அதைப்பற்றி அவளிடம் சொல்லாது, உதட்டோரம் ஒளித்துக்கொண்ட சிறு சிரிப்புடன் அவன் அவளையே பார்க்க, ஒற்றைக் கண்ணைக் குறும்புடன் சிமிட்டினாள் அவள்.
“டேய்!” என்றவனுக்குப் பெரும் சிரிப்பு. அந்த நிமிடமே அவள் தன் கைக்குள் வேண்டும் போலொரு உந்துதல். திகட்ட திகட்டத்தான் வாழ்கிறார்கள். ஆனால் எதுவும் போதுமாயும் இல்லை, காணுமாயும் இல்லை.
“ஆருக்கும் எந்த ஆபத்தும் இல்லையே?” என்று விசாரித்தான்.
“இல்ல, எல்லாரும் இப்ப ஓகே. எனக்குத்தான் நிறைய நாலைக்குப் பிறகு நிறைய நேரம் நீண்டது கை தோள் மூட்டு எல்லாம் வலிக்குது என்றாள்
“வந்து பிடிச்சு விடவா?”
வீட்டில் அவன் சேவகத்துக்கு குறைவில்லைதான். அதற்கென்று இங்கே வந்து செய்வானாமா? அவன் விளையாடுகிறான் என்று புரிந்து, “தாராளமா வாங்க!” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
அவளுக்குப் பசித்தது. கேண்டீன் சென்று உணவை முடித்துக்கொண்டு அறைக்குத் திரும்பிய பிறகு, தாதிப்பெண் ஒருத்தி கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள். அவள் கையில் ஒரு கைப்பேசி. அதை இவளிடம் நீட்டினாள்.
கை தானாக அதை வாங்கினாலும் கேள்வியாக ஏறிட்டவளிடம், “உங்களுக்குத்தான் டொக்டர் கோல்.” என்றுவிட்டு வெளியேறியிருந்தாள் அந்தப் பெண்.
குழப்பத்துடன் அந்தக் கைப்பேசியைப் பார்த்தவள் காதுக்குக் கொடுத்து, “ஹலோ!” என்றாள் மெல்லிய தயக்கத்துடன்.
“ஹாய் மா! நான் வரதன் அங்கிள்.” என்றது மறுபுறம்.
வருணா ஒரு கணம் தடுமாறிப்போனாள். கலிங்கன்தான் நினைவில் வந்தான். அதில் தடுமாறி, “ஹா…லோ அங்கிள்!” என்றாள் அவள்.
“முதல் சொறி அம்மாச்சி, இப்பிடி ஆருக்கும் தெரியாத மாதிரி உங்களோட கதைக்கிறதுக்கு. ஆனா என்ன செய்ய, எங்களால எல்லாரையும் விட பாதிக்கப்பட்ட பிள்ளை நீங்கதான். அதால எனக்கு உங்களிட்ட சொறி கேக்கோணும் எண்டு இருந்தது. அது ராயனுக்குத் தெரிஞ்சு, அதால உங்களுக்க பிரச்சினைகள் வர வேண்டாம் எண்டு நினைச்சன். அதால மட்டும் தானம்மா இப்பிடி உங்களோட கதைக்கிறேன். பிழையா நினைக்காதீங்கோ.” என்று மிகவும் தன்மையோடு நீண்ட விளக்கம் கொடுத்தான் அவன்.
அதில் இருந்த கலக்கம் எல்லாம் மறைய, “சேச்சே! நான் பிழையா நினைக்கேல்ல அங்கிள். எப்பிடி இருக்கிறீங்க? எல்லாரும் சுகமா?” என்று இயல்பாக வினவினாள்.
“எங்களுக்கு என்னம்மா? நல்ல சுகமா யிருக்கிறோம். நீங்க சந்தோசமா இருக்கிறீங்களாம்மா? உங்கட கெட்டித்தனத்துக்காகவும் நல்ல குணத்துக்காகவும்தான் மகனுக்கு உங்களைப் பேசினனான். நீங்க எங்கட வீட்டுக்கு மருமகளா வரவேணும் எண்டு அவ்வளவு ஆசைப்பட்டனான். கடைசில எங்கட வீட்டில சம்மந்தம் வச்ச ஒரே குற்றத்துக்காக உங்கட வாழ்க்கை இப்பிடி மாறிப்போச்சு. முதல் அதுக்கு சொறியம்மா.” என்று திரும்பவும் மன்னிப்புக் கேட்டான் அவன்.
அவளுக்குத் தாங்கவில்லை. அதைவிட அவள் மீது இந்தளவில் பரிதாபம் கொள்கிற அளவில் அவள் கணவன் மோசமானவனா என்ன? அவன் அப்படி இல்லை என்று சொல்லிவிடும் உந்துதலில், “அச்சோ அங்கிள், மன்னிப்பெல்லாம் வேண்டாம். நான் சந்தோஷமாத்தான் இருக்கிறன். இவரும் நாங்க பயந்த அளவுக்கு இல்ல. நல்லவர்தான். என்னை நல்லா வச்சிருக்கிறார். எனக்கு ஒரு குறையும் இல்ல.” என்றாள் வேக வேகமாக.
