அங்கிருந்து புறப்பட்டதும், “அவர் அவ்வளவு கேட்டும் ஏன் சாப்பிட போகேல்ல நீங்க?” என்று வினவினாள் வருணா. அவளுக்குப் போக வேண்டும் என்று இல்லை. ஏன் இவன் அவ்வளவு உறுதியாக நின்று மறுத்தான் என்று அறியவேண்டியிருந்தது.
“தொழில் தொடர்பு தொழில் தொடரப்பவே இருக்கோணும் வரு. அதைத் தாண்டிப் பழகினா அந்த உரிமைல சில சலுகைகள எதிர்பார்ப்பினம். சில நீக்குப்போக்குச் செய்ய பாப்பினம். இவன்தானே எண்டு ஒரு அசட்டைத்தனம் வரப்பாக்கும். அது தொழிலுக்கு நல்லம் இல்ல.” என்றவனை வியப்புடன் பார்த்தாள் வருணா.
அவனுடைய சிந்தனைகளிலும் செயல்களிலும் இருந்த தெளிவும் தீர்க்கமும் அவளுக்கு வியப்பை ஏற்படுத்தின. எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் அவனுக்கிருந்த நிதானம், தொழில் சார்ந்த விஷயங்களில் அவன் காட்டிய கண்டிப்பு என ஒவ்வொன்றும் அவளுக்குள் அவனைப் பற்றிய புதியதொரு மதிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தது.
அவளுடைய விடாத பார்வையைக் கவனித்தவன், சின்னதொரு புன்னகையுடன் அவளைத் திரும்பிப் பார்த்து, “என்ன வரு?” என்றான்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைக்க வருணா, “என்ன படிச்சிருக்கிறீங்க கலிங்கா?” என்று, தன்னை மீறிய உந்துதலில் கேட்டாள்.
அதுவரை அவன் முகத்தில் தவழ்ந்துகொண்டிருந்த புன்னகை மறைந்துபோயிற்று. முகத்தில் இறுக்கம் படர்ந்தது. உதட்டோரங்கள் அழுந்த, வாகனத்தைச் செலுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தினான்.
அவளுக்குள் ஏதோ ஒன்று சுருக்கென்று தைத்தது. அவனிடம் இல்லாத ஒன்றைப் பற்றிக் கேட்டு அவனைக் குறைவாக உணரச் செய்துவிட்டேனோ தவித்துப்போனாள்.
“கலிங்கா… அது வேணுமெண்டு கேக்கேல்லை. உங்களப் பற்றித் தெரிஞ்சுகொள்ளோணும் எண்டுற ஆர்வத்திலதான். பிழையா இருந்தா… சொறி.” என்றாள் அவசரமாக.
ஒன்றுமே செல்லாமல் சற்று நேரத்துக்கு வாகனத்தைச் செலுத்தியவன் பொருத்தமான இடம் வந்ததும் லொறியை நிறுத்தினான். அதன் பிறகும் கூட அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தவன், சீட் பெல்ட்டைக் கழற்றிவிட்டு அவள் புறமாகத் திரும்பி அமர்ந்தான்.
“ஒரு அஞ்சு இல்ல ஆறாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருப்பன் எண்டு நினைக்கிறன்…” என்றான்.
அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன. “ஏன்?” என்றவளுக்குக் குரலே எழும்பவில்லை.
அவளை இமைக்காமல் சில கணங்கள் பார்த்திருந்தவன், தெரியாது என்று சொல்வது போன்று தோள்களைக் குலுக்கினான். பின்னர் மீண்டும் பார்வையைச் சாலையின் புறமாகத் திருப்பிக்கொண்டு, “அப்பா இல்ல. ஏன் இல்ல? எப்பிடி இல்லாமப் போனார்? உயிரோடயே இல்லையா? இல்ல, எங்களோட இல்லையா? இதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த வயசில என்னைச் சுத்தியிருந்த பெரிய மனுசர் கதைக்கிறதைத்தான் கேட்டிருக்கிறன். அம்மாட்ட கேட்டா சொல்ல மாட்டா. அதால அப்பா இல்ல எண்டுறது மட்டும் தெரியும்.
