அத்தியாயம் 44
இன்னும் பொழுது முழுமையாகப் புலர்ந்திருக்கவில்லை. அதிகாலையின் மெல்லிய இருள் அறைக்குள் கவிந்திருக்க, கலிங்கராயனுக்கு வழக்கத்தைவிட முன்னதாகவே விழிப்பு வந்திருந்தது.
கண்களைத் திறந்தவனின் பார்வையில் முதலில் விழுந்தது, தன் கை அணைப்புக்குள் சுருண்டு உறங்கிக்கொண்டிருந்த வருணாவின் முகம்தான்.
ஒரு கணம் அப்படியே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான். உறக்கத்தில் குழந்தையைப் போல அமைதியாக இருந்த அவள் முகத்தில் நேற்றிரவின் நாணத்தின் மிச்சம் இருப்பதுபோல அவனுக்குத் தோன்றியது.
உதடுகளில் தன்னையறியாமல் ஒரு சோம்பலான புன்னகை அரும்பியது. கடந்த இரவின் இனிய நெருக்கமும், அவள் தன்னிடம் காட்டிய முழுமையான அன்பும் நினைவில் மெல்ல விரிந்தன.
இதுவரை அறிந்திராத ஒரு நிறைவை அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த அந்தத் தருணங்களை நினைத்தபடியே, அவள் நெற்றியில் இதழ்களைப் பதித்தான். உறக்கம் கலையாத அவளை இன்னும் நெருக்கமாகத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“கலி…ங்கா!” மெல்லிய சிணுங்களோடு அவளும் அவனிடம் ஒன்றிக்கொண்டது பெரு மகிழ்ச்சியைத் தந்தது.
அந்த அதிகாலைப் பொழுதில் அவனுக்கு வேறெதுவும் தேவையாக இருக்கவில்லை. தன் அணைப்புக்குள் அவள் இருக்கிறாள் என்ற உணர்வே போதுமாயிற்று. மெல்ல அவள் தலையை வருடிக்கொடுத்தான்.
*****
அந்தத் தவறான உறவுக்குள் நுழைந்த நாளிலிருந்து, இப்படி யாரிடமாவது மாட்டிக்கொண்டு கூனிக்குறுகி நிற்கும் நிலை நிலாவினிக்கு அதுவரை வந்ததில்லை. விஜயராஜனின் முன்னால் நின்ற அந்த நிமிடங்கள்தான் அவளுக்கு அப்படியொரு அனுபவத்தைக் கொடுத்திருந்தன.
அவருடைய பார்வையும் பேச்சும் அவளைத் துரத்தி அடித்த விதம், ஒரு சிறு துரும்பாகக் கூட மதிக்காமல், ஏதோ அருவருக்கத்தக்க பொருளைப் பார்ப்பதுபோல அவர் பார்த்தது எல்லாமே அவளுக்குள் ஆழமான அவமானத்தை விதைத்திருந்தன.
அது தவறான உறவுதான் என்பது அவளுக்குத் தெரியாததல்ல. ஆனால், அந்த உறவு எப்படி அவளை அசிங்கப்படுத்தும் அவமானப்படுத்தும் என்று அன்றுதான் அறிந்துகொண்டாள்.
எல்லாவற்றையும் நினைக்க நினைக்க தன் மீதே அவளுக்கு அருவருப்பும் கோபமும் ஏற்பட்டது. இதே இது முறையான ஒரு உறவாக இருந்திருக்க அந்த மனிதர் மதிக்கிற இடத்தில் இருந்திருப்பாள்.
அடுத்தடுத்த நாள்களில் வரதனிடம் செல்வதைத் தவிர்த்தாள். அவனுடைய அழைப்புகளைக் கூட ஏற்கவில்லை. ஒரு கோபம், தன்னை அந்த நிலையில் நிறுத்திவிட்டானே என்று. அவன் தமையனிடம் அவளுக்காய் அவன் ஒரு வார்த்தை கூடக் கதைக்கவில்லையே. அவள் அசிங்கமானவள் என்றால் அவனும் அப்படித்தானே என்று பல கேள்விகளும் குழப்பங்களும் ஆற்றாமைகளும் அவளைப் போட்டுத் தின்றன.
