கலிங்கனின் காவியம் 45.1

அத்தியாயம் 45

வீட்டுக்கு வந்த நிலாவினிக்கு வரதனின் போக்குப் பெரும் கலக்கத்தைக் கொடுத்திருந்தது. அடுத்து என்ன செய்வது, என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க முடியாத நிலையில் இருந்தாள்.

அவனோடு பழக ஆரம்பித்த நாட்களிலும் அவனிடம் இந்த அதிகாரமும் ஆளுமையும் இருந்தாதான். ஏதோ ஒரு வகையில் அதுவும் அவளை அவன்பால் கவர்ந்திழுத்திருந்தது.

அவன் பேசும் விதம், அவனுடைய முடிவுகளில் தெரியும் உறுதி, எதையும் தன்னால் சாதிக்க முடியும் என்ற அவனுடைய தோரணை என எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தன. கூடவே அவள் மீதான அவன் புகழுரைகளும்.

அப்போது அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நம்பினாள். அவள் மீது அவன் காட்டிய மயக்கம் அத்தனையையும் நம்பச் சொன்னது. அவன் தன் கைக்குள் இருப்பான் என்றும் நினைக்க வைத்திருந்தது.

ஆனால், இன்றைக்கு அதே அதிகாரத்தையும் ஆளுமையையும் பயன்படுத்தி அவளை அடக்கிவிட்டு, தன்னுடைய தேவையை நிறைவேற்றிக்கொண்டு அனுப்பியிருந்தான்.

ஒருகாலத்தில் அவனுடைய ஆளுமையில் ஈர்க்கப்பட்டவள், இன்றைக்கு அதே ஆளுமையைக் கண்டு அச்சப்படும் நிலைக்கு வந்திருந்தாள்.

அங்கு போய்விட்டு வந்தவளின் முகம் சரியில்லாமல் இருப்பதைக் கவனித்த சூர்யா, என்னவென்று விசாரித்தான்.
நடந்தவற்றை முழுமையாக அவனிடம் சொல்லத் தயங்கிய நிலாவினி, வரதன் திருமணத்துக்குத் தயாராக இல்லை என்பதை மட்டும் சொன்னாள்.

“எண்டைக்குமே அவர் கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லுவார் எண்டு நான் நினைக்கேல்ல அண்ணா. எனக்கு இனி இதுதான் வாழ்க்கை போல.” என்றாள் தொண்டை அடைக்க.

அதைக் கேட்டதும் சூர்யாவுக்குக் கோபம் வந்தது. உடனேயே வரதனுக்கு அழைத்தான். வழக்கம்போல அதை ஏற்காமல் துண்டித்துவிட்டான் வரதன்.

அது சூர்யாவின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. ஆனாலும், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.

கலிங்கனோடு சூர்யாவும் நிலாவினியும் இருந்த காலத்தில் அவன் தொழில் லாபத்தில் ஒரு பங்கு இவர்களுக்கு வந்து சேர வேண்டும் என்பதில் கலிங்கன் எப்போதுமே கவனமாக இருப்பான்.

ஆனால், தொழில் தொடர்பான எந்த ஆவணங்களிலும் அவர்களுடைய பெயர்களை அவன் ஒருபோதும் கொண்டுவந்ததில்லை. எந்த ஆபத்து வந்தாலும் அது தன்னோடு நின்றுவிடட்டும் என்பதுதான் அவன் எண்ணம்.

கூடவே, தனக்கொரு ஆபத்து வந்தால் நண்பன் வெளியிலிருந்து தன்னைக் காப்பாற்றுவதற்கான வேலைகளை பார்ப்பான் என்கிற நம்பிக்கையும்.

அதேநேரம், அவர்களுக்குரிய பங்குப் பணத்தில் சொத்துகள் வாங்கிக் கொடுப்பதற்கோ, குறிப்பிட்ட தொகையை அவர்களுடைய பெயர்களில் வைப்புச் செய்வதற்கோ அவன் ஒருபோதும் தவறியதில்லை.

