கலிங்கனின் காவியம் 37.2

இப்படிப் புலம்புகிறவர் இல்லை மதியழகன். எப்போதும் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் தெளிவாகவும் உறுதியாகவும் கதைக்கும் மனிதர். எந்தச் சூழ்நிலையிலும் பதற்றத்தைக் காட்டாமல் நிதானமாகச் செயல்படுவார்.

அப்படிப்பட்டவர் இந்தளவுக்கு உடைந்து கதைக்கிறார் என்றால் மனத்தளவில் எந்தளவுக்கு நொடிந்துபோயிருக்கிறார் என்று அவளுக்குப் புரிந்தது.

அவளது நெஞ்சு அடைத்தது. தகப்பனின் பேச்சு ஒருபுறம் வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவர் கலிங்கனைத் தவறாகப் பேசுவதையும் அவளால் ஏற்க முடியவில்லை. அதேநேரம், ‘அப்படியெல்லாம் இல்லை அப்பா’ என்று அவனுக்காகப் பரிந்து பேச அவளிடம் எதுவும் இல்லை.

அதில் அந்தப் பேச்சை நாசுக்காகத் தவிர்த்துவிட்டு, கொஞ்ச நேரம் வேறு விடயங்களை பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

*****
அன்று கலிங்கனுக்குத் தையல் பிரிக்கும் நாள். அன்றே அவனுக்கான அத்தனை பரிசோதனைகளையும் செய்துவிடும் முடிவுடன் அவனோடு வைத்தியசாலைக்குப் புறப்பட்டாள் வருணா.

நிறைய நாள்களுக்குப் பிறகு இருவருமாக அவன் காரில் பயணிக்கிறார்கள். இருவருக்கும் அன்றைய ‘லோங் ட்ரிப்’ நினைவில் வந்து நின்றது.

அன்றைக்கும் அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை பிரச்சனைகளும் அப்படியேதான் இருந்தன. ஆனாலும் எத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள்?

ஒரு நெடிய மூச்சுடன் பார்வையை நேரே பதித்து அமர்ந்திருந்தாள் வருணா. வாகனத்தைச் சீரான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தாலும் கலிங்கனின் கவனம் முழுவதும் பக்கத்தில் இருப்பவளில்தான்.

அன்று அவள் உன்னுடன் என்றைக்கும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று சொன்னது மிக ஆழமா அவனைத் தங்கியிருந்தது. அதில் அவனாக அவளை நெருங்கவோ, சமாதானமாகவோ முயலவில்லை. முயல முடியவில்லை.

அதில் அவர்களுக்குள் விழுந்த இடைவெளி அப்படியே தங்கிப்போயிற்று. எப்படியாவது அவளைத் தன்னிடம் நெருக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறான். முடிய வேண்டுமே.

வைத்தியசாலைக்கு வந்து தையல் பிரித்த பிறகு, தலைமை மருத்துவரை அவனோடு சென்று சந்தித்தாள். அவளுக்கு முந்தைய கத்திக்குத்துகளின்போது வயிற்றுக்குள் ஏற்பட்டிருந்த சேதங்கள் முழுமையாகச் சீரடைந்துவிட்டனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயிருந்தது. அதற்காக வயிற்றுப் பகுதியை அல்ட்ராசவுண்ட் அல்லது CT ஸ்கேன் மூலம் பார்க்க நினைத்தாள்.

அவனையும் அவனுடைய கோப்பையும் ஆராய்ந்துவிட்டு அது அவசியமில்லை என்று சொன்னார் தலைமை வைத்தியர்.

வருணாவுக்கு அதில் உடன்பாடில்லை. கலிங்கனைத் தனியாக அழைத்து வந்து, “இஞ்ச… எல்லா செக்கப்புக்கும் காசு கொஞ்சம் கூடவா இருக்கும்? நாங்க ஃபுல் செக்கப் ஒண்டு போட்டா நல்லம். உங்களிட்ட இருக்குதானே?” என்று வினவினாள்.

கலிங்கன் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. அவன் புருவங்களை உயர்த்த, “ப்ச்! உங்களிட்ட இருக்கும் எண்டு தெரியும்தான். இருந்தாலும் சிலவளிக்க விருப்பம் இருக்கா தெரியாதே. இந்த விசயத்தில நாங்க காசு பாக்க வேண்டாம். கூட எண்டாலும் செய்வம். உங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையெண்டு தெரிஞ்சுகொண்டா நிம்மதியா இருக்கும் எல்லா?” என்றாள் மீண்டும்.

அவன் இதழோரம் மெல்லிய முறுவல் அரும்பியது. “உனக்கு என்ன எல்லாம் விருப்பமோ அதை எல்லாம் செய். காசைப் பற்றி நீ ஏன் யோசிக்கிறாய்?” என்றான் அவன்.

“அதெப்பிடி? உங்களிட்ட இருக்கா இல்லையா எண்டு தெரியாம எப்பிடிச் செய்றது?” என்றவள், அவனது பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் தலைமை வைத்தியரிடம் சென்றாள்.

அவள் அவரோடு பேசிக்கொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த கலிங்கராயனின் இதழ்களில் அந்த மெல்லிய முறுவல் இன்னமும் மறையவில்லை.

அவனுக்குத் தேவையானது அந்தப் பரிசோதனைகள் அல்ல. அவன் மீது அவள் காட்டும் இந்த அக்கறையும், அவனுக்காக அவள் எடுத்துக்கொள்ளும் பொறுப்புகளும்தான்.