அம்மாக்கு நான் சுமையா இருந்திருக்கிறன் போல. அடிக்கடி என்னைக் கொண்டு போய் ஏதாவது ஆசிரமத்தில விட்டுட்டுப் போவா. எனக்கு அங்க இருக்கவே ஏலாது. பிடிக்காது. ஆனா அம்மாவை நிறையப் பிடிக்கும். அங்க இருந்து ஒவ்வொரு முறையும் ஓடி வந்திடுவன்.”
முகமெல்லாம் கலங்கிச் சிவந்துவிட, கண்களில் மல்கிவிட்ட கண்ணீரோடு அவனையே பார்த்திருந்தாள் வருணா.
“அம்மாக்கு என்னைப் பிடிக்காது போல. இல்ல, சுமையா இருந்தேனோ தெரியா. திரும்பவும் கொண்டு போய் வேற ஏதாவது ஆசிரமத்தில விட்டுடுவா. கடைசியா, பக்கத்தில விட்டாத்தானே இவன் திரும்பி வாறான் எண்டு நினைச்சிட்டுப் போல, திருகோணமலை ஆசிரமத்தில கொண்டு வந்து விட்டுட்டுப் போனவ. அங்க இருந்தும் ஓடி வந்த எனக்கு அம்மாட்டப் போறதுக்குப் பாதையும் தெரியாது. காசும் இருக்கேல்ல. நாங்க முல்லைத்தீவு எண்டு மட்டும் தெரியும்.
“பிறகு கொஞ்சக் காலம் கிடைக்கிற இடத்தில சாப்பிட்டு நித்திரை கொண்டு வளந்தன். அந்த வைரவர் கோயில் தெரிஞ்ச நாளில இருந்து எனக்கு வீடு அதுதான். கையில காசு வரத் தொடங்கினதுக்குப் பிறகு, அம்மாவைப் போய்ப் பாக்கிறதுக்கு எனக்கும் விருப்பமில்லாமப் போயிட்டுது. அம்மாக்கு நான் வேணுமா இருந்திருந்தா, அப்பிடி என்னைக் கொண்டு வந்து விட்டிருக்க மாட்டாதானே? வளர்ந்த பிறகு அந்த ஆசிரமத்துக்கே போய் விசாரிச்சுப் பாத்தனான். சில நேரம் அம்மா என்னைத் தேடி வந்தாவோ எண்டு. ஆனா, கொண்டு வந்து விட்டதுக்குப் பிறகு என்னைத் தேடி ஆருமே வரேல்லயாம். அப்பதான் நான் யாருக்குமே தேவை இல்லை எண்டுறது தெளிவா விளங்கினது.
அதுக்குப் பிறகு நானும் விட்டுட்டன்.”
எந்தவித உணர்ச்சியுமின்றி, ஏதோ ஒரு திரைப்படத்தின் கதையைச் சொல்வதைப் போன்று தன்னுடைய கடந்த காலத்தைச் சொல்லி முடித்தான் அவன்.
அவளோ துடித்துப்போனாள். என்னவோ அவளே அந்த வயதில் அனாதரவாக விடப்பட்டதைப் போன்று கண்ணீர் சிந்தினாள். எவ்வளவோ அடக்க முயன்றும் முடியவில்லை.
அவனோ எந்த உணர்வுமின்றி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர், “இப்ப என்னத்துக்கு அழுறாய்?” என்றான் கனத்த குரலில்.
அவளும் அழுகையைக் கட்டுப்படுத்தத்தான் நினைக்கிறாள். முடிய வேண்டுமே. அந்தச் சின்ன வயதில் அன்புக்காக ஏங்கிய ஒரு குழந்தையின் தவிப்பை நினைக்கும்போதே அவளுடைய நெஞ்சம் வலித்தது. அதன் பிறகும் கூட திருடி, கள்ளன் பட்டம் வாங்கி, அடி உதை வாங்கி அவன் வாழ்க்கை ஒன்றும் நல்லதாகக் காளியவில்லையே.
“அந்த வயசில உங்களுக்கு நிறையக் கஷ்டமா இருந்திருக்கும் என்ன?” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
இமைக்கான அவளையே பார்த்துவிட்டு அலட்டிக்கொள்ளாதவனைப் போன்று தோள்களைக் குலுக்கினான் அவன்.
அவளால் அப்படிக் கடந்துவிட முடியவில்லை. அந்தச் சிறுவயதில் அவனுக்குக் கிடைக்க வேண்டிய அரவணைப்பு கிடைக்கவில்லை. விழுந்தால் தூக்கிவிட ஒரு கை இருக்கவில்லை. அழுதால் கண்ணீரைத் துடைத்துவிட ஒரு மடி இருக்கவில்லை. எல்லாவற்றையும் தனியாகவே கடந்து வந்திருக்கிறான்.
