அத்தியாயம் 49
துரோகம் என்கிற ஒற்றைச் சொல்லால் மொத்தமாக அடித்து வேரோடு சாய்க்கப்பட்டவன்தான் கலிங்கன். அது சாதாரண துரோகம் அல்ல! பெரும் துரோகம்! முதுகில் குத்தியது மட்டுமல்லாலமல் மொத்தமாக முடிக்க முயன்ற துரோகம்.
அந்த மனிதர்கள் அவனோடு சாதாரணமாகப் பழகியவர்களோ, அறிந்தவர்களோ, தெரிந்தவர்களோ அல்ல. அவன் தனக்கு ஒப்பாக நினைத்தவர்கள். தன்னிலிருந்து இன்னொருவராகப் பிரித்துப் பாராத இருவர். அவன் வாழ்க்கை நெடுகிலும் பயணித்து, அல்லும் பகலும் விலகாமல் அவனோடே இருந்தவர்கள்.
இன்றும் அதையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே அவனுடைய மொத்த உடலும் பற்றி எரியும். அந்தத் துரோகத்துக்குக் காரணமானவர்களின் உடலைக் கிழித்துக் குருதியைக் குடித்தால் என்ன என்கிற அளவுக்கு அவனுக்குள் ஆவேசம் பொங்கும். அந்த அளவுக்கு அவனை நிலைகுலையச் செய்திருந்தது அன்றைய துரோகம்.
அப்படியிருக்க, மீண்டும் ஒருமுறை வரலாற்றுப் பிழை நிகழ்வதற்கு அவன் ஒருபோதும் இடமளிக்கத் தயாராக இல்லை. வவுனியாவுக்குப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி குறித்த தகவல், அதில் பொருட்களை ஏற்றியவர்களுக்குக் கூடத் தெரியாத அளவுக்கு ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தது. அவ்வளவு கவனமாக ஒவ்வொரு நகர்வையும் கண்காணிப்பவன் அவன்.
மீண்டுமொரு இழப்பைச் சந்திக்கவோ, தன்னுடைய வியாபாரம் மீண்டும் அடிவாங்குவதையோ அவனால் அனுமதிக்க முடியாது. துரோகம், நயவஞ்சகம், முதுகுக்குப் பின்னால் குத்தியவர்கள் என அத்தனை தடைகளையும் எதிர்கொண்டு, அவற்றையெல்லாம் தாண்டித்தான் நலிந்து போயிருந்த தன்னுடைய வியாபாரத்தை இப்போது மீண்டும் கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறான். அதனால் ஒவ்வொரு விடயத்திலும் வழக்கத்தைவிட இரட்டிப்புக் கவனத்துடன் செயல்படுவான்.
வவுனியாவுக்குப் பொருட்களை அனுப்பும் திட்டம் பற்றித் தெரிந்தவர்கள் வருணாவும் ஆதியும் மட்டுமே. மற்றவர்களிடமிருந்து அந்தத் தகவலை மறைத்திருந்தான். அவனைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் அவனுடைய இரண்டு கண்கள் போன்றவர்கள். அவர்களில் ஒருவரைக்கூடச் சந்தேகிக்க அவனால் முடியாது.
ஆதலால், இந்தத் தகவல் எப்படிக் கசிந்தது, யார் மூலம் வெளியே சென்றது என்று அவன் சுழன்று சுழன்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஆதி அங்கே வந்தான்.
கலிங்கனை அப்படியே பத்தடி பற்றுகிறவன் ஆதி. ஆதியும் கலிங்கனின் பாதையிலேயேதான் யோசித்தான். சரக்குகள் புறப்படப்போவது, குறிப்பாக வவுனியாவுக்குப் போகப்போகிறது என்பதை அறிந்தவர்கள் மூவர். அதில் அவனும் கலிங்கனும் யாரிடமும் மூச்சு விடவில்லை என்று அவனுக்குத் தெரியும். அப்படியானால் இது வருணா மூலம்தான் ஏதோ ஒரு வகையில் போயிருக்க வேண்டும் என்று உடனேயே நினைத்தான் ஆதி.
அது சந்தேகத்தில் உண்டான ஊகமில்லை. அவளைத் தாண்டி இன்னொருவர் மூலம் போவதற்கு அங்கே வேறு ஆட்களே இல்லை.
அதனால்தான் கலிங்கன் சொன்னவுடன் மருத்துவமனையின் கண்காணிப்புக் கமெராக்களை பரிசோதிக்கத் தொடங்கினான். முதலில் நிர்வாகி இதற்கு அனுமதிக்க மறுத்தார். அவர் மறுப்பெல்லாம் அவனுக்குப் பொருட்டா என்ன? வேறு வழியற்று, விருப்பமற்று அதற்கு அனுமதித்தார் நிர்வாகி.
காட்சிகளை ஆராய்ந்தபோது, காலையிலேயே சத்திரசிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்த வருணா, பகல் நேரத்தில்தான் வெளியே வந்தாள். அந்த இடைப்பட்ட நேரத்தில் ஏதேனும் நடந்ததோ என்று ஓடினாலும் யாராவது வித்தியாசமானவர்கள் அவளை சந்திக்க வருகிறார்களா என்று தொடர்ந்து அவள் அறையையே கவனித்துக்கொண்டிருந்தான்.
அப்போதுதான் ஒரு தாதிப் பெண் சுற்றுமுற்றும் பார்த்தபடி வருணாவின் அறைக்குள் செல்வதும், சென்ற வேகத்திலேயே திரும்பி வருவதும் தெரிந்தது.