அவனைப் பரிசோதிக்கப்போகும் அறைக்குள் வந்ததும், “ஷேர்ட்டைக் கழட்டிட்டு படுங்க” என்று சொல்லிவிட்டு அவனுடைய மருத்துவக் கோப்பின் மீது இன்னொரு முறை பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தாள் வருணா.

அவனோ இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அவளையே பார்த்து நின்றிருந்தான். அவள் சொன்னதை அவன் இன்னும் செய்யவில்லை என்பது கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் அவளுக்குப் புரிந்தது.

“என்ன? ஷேர்ட்டைக் கழட்டிப்போட்டுப் படுங்க!” என்றாள் நிமிர்ந்து பார்த்து.

“அண்டைக்கு நானா கழட்டினனான்?” என்று கேட்டான் அவன்.

“எண்டைக்கு…?” என்றவளுக்கு நினைவு வந்ததும் முறைத்தாள். கூடவே சிறு கூச்சமும் வெட்கமும். அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல், “அதுக்கு இப்ப என்ன?” என்றாள்.

“உனக்கு வேணுமெண்டா நீயே கழட்டு!”

“செக்கப் உங்களுக்கு!”

“எனக்கு அது தேவையில்ல.”

இவனுடைய அடம் இருக்கிறதே! அவனை முறைத்துவிட்டு வந்து அவனது சட்டையின் பட்டன்களை ஒவ்வொன்றாகக் கழற்ற ஆரம்பித்தாள். அவன் இதற்காகவே ஷேர்ட் அணிந்துகொண்டு வந்தானோ என்று ஓடிற்று அவளுக்கு.

அவனது பார்வை எங்கும் நகரவில்லை. அவளுடைய முகத்திலேயே நிலைத்திருந்தது. “கலிங்கா!” என்று அவனைப் பார்க்காமலேயே அதட்டினாள்.

அவன் கேட்க வேண்டுமே!

கடைசியில் அவளே பட்டன்கள் அனைத்தையும் கழற்றி, அவனது சட்டையைக் கழற்றி ஓரமாக வைத்தாள்.

“ஏறிப் படுங்க. அதையாவது நீங்களா செய்ங்க!” என்றாள்.

“உன்னால என்னைத் தூக்கேலாது எண்டுறதால மட்டும்தான் அதை நானே செய்றன்.” என்றுவிட்டு ஏறிப் படுத்தான் அவன்.

மல்லாந்து படுத்திருந்தவனின் வயிற்றுப் பகுதியில் இருந்த தழும்புகளைப் பார்த்தவளின் முகம் கலங்கிப்போயிற்று. தன்னை மீறிய உந்துதலில் அந்த அடையாளங்களின் மீது மெல்லத் தடவினாள். “இன்னும் வலி இருக்கா கலிங்கா?” என்று கேட்டவள் விழிகள் இலேசாகக் கலங்கியிருந்தன.

அவளுக்குப் பதிலளிக்காமல், தன் வயிற்றின் மீது படிந்திருந்த அவளது கையைப் பற்றி, அவள் விரல்களுக்குள் தன் விரல்களைக் கோர்த்து, அவளைத் தன்னை நோக்கிக் கொண்டுவந்தான். அவன் முகத்துக்கு நேராக அவளது முகம் வரவும், சற்றே தலையை உயர்த்தி அவளது நெற்றியில் இதழ்களைப் பதித்துவிட்டு, “எனக்கு எந்த வலியும் இல்ல வரும்மா.” என்றான் கனிந்த குரலில்.
அப்போதுதான் அவளது முகத்தில் மெல்லிய நிம்மதி படர்ந்தது.

அதைக் கண்டவன் உள்ளம் கனிந்துபோயிற்று. “முந்தியெல்லாம் என்னைப் பற்றி நான் யோசிச்சதே இல்லை. ஆனா இப்ப எனக்கு வாழோணும் வரு. அதுவும் உன்னோட நிறையக் காலம் வாழோணும். அதுக்காகவே என்னை நான் கவனிப்பன். நீ கவலைப்படாத.” என்றான் அவள் கன்னம் தட்டி.

அந்தக் கணத்தில் எப்படி உணர்கிறாள் என்று வருணாவுக்கு தெரியவில்லை. ஆனால் நீண்ட ஆயுளோடு நிறையாக காலத்துக்கு அவன் நன்றாக வாழ்ந்துவிட வேண்டும் என்று அவள் உள்ளம் இறைவனை வேண்டிற்று.

அடிவயிற்றுப் பகுதியில் முதலில் மெதுவாக விரல்களால் அழுத்திப் பார்த்தாள். ஒரு சில இடங்களில் அழுத்தத்தைக் கொடுத்தபோது வலி இருக்கிறதா என்று அவனது முகத்தைக் கவனித்தாள்.

வயிற்றில் அசாதாரணமான இறுக்கம், வீக்கம் அல்லது வலி இருக்கிறதா என்று வெவ்வேறு பகுதிகளாகப் பரிசோதித்தாள். அவனை ஒருபுறமாகத் திரும்பச் சொல்லி, வயிற்றின் பக்கவாட்டுப் பகுதிகளையும் ஆராய்ந்தாள்.

அவன் எந்தவிதமான சிரமத்தையும் காட்டாமல் ஒத்துழைத்தான்.

அவள் ஆசைப்பட்ட அத்தனை பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் புறப்பட்டபோது மாலையாகியிருந்தது.

error: Alert: Content selection is disabled!!