இன்றைக்கு அவன் கம்பீரமான ஆணாக இருக்கலாம். பலரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். ஆனால், அவளுடைய கண்களுக்கு மட்டும் அந்தக் கம்பீரத்துக்குப் பின்னால் எப்போதோ தாயின் மடியைத் தேடி ஏமாந்துபோன ஒரு சிறுவனே தெரிந்தான்.
அந்த எண்ணமே அவளுடைய இதயத்தை இன்னும் கனக்கச் செய்தது. என்னவோ அந்தச் சிறுவனுக்கு நான் இருக்கிறேன் என்று உணர்த்திவிட வேண்டும் போலிருந்ததில் அவன் கரத்தைப் பற்றிக்கொண்டாள்.
கலிங்கன் எப்படி உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை. அவன் எப்போதும் அவளை உணர்வது அவளின் தொடுதல் வழிதான். இன்றும் அதையே அவள் செய்ய, அவளுடைய கரத்தைப் பற்றித் தன் உதடுகளில் ஒற்றிக்கொண்டான்.
அப்படியே அந்தக் கரத்தைத் தன் கன்னத்தில் பதித்துக்கொண்டு கண்களை மூடினான். அவளுடைய உள்ளங்கையின் கதகதப்பில் கன்னத்தை அழுத்தியபடி சில கணங்கள் அப்படியே இருந்தான்.
எத்தனையோ வருடங்களாகத் தனக்குள் புதைத்துவைத்திருந்த ஏதோவொரு வெறுமைக்கு அந்த ஒற்றைக் கரத்தில் ஆறுதல் கிடைத்ததைப்போலிருந்தது அவனுக்கு.
யாரிடமும் எதற்காகவும் எதையும் எதிர்பார்க்கப் பழகியிராதவன், இப்போது அவளுடைய ஸ்பரிசத்தை மட்டும் இன்னும் கொஞ்ச நேரம் தக்கவைத்துக்கொள்ளத் தோன்றியவனாக அமர்ந்திருந்தான்.
பின் நிமிர்ந்து, “வெறுப்பா இருக்கா?” என்றான்.
அவள் இருந்த மனநிலைக்கு என்ன கேட்கிறான் என்றே புரியவில்லை. கேள்வியாக அவனைப் பார்த்தாள்.
“நான் இப்பிடி எண்டு…”
“இதுக்காக எல்லாம் ஒருத்தரை நான் வெறுப்பன் எண்டு நினைக்கிறீங்களா கலிங்கா?” கலங்கிவிட்ட விழிகளோடு கேட்டாள் அவள்.
அவன் பதிலுரைக்கவில்லை. மாறாக அவளையே பார்த்த வண்ணம் அவள் உள்ளங்கையில் அழுத்தமாக முத்தத்தைப் பதித்துவிட்டு அவளது கரத்தை விடுவித்தான். அவளுடைய மொத்த மனநிலையுமே மாறிப்போயிற்று. சில கணங்களுக்கு முன்னர் இருந்த கோபமும் வருத்தமும் எங்கோ காணாமல் போயிருக்க, அவன் முத்தமிட்ட உள்ளங்கையில் மட்டும் ஒருவிதக் குறுகுறுப்பு பரவிக்கொண்டிருந்தது. அந்த உணர்வை மறைக்க முடியாமல் கீழுதட்டைக் கடித்தபடி பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.
அவளுடைய தடுமாற்றத்தையும் வெட்கத்தையும் கவனித்தவனின் உதட்டோரப் புன்னகை இன்னும் விரிந்தது. அவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொஞ்சிவிட வேண்டும் போலொரு ஆசை உள்ளுக்குள் எழுந்தது.
அடக்கிக்கொண்டவனாக, அவளுடைய கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு மீண்டும் ஸ்டியரிங்கைப் பற்றினான்.
லொறி மீண்டும் மலைப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
அவளோ, முத்தமிடப்பட்ட தன் உள்ளங்கையை மெல்ல மூடித் திறந்தபடி, ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் பதித்திருந்தாள். உதடுகளில் மட்டும் அவளையறியாமல் ஒரு சிறிய புன்னகை ஒட்டிக்கொண்டிருந்தது.

