கலிங்கனின் காவியம் 39.1

அத்தியாயம் 39

அன்று முழுக்க அவனிடம் என்னவோ கேட்க நினைப்பதும் பின் யோசனையில் ஆழ்வதுமாகவே இருந்தாள் வருணா. காலையிலேயே அதைக் கவனித்துவிட்ட கலிங்கனுக்கு வேடிக்கையாயிற்று. அப்படி எல்லாம் தயங்குவது அவள் இயல்பு இல்லையே. என்ன செய்கிறாள் என்று அவளை அப்படியே விட்டுப் பார்த்தான். அன்று மாலை அவன் வீடு திரும்பிய பின்னும் அவள் கேட்பதாக இல்லை என்றதும், “வரு என்னடா?” என்றான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு வித எதிர்பார்ப்பும், அதைவிட அதிகமான தயக்கமும் இருந்தன.

இப்படி அவள் தன்னிடம் தயங்குவதா? “என்னடாம்மா?” என்றான் தன்னை மீறி.

“கலிங்கா, எனக்கு வீட்டுக்குப் போகணும். அம்மா அப்பாவப் பாக்கோணும்.” சொல்லும்போதே சிறு பிள்ளையாக முகமெல்லாம் கலங்கி, இலேசாகக் குரல் கரகாரத்துப்போயிற்று அவளுக்கு.

என்னவோ தெரியவில்லை கடந்த இரண்டு நாட்களாக தன் வீட்டையும் பெற்றோரையும் அளவுக்கு அதிகமாகவே தேடினாள். கேட்டால் விடமாட்டான். அவளாலும் அவன் மறுப்பைக் கேட்டுக்கொண்டு பேசாமல் இருக்க முடியாது. திரும்பவும் ஒரு சண்டை, முகத்த திருப்பல் என்று வந்து நிற்கும் என்றுதான் தயங்கிக்கொண்டிருந்தாள்.

“எங்கட வீட்டைப் பாக்கோணும் மாதிரி இருக்கு. ஒரு நாளாவது அங்க தங்கோணும். அம்மான்ர கையாள சாப்பிடோணும். கலிங்கா ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாய்.

இந்தளவுக்கு அவளை ஏங்கிப்போக வைத்திருக்கிறோம் என்று தன்னையே நொந்துகொண்டான் அவன். அவனிடம் கெஞ்சும் அந்த விழிகளையே பார்த்தான். அவை கேட்பதை நொடியில் நிறைவேற்றிவிட அவன் உள்ளம் துடித்தது.

அவளைத் தன்னிடம் கொண்டு வந்து, கலைந்திருந்த அவள் கூந்தலைக் காதோரம் ஒதுக்கிவிட்டான். அந்த விரல்கள் அவள் கன்னத்தில் கோடிழுத்தபடி இறங்க அவள் விழிகள் விரிந்துபோயின.

அத்தனை நேரமாக இருந்த கெஞ்சலும் தயக்கமும் வேறொரு உணர்வாக மாறிற்று. அவன் விரல்கள் தீண்டிய காதோரம் மெல்லச் சூடேறியது. அவள் உதடுகள் தன்னையறியாமல் ஒன்றோடொன்று அழுந்தின.

அந்தச் சின்ன மாற்றத்தில் தான் அவளை பாதிக்கிறோம் என்று கண்டுகொண்டான் கலிங்கன். அவன் இதழோரம் மெல்லிய புன்னகை அரும்பியது. “போவம்.” என்றான் அவளையே பார்த்து.

அவ்வளவுதான். அவள் முகம் சட்டென்று மலர்ந்தது. “உண்மையாவா?” என்று ஆர்ப்பரித்தாள்.

சின்ன முறுவல் ஒன்றுடன் அவள் கன்னத்தை வருடிவிட்டுக் கையை விலக்கினான் அவன். அவள் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அடுத்த நாலா காலையில் அவர்களுடைய வருகையை மதியழகனும் சிவசுந்தரியும் எதிர்பார்க்கவே இல்லை. திடீரென்று வந்து நின்ற மகளைக் கண்டு சிவசுந்தரி ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டார்.

“அம்மா!” ஓடி வந்து அவரைக் கட்டிக்கொண்டாள் வருணா. அந்த ஒற்றை அழைப்பில் இத்தனை நாட்களாகத் தேங்கியிருந்த ஏக்கம் மொத்தமும் வெளிப்பட்டது.

அடுத்த நொடியே அழுகையும் ஆனந்தமுமாய்ச் சிவசுந்தரியும் மகளை இறுக அணைத்துக்கொண்டார். எப்படி இருக்கிறாள் என்று கேட்டு, அவளுடைய முகத்தைத் தன் இரு கைகளாலும் தாங்கிப் பார்த்தார். கன்னங்களை வருடினார். உடல்நலத்தை விசாரித்தார்.

மகளும் அன்னையின் அணைப்பிலிருந்து விலக மனமின்றி அவரோடு ஒட்டிக்கொண்டாள். மதியழகனுக்கு மகள் வந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அவளுடன் கலிங்கராயன் வந்திருப்பதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. “வாங்க!” என்றார் ஒருவிதத் தயக்கத்துடன்.

