கலிங்கனின் காவியம் 45.2

நேரம் செல்ல செல்ல அவருடைய பதற்றம் அதிகரித்துக்கொண்டே போனது. மகன் காவல்துறையில் சிக்கி இருக்கிறான் என்பது ஒருபுறம் என்றால், அந்தச் செய்தி வெளியில் கசிந்தால் என்னாகும் என்கிற பயம் மறுபுறம். அதைவிட இதையெல்லாம் மகன் தாங்குவானா, எதிர்கொள்வானா என்கிற பதற்றமும் அவரை அலைக்கழித்தது.

ஏற்கனவே கப்பலில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த மாறன், இன்னுமொரு இப்படியான மோசமான சூழ்நிலையைத் தாங்கிக்கொள்ள மாட்டான் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதிலும் காவல்துறை விசாரணை என்ற பெயரில் எந்தளவில் மோசமாக நடத்துவார்கள் என்று தெரியுமே.

மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்த்தார். தெரிந்தவர்கள் மூலமாகவும் முயற்சி செய்தார். எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு ஒரு யுகமாகக் கழிந்தது. இனியும் காத்திருக்க முடியாது என்பதை உணர்ந்தவர், இறுதியில் வேறு வழியின்றி வரதனைத் தேடிச் சென்றார்.

அவரைப் பார்த்ததும் வரதனுக்குள் குரூரமான திருப்தி ஏற்பட்டது. சொத்துகளைப் பிரித்துக்கொண்டு தனித்தனியாகப் போய்விடலாம் என்று சொன்னவர், இப்போது தன்னுடைய மகனை மீட்பதற்காகத் தன்னிடமே வந்து நிற்கிறார். அந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான்.

விஜயராஜன் மாறனைப் பற்றிக் கூறினார். வரதன் பதறிப்போனார். காவல்துறைக்கு என்ன தைரியம் என்று கோபப்பட்டான். தன் பெறா மகன் மீது கையை வைத்தால் தன் மேல் வைத்ததற்கு ஒப்பானது என்று சொன்னவன், ஒரேயொரு தொலைபேசி அழைப்பில் வேலையை முடித்தான்.

விஜயராஜனால் மகிழ்ச்சியடையவோ, பழையபடி அவனுடன் முகம் கொடுத்துப் பேசவோ முடியவில்லை.

அங்கிருந்து புறப்படத் திரும்பியவர், ஏதோ நினைத்தவராக ஒரு கணம் நின்றார். “இதுக்குப் பின்னால நீ இல்லையே?” என்றார் நேராக அவனைப் பார்த்து.

ஒரு கணம் தமையனின் முகத்தையே பார்த்த வரதன், “ஊருக்கு நான் எப்பிடியும் இருக்கலாம் அண்ணா. என்ர அண்ணா குடும்பத்துக்கும், அண்ணான்ர மகனுக்கும் எண்டைக்கும் நல்லவன்தான்.” என்றான்.

சில நொடிகள் அவன் முகத்தையே பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் விஜயராஜன். அவரைத் தடுத்தான் வரதன்.

“சொத்துகளைப் பிரிச்சுக்கொண்டு மொத்தமா பிரிஞ்சு போவம் எண்டு சொன்னீங்க. உங்களுக்கு தேவை எண்டா மட்டும் நான் தேவை. மறுபடி என்னை வெட்டிவிட்டுடுவீங்க. எனக்கு ஒரு பிரச்சினை வந்தா நீங்க தோள் குடுக்க மாட்டீங்க என்ன?”

அவனுடைய கேள்வி விஜயராஜனின் முகத்தை இறுகச் செய்தது. ஆனால் பதில் சொல்ல முடியாத நிலையில் அவர் நின்றிருந்தார்.

