அவனுக்கு எரிச்சல் பல மடங்காகிற்று. நிலாவினி தேவைப்பட்டாள். அப்போதுதான் கடந்த சில நாள்களாக அவள் தன்னைத் தவிர்ப்பது அவன் கவனத்திற்கு வந்தது. இந்தளவில் அவனைத் தவிர்க்கும் அளவிற்கு அவ்வளவு தைரியமா என்று அவளை அழைத்துவரச் சொல்லி கார் அனுப்பினான்.
காரோட்டியிடம் முடியாது என்று சொல்லிக் கேவலப்பட்டு நிற்க நிலாவினியால் முடியவில்லை. இத்தனை நாள்களும் தெரியவில்லை. இப்போது இந்தக் காரோட்டி தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று ஓடிற்று. முகம் கன்ற அவரை நிமிர்ந்தும் பாராமல் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
வந்தவளிடம் எதுவுமே நடக்காதது போல இயல்பாகவே பேசினான் வரதன். ஏன் வரவில்லை, ஏன் அவனோடு பேசவில்லை, ஏன் முகத்தை ஒரு மாதிரி வைத்திருக்கிறாள் என்று எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவளைச் சமைத்துத் தரச் சொல்லி உண்டான்.
உணவு முடிந்ததும் அவளுடைய இறுக்கத்தைப் பொருட்படுத்தாதவன் போன்று அவளை நெருங்கினான்.
அதற்குமேல் அவளால் முடியவில்லை. “எப்ப என்ர கழுத்தில தாலி கட்டப்போறீங்க?” என்று நேராகவே கேட்டாள்.
“என்ன அவசரம்?” என்றான் அவன் நிதானமாக.
“அவசரம் இல்ல. அவசியம் வந்திருக்கு, உங்கட அண்ணா…” எனும்போதே வாயில் விரல் வைத்து, “உஷ்!” என்றான் அவன். “அவரைப் பற்றியெல்லாம் நீ கதைக்கக் கூடாது!” என்றான் ஒற்றை வரியில்.
அவள் முகம் கன்றிச் சிவந்து போயிற்று. அவள் கதைக்கக் கூடாது என்றால் அந்தளவில் அவள் மோசமா? உள்ளம் கொந்தளித்தது. ஆனால், கோபத்தை விடக் காரியம் பெரிதாகத் தெரிய, “என்னோட பழகேக்கையே தாலி கட்டுவன் எண்டு சொன்னனீங்கதானே?” என்றாள்.
“எப்ப எண்டு சொல்லேல்லையே.” என்றான் அவன் இலகுவாய்.
“அதுக்காக இப்பிடியே இருக்கேலுமா?”
“தாலி காட்டினா மட்டும் பப்லிக்ள வந்து வரதன்ர மனுசி நான் எண்டு சொல்லுவியா நீ?” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.
“வெளி உலகத்தில எனக்கு என்ன பெயர் எண்டு உனக்குத் தெரியுமா இல்லையா?”
தன் அதிர்ச்சியைத் தனக்குள் விழுங்கிக்கொண்டு, “நானும் வெளில வந்து சொல்லுவன் எண்டு சொல்லேல்லையே. தாலிய காட்டுங்க எண்டு மட்டும்தானே கேக்கிறேன்.” என்றாள் குரலடைக்க.
“வெளில சொல்லாம இருக்கிறதுக்கு என்னத்துக்கு தாலி?”
காலம் முழுக்க இப்படியே இரு என்கிறானா? அவன் ஆசைக்கு அவசரப்பட்டு இணங்கிவிட்டதால் உண்டானது இது. மனம் பதற, “எனக்குத் தாலி வேணும்!” என்றாள் அவள்.
வரதனின் முகம் மாறியது. “தராட்டி என்ன செய்வாய்?” என்றான் அவள் முன்னே வந்து நின்று.
அவள் விக்கித்துப்போனாள். அவனுடைய வழக்கமான அதிகாரத் தோரணை அவளை எப்போதும்போல் அச்சுறுத்தியது. அவள் வார்த்தைகள் அப்படியே தொண்டைக்குள் நின்றுவிட்டன.
அவள் அமைதியானதும் வரதன் மீண்டும் இயல்புக்குத் திரும்பினான். அவளை நெருங்கினான். மனம் முரண்டினாலும் அடங்கினாள் நிலாவினி. அங்கியிருந்து புறப்படும்போது, இதற்கு மட்டும்தான் நானா என்கிற கேள்வி அவள் தொண்டைக்குழியைப் பிடித்து நசுக்கிற்று.
