.

அடுத்தடுத்து விழுந்த அடிகளைத் தாங்க முடியாமல் வரதன் தடுமாறினான். அவன் எதிர்த்துப் போராட முயன்ற ஒவ்வொரு முறையும் ஆதி அவனை இன்னும் பலமாகத் தாக்கினான். அவனது குரல் அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது.

ஆதியின் ஒவ்வொரு அடியும் வரதனின் உடலில் வலியை ஏற்படுத்தியதைவிட அவனுடைய தன்மானத்தில்தான் அதிகமாக இறங்கியது.

இத்தனை காலமும் தன்னுடைய கட்டளைக்குக் கீழே எத்தனையோ பேர் நடுங்கியிருக்கிறார்கள். ஒரு பார்வையிலேயே ஆட்களை அடக்கி வைத்திருக்கிறான். அவன் முன்னால் நின்று பேசுவதற்கே பலர் தயங்கியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவன் இன்று, தன்னைவிட வயதில் எவ்வளவோ குறைந்த ஒருவனிடம் அடிவாங்கிக்கொண்டு நிற்கிறான். இன்னொருவன் அதைப் பார்த்து ரசிக்கிறான்.

அதைவிடக் கொடுமை, கலிங்கன் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் தெரிந்த அந்த அலட்சியமும், உதட்டோரத்தில் ஒட்டியிருந்த ஏளனப் புன்னகையும் வரதனின் ஆத்திரத்தை மேலும் தூண்டின.

அவன் முகம் அவமானத்தில் இறுகியது. கண்கள் சிவந்தது. பற்களைக் கடித்துக்கொண்டு ஆத்திரத்தை அடக்கினான். இப்போதே ஆதியின் கழுத்தைப் பிடித்துத் திருகிவிட வேண்டும் என்ற வெறி நெஞ்சுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது.

ஆனால் அந்த ஆத்திரத்தையும் ஆணவத்தையும் வெளியில் காட்ட முடியாத கையறு நிலையில் அவன் இருந்தான்.

ஆதிக்கு நிறுத்தும் எண்ணமே இல்லை. அன்று தன் தலைவனைக் கத்தியால் குத்திய ஆத்திரம், வருணாவைக் கொல்ல வந்த ஆத்திரம் என்று இத்தனை காலமும் அவன் நெஞ்சில் எரிந்துகொண்டிருந்த குரோதத்தை வரதனிடம் மொத்தமாக இறக்கிக்கொண்டிருந்தான்.

கலிங்கராயன் அங்கேயே அமர்ந்திருந்தான். அவசரப்படாமல், தன் கைக்கடிகாரத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டான். வரதனின் கூச்சலும் ஆதியின் அடிகளும் அவனுக்குப் பெரிய விசயமாகவே தெரியவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் வரதனால் திமிறக்கூட முடியவில்லை.
வலியைத் தாங்க முடியாமல் அவன் முழங்கால்கள் மடிந்தன. ஆதி அவனைப் பிடித்து இழுத்து, கலிங்கராயனுக்கு முன்னால் இருந்த தரையில் தள்ளினான்.

அவன் வாழ் நாளில் அனுபவித்தே இராத பெரும் அவமானம்.

அப்போதுதான் கலிங்கன் எழுந்தான். மெதுவாக நடந்து வந்து வரதனுக்கு முன்னால் நின்று, “இப்ப சொல்லு.” என்றான்.

என்ன சொல்வது? அவமானம் ஒரு புறம் அவனை ஒன்றுமே செய்ய முடியாமல் நிற்கிறோமே என்கிற ஆத்திரம் இன்னொரு புறம் என்று அவனால் எதையும் சிந்திக்கவே முடியவில்லை.

மூச்சை இழுத்துவிட்ட வரதன், தன் முன்னால் நின்ற கலிங்கனை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய கண்களில் இன்னமும் ஆத்திரம் அணையவில்லை.

“என்ன வேணும் உனக்கு?” என்று பற்களைக் கடித்தபடி கேட்டான்.

கலிங்கன் அவனுடைய முகத்தில் தெரிந்த ஆத்திரத்தைக் கண்டு மெல்லச் சிரித்தான்.

“உன்னட்ட என்னத்தப் பெருசா கேக்கப்போறன் வரதா? மாறனை வரச் சொல்லு. போதும்.” என்றான் இலகுவாய்.

வரதனின் முகத்தில் கலவரமாயிற்று. முடியாது என்பதுபோல் மறுத்துத் தலையசைத்தான்.

ஓ என்று கேட்டுக்கொள்வது போன்று உதடுகளை பிதுக்கியபடி தலையை மேலும் கீழுமாக அசைத்த கலிங்கன், ஆதியைப் பார்த்தான்.

அதற்காகவே காத்திருந்தவன் போல ஆதி மீண்டும் வரதனை நோக்கி நகர்ந்தான்.

“இல்ல… இல்ல… நில்லு!” வரதன் அவசரமாகக் கத்தினான்.

“கூப்பிடுறியா?”

வரதன் சில நொடிகள் அவனை வெறித்துப் பார்த்தான். இங்கிருந்து தப்பிக்க முடியாது என்பது புரிந்தது. ஆனால் மாறனும் வந்தால் என்னாகும் என்று யோசிக்கவும் முடியவில்லை.

இறுதியில், வேறு வழியின்றி மாறனை அழைக்கச் சம்மதித்தான்.
அவனுடைய கைகளிலிருந்த கட்டுகள் அவிழ்க்கப்பட்டதும், அவற்றைத் தேய்த்துக்கொண்டே கலிங்கனைப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் அத்தனை அவமானமும் பழிவாங்கும் வெறியும் தேங்கியிருந்தன. கலிங்கனோ அதைப் பொருட்படுத்தவே இல்லை.

அவன் மீண்டும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டு சிகரெட்டைப் பற்றவைத்தான்.

வரதன் அங்கே நின்றபடியே கைப்பேசியை எடுத்தான். இந்த அவமானத்துக்கு ஒருநாள் கணக்குத் தீர்க்காமல் விடப்போவதில்லை என்ற வன்மம் அவனுடைய நெஞ்சுக்குள் ஆழமாகப் பதிந்தது.

error: Alert: Content selection is disabled!!