ஆனால், வரதனுக்கோ அந்தச் சில வார்த்தைகளே பல விடயங்களைத் தெளிவுபடுத்தப் போதுமானதாக இருந்தன. அவர்களுடைய மனங்கள் ஒன்றிணைந்துவிட்டதையும், வருணாவின் உள்ளத்தில் கலிங்கராயன் இடம்பிடித்துவிட்டதையும் அறிந்து பற்களை நறநறத்தாலும் வெளியில் காட்டவில்லை அவன்.
“நீங்க சந்தோஷமா இருந்தாலே எனக்குப் போதுமம்மா. இது தெரியிற வரைக்கும் எனக்கு நிம்மதியே இல்ல. எவ்வளவு படிச்ச பிள்ளை. அவாக்கு இப்பிடி ஒரு வாழ்க்கை அமைஞ்சுபோச்சே. என்னாலயும் ஒண்டும் செய்யேலாம போச்சே எண்டு கவலையா இருந்தது.”
வருணா நெகிழ்ந்துபோனாள். அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, “மாறன் எப்பிடி இருக்கிறார் அங்கிள்?” என்று விசாரித்தாள்.
“இப்ப கொஞ்சம் பரவாயில்லைமா. முதல் மொத்தமா உடைஞ்சுபோய்ட்டான்.”
அதைத்தான் அவள் பார்த்தாளே. அன்று கலிங்கராயன் மிரட்டியதால் மட்டுமே காதலித்து மணந்ததாகச் சொன்னதைச் சொல்லி, “இத மாறனிட்ட சொல்லிவிடுங்கோ அங்கிள். அவரும் ஒரு கலியாணம் கட்டிட்டார் எண்டா எனக்கு நிம்மதியா இருக்கும்.” என்று தன் விருப்பத்தையும் பகிர்ந்தாள்.
“கட்டாயம்மா. சொல்லிவிடுறன்.” என்றுவிட்டு, “என்ன தொழில் செய்றான் ராயன்? இப்பவும் பிழையான வழிலதான் காசு உழைக்கிறானா? எனக்கு அத நினைச்சாத்தானம்மா கவலை. அவன் செய்ற பாவங்கள் உங்களையும் வந்து சேரப்போகுது எண்டு.” என்றான் அவன்.
அவளுக்குத் தொண்டை அடித்துக்கொண்டது. கணவனை அவனிடம் விட்டுக்கொடுக்கவும் மனமில்லை. அதே நேரத்தில் அது உண்மைதானே என்கிற வருத்தமும். ஆனாலும் விடாமல், “எனக்கு இன்னும் அவரின்ர தொழில் பற்றி முழுசா தெரியாது அங்கிள். ஆனா சொந்தமா ஒரு ட்ரான்ஸ்போர்ட் கொம்பனி வச்சிருக்கிறார். அதுல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நேர் வலிலதான் உழைக்கிறார். நாளைக்கு விடிய ஏதோ முக்கியமான லோட் வவுனியாக்கு போகுது எண்டு சொன்னவர். இப்பவும் அங்க கோடவுன்லதான் நிக்கிறார். அவர் கடுமையான உழைப்பாளி அங்கிள்.” என்றவளுக்கு குரல் அடித்துக்கொண்டது.
அவன் எத்தனை ஈடுபாட்டுடன் தொழில் செய்கிறவன் என்று அவள் பார்த்திருக்கிறாள். அப்படி இருக்க அவனுக்கு எதற்கு இப்படியான கேட்ட பெயர்கள் என்று அவள் உள்ளம் அழுதது.
ஆனால், வரதனுக்கு தேவையானது அதுதானே. நாளைக்கு அவன் கோடவுனில் இருந்து லோட் புறப்படுவது தெரியும். என்ன, முக்கியமான சரக்குகளைக் கொண்டுபோகும்போது பல திசைகளுக்கும் வாகனங்களை அனுப்பி, இவர்களை குழப்பிவிட்டு, சேர வேண்டிய இடத்தில் பொருட்களை சேர்த்துக்கொண்டிருந்தான். நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று உள்ளே திட்டம் உற்சாகமாய் ஓட, “சரியம்மா நீங்க சந்தோசமா இருந்தா போதும் எனக்கு. என்ன உதவி வேணும் எண்டாலும் எப்பவும் நீங்க கேக்கலாம் சரியா? எப்பவும் எங்களுக்கு நீங்களும் எங்கட வீட்டு பிள்ளை மாதிரித்தான்.” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அதற்காகவே காத்திருந்தாற்போல் அந்தத் தாதிப்பெண் வந்து கைப்பேசியை வாங்கிக்கொண்டு போனாள். மனம் குழம்பிப்போன நிலையில் இருந்தவள் அவள் யார், அவள் நம்பர் வரதனுக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்க மறந்துபோனாள்.
என்னவோ தொண்டை அடைக்கும் உணர்வு. கலி ங்கனைப் பற்றி யாரும் குறைவாகப் பேசுவது பிடிக்கவில்லை. இதைப் பற்றி அவனிடம் எப்படிப் பேசுவது என்கிற கேள்வி வேறு.
வரதனோடு கதைத்ததைச் சொன்னால் கோவப்படுவானோ என்றெல்லாம் அவள் யோசித்துக்கொண்டிருக்க, அவள் சிந்தனையின் நாயகனே கதவைத் தட்டிவிட்டுத் திறந்து உள்ளே வந்தான்.
அவ்வளவுதான்! அவளின் குழப்பங்கள், கவலைகள் எல்லாம் பனிபோல் விலகிவிட, அவள் முகம் பூப்போல் மலர்ந்துபோயிற்று. கண்களும் ஆச்சரியத்தில் விரிய, “கலிங்கா!” என்றாள் ஆச்சரியத்தோடு.
எப்படி என்று கேட்பதுபோல் புருவங்களை உயர்த்தி கரங்களை இலேசாக விரித்தான் அவன்.
அவளால் நம்பவே முடியவில்லை. “நான் சொன்னதுக்காகவா வந்தனீங்க?” என்று வினவினாள்.
தன்னுடைய விளையாட்டுப் பேச்சை உண்மையாக எடுத்துக்கொண்டு அவன் வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கூடவே வரதனின் கபடப் பேச்சினால் மனதளவில் குழம்பிப் போயிருந்தவள் அவனைக் கண்டதும் ஆறுதல் தேடும் குழந்தையாக மாறிப்போனாள்.
ஓடிப்போய் அவனைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள். கலிங்கனுக்கும் அவள் அப்படி வந்து கட்டிக் கொண்டது மகிழ்ச்சிதான். திறந்திருந்த கதவை பின்பக்கமாகவே காலை அசைத்து சாற்றியவன், “வருமா என்னடா?” என்றான் கனிவாக.
அவனுடைய கரங்கள் அவளை இதமாக அணைத்துக்கொண்டன. ஒரு கரம் அவள் முதுகை வருட, மறுகரம் தலையை மென்மையாகக் கோதியது.
அவளோ அவன் மார்புக்குள் அப்படியே மறைந்துவிடப் போவதுபோல் முகத்தைப் புதைத்துக்கொண்டு இன்னும் இறுக்கமாக அணைத்தாள்.
அந்த அணைப்பில் இந்தக் கொஞ்ச நேரத்துப் பிரிவின் ஏக்கம் மட்டும் இருக்கவில்லை. அவனிடம் சொல்ல முடியாமல் தேக்கி வைத்திருந்த கவலைகளும், அவனைப் பற்றிய வரதனின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயமும், அவனிடமே ஆறுதல் தேடும் தவிப்பும் ஒன்றாகக் கலந்திருந்தன.
கலிங்கன் அவளைத் தூக்கிச் சென்று அவள் மேசையிலேயே அமர்த்தினான். அப்போதும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் முகத்தோடு முகம் புதைத்தவளைக் கண்டு புன்னகையாயிற்று அவனுக்கு.
கலிங்கன் அவசரப்படுத்தவில்லை. அவள் தலையை வருடியபடியே நின்றான். அதன் பிறகே அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, “என்ன?” என்றான் அவன்.
அவன் தாடையில் எம்பி முத்தமிட்டுவிட்டு ஒன்றுமில்லை என்று தலையை அசைத்தாள் அவள்.
“பிறகு ஏன் இவ்வளவு தவிப்பு?” என்று கேட்டான்.
“அது திடீரெண்டு நீங்க இல்லாம வெளிக்கிட்டு வந்தது, இவ்வளவு நேரம் புதுசா இஞ்ச நிண்டது ஒரு மாதிரி இருந்தது.” என்றாள் அவள்.
அவன் நிலையும் அதுதானே. அதில் புன்னகை அரும்ப அவள் முகம் நிமிர்த்தியவன், “இஞ்ச கமரா ஏதும் இருக்கா?” என்றான் அறையைச் சுற்றி பார்வையைச் சுழற்றியபடி.
“டொக்டர்ஸின்ர பிரைவேட் ரூம்களில் கமரா பூட்ட தடை இஞ்ச.” என்றாள் அவள் அவன் எதற்கு கேட்கிறான் என்று தெரிந்து.
“கேடி!” என்று அவள் நெற்றி முட்டியவன் அவள் இதழ்களைத் தன் இதழ்களால் மெதுவாகச் சிறைப்பிடித்தான். முதலில் மென்மையாகத் தொடங்கிய அந்த முத்தம், அவளுடைய ஏக்கத்தையும் அவனுடைய பிரிவின் தவிப்பையும் தன்னுள் சேர்த்துக்கொண்டு ஆழமானது.
அவளும் அவன் கழுத்தைச் சுற்றியிருந்த கரங்களை இன்னும் இறுக்கிக்கொண்டாள். இத்தனை நேரமும் மனத்தை அழுத்திக்கொண்டிருந்த எல்லாமும் அந்த நெருக்கத்தில் மெல்லக் கரைந்துபோவதுபோல் இருந்தது.