வரதன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவரை அனுப்பிவைத்தான். இனி அசையமாட்டார் என்று நினைத்தான். இல்லையானாலும் அவருக்கு எப்படிக் குடைச்சல் கொடுக்க வேண்டும், எப்படி மறுபடியும் தன்னிடமே வந்து நிற்கும் நிலையை உருவாக்க வேண்டும் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

சிறிது நேரத்திலேயே மாறன் வெளியே வந்துவிட்டான்.
மகனை மீட்டுக்கொண்டுவிட்ட நிம்மதி ஒருபுறம் இருந்தாலும், வரதனின் முன்னால் இப்படிக் கையறு நிலையில் நிற்க வேண்டியிருந்தது விஜயராஜனுக்குப் பெரும் அடியாக இருந்தது.

*****

அன்று வருணாவுக்கு அவளுடைய தலைமை வைத்தியரிடம் அவசர அழைப்பு வந்தது. அன்றைய தினம் நான்கைந்து பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் தன்னால் தனியாகச் சமாளிக்க முடியாமல் இருப்பதாகவும் கூறியவர், அவளை உடனடியாக வைத்தியசாலைக்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.

அதைக் கேட்ட வருணாவின் மனம் பதறியது. உயிர்களைக் காப்பாற்றுவதையே தன்னுடைய கடமையாகவும் விருப்பமாகவும் கொண்டவள் அவள். அவசர சிகிச்சைப் பிரிவில் எப்படியான சூழ்நிலைகள் உருவாகும் என்பதும், அப்படியான நேரத்தில் ஒவ்வொரு நொடியும் எவ்வளவு முக்கியமானது என்பதும் அவளுக்குத் தெரியும்.

குறிப்பாக, அவளின் தலைமை வைத்தியர் இவ்வளவு பதற்றத்துடன் அழைக்கிறார் என்றால், அங்கே நிலைமை எந்த அளவுக்குக் கைமீறிப் போயிருக்கும் என்பதை அவளால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது.

அவருடைய அழைப்பைத் துண்டித்தவள், உடனடியாகக் கலிங்கனுக்கு அழைத்து விடயத்தைச் சொன்னாள். மறுமுனையில் சில நொடிகள் அமைதியாக இருந்தான் கலிங்கன்.

அவளுக்கு அதற்கே கோபம் வந்தது. “நான் போயே ஆகோணும் கலிங்கா!” நீ மறுத்தாலும் நான் கேட்க மாட்டேன் என்கிற குரலில் சொன்னாள் அவள்.

“நானும் உன்னை போக வேண்டாம் எண்டு சொல்லேல்ல வரும்மா.” என்று தணிந்தே பதில் சொன்னான் அவன்.

“சொல்லித்தான் பாருங்களன்!” என்று நின்றாள் அவள்.

அந்த நேரத்திலும் அவன் உதட்டில் புன்னகை அரும்பிற்று.

“நாங்க கடத்திய ஒவ்வொரு நிமிஷமும் அங்க ஒரு உயிர் துடிச்சுக்கொண்டு இருக்கு கலிங்கா ” குரலில் இருந்த பதற்றமும் அவசரமும் அவனுக்குப் புரிந்தன.

“ஓகே. நான் வாறன்.”

“நீங்க எப்ப வந்து, நான் எப்ப போறது? என்னை இப்பவே வேற ஆரோடயாவது அனுப்பிவைங்க!”

அவனுக்கும் புரிந்தது. அவன் யோசித்ததும் அவள் பாதுகாப்பைப் பற்றித்தான். “சரி நீ வெளிக்கிட்டுப் போ. ஆதி உன்னைக் கூட்டிக்கொண்டு போவான்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் உடனேயே ஆதிக்கு அழைத்தான்.

விடயத்தைச் சொல்லி இரட்டிப்புக் கவனத்தோடு அவனை இருக்கச் சொன்னான். சும்மாவே அவன் அப்படித்தான். அப்படியிருக்க கலிங்கன் பிரத்தியேகமாகச் சொன்னால்?

வருணா தன் பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கிடையில் காரைக் கொண்டுவந்து வாசலில் நிறுத்திவிட்டு பின் கதவருகில் காத்து நின்றான்.

அவள் வந்ததும் கதவைத் திறந்துவிட்டான். அவள் ஏறியதும் கதவைச் சாற்றிவிட்டு வந்து காரை எடுத்தவன் வீதியில் காரைப் பறக்கவிட்டான்.

