கலிங்கனின் காவியம் 46.1

அத்தியாயம் 46

திருகோணமலைத் துறைமுகம் கலிங்கனின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிக்கொண்டிருந்தாலும், அந்தத் துறைமுகத்தில் அவனுக்கு மட்டுமே களஞ்சியம் இல்லை.

ஏராளமான வியாபாரிகளுக்குச் சொந்தமான சரக்குக் களஞ்சியங்கள் அங்கே இருந்தன. பல்வேறு இடங்களிலிருந்து கப்பல்களில் சரக்குகள் வந்து இறங்குவதும், அவற்றை ஏற்றிச் செல்வதுமாக எப்போதும் ஆட்களும் வாகனங்களும் வந்து போய்க்கொண்டிருக்கும்.

யார் யாருடைய ஆட்கள், யார் எதற்காக அங்கே வருகிறார்கள் என்பதைக் கண்காணிப்பது எளிதான காரியமல்ல. அவனுடைய ஆட்கள் அவன் கோடவுனில் பாதுகாப்புப் பணியில் இருந்தாலும், யாராவது திட்டமிட்டு ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்த நினைத்தால் நிச்சயமாக அது முடியும்.

அங்கே பெருமளவு சரக்குகள் புதிதாகக் கப்பலில் வந்து இறங்கியிருந்தன. அவற்றின் பெறுமதியும் முக்கியத்துவமும் அதிகம். கூடவே அடுத்த நாள் மிக முக்கியமான சரக்கினை வவுனியாவுக்கு கொண்டுசென்று கைமாற்றும் வேலையும் இருந்தது.

அதனாலேயே துறைமுகத்திலிருந்து தள்ளி இருக்கும் அவனுடைய சொந்த கோடவுனுக்கு அவற்றை எல்லாம் மாற்றும் பணியில் இறங்கியிருந்தான் கலிங்கன்.

அது குறைந்தது நான்கைந்து நாட்களாவது எடுக்கும் வேலை. அதுவும் ஒரே தடவையில் அனைத்தையும் இடமாற்றிவிட முடியாது என்பதால், ஒவ்வொரு தொகுதியாகப் பிரித்துத் திட்டமிட்டு வேலைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தான்.

எந்தப் பொருட்கள் முதலில் அனுப்பப்பட வேண்டும், எவற்றைத் தொடர்ந்து அனுப்ப வேண்டும் என்பதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தன. அதற்கேற்ப வாகனங்களும் தயார் நிலையில் நின்றன.

பொருட்களை வாகனங்களில் ஏற்றுவதிலிருந்து அவை முறையாகப் பொதி செய்யப்பட்டுள்ளனவா என்பதைச் சரிபார்ப்பது வரை அனைத்தையும் தானே முன்னின்று கவனித்துக்கொண்டிருந்தான்.

புதிய களஞ்சியத்தில் அவனுடைய நம்பகமான ஆட்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அங்கே சென்றடையும் ஒவ்வொரு வாகனத்தையும் அவர்களே பொறுப்பேற்று, பொருட்களை இறக்கி, உரிய இடங்களில் அடுக்கி வைக்கும் பணிகளை மேற்கொண்டனர். அதையும் இங்கிருந்து மானிட்டரில் கவனித்துக்கொண்டிருந்தான்.

இந்த வேலை நடந்துகொண்டிருக்கையில்தான் வருணா அழைத்து வைத்தியசாலைக்குப் போகப்போவதாகச் சொன்னாள்.

அவள் ங்குப் போனதிலிருந்து கலிங்கனுக்கு ஏதோவொரு வகையில் மனம் சரியில்லாமலேயே இருந்தது. இத்தனை நாட்களும் தன் சிறகுகளுக்குள்ளேயே வைத்திருந்துவிட்டு இன்று தனியாக வைத்தியசாலைக்கு அனுப்பியதுதான் காரணம் என்று புரியாமல் இல்லை.

ஆனாலும் தன் உள்ளுணர்வை அலட்சியப்படுத்தாமல் எல்லாப் பக்கங்களிலும் சுழன்று சுழன்று யோசித்தான். உடனே ஆதிக்கு அழைத்து, வைத்தியசாலையின் நிலவரம் எப்படி இருக்கிறது என்று விசாரித்தான்.