ஏனோ கலிங்கன் நினைவில் வந்தான். வரதனோடு தொடர்பு வருகிற வரை அவளும் அவனை நெருங்கியதில்லை. அவனும் வரமாட்டான். அதன் பிறகு இதை மறைப்பதற்காகவும், அவன் தன்னைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவும் அவள் நெருக்கம் காட்டியபோதெல்லாம் இடைவெளி பேணி, அவளை மரியாதையுடன் நடத்திய அவன் குணம் எத்தனை பெரியது என்று இப்போது புரிந்தது.
சூர்யாவுக்கு வரதனின் போக்குப் பிடிக்கவில்லை. அவன் எதையோ தன்னிடமிருந்து மறைப்பது தெரிந்தது. விஜயராஜனின் வருகை ஏன் என்கிற கேள்வியும் குடைந்தது. அதைவிட, வக்கீல்களை அவன் அழைத்துப் பேசியதை அவன் வீட்டைக் கண்காணிக்க இவன் நிறுத்திய ஆள் சொன்னதைக் கேட்டு புருவங்களைச் சுருக்கினான்.
என்னவோ வரதனை முழுவதுமாக நம்ப விரும்பவில்லை அவன்.
*****
அன்றைக்குப் பிறகு வந்த நாள்களில் கலிங்கனின் அணுகுமுறையில் மிகுந்த மென்மை கலந்திருந்தது. ஏற்கெனவே அவள்மீது அளவற்ற நேசம் கொண்டிருந்தவன்தான் என்றாலும், இப்போது அவளைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் ஒரு தனிப்பட்ட நெருக்கம் தெரிந்தது. அவளைக் கடந்து செல்லும்போது கூட அவளைத் தொடாமல் செல்ல முடியாதவனாக மாறியிருந்தான்.
காலையில் அவள் விழிப்பதற்கு முன்பே அவளை அணைத்தபடி படுத்திருப்பதும், அவள் விழித்ததும் அவளுடைய நெற்றியில் முத்தமிட்டு அவளை மீண்டும் தன்னுடைய மார்புக்குள் இழுத்துக்கொள்வதுமாக அவனுடைய காலைப் பொழுதுகள் தொடங்கின.
அவளின் தூக்கம் கலைந்த முகத்தையும், கலைந்த கூந்தலையும் ரசிப்பதில் அவனுக்கு அத்தனை பிரியம். அவள் எழுந்து செல்ல முயன்றால்கூட இன்னும் கொஞ்ச நேரம் என்று அவளுடைய இடையைச் சுற்றியிருந்த கரத்தை இறுக்கிக்கொள்வான்.
ராசம்மாவை நகர்த்திவிட்டு அவளே அவனுக்காக ஏதாவது செய்வது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவ்வப்போது கன்னத்தில் முத்தமிடுவதும், கழுத்தோரம் முகம் புதைப்பதும், அவள் கூச்சத்தில் நெளியும்போது அதைக் கண்டு குறும்பாகச் சிரிப்பதுமாக அவனுடைய சேட்டைகள் தொடர்ந்தன.
அவளுடைய தலைமுடியை விரல்களால் கோதிவிடுவதும், தோள்களை மெதுவாகப் பிடித்து விடுவதும், அவளுக்குப் பிடித்தமானவற்றைத் தேடித் தருவதும் இப்போதெல்லாம் அவன் பிரத்தியேகக் கடமைகளாகின.
அவர்களுக்கிடையிலான அந்தரங்க நெருக்கமும் இன்னும் இயல்பானதாக மாறியிருந்தது. முன்புபோல அவள் ஒவ்வொரு முறையும் வெட்கப்பட்டு விலகுவதில்லை. அவன் கரங்கள் அவளைத் தேடும்போது அவளுடைய கரங்களும் தன்னிச்சையாக அவனைச் சுற்றிக்கொள்ளும்.
சில மாலைகளில் இருவரும் தனியாக இருக்கும்போது அவளைத் தன்னருகில் இழுத்து மடியில் அமர்த்திக்கொண்டு நீண்ட நேரம் அணைத்திருப்பான். கிடைக்கிறபோதெல்லாம் வெளியே அழைத்துச் செல்வான். போட் பயணங்கள் கூட உண்டு. அவள் விரல்களில் முத்தமிடுவதும், உள்ளங்கையைத் தன் கன்னத்தில் வைத்துக்கொள்வதும், அவளுடைய முகத்தை நெருக்கமாகப் பார்த்து ரசிப்பதும் அவன் உலகம்.
இரவின் நெருக்ககங்கள் அதிகமாயின. அப்போதும் அவள் விருப்பத்தையும் மனநிலையையும் உணர்ந்து நெருங்குவான். சில இரவுகள் நீண்ட முத்தங்களிலும் அணைப்புகளிலும் கரையும். சில இரவுகள் ஒருவரையொருவர் இறுக அணைத்தபடி பேசிக்கொண்டே கழியும். சில இரவுகள் அவர்களுடைய அந்தரங்கமான காதலின் இனிமையில் முடியும்.