வருணா பயந்துபோனாள். அதுவும் கலிங்கனின் பிரதியாய் அவனும் வாகனம் ஓட்டுவது ஏதோ ஒரு வகையில் அவளைக் கோபப்படுத்தியது. “நான் போறது வைத்தியம் பாக்க. நீ போற வேகத்தைப் பாத்தா என்னையும் இன்னொரு பெட்ல படுக்க வைப்பாய் போல.” என்று சிடுசிடுத்தாள்.

“இல்ல அ… அது அவசரம் எண்டு அண்ணா சொன்னவர். அதான்…” மேல் கண்ணாடியில் அவளை பார்த்துச் சொன்னான் அவன்.

“அதுக்கு?” என்று அதுக்கும் ஆத்திரப்பட்டாள் அவள். “எல்லாத்துக்கும் காரணம் உங்கட நொண்ணாதான். அவருக்கு நாலு போட்டா நீங்க எல்லாரும் திருந்துவீங்க!” என்றவள் பேச்சில் ஆதி சிரித்துவிடப் பார்த்தான். அவள் கோபத்திற்குப் பயந்து முகத்தை மிகத் தீவிரமாக வைத்துக்கொண்டு வேகமாகவே வாகனத்தைச் செலுத்தினான்.

“டேய்! நீ சொல்லுறதைக் கேக்கவே மாட்டியா?”

“பயப்பிடாதீங்க அண்ணி. அண்ணாவை இதைப்போல பத்து மடங்கு வேகத்தில கூட்டிக்கொண்டு வந்தனான். அண்ணாக்கோ உங்களுக்கோ என்னால எண்டைக்கும் எதுவும் ஆகாது.” என்றவன் வார்த்தைகளில் வருணாவின் அசைவுகள் அத்தனையும் நின்றுபோயின.

ஒருவித அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். இதேபோன்ற பொருளில்தான் அன்று அருவியின் அருகில் வைத்துக் கலிங்கனும் சொன்னான். இவனும் சொல்கிறான் என்றால்… அவனுக்கு அவள் முக்கியம். இவனுக்கு அந்தளவில் அவர்கள் முக்கியமா? அவளுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டு வரவும் முகத்தைத் திருப்பித் தன் உணர்வுகளை அடக்கினாள்.

கடந்துபோன கனமான சில நிமிடங்களின் பின்னரே அவள் ஓரளவுக்கு நிதானமானாள். ஆதி அறியாமலேயே அவனைக் கவனித்தாள்.

கலிங்கன் இருந்தால் மட்டும்தான் இவன் வெளியே போவான். இல்லையோ அங்கே அவர்களின் வீட்டில்தான் இருப்பான். அதற்கென்று வீட்டுக்குள் அவசியமற்று வருவதும் இல்லை. இராசம்மா வெளியே இருக்கிற குடில் போன்ற ஒன்றில்தான் அங்கே இருக்கிற கலைஞனின் ஆட்களுக்கு உணவு முதற்கொண்டு அத்தனையும் கொடுப்பார்.

இத்தனை காலமும் அவர்கள் மீதிருந்த பற்றற்ற மனநிலையில் கண்ணில் பட்டவற்றைக் கருத்தில் எடுத்து அவள் யோசித்ததில்லை. ஆனால் இன்றைக்கு ஆதி யோசிக்க வைத்தான்.

வைத்தியசாலையில் அவன் கொண்டுவந்து நிறுத்தியதும் இறங்கி ஓடப்போனவளிடம், இஞ்சதான் அண்ணி நிப்பன். என்ர நம்பர் உங்களிட்ட இருக்கு எண்டு அண்ணா சொன்னவர். என்ன எண்டாலும் கோல் பண்ணுங்க.” என்று சொன்னான் ஆதி.

நிக்கிறது சரி, அண்டைக்கு மாதிரி ஏதாவது செய்தியோ உன்னையும் இதே ஹொஸ்பிட்டல்ல படுக்க வைப்பன்.” என்றுவிட்டு உள்ளே விரைந்தவளின் நேரம் அதன் பிறகு அவள் கையிலேயே இல்லை.

error: Alert: Content selection is disabled!!