அங்கே சந்தேகத்துக்கிடமானவர்கள் யாராவது தென்பட்டால் அவர்களை விசாரிப்பதற்கோ, தேவைப்பட்டால் அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கோ தயங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினான்.

அதுமட்டுமன்றி, புதிதாகச் சந்தேகத்துக்கிடமானவர்கள் யாரையும் உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என்றும் கண்டிப்பாகச் சொல்லிவைத்தான்.

அழைப்பைத் துண்டித்த பிறகும் அவன் மனம் அடங்கவில்லை.
வருணா இருக்கும்போதுதான் அங்கே யாரும் நுழைய வேண்டும் என்று கட்டாயமில்லையே. ஏற்கனவே யாராவது அங்கே இருந்தால்?

வருணா திடீரென்று வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டது வரதனின் திட்டமாக இருந்தால் என்கிற கோணத்தில் யோசித்தான். அவனால் இதை யாரைக்கொண்டு சாத்தியமாக்கியிருக்க முடியும் என்று யோசித்ததும் வந்து நின்றவர்கள் அந்த வைத்தியசாலையின் நிர்வாகியும் வருணாவின் தலைமை வைத்தியரும்.

உடனே நிர்வாகிக்கு அழைத்தான். அவர் ஏற்றதும், “வரதன் கதைச்சவனா?” என்று நேரடியாகவே கேட்டான்.

அவருக்கு ஒருமுறை உதறியது. உடனேயே, “இல்லை.” என்றார். மறுமுனையில் பெருத்த அமைதி. அந்த அமைதியே மிகுந்த அச்சுறுத்தல் நிறைந்ததாய் இருக்க, “உண்மையா ஆரும் என்னோட கதைக்கேல்ல. இதை ஏன் நீங்க என்னட்டக் கேக்கிறீங்க எண்டே எனக்கு விளங்கேல்ல.” என்று சொன்னார் அவர்.

“பிறகு என்னத்துக்கு வருணாவ திடீரெண்டு கூப்பிட்டனீங்க? கொஞ்ச நாளைக்கு அவள் வரமாட்டாள் எண்டு சொன்னனான்தானே?”

“இண்டைக்கு நடந்த ஒரு ஆக்சிடென்ட்ல மட்டும் 7 பேர். ஏற்கனவே அட்மிட்டாகி இருந்த ஆக்கள் வேற. அதுக்குப் பிறகு வந்த ஆக்கள் எண்டு இண்டைக்கு உண்மையாவே சமாளிக்கேலாம இருந்தது. வேற வழியில்லாமத்தான் கூப்பிட்டனாங்க.” பணிவாகவே பதில் சொன்னார் அவர்.

அதையெல்லாம் அவன் ஏற்கனவே விசாரித்துவிட்டான். வருணாவின் தலைமை வைத்தியரும், வருணாவுக்கு அடுத்ததாக இன்னொரு பெண் வைத்தியரும் புதிதாகச் சேர்க்கப்பட்டு, மூவரும் சத்திரசிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார்கள் என்பது வரை அறிந்து வைத்திருந்தான்.

அத்தனை பஸில்களும் அதனதன் இடத்தில் சரியாகத்தான் பொருந்தி நின்றன. ஆனாலும் வருணா என்று வந்துவிட்டால் அவனால் சிறு அலட்ச்சியமும் காட்ட முடியவில்லை.

“வேற ஒண்டும் இல்லையே?” அவன் கேட்ட விதமே அவரைப் பயமுறுத்தியது.

“உண்மையா இல்ல.”

“அது உண்மையாவே இருக்கட்டும். அப்பிடி இல்லையோ அதுக்குப் பிறகு வாழ்க்கை முழுக்க நீ அழுற மாதிரி இருக்கும்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவளுக்கும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு அவள் பதிலுக்காகக் காத்திருந்தான்.

*****

வைத்தியசாலைக்குள் நுழையும் வரையில்தான் வருணாவின் நேரம் அவளுடைய கட்டுப்பாட்டில் இருந்தது.

தலைமை வைத்தியர் கூறியது போலவே, ஒரு விபத்தில் சிக்கி ஏழு பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

அனைவருக்குமே உடலின் ஏதாவதொரு பகுதியில் சிறியதோ பெரியதோ சத்திரசிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம் இருந்தது. சிலருடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவும் இருந்தது.