முதல் முறை கையில் கைப்பேசியுடன் சென்றவர் இரண்டாவது முறை உள்ளே போய்விட்டு வருகையில் அந்தக் கைப்பேசியை அவரின் தாதி உடையில் போக்கெட்டினுள் போட்டபடி வந்தார்.
உடனடியாக அந்தத் தாதிப் பெண்ணை வளைத்துப் பிடித்து விசாரித்தான். அவனுடைய மிரட்டலுக்குப் பயந்த அந்தப் பெண், நடந்த உண்மைகளை ஒப்புக்கொண்டிருந்தார். கூடவே, அவரை இந்த வேலையைப் பார்க்கப் பணித்ததே அவர்கள் வைத்தியசாலையின் நிர்வாகிதான் என்று அறிந்ததும் கொதித்துப்போனான் ஆதி.
விடயமறிந்து மொத்தமாக நிலைகுலைந்துபோனான் கலிங்கன். வருணா, அவனுடைய வருணா வரதனோடு பேசியதை மறைத்துவிட்டாளே என்கிற வலி கோபத்தைவிடப் பெரியதொரு மனப்போராட்டத்தையே உருவாக்கியிருந்தது.
அவனுடைய வருணாவா?
அவளுமா அவனுக்கு இப்படியொரு நிலை உருவாவதற்குக் காரணமாகிவிட்டாள்? அவனால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அது கோபமாகக்கூட வெளிப்படவில்லை. ஆழமானதொரு வலியாக அவனைப் போட்டு ஆட்டிப்படைத்தது.
அதையெல்லாம்விட, வரதனோடு அவள் பேசி முடித்துச் சில நிமிடங்களிலேயே அவன் அவளைத் தேடிக்கொண்டு போயிருக்கிறான். அப்போது அவள் அவனைத் தேடியதும், கட்டிக்கொண்டு பிரியவே மாட்டேன் என்று நின்றதும் ஏதேதோ நினைவுகளைக் கிளறிவிட்டதில் மொத்தமாக நொறுங்கிப்போனான்.
இல்லை என் வருணா அப்படி இல்லை என்று அவனே அவனுக்கு அடித்துச் சொன்னாலும் ஆழமாய் அவன் வாங்கிய அடி அவனைப் போட்டுப் பந்தாடியது.
ஏன் மறைத்தாள்? மறைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒரு வார்த்தை ஒரேயொரு வார்த்தை அவனிடம் சொல்லியிருந்தால் இத்தனை அனர்த்தங்களை தவிர்த்திருக்கலாமே.
இப்படி அவன் தன்னளவில் கொந்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் வருணா ஓடிவந்தாள்.
அவன் இருந்த மனநிலைக்கு அவனால் அவளை எதிர்கொள்ள நிச்சயமாக முடியாது. என்ன பேசினாலும் அது தவறாகத்தான் போகும். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அவளைக் காயப்படுத்திவிடுவான் என்று அவனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்திருந்தது.
அதனால்தான் அதனால்தான் அவளைத் தவிர்க்க நினைத்தான். வெளியே போகச் சொன்னான். அவளை அங்கிருந்து அகற்றிவிட்டால் போதும். தன்னுடைய மனநிலை சீராகும் வரை அவளோடு எந்தப் பேச்சுவார்த்தையும் வேண்டாம் என்பதுதான் அவனுடைய எண்ணமாக இருந்தது.
என்ன, அந்த எண்ணத்தை வெளிப்படுத்திய விதம்தான் தவறாகிப் போனது.
அவள் அங்கிருந்து அகன்றுவிட வேண்டும் என்பதிலேயே அவனுடைய கவனம் இருந்தது. ஆனால் அவள் போகவில்லை.
மீண்டும் மீண்டும் அவனை நெருங்க முயன்றாள். அவனால் அவளை சமாளிக்க முடியவில்லை.
அவள் இன்னும் கொஞ்சம் நெருங்கியிருந்தால் அவனுக்குள் அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்துச் சிதறியிருக்கும். அந்தக் கோபத்தில் அவளைக் காயப்படுத்திவிடக் கூடாது என்ற பயத்தில்தான், அவசரமாக ஆதியைக் கொண்டு அவளை வெளியேற்ற முயன்றான்.
ஆனால் அந்த நொடியில் வருணா அவனைப் பார்த்த பார்வை இருக்கிறதே!
அடிவாங்கிய குழந்தையொன்று தன்னை அப்படிச் செய்தவரைப் பார்த்து, ‘நீங்களா எனக்கு இதைச் செய்தீர்கள்?’ என்று கேட்பதைப் போன்றிருந்தது அந்தப் பார்வை.
அவள் கண்களில் தெரிந்த அதிர்ச்சியும், நம்ப முடியாத வேதனையும் கலிங்கனை முற்றிலுமாக நொறுக்கிவிட்டன.
சத்தியமாக அவளை அவமானப்படுத்தவோ, அவமதிக்கவோ வேண்டும் என்பது அவனுடைய நோக்கமல்ல.
அவளைச் சிறிது நேரம் தவிர்க்க நினைத்தான். அவளுடனான பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட நினைத்தான். தன்னுடைய கட்டுக்கடங்காத கோபம் அவளை வார்த்தைகளால் காயப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் அப்படியொரு முடிவை எடுத்தான்.