இரண்டு நாள்கள் அவளைக் கவனித்துவிட்டு என்னவென்று விசாரித்தான் சூர்யா. அவள் சொன்னதைக் கேட்டபோது அவனால் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் போயிற்று.
கலிங்கன் உயிருடன் திரும்பிய நாளிலிருந்தே தவறு செய்துவிட்டோமோ என்கிற கேள்வி அவனுக்குள் எழுந்திருந்தது. தான் செய்த காரியங்கள் குறித்து அவனுக்கு இன்றைக்கும் கவலை இல்லை. ஆனால், அதைச் சரியாகச் செய்யாமல் போனோமே என்றெண்ணி வருந்தினான்.
இன்னுமே அவனுக்குத் தனக்கென்று ஒரு பெயரும் மரியாதையும் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதில், “பொறு பாப்பம். எப்பவும் இது இப்பிடியே இருந்திடாது. மாறும், மாத்துவம்.” என்று சொன்னான்.
*****
விஜயராஜன் சொத்துகளைப் பிரிப்பதாகச் சொன்னதிலிருந்து வரதனின் மனம் ஒருநிலைப்படவில்லை.
ஏற்கனவே கலிங்கராயனால் ஏற்பட்ட பாதிப்புகள் சாதாரணமானவை அல்ல. லொறிகளில் சென்ற சரக்குகள் எரிந்து போனதில் ஏற்பட்ட இழப்பு ஒருபுறம். ஹோட்டல்களில் தவறான நடவடிக்கைகள் நடப்பதாக வெளியான காணொளிகளால் ஏற்பட்ட அவப்பெயர் மறுபுறம்.
போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தாலும், மக்களின் மனதில் விழுந்த கறையை அவ்வளவு எளிதில் அழிக்க முடியவில்லை. கூடவே, அன்றைக்குப் பிறகு பழையபடி பார்ட்டிகள் வைத்து, பெரிய தலைகளை மகிழ்வித்துப் பணம் பார்க்கவும் வழியில்லாத நிலை.
அப்படியான இந்த நேரத்தில் இப்படியொரு முடிவைத் தமையன் எடுத்திருப்பது அவனுக்கு எரிச்சலை உண்டாக்கிற்று. நேரடியாக விஜயராஜனிடம் சென்று முரண்படுவதில் எந்தப் பயனுமில்லை. அவரை எதிர்த்து நின்று வெற்றிபெறுவதும் அவ்வளவு சுலபமல்ல. அதனால் முதலில் தன்னுடைய வழக்கறிஞர்களை அழைத்துப் பேசினான்.
அவர்கள் விஜயராஜனுடன் பேசி அவர் முடிவை மாற்றுவது மட்டுமே இதற்கான சிறந்த முடிவு என்றார்கள். அப்படியே அவர் மறுத்தால் இந்தப் பாகப் பிரிவினையை முடிந்தவரையில் தள்ளிப்போட்டு இழுத்தடிக்கச் சொன்னார்கள். அதற்குள் அவருக்குப் போகும் என்று நினைக்கிற நிறுவனங்களில் அவனின் ஆட்களைப் போட்டு, தப்பித்தவறி அந்தச் சொத்துக்கள் அவர் கைக்குப் போனாலும் அவருக்குத் தெரியாத வகையில் அது அவன் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பார்த்துகொள்ளச் சொன்னார்கள்.
மாறனைக் கொண்டு விஜயராஜனிடம் பேச முடியாது. கப்பலில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு, அவன் இவன் முகம் பார்க்கக் கூட விரும்புவதில்லை. அவன் அண்ணியார் அண்ணன் சொல் தட்டாதவர்.
விஜயராஜனுடன் இன்னொரு முறை பேசிப் பார்த்தான். அவர் தன் முடிவிலிருந்து மாறவே இல்லை. “உன்னால நானும் என்ர மகனும் பட்ட பாடெல்லாம் போதும். நான் சொன்னதைச் செய்றதுக்கு என்ன வழி எண்டுறதை மட்டும் பார்!” என்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்திருந்தார் அவர்.