அதனால், கலிங்கனின் அளவுக்குச் சொத்துப் பத்துகளும் பணவசதியும் இல்லையென்றாலும் சூர்யாவும் எல்லா வசதிகளும் கொண்டவன்தான். உண்மையில் பணம் அவனுக்கு ஒருபோதும் பிரச்சனையாக இருந்ததில்லை.

அவனுக்குத் தேவைப்பட்டது அதிகாரம், மதிப்பு, மரியாதை, தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தனக்குக் கொடுக்க வேண்டிய அங்கீகாரம். அவன் தனியாகப் போனால் அண்ணா என்று ஓடிவருகிற அத்தனை பெரும், கலிங்கனோடு போனால் கலிங்கனிடம்தான் போவார்கள். அந்த இடத்தில் அவர்களில் ஒருவனாக சூர்யா மாறிவிட கலிங்கன் தலைவனாகிவிடுவான்.

அந்த இடத்தைத் தனக்குப் பெற்றுத்தருவான் என்கிற நம்பிக்கையில்தான் வரதனோடு கைகோர்த்தான். ஆனால், இப்போது நிலைமை வேறாகத் தெரிந்தது.

தான் திருடன் பிறரை நம்பான் என்பதற்கு இணங்க, கலிங்கனின் முதுகில் தானும் வரதனும் சேர்ந்து எப்படிக் குத்தினார்களோ, அப்படி வரதன் ஒருநாள் தன் முதுகிலும் குத்திவிடுவானோ என்ற பயம் மெல்ல மெல்ல அவனுக்குள் வேரூன்றத் தொடங்கியிருந்தது.

அன்றைக்காவது கலிங்கன் இவனோடு இருந்தான். நிலாவினி இருந்தாள். வரதனும்கூட ஏதோவொரு வகையில் சூர்யாவுக்குக் கட்டுப்பட்டிருந்தான். ஆனால், இன்றைக்கு அவற்றில் எதுவுமே அவனிடம் இல்லை.

தன்னிடமிருந்த அத்தனை பிடிகளையும் இழந்துவிட்டு, கையாலாகாதவனாக நிற்பதைப் போன்ற உணர்வு அவனை உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருந்தது.

வரதனை முழுமையாக நம்பவும் முடியவில்லை. அவனைப் பகைத்துக்கொண்டு தனியாக நிற்கவும் முடியவில்லை.

மெல்ல மெல்ல தனக்கென்று குறிப்பிட்ட ஆட்களைத் தயார் செய்வதிலும், வரதனின் ஆட்களுக்குள்ளேயே ஒரு சிலரைத் தன் பக்கம் இழுப்பதிலும் இரகசியமாக இறங்கினான்.

வரதனை எப்படியாவது தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தான். அதற்கு அவன் பிடி ஏதாவது தன்னிடம் மாட்ட வேண்டும் என்று திட்டமிட்டான்.

இத்தனை காலமும் வரதனோடு ஒன்றாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான். அவனுடைய திட்டங்களில் பங்கெடுத்திருக்கிறான். கலிங்கனுக்கு எதிரான சதியில் கூட கைகோர்த்திருக்கிறான். அப்படியிருக்க, அவனுடைய போதை பொருட்களை எங்கே பதுக்கி வைத்திருக்கிறான், அந்த வியாபாரத்தை எப்படிச் செய்கிறான் என்கிற முக்கியமான இரகசியத்தை இவனிடம் சொல்லவேயில்லை.

அந்த உண்மை சூர்யாவுக்குள் ஆத்திரத்தையும் அவநம்பிக்கையையும் ஒருசேர ஏற்படுத்தியது. வரதன் தன்னை இன்னமும் வெளி ஆளாகத்தான் பார்க்கிறான் என்ற எண்ணம் அவனுடைய ஈகோவைச் சீண்டியது.

அதனால், இப்போது அவனுடைய கவனம் முழுவதும் அந்தப் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கிடங்கைக் கண்டுபிடிப்பதில் திரும்பியிருந்தது.