கலிங்கராயன் தலையசைத்தான். உள்ளே வந்தவனை அமரச் சொன்னதும் அமர்ந்துகொண்டான்.

சிவசுந்தரி மகளைத் தன் கைப்பிடியிலேயே வைத்துக்கொண்டு அவளைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவள் வருகையால் அந்த வீடு மீண்டும் உயிர்ப்புப் பெற்றிருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு நடுவே கலிங்கராயனின் இருப்புப் பெரியவர்கள் இருவருக்குமே ஒருவிதமான நெருடலைக் கொடுத்தது. அவன் இருப்பதாலேயே மக்களிடம் கூட அவர்களின் மகிழ்ச்சி மொத்தத்தையும் கொட்ட முடியாமல் நின்றனர்.

மதியழகன் அவனுடைய காயத்தைப் பற்றிச் சம்பிரதாயமாக விசாரித்தார். அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல், “ஆர் எண்டு தெரிஞ்சிட்டுதா?” என்று கேட்டார்.

கலிங்கராயன் அதற்குப் பெரிதாக விளக்கமளிக்கவில்லை. “அந்தப் பிரச்சினை முடிஞ்சுது. இனி அப்பிடி ஒண்டு நடக்காது.” என்றான் சுருக்கமாக.

அதுவே அதைக் குறித்து மேலே பேச அவன் விரும்பவில்லை என்று சொல்லிற்று. மதியழகனின் முகம் இலேசாக மாறிற்று. அவள் மகளின் உயிருக்கு ஒரு ஆபத்து வந்து போயிருக்கிறது. அது குறித்த தகவல் அவருக்குத் தேவையற்றதா? கோபம்தான் உண்டாயிற்று.

வருணாவுக்கும் அவன் தகப்பனிடம் பேசிய விதம் பிடிக்கவில்லை. இல்லையானாலும் அவளிடம் சொன்னது போன்று மாறன் பெயரைச் சொல்வான். அதில் அந்தப் பேச்சை வளர்க்க விரும்பாமல், “ஏதாவது டேஸ்ட்டா சமச்சுத் தங்கம்மா. உங்கட கையாள சாப்பிட ஆசையா இருக்கு.” என்றதும் அன்னைக்கு உருகிப்போயிற்று.

அவளுக்கு நாட்டுக்கோழி கறி பிடிக்கும். மதியழகன் உடனேயே கடைக்குப் புறப்பட்டார். சிவசுந்தரி எழுந்து சமையல் காட்டுக்கு ஓடினார். அந்த இடைவெளிக்குள் வந்து, “அப்பாவோட ஒழுங்கா கதைக்கோணும். இல்லை எண்டு வைங்க, கழுத்தைப் பிடிச்சு நெறிச்சு விட்டுடுவன்!” என்று, அன்னைக்குக் கேட்டுவிடாதபடிக்கு வாய்க்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பியபடி, அவன் கழுத்தை நெறிப்பதுபோல் கைகளைக் கொண்டுவந்தாள்.

உதட்டோரத்தில் தோன்றிய மெல்லிய புன்னகையோடு கண்களும் சேர்ந்து சிரிக்க, சரி என்பதுபோல் தலையசைத்தான் அவன்.

அவன் தன்னைப் பார்த்துச் சிரிக்கிறான் என்று புரிந்து, “கலிங்கா!” என்று பல்லைக் கடித்தாள் அவள்.

“சரி எண்டு தானேடா சொன்னனான்.” என்றான் அவன் புன்னகை விரிய.

“நடிக்காதீங்க நீங்க! நீங்க எவ்வளவு பெரிய கிராதகன் எண்டு எனக்குத் தெரியும்!” என்றுவிட்டுப் போனாள் அவள்.

கொஞ்ச நாள்களுக்கு முதல்தான் அவனைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்றாள். இன்றைக்கு அவன் கிராதகன் என்று தெரியுமாம். ஒற்றைக் கையால் தாடையைத் தேய்த்தபடி பார்வையைச் சுழற்றினான்.

அங்கே சுவரில் சின்ன வயது வருணா பரதநாட்டிய உடையில் அபிநயம் பிடித்துக்கொண்டிருந்தாள். பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை. அந்த வீடு முழுக்க அவளின் அடையாளங்கள்தான்.

வருணா அன்னையோடு சமையலறையில் நின்றாலும் கவனம் முழுவதும் கலிங்கராயனில்தான்.

அவன் அங்கே அமர்ந்திருந்த விதமே, அந்த வீட்டின் சூழலோடு அவனால் ஒன்றிக்கொள்ள முடியவில்லை என்று சொல்லிற்று.
மதியழகன் கறி வாங்கி வந்ததும் வந்து கலிங்கராயனின் அருகிலேயே அமர்ந்துகொண்டாள். கல்லூரி, அங்கு நடப்பவை என்று மதியழகனிடம் பேச்சை நகர்த்தினாள்.

error: Alert: Content selection is disabled!!