அத்தியாயம் 47
அமைதியான இரவுப்பொழுது. முதுகுக்குப் பின்னால் தலையணையைச் சாய்வாக வைத்துக்கொண்டு, கால்களை நீட்டியபடி கட்டிலில் அமர்ந்திருந்தான் கலிங்கராயன். அவனது மார்பில் சாய்ந்திருந்தாள் வருணா.
அன்று முழுவதும் அவனைத் தேடிக்கொண்டிருந்தவளுக்கு, இப்போது அவனது அணைப்புக்குள் கிடைத்திருந்த அந்த நெருக்கம் மனத்துக்கு இதமளித்தது.
அவளை இப்படி அருகில் வைத்துக்கொண்டிருந்த கலிங்கனுக்குமே அந்த அணைப்பு ஒரு விதமான மன அமைதியைக் கொடுத்திருந்தது. இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் விலக விரும்பாதது போல நீண்ட நேரமாக அப்படியே இருந்தனர்.
வருணாவின் மனம் மட்டும் முழுமையான அமைதி இல்லை.
வரதன் பேசியவை ஒவ்வொன்றாக நினைவில் வந்து போயின. அவனோடு பேசியதைக் கலிங்கனிடம் இன்னமும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது மெல்லிய குற்ற உணர்வை ஏற்படுத்தியது.
அதேநேரம், கலிங்கனின் தொழில்களைப் பற்றி முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அவை தவறான பாதையில் செல்கின்றன என்றால், அவற்றிலிருந்து வெளியே வரச் சொல்ல வேண்டும். இந்த அடிதடி, மோதல், பகைமை, உயிருக்கு ஆபத்தான தொழில் என்று அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்திலிருந்து அவனை விடுவிக்க வேண்டும். அவர்கள் இருவரும் நிம்மதியான வாழ்க்கை ஒன்றை வாழ வேண்டும்.
இப்படிப் பல எண்ணங்கள் அவளுக்குள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு ஓடின. ஆனால், இவற்றையெல்லாம் அவனிடம் எப்படித் தொடங்குவது என்றுதான் புரியவில்லை.
கலிங்கனின் சிந்தனையும் இங்கில்லை. மறுநாள் காலையில் வவுனியா நோக்கி அவனுடைய சரக்கு லொறி புறப்பட வேண்டியிருந்தது. முதலில் அந்தப் பயணத்தை அவனும் வருணாவும் ஒன்றாக மேற்கொள்வதாகத்தான் திட்டமிட்டிருந்தான்.
ஆனால், வருணாவுக்கு மறுநாளும் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தாள். அதில் அவன் மட்டும்தான் தனியாகப் போக வேண்டும்.
அவளை இங்கேயே விட்டுவிட்டுத் தனியாகப் பயணம் செய்வதிலும் அவனுக்கு விருப்பமில்லை. ஆதி இருப்பான்தான் என்றாலும், மனம் ஒருநிலைப்பட மாட்டேன் என்று நின்றது. வருணனை வளமைபோன்று வீட்டிலேயே நில் என்று சொல்லவும் முடியவில்லை. அவள் முகம் வாடிவிடுவாளோ என்று பயந்தான்.
இப்படி அவனது சிந்தனை எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருக்க, தன்னருகில் இருந்தவன் மனத்தளவில் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்தாள் வருணா.
மெல்லத் தலையை நிமிர்த்தி அவனது முகத்தைப் பார்த்து, “என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
சிந்தனை கலைந்து குனிந்து அவளைப் பார்த்த கலிங்கன், ஒன்றுமில்லை என்பது போன்று தலையசைத்தான்.
அவனை விடாமல் பார்த்தாள் அவள். அதாவது அவன் சொன்னதை அவள் நம்பவில்லையாம். உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்ப, அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான் அவன்.
நேரமாகவும், “படு!” அவளோடு தானும் கட்டிலில் சரிந்துகொண்டான்.
அவளும் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.
இன்னுமே அவள் மனக்குழப்பங்கள் தெளியாதபோதிலும் சற்று நேரத்திலேயே கணவனின் கதகதப்பான அணைப்புக்குள் நிம்மதியாக உறங்கிப்போனாள்.