அந்த இடம் மட்டும் தெரிந்துவிட்டால், வரதன் இவன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவான் என்று திட்டமிட்டு
அந்தக் கிடங்கைத் தேடும் வேலையை ஆரம்பித்திருந்தான்.

*****

விஜயராஜனின் பலம், பலவீனம் எல்லாமே மாறன்தான். அதில் மாறனையே அவருக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தினால் என்ன என்று வரதனின் குள்ளநரிப் புத்தி கணக்குப் போட்டது.

அடுத்த நொடியே காவல்துறையில் தனக்குச் செல்வாக்கான அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டான். சில நிமிடங்கள் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் முகத்தில் திருப்தியான புன்னகை அரும்பியது.

அதன் விளைவாக மாறனுக்குக் காவல்துறையிலிருந்து அழைப்பு வந்தது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவனை அங்கேயே வைத்துக்கொண்டு பல மணி நேரம் விசாரித்தார்கள்.

வயதான பெண்மணியுடன் அவனுக்கிருக்கும் தொடர்பு என்ன, அவளை ஏன் ஏவிவிட்டான் என்று அடுத்தடுத்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன. மாறன் தனக்கும் அந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தும் அவனை வெளியே அனுப்ப அவர்கள் தயாராக இருக்கவில்லை.

விஷயமறிந்த விஜயராஜன் பதறிப்போனார். அந்தப் பெண்மணியைக் கலிங்கனின் ஆட்கள் வளைத்துப் பிடித்தது மாறன் மூலம் அவருக்குத் தெரியும். அதில் கலிங்கன் மூலம் அது மதியழகனின் காதுக்குப் போகுமோ, அவர் வந்து இவர்களைக் கேளாத கேள்வி கேட்டுவிடுவாரோ, கொலைகாரக் கூட்டம் என்று சொல்லிவிடுவாரோ, நேர்மையான மனிதன் கோர்ட் கேஸ் என்று போய்விடுவாரோ என்று இத்தனை நாட்களாகப் பயந்துகொண்டிருந்தார்.

அவரிடமிருந்து அழைப்பு வராததிலும் அவர் வந்து தன்னைப் பாராததிலும் சின்ன ஆறுதல் கொண்டிருந்தார். கலிங்கன் ஏன் வருணாவின் கழுத்தில் தாலி கட்டினான் என்கிற விடயத்தைச் சொல்லப்போனால் மாறன் கத்தியால் குத்திய விடயத்தையும் சொல்ல வேண்டும். அதைச் சொல்லாமல் மற்றதை மட்டும் சொல்லத் தைரியமில்லை.

நாளைக்கு உண்மைகள் அனைத்தும் தெரியவருகையில் முகத்தில் காறித் துப்பிவிட மாட்டார்களா என்று பயந்தார்.

அதனாலேயே ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கை ரவுடி ஒருவனிடம் சிக்கி நாசமாகப் போவது தெரிந்தும்
பேசாமல் இருக்கிறோம் என்கிற குற்றவுணர்ச்சி அவரை அரித்தாலும், தானாகச் சென்று அந்த உண்மையைச் சொல்லி, மகனுக்கு அடுத்தடுத்த சிக்கல்களை உருவாக்கி, இன்னுமின்னும் அவனை உடைக்க அவரால் முடியவில்லை.

பெற்ற மகனா இன்னோர் வீட்டுப் பிள்ளையா என்று வருகையில் அவர் நியாயத் தராசு பெற்ற பிள்ளையின் பக்கமே சாய்ந்தது.

அப்படியிருக்க அவர் எதற்குப் பயந்து அத்தனையையும் மறைத்து வைத்திருந்தாரோ இன்று அதுவே நடந்திருந்தது.

உடனேயே தனக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரிகள் பலரையும் தொடர்புகொண்டார். ஆனால், அவருடைய செல்வாக்கு எதுவுமே எடுபடவில்லை. மாறனைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி கிடைக்கவில்லை.

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தட்டிக்கழித்தார்களே தவிர, மாறனைப் பார்க்கவோ அவனை விடுவிக்கவோ எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

error: Alert: Content selection is disabled!!