தலைமை வைத்தியருடன் கலந்துரையாடி, அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் பற்றித் தெளிவுபடுத்திக்கொண்டவள், தாமதிக்காமல் சத்திரசிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்தாள்.

அதன்பிறகு நேரம் போனதே தெரியவில்லை. ஒவ்வொரு நோயாளியின் நிலையையும் கவனித்து, தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு, அடுத்தவருக்கான சத்திரசிகிச்சைக்குத் தயாராகி எனத் தொடர்ச்சியாக வேலைகள் நீண்டுகொண்டே போயின.

இடையில் களைப்பைப் பற்றியோ பசியைப் பற்றியோ தண்ணீர் குடிக்க வேண்டும் என்றுகூட அவள் நினைக்கவில்லை. அவளுடைய கவனம் முழுவதும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த உயிர்களைக் காப்பாற்றுவதிலேயே குவிந்திருந்தது.

எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு வெளியே வரும்போது நான்கு மணித்தியாலங்களுக்கும் மேலாகக் கடந்திருந்தது.

அப்போதுதான் தான் எந்தளவுக்குக் களைத்துப்போயிருக்கிறோம் என்பதே அவளுக்குப் புரிந்தது.
நீண்ட நேரமாக ஒரே சீரான கவனத்துடன் இயங்கியதன் விளைவாக உடல் முழுவதும் சோர்ந்து போயிருந்தது. கால்கள் இரண்டும் வலித்தன. தோள்களில் ஒருவித இறுக்கம்.

முகத்திலிருந்த முகக்கவசத்தை அகற்றிவிட்டு ஆழமாக மூச்சை இழுத்துக்கொண்டவள், சில நொடிகள் அப்படியே நின்றாள்.

என்னதான் அது அவளுக்குப் பிடித்தமான தொழிலாக இருந்தாலும், மருத்துவம் படித்து முடித்த காலத்திலிருந்து இதே பணியைச் செய்துகொண்டிருந்தவள்தான் என்றாலும், பெரியதொரு இடைவெளிக்குப் பிறகு ஒரே நேரத்தில் இத்தனை அவசர சிகிச்சைகளையும் கையாண்டதில் இரண்டு மடங்காகவே களைப்படையச் செய்திருந்தது.

ஆனாலும், ஏழு பேருடைய உயிர்களுக்காகப் போராடி முடித்திருந்த திருப்தி அவளுக்குள் இருந்தது. இப்போது அவளுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து மூச்சுவிடுவதுதான்.

பசிவேறு வயிற்றைக் கிள்ள, தன் அறைக்கு வந்து கைப்பேசியைப் பார்த்தவள் இதழ்களில் அழகான முறுவல். அவளின் கலிங்கன், “வரும்மா, எல்லாம் ஓகேயாடா?” என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.

“இல்லாட்டி என்ன செய்வீங்களாம்?

அடுத்த கணமே, “வந்து எல்லாத்தையும் ஓகே ஆக்குவன்.” என்று அனுப்பியிருந்தான் அவன்.

இவன் எந்த வகையில் ஓகேயாக்குவான் என்று அவளுக்குத்தான் தெரியுமே. அவள் பதில் அனுப்புவதற்குள் அவன் காணொளி அழைப்பில் வந்தான்.

அவள் முகத்தில் விரிந்த முறுவல். இருந்த சோர்வு என்குப் போனது என்றே தெரியவில்லை. அழைப்பை ஏற்றுவிட்டு, கைப்பேசியை அவள் மேசையில் இருந்த பேனை தங்கியில் சாய்த்து நிறுத்திவிட்டு, முழங்கையை மேசையில் ஊன்றி கையில் முகத்தை தாங்கி அவனை பார்த்தாள்.

“வரும்மா என்னடா?” என்றான் தன்னை மீறி குழையும் குரலில்.

“எனக்கு என்ன? ஒண்டும் இல்ல. ரவுடி பேபிக்குத்தான் என்னவோவாம்.” சிறு சிரிப்புடன் சொன்னாள் அவள்.

உண்மைதான். அவன் என்னவோவாகித்தான் நிற்கிறான். மீண்டும் அவள் தன் சிறகுகளுக்குள் வந்து சேர்கிற வரை அவனுக்குள் அந்தப் பதைப்பு இருந்துகொண்டுதான் இருக்கும்.

error: Alert: Content selection is disabled!!