கலிங்கனுக்கு மட்டும் உறக்கம் பிடிக்கவேயில்லை. சரக்குகள் அனைத்தும் லொறியில் ஏற்றப்பட்டு, மறுநாள் அதிகாலையில் புறப்படுவதற்கான ஏற்பாடுகளும் முழுமையாகச் செய்யப்பட்டிருந்தன. அதில், இப்போதே புறப்பட்டுச் சரக்குகளை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, விடிவதற்குள் திரும்பிவிட்டால் என்ன என்ற எண்ணம் அவனுக்குள் மெல்லத் துளிர்த்தது.
திருகோணமலையிலிருந்து வவுனியா ஒன்றும் அவ்வளவு தொலைவில்லையே! பயணத்திற்கான நேரத்தையும், சரக்குகளை இறக்குவதற்கான நேரத்தையும் மனதுக்குள் கணக்கிட்டுப் பார்த்தான். எல்லாம் சரியாக அமைந்தால் அதிகாலைக்குள் திரும்பிவிட முடியும்.
தனக்கருகில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்த வருணாவைப் பார்த்தான். அவளது முகத்தில் அத்தனை அமைதி.
அவளை எழுப்பி, தான் புறப்படுவதைச் சொல்லி, தேவையற்ற கவலையை ஏற்படுத்த அவனுக்கு விருப்பமில்லை. மெல்ல அவளது தலையைத் தன் மார்பிலிருந்து விலக்கி, தலையணையில் வசதியாகச் சாய்த்தான். நழுவியிருந்த போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டான்.
அவளது நெற்றியில் மெதுவாக இதழ் பதித்துவிட்டு, சத்தமெழுப்பாமல் கட்டிலிலிருந்து எழுந்து சத்தமெழுப்பாமல் வெளியே வந்து கதவைச் சாற்றினான்.
அதன்பிறகு அவன் தாமதிக்கவில்லை. வருணாவின் கைபேசிக்கு அவசர வேலை காரணமாக வெளியே செல்வதாகவும், அதிகாலையிலேயே திரும்பிவிடுவதாகவும் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவைத்தான். ஆதியிடம் கவனமாக இருக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். ஆதியிடம் கூட எங்கு செல்கிறான் என்று சொல்லவில்லை.
ஆதிக்குச் சட்டென்று அன்றொருநாள் இதே போன்று அவன் தனியாகப் புறப்பட்டுச் சென்றதும், தான் மனம் சரியில்லாமல் பின்தொடர்ந்து போனதும், அங்கே அவன் கண்ட காட்ச்சிகள் அவனை உலுக்கியதும் நினைவில் வந்திருந்தன. தன்னை மீறி அவன் காரத்தைப் பற்றி நிறுத்தினான்.
“பயமா இருக்கு அண்ணா.”
அந்த ஒற்றை வார்த்தையில் ஆதியின் அத்தனை பதற்றமும் வெளிப்பட்டது. ஒருகணம் திரும்பிப் பார்த்த கலிங்கனும் அப்படியே நின்றுவிட்டான்.
அவன் முகம் சட்டென்று மாறியது. அடுத்த கணமே அவனது கண்கள் இரண்டும் சிவந்து கொதித்தன. அன்றைய நினைவுகள் அவனுக்குள்ளும் உயிர்பெற்றன.
நம்பிக்கையென்று நினைத்திருந்த உறவுகளின் பின்னால் மறைந்திருந்த துரோகம். தன்னுடைய நிழலாக இருந்தவர்களே தனக்கு எதிராகத் திரும்பியிருந்த அந்தக் கொடூரமான உண்மை. உடலெங்கும் காயங்களோடு உயிருக்கும் மரணத்திற்கும் இடையில் போராடிய அந்த இரவு என்று அனைத்தும் ஒரே நேரத்தில் நினைவுக்கு வர, அவனது தாடை இறுகியது.
அந்த நாட்களின் வலியும் ஆத்திரமும் அவனுக்குள் மீண்டும் ஒருமுறை கொழுந்துவிட்டு எரிந்தன. அன்றைக்கு இந்த ஆதி வந்திராவிட்டால் கலிங்கன் என்கிறவனை இன்று புதைத்த இடத்தில் புற்கள் முளைத்திருக்கும்.
அடுத்த கணமே அவனை இறுக்கமாக அணைத்து, முதுகில் அழுத்தமாகத் தட்டிக்கொடுத்துவிட்டு விலகி, “இன்னொருக்கா அப்பிடி நடக்காது!” எண்றுவிட்டுப் புறப்பட்டிருந்தான